என்னை கவனிப்பவர்கள்

இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூலை, 2015

இசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.


    உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஊட்டினார் என்ற செய்தியைப் எனது பெட்டிக் கடைப் பதிவில் பகிர்ந்திருந்தேன். அதற்குள்  எம்.எஸ். வியின் மரணச் செய்தி  வரும் என்று எதிர்  பார்க்கவில்லை.

"ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்"

என்று எம். எஸ். வி யின் பாடல் உண்டு. ஆம் காலதேவன் கணக்கை முடித்தான்.

   எம்.ஜி.ஆர்.  என்.டி.ஆர், .  டி.எம்.எஸ்,எஸ்.பி.பி என்று மூன்று எழுத்து சுருக்கம் வைத்திருப்பவர்களுக்கு   சிறப்புகள் பல உண்டு. இவர்களெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வரிசையில் எம்.எஸ்.வி யையும் சொல்லலாம்.
   எம். எ.ஸ். வி பற்றி எழுதும் அளவுக்கு இசை அறிவு பெறாதவன் நான். ஆனால் ஒன்று மட்டும் சொல்ள முடியும். எந்த இசை   சாதாரண மக்களையும்  ஈர்க்கிறதோ அந்த இசையே சிறந்த இசை. எம். எஸ். வியின் இசை அப்படிப் பட்டது. ஆனால் அவரது இசை   பாமரர்களை  மட்டுமல்ல மேதைகளையும் ஆச்சர்யப் படவைத்தது.
     பழைய பாடல்கள் என்றாலே எம்.எஸ். வி இசை யாகத் தான் இருக்கும் என்று நம்புவன் நான்.இந்த மேதையின் ஹார்மோனியத்தில் பிறந்த மெட்டுக்கள் இன்னமும் நம் காதோரம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவரது கைவிரலில் இருந்து விளைந்து கவிதை ஆடை அணிந்து நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம். பொதுவாக பெரும்பாலான  இசை அமைப்பாளர்களின் குரல்வளம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இவரது குரலும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை  என்றாலும் அவரது குரலில் ஒருகவர்ச்சி உண்டு. ஆனால் அவர் பாடிய  பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.

 பல்வேறு தரப்பினர் எம்.எஸ்.வி க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இளையராஜா தனது இரங்கல் செய்தியில்

 "எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களை யெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்" 
என்று குறிப்பிட்டிருந்தார் .


 அவர் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை .மெல்லிசையைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி.வி யின் தாக்கம் இல்லாமல் இசை அமைப்பது கடினம் என்று பல இசை அமைப்பாளர்களும் கூறி இருப்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் இசை  பாடல் வரிகளுக்கும் கதைக்கும் துணைபுரியும் விதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மேதைமை வெளிப்படவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை
     எம்.எஸ். வி. யின் காலத்தில் பெரும்பாலும் இது எம்.ஜிஆர் பாடல்; இது சிவாஜி பாடல்; இது கண்ணதாசன் பாடல் , இது டி.எம்.எஸ்  என்று பாடல்கள் அடையாளம் காணப்படும். ஆனால்  இவர்களுடையை பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம்  எஸ்.வியாகத்தான் இருப்பார். இவர் இசை அமைத்த பாடல்களின் பெருமை நடிகர்,பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பரவலாக போய்ச்  சேர்ந்தது. ஆனால் எம். எஸ்.வி அதை பொருட்படுத்தியதும் இல்லை;  வெளிப்படுத்தியதும் இல்லை. தற்போது  பெரும்பாலும் பாடல்களுக்குரிய பெருமை அனைத்தும் இசை அமைப்பாளர்களுக்கே கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது .

 இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல  பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர  தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?
  இந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,

     வைரமுத்து இரங்கல் செய்தியில் சொன்னார், "இனிமேல் இவருக்கு பத்ம விருது ஏதும் வழங்கி அவரை இழிவு படுத்தாதீர்கள். முடிந்தால் பாரத ரத்னா விருது வழங்குங்கள் என்றார்" 
   இந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால்  எம்.ஜிஆர், சிவாஜி  பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.

