என்னை கவனிப்பவர்கள்

பிரபலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 நவம்பர், 2013

பிரபலமா இருந்தாலும் இவ்வளவுதான்!பிரபல பத்திரிக்கை நடத்திய பரிசோதனை.


        2007 ஜனவரி 12 ஆம் தேதி. காலை 9 மணி வாஷிங்டன் நகர மெட்ரோ ரயில் நிலையம். மக்கள் வெள்ளம். எங்கும்  பரபரப்பு. எங்கோ எதற்கோ  மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கால்களில் சக்கரம் கட்டி இருப்பார்களோ? 

   அந்த  சுறுசுறுப்பான நேரத்தில் ஜீன்சும் முழுக்கை டி ஷர்ட்டும்  அணிந்த 39 வயது மனிதர்  மெதுவாக நடந்து வந்தார்.அவரது தலையில் அமெரிக்க தேசிய பேஸ் பால் விளயாட்டுக்காரர்கள் அணியும் தொப்பி. ஒரு குப்பை தொட்டிக்கு அருகில் போய் நின்றார். தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நிதானமாக வயலினை எடுத்தார்.சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டு வயலினை இசைக்க ஆரம்பித்தார். அவரது வயலினில் இருந்து  இசை மழை பொழிய ஆரம்பித்தது. அது பொங்கி வழிந்து காற்றில் நிரம்பியது. காதுகளில் தேனாக பாயத்தொடங்கியது.

    ஏராளாமானோர் அந்த இடத்தை  வழியே சென்றபடி இருந்தனர். அவர்கள் வேலைக்கு செல்பவர்கள் போலும். அந்தப் பரபரப்பில் ஒரு மனிதர் அற்புதமாக வயலின் வசிப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இசைப்பதை நிறுத்தவில்லை அந்த மனிதர். சில நிமிடங்கள் கடந்தன. அப்போது அங்கு வேகமாக வந்த ஒருவர் இசையை கேட்டு தனது வேகத்தை  குறைத்துக் கொண்டு இசை வந்த திசை நோக்கி திரும்பி சில வினாடிகள் இசையை ரசித்து விட்டு பழைய வேகத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 
   இன்னும் சிறிது நேரம் கடந்தது. அந்தப் பக்கமாக வந்த பெண்மணி வயலின் காரரைப் பார்த்து பையில் இருந்து சில நாணயங்களை அவரை நோக்கி வீசி எறிந்து விட்டு  நடையைக் கட்டினார். வயலின் காரருக்கு கிடைத்த முதல் டிப்ஸ் அதுதான். 

    மேலும் சில நிமிடங்கள் கரைந்தன. வயலின் இசை  பெரியவர் ஒருவரை கவர்ந்தது. சிறிது நேரம் நின்று  தலையை ஆட்டி இசையை ரசிக்க ஆரம்பித்தார். திடீரென்று நினைவு வந்தவராக கடிகாரத்தைப் பார்த்தார். அவ்வளவுதான். உடனே அந்த இடத்தை காலி செய்தார். 

    காலம் இன்னும் சிலநிமிடங்கள் தன்னை இழந்தது. ஒரு பெண் தனது மகனுடன் ரயில் பிடிக்க விரைந்து வந்து கொண்டிருந்தார். அந்தப் பையனுக்கு மூன்று வயது இருக்கலாம். வயலின் இசை அவனை ஈர்த்தது.அவனுக்கு அந்த இடத்தை விட்டு அகல மனம் வரவில்லை.ஆனால் அந்தப் பெண் அவனை தரதரவென்று இழுத்து சென்றுவிட்டார்.போகும்போது அவன் வயலின் இசைப்பதை திருப்பிப் பார்த்துக் கொண்டே சென்றான். நிறைய சிறுவர்கள் இசையை ரசித்தனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ரசிக்க விடவில்லை என்பதை பார்க்க முடிந்தது. 

    அந்த இசை கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் இசைக்கப் பட்டது.  இந்த நேரத்தில் 1097 பேர் அந்த இடத்தை கடந்து சென்றிருந்தனர். அவர்களில் ஆறு பேர் மட்டுமே இசையை நின்ற ரசித்தனர். 28 பேர் காசு போட்டுவிட்டு சென்றனர். இந்த இசை நிகழ்ச்சியை முடித்ததும் அந்த கலைஞனை கைதட்டி பாராட்டக் கூட ஒருவரும் இல்லை, ஒரு நிகழ்ச்சி நடந்தது அது இப்போது முடிந்து விட்டது என்பதைக் கூட ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த இனிய இசையை இசைக்கும் கலைஞன் யார் என்று அறிந்து கொள்ளக் கூட யாருக்கும் தோன்றவில்லை.