    எம்.எஸ். வி யின் இசையமைத்த படங்களில் அவரது பெயர் டைட்டிலில் காட்டப்படும்போது தொடர்ந்து  இசை   உதவி ஜோசப் கிருஷ்ணா என்ற பெயர் காட்டப் படுவதைப் பார்த்திருக்கலாம் . அதிக  தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில்  தரமான பாடல்களை பதிவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி.  மெட்டு என்பது இசை அமைப்பாரால் உருவாக்கப்பாட்டலும் அது பாடலாக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை. இசைக் கோர்வைகளை பொருத்தமாக அமைத்து  தனித்தனியாக  பாடப்படும் பல்லவி சரணங்களை தாள லயம் கெடாமல்  இணைப்பது அப்போதைய தொழில் நுட்பத்துக்கு சவாலான செயல். இவற்றில் துணை புரிந்த தனது இசைக் குழுவில் உள்ளவரின் பெயரையும் கூட போடுமாறு   பணித்த பெருந்தன்மை எம்.எஸ்.விக்கே உரித்தானது.
  பொதுவாக வயதான கலைஞர்கள் தற்போதைய நிலையை குறை கூறுவது வழக்கம். இப்போதெல்லாம் என்ன இசை அமைக்கிறார்கள். ஒரே  சத்தம் பாடல் வரிகள் புரியவில்லை.  என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் எம். எஸ். வி  தன் காலத்தக்கு  பிந்தைய இசை அமைப்பாளர்களையும் மனமார பாராட்டவே செய்தார்  மற்ற இசை அமைப்பாளர்களையும்  மதித்தார்

     இப்படி எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த எம்.எஸ். வி என்ற இசைப் பறவை நம்மை விட்டு பிரிந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் அது விட்டு சென்ற இசை பேச்சிலும்  மூச்சிலும் எப்போதும் கலந்திருக்கும் . எக்காலத்தும் நிலைத்திருக்கும்

**************************
கொசுறு 
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? 
ஒரு பாடல் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்தானா என்பதை அறிந்து கொள்ள நான் சில அம்சங்களை கவனிப்பேன்.நிறையப் பாடல்களில் சரணத்தின் கடைசி வரி இரண்டு  தடவை பாடப்படுவதைக் காணலாம்'. இரண்டாவது முறை சற்று மெதுவாக பாடப்படும் வரிகள் சரணத்தின் கருத்தை இன்னொரு தடவை மனதில் பதிய வைத்து நம் மனதை அள்ளிச் செல்லும். இந்த உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.

உதாரணமாக
தரை மேல் பிறக்க வைத்தான், அதிசய ராகம்,  போன்ற பாடல்கள்   புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட  தனிப்பாடல்களின் சரணங்களிலும்  இந்த முத்திரையைக் காணலாம்.ஆனால் அது எந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்குதான்  இதனைப் பயன்படுத்தி  இருப்பார்.

பாடகர்களாக விரும்புவர்களுக்கும் இசை அமைப்பாளராக விரும்புவர்களுக்கும் இவரது  இசை ஒரு பாடம்.  


                                    ***********************************


திங்கள், 4 நவம்பர், 2013

பிரபலமா இருந்தாலும் இவ்வளவுதான்!பிரபல பத்திரிக்கை நடத்திய பரிசோதனை.


        2007 ஜனவரி 12 ஆம் தேதி. காலை 9 மணி வாஷிங்டன் நகர மெட்ரோ ரயில் நிலையம். மக்கள் வெள்ளம். எங்கும்  பரபரப்பு. எங்கோ எதற்கோ  மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கால்களில் சக்கரம் கட்டி இருப்பார்களோ? 

   அந்த  சுறுசுறுப்பான நேரத்தில் ஜீன்சும் முழுக்கை டி ஷர்ட்டும்  அணிந்த 39 வயது மனிதர்  மெதுவாக நடந்து வந்தார்.அவரது தலையில் அமெரிக்க தேசிய பேஸ் பால் விளயாட்டுக்காரர்கள் அணியும் தொப்பி. ஒரு குப்பை தொட்டிக்கு அருகில் போய் நின்றார். தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நிதானமாக வயலினை எடுத்தார்.சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டு வயலினை இசைக்க ஆரம்பித்தார். அவரது வயலினில் இருந்து  இசை மழை பொழிய ஆரம்பித்தது. அது பொங்கி வழிந்து காற்றில் நிரம்பியது. காதுகளில் தேனாக பாயத்தொடங்கியது.

    ஏராளாமானோர் அந்த இடத்தை  வழியே சென்றபடி இருந்தனர். அவர்கள் வேலைக்கு செல்பவர்கள் போலும். அந்தப் பரபரப்பில் ஒரு மனிதர் அற்புதமாக வயலின் வசிப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இசைப்பதை நிறுத்தவில்லை அந்த மனிதர். சில நிமிடங்கள் கடந்தன. அப்போது அங்கு வேகமாக வந்த ஒருவர் இசையை கேட்டு தனது வேகத்தை  குறைத்துக் கொண்டு இசை வந்த திசை நோக்கி திரும்பி சில வினாடிகள் இசையை ரசித்து விட்டு பழைய வேகத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 
   இன்னும் சிறிது நேரம் கடந்தது. அந்தப் பக்கமாக வந்த பெண்மணி வயலின் காரரைப் பார்த்து பையில் இருந்து சில நாணயங்களை அவரை நோக்கி வீசி எறிந்து விட்டு  நடையைக் கட்டினார். வயலின் காரருக்கு கிடைத்த முதல் டிப்ஸ் அதுதான். 

    மேலும் சில நிமிடங்கள் கரைந்தன. வயலின் இசை  பெரியவர் ஒருவரை கவர்ந்தது. சிறிது நேரம் நின்று  தலையை ஆட்டி இசையை ரசிக்க ஆரம்பித்தார். திடீரென்று நினைவு வந்தவராக கடிகாரத்தைப் பார்த்தார். அவ்வளவுதான். உடனே அந்த இடத்தை காலி செய்தார். 

    காலம் இன்னும் சிலநிமிடங்கள் தன்னை இழந்தது. ஒரு பெண் தனது மகனுடன் ரயில் பிடிக்க விரைந்து வந்து கொண்டிருந்தார். அந்தப் பையனுக்கு மூன்று வயது இருக்கலாம். வயலின் இசை அவனை ஈர்த்தது.அவனுக்கு அந்த இடத்தை விட்டு அகல மனம் வரவில்லை.ஆனால் அந்தப் பெண் அவனை தரதரவென்று இழுத்து சென்றுவிட்டார்.போகும்போது அவன் வயலின் இசைப்பதை திருப்பிப் பார்த்துக் கொண்டே சென்றான். நிறைய சிறுவர்கள் இசையை ரசித்தனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ரசிக்க விடவில்லை என்பதை பார்க்க முடிந்தது. 

    அந்த இசை கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் இசைக்கப் பட்டது.  இந்த நேரத்தில் 1097 பேர் அந்த இடத்தை கடந்து சென்றிருந்தனர். அவர்களில் ஆறு பேர் மட்டுமே இசையை நின்ற ரசித்தனர். 28 பேர் காசு போட்டுவிட்டு சென்றனர். இந்த இசை நிகழ்ச்சியை முடித்ததும் அந்த கலைஞனை கைதட்டி பாராட்டக் கூட ஒருவரும் இல்லை, ஒரு நிகழ்ச்சி நடந்தது அது இப்போது முடிந்து விட்டது என்பதைக் கூட ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த இனிய இசையை இசைக்கும் கலைஞன் யார் என்று அறிந்து கொள்ளக் கூட யாருக்கும் தோன்றவில்லை.

     

  இதில் என்ன இருக்கிறது. அவர் அவருக்கு அவரவர் வேலைதான் முக்கியம். பிளாட்பாரத்தில் நின்று தெருவில் யாரோ இசைக்கும் இசையை நின்று  ரசிக்கவா நேரம் இருக்கிறது? என்கிறீர்களா? இந்த நிகழ்வில் ஒரு சுவாரசியம் இருக்கிறது

  உண்மையில்  அற்புதமான இசையை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு வழங்கிய அந்த இசைக் கலைஞர் ஜோஷ்வா பெல் என்ற புகழ் பெற்ற வயலினிஸ்ட். உலகின் முன்னணி வயலின் கலைஞர்களில் ஒருவர். அவர் ரயில் நிலையத்தில் வாசித்த ஆறு இசைக் கோவைகள் உலகின் மிக சிறந்த இசைக் கோவைகளில் இடம் பெற்றவை. இவர் இந்த இசையை வசிப்பதற்கு பயன் படுத்திய வயலினின் விலை மட்டுமே 35 லட்சம்  டாலர்கள். அவரது இசைக் கச்சேரிகளுக்கு டிக்கட் கிடைப்பதே கடினம். டிக்கெட்டின் குறைந்த பட்ச விலையே 100 டாலர்கள்.