     

  இதில் என்ன இருக்கிறது. அவர் அவருக்கு அவரவர் வேலைதான் முக்கியம். பிளாட்பாரத்தில் நின்று தெருவில் யாரோ இசைக்கும் இசையை நின்று  ரசிக்கவா நேரம் இருக்கிறது? என்கிறீர்களா? இந்த நிகழ்வில் ஒரு சுவாரசியம் இருக்கிறது

  உண்மையில்  அற்புதமான இசையை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு வழங்கிய அந்த இசைக் கலைஞர் ஜோஷ்வா பெல் என்ற புகழ் பெற்ற வயலினிஸ்ட். உலகின் முன்னணி வயலின் கலைஞர்களில் ஒருவர். அவர் ரயில் நிலையத்தில் வாசித்த ஆறு இசைக் கோவைகள் உலகின் மிக சிறந்த இசைக் கோவைகளில் இடம் பெற்றவை. இவர் இந்த இசையை வசிப்பதற்கு பயன் படுத்திய வயலினின் விலை மட்டுமே 35 லட்சம்  டாலர்கள். அவரது இசைக் கச்சேரிகளுக்கு டிக்கட் கிடைப்பதே கடினம். டிக்கெட்டின் குறைந்த பட்ச விலையே 100 டாலர்கள்.

   அவர்  ஏன் இப்படி ரயில் நிலைய சப்வேயில் நின்று வசிக்க வேண்டும்? அதற்கு காரணம் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட். அந்தப் பத்திரிகைதான் ஜோஷ்வா பெல்லை அழைத்து இப்படி ஒரு பரிசோதனை செய்ய வேண்டுகோள் விடுத்தது. அந்த பிரபல இசைக் கலைஞரும் அதற்கு சம்மதித்தார். அதன்  விளைவாக நடந்ததே  ரயில் நிலையத்தில் நடந்த இந்த இசைக் கச்சேரி. அதை கட்டுரையாக வெளியிட்டது வாஷிங்டன் டன் போஸ்ட்.
அந்தக் கட்டுரை இந்த நிகழ்வை விவரித்து விட்டு  இப்படிஒரு கேள்வியை எழுப்பியதாம்.

"உலகின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவர் மிக உன்னதமான வயலினைக் கொண்டு உலகின்மிக சிறந்த இசையை வாசிப்பதைக் கூட    கவனிக்க நமக்கு நேரம் இல்லை. 
வாழ்க்கையில் இது போன்ற மென்மையான விஷயங்களை ரசிக்க முடியாமல் போகிறது.?
ஆம்! நாம் எல்லோரும் ஒவ்வளவு ஓட்டமாக ஓடுவதற்கு என்ன காரணம்? எதை நோக்கி ஓடுகிறோம்?"

    இதே  நிகழ்ச்சியை "ரயில் நிலையத்தில் ஜோஷுவா பெல் லின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. டிக்கெட் விலை இவ்வளவு விலை.." என்று விளம்பரம் செய்திருந்தால் ஒரே நாளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கும். 
இந்த சோதனை இரண்டு விஷயங்களை நமக்கு சொல்கிறது.
  1. வாழ்க்கை பரபரப்பில் கலைகளை ஓரளவிற்கு மேல் ரசிக்க நேரமில்லை 
  2. எல்லாவற்றிற்கும் ஒரு இடம் பொருள் ஏவல் உண்டு. இளையராஜா, A.R. ரகுமானாக இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் சொல்லாமல் கொள்ளாமல் இசைத்தால் எவ்வளவு சிறப்பாகவே அது இருந்தாலும் குறைவான கவனத்தையே ஈர்க்கும். 
   இந் நிகழ்வை கட்டுரையாக வாஷிங்டன் போஸ்டில் எழுதிய ஜெனீ வெயிங்கார்ட்டன் என்பவர் 2008 இல் இதற்காக புலிட்சர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

************************************************