   அவர்  ஏன் இப்படி ரயில் நிலைய சப்வேயில் நின்று வசிக்க வேண்டும்? அதற்கு காரணம் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட். அந்தப் பத்திரிகைதான் ஜோஷ்வா பெல்லை அழைத்து இப்படி ஒரு பரிசோதனை செய்ய வேண்டுகோள் விடுத்தது. அந்த பிரபல இசைக் கலைஞரும் அதற்கு சம்மதித்தார். அதன்  விளைவாக நடந்ததே  ரயில் நிலையத்தில் நடந்த இந்த இசைக் கச்சேரி. அதை கட்டுரையாக வெளியிட்டது வாஷிங்டன் டன் போஸ்ட்.
அந்தக் கட்டுரை இந்த நிகழ்வை விவரித்து விட்டு  இப்படிஒரு கேள்வியை எழுப்பியதாம்.

"உலகின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவர் மிக உன்னதமான வயலினைக் கொண்டு உலகின்மிக சிறந்த இசையை வாசிப்பதைக் கூட    கவனிக்க நமக்கு நேரம் இல்லை. 
வாழ்க்கையில் இது போன்ற மென்மையான விஷயங்களை ரசிக்க முடியாமல் போகிறது.?
ஆம்! நாம் எல்லோரும் ஒவ்வளவு ஓட்டமாக ஓடுவதற்கு என்ன காரணம்? எதை நோக்கி ஓடுகிறோம்?"

    இதே  நிகழ்ச்சியை "ரயில் நிலையத்தில் ஜோஷுவா பெல் லின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. டிக்கெட் விலை இவ்வளவு விலை.." என்று விளம்பரம் செய்திருந்தால் ஒரே நாளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கும். 
இந்த சோதனை இரண்டு விஷயங்களை நமக்கு சொல்கிறது.
  1. வாழ்க்கை பரபரப்பில் கலைகளை ஓரளவிற்கு மேல் ரசிக்க நேரமில்லை 
  2. எல்லாவற்றிற்கும் ஒரு இடம் பொருள் ஏவல் உண்டு. இளையராஜா, A.R. ரகுமானாக இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் சொல்லாமல் கொள்ளாமல் இசைத்தால் எவ்வளவு சிறப்பாகவே அது இருந்தாலும் குறைவான கவனத்தையே ஈர்க்கும். 
   இந் நிகழ்வை கட்டுரையாக வாஷிங்டன் போஸ்டில் எழுதிய ஜெனீ வெயிங்கார்ட்டன் என்பவர் 2008 இல் இதற்காக புலிட்சர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

************************************************

செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை?

  கிறித்துவ நண்பர்களுக்கு  மனம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
       இசைக்கும் பக்திக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.பெரும்பாலான பாடல் ஆசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இசை மனதை  ஈர்க்கிறதே!. அதன் காரணம் என்ன?  சில இசை வடிவங்கள் உள்ளத்தை உருக வைக்கிறதே அது எப்படி ? நம்மையும் அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறதே ஏன்? 

      அப்படி ஒரு பாடல்தான் திரைப் பாடல்தான் மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெற்று எல்லோர் மனதையும் கவர்ந்த  'அன்பென்ற மழையிலே' என்ற பாடல் ஏ.ஆர் ரகுமானின் அருமையான மெட்டமைப்பும் அனுராதா ஸ்ரீராமின் காந்தக்  குரலும் வைரமுத்துவின் வைர வரிகளும் அப்பப்பா!
  
       இதில்  எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால் ஒரு நாத்திகராக  (நாத்திகராக  இருந்தாலும் வைரமுத்துவுக்கு பிடித்த வார்த்தை பிரம்மன்) 
வைரமுத்துவால் பக்தி மனம் கவழும் ஒரு பாடலை எப்படி இயற்ற முடிந்தது.

    வைரமுத்து உண்மையில்ஒரு நாத்திகர்தானா என்ற ஐயம் எழும் அளவிற்கு எழுதி இருப்பார். இதோ அந்த வரிகளைப் படித்துப் பாருங்கள் பாடலையும் கேட்டுப் பாருங்கள். 

  இயற்றியவர் நாத்திகர்,பாடியவர் ஹிந்து, இசை அமைத்தவர் இஸ்லாமியர்.பாடலோ கிறித்துவம்.
 இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது


அன்பென்ற  மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே!

கல் வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

                               (அன்பென்ற மழையிலே)

கொசுறு:
   இப்படிப்பட்ட  அருமையான பாடலை எழுதிய வைரமுத்து நீர்ப்பறவை படப் பாடல்களுக்காக விமர்சனத்து உள்ளானார்.உண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

**************************************************************************************************************
 இதைப் படிச்சாச்சா!


சனி, 6 அக்டோபர், 2012

இளையராஜா செய்தது சரியா?

    தமிழ்த் திரை இசை ரசிகர்களின் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டு இன்றும் அமர்ந்திருப்பவர்; மௌனத்தையும் இசையாக மொழி பெயர்த்தவர்; முதன் முதலில் தமிழ் திரை இசைக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர்;   வேறு யார்? அது இளையராஜாதான். அவர் வாசகர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு குமுதத்தில் பதிலளிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

   அவருடைய கால கட்டத்தில் இளையராஜா ஒரு புதிராகவே இருந்தார். யாரிடமும் இணக்கம்  காட்டாது இருந்தார்.பலபேர் அவரிடமிருந்து விலகுவதற்கு இது காரணமானது. முதலில் வைரமுத்துவை விட்டுப் பிரிந்தபோது ரசிகர்கள் வருந்தினாலும் வைரமுத்துவைப் பிடித்தவர்கள் கூட இளையராஜாவின் பக்கமே இருந்தனர். எனினெனில் அவருடைய இசையின் ஆளுமை அப்படிப்பட்டது.
   பாரதிராஜா,மணிரத்தினம் என்ற புகழ் பெற்ற இயக்குனர்கள் ராஜாவை தவிர்த்த போது இசை ரசிகர்கள் மனதிற்குள் வருத்தமடைந்தனர்.இவர் ஏன் எல்லோரிடமும் கருத்து வேற்றுமையை வளர்த்துக் கொள்கிறார் என்ற எண்ணம் தோன்றினாலும் ராஜாவை விட்டுக்  கொடுக்க யாருக்கும் மனம் வரவில்லை. யாருக்காகவும் அவர் பணிந்து போனதில்லை.போலி புகழ்ச்சி வார்த்தைகளை பேசுவதில்லை. புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சாதாரணமானவர்களாக  இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்திய பிடிவாதம் அவர்கள் ராஜாவிடமிருந்து விலக காரணமாக இருந்திருக்கலாம். எந்த விதமான ஐயங்களுக்கும் ஊகங்களுக்கும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்த இளைய ராஜா இப்போது மனம் திறந்து பேச ஆரம்பித்திருப்பது குமுதம் இளையராஜா பதில்கள் மூலம் தெரிய வருகிறது.
   10.10.2012 இதழ் குமுதத்தில்  ஒரு வாசகர் புதுப்புது அர்த்தங்கள் படத்திற்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு நீங்கள் ஏன் இசை அமைக்கவில்லை? என்று கேட்டிருந்தார்.
   இப்படத்திற்கான ரீரெக்கார்டிங் நடை பெற வேண்டிய நேரத்தில் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருந்ததால் இளையராஜா சிவா படத்திற்காக மும்பை சென்று விட்டாராம்.அந்த நேரத்தில் கவிதாலயா நிர்வாகிகள் படம் ரிலீசாக நாள் நிர்ணயித்து விட்டதால் நீங்கள் பாம்பேயில் இருந்து வர முடியாது என்பதால் ரீகார்டிங்குக்கு ட்ராக் எடுத்து போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லலி இருக்கிறார்கள்.அதில் இளையராஜாவிற்கு வருத்தம் ஏற்பட்டு "உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்ற பெயர்தான் தேவை என் இசை உங்களுக்கு தேவை இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது.என்னோட பெயரை வியாபாரத்திற்கு பயன்படுத்தப் போறீங்க.இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல.நீங்க பண்ணறத பண்ணிக்கோங்க" என்று சொல்லிவிட்டார்
    இதன் காரணமாக ரஜினியின் படம்  ஒன்றை கவிதாலயா எடுத்தபோது ரஜினியே நேரில் வந்து கேட்டும் இளைய ராஜா இசை அமைக்க மறுத்ததையும்  சொல்லி இருக்கிறார் இளையராஜா.
    இளையராஜாவின் வருத்தம் என்னவெனில் பாலச்சந்தர் தன்னிடம் நேரில் பேசி இருக்கலாம். அல்லது நேரில் வந்த ரஜினி நிலையை எடுத்து சொல்லி பாலசந்தரை பேசச் சொல்லி இருக்கலாம் என்பதே. இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம்.
  இளையராஜா சொல்வது ஓரளவிற்கு உண்மையாகவே படுகிறது. பாலசந்தர் எப்போதுமே ஒரு திறமையான வியாபாரி பிறருடைய புகழை பயன் படுத்தி பணம் பண்ணுவதில் வல்லவர்.ரஜினியை கூட பெரும்பாலும் தான் தயாரிக்கும் படங்களுக்குத்தான்  பயன்படுத்திக் கொண்டாரே தவிர தன் இயக்கத்தில் பயன் படுத்தவில்லை. ரஜினி தன்னுடைய படங்களுக்கு ஏற்றவர்  இல்லை என்ற எண்ணம் அவருக்கு  இருப்பதாகவே படுகிறது. ஆனால் ரஜினி அதை பெரிது படுத்தவில்லை. அவர் எடுக்கும் படங்களில் நடித்துக் கொடுத்தார். அதுவரை எம்.எஸ்.வி யை மட்டும் பயன் படுத்தி வந்த பாலச்சந்தர் புகழின் உச்சியில் இருந்த இளையராஜாவை சிந்து பைரவி படத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இந்த வெற்றிக் கூட்டணி சிறிது காலம் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரஜினியைப் போலல்லாமல் இளையயராஜா பாலச்சந்தருடன் கருத்து வேற்றுமை கொண்டார்.

    இளையராஜாவும்  இந்த விஷயத்தை பெரிது படுத்தி இருக்கவேண்டாம், ரஜினி வந்து கேட்டும் இசை அமைக்க ஏற்றுகொள்ளாது பிடிவாதம் பிடித்திருக்க வேண்டியதில்லை.. இந்த விஷயத்தில் தன் குருநாதருக்காக தூது வந்த ரஜினியின் நிலையே இக்கட்டானது.

  இன்னும் பல சந்தேகங்களுக்கு இளையராஜாவின் பதில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.


      **************************
    பல நாட்கள் எனக்கு மட்டும்  ஒரு விஷயம் தெரியாமல் இருந்தது. மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி படத்தில் "புத்தம் புது பூ பூத்ததோ" என்ற ஒரு பாடல் உண்டாம்(எனக்கு ஆடியோ CD கேட்டுப் பழக்கமில்லை.)அது திரைப்படத்தில் இடம் பெறவில்லை. சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒருவர் பாடியபோதுதான் தெரிந்து கொண்டேன். முதல் முறை கேட்கும்போதே அதன் மெட்டும் இசையும் ஏசுதாஸின் இனிமையான குரலும் என்னைக் கவர்ந்துவிட்டது. ஆரம்ப ஆலாபனை இருக்கிறது பாருங்கள் அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது.இவ்வளவு இனிமையான மயக்கும் பாடலை மணிரத்தினம் ஏன் கட் செய்து விட்டார் என்று புரியவில்லை.இந்த விஷயத்தில் மணிக்கும் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இருவர் பிரிவுக்கும் காரணமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். ஏ.ஆர.ரகுமான் என்ற புயல்  வீச அடிப்படையாக இதுதான் அமைந்ததோ?

  இதோ "புத்தம்புது பூ பூத்ததோ" பாடலை கேளுங்கள்.கேட்டவர் மீண்டும் ஒரு முறை தாராளமாகக் கேட்கலாம். கேட்காதவர் முதல் முறையாகக் கேளுங்கள்.


****************************************************************************************************************

இதையும் படித்தீர்களா?
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்

*********************