என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இலவசங்கள் தேவையா?


          இலவசங்களுக்கு மக்களை அடிமையாக்குவது தொடர்ந்து கொண்டிருக்கிறது .  இந்த இலவசங்களின் நோக்கம் இல்லாதவர்களுக்கு கொடுப்பதல்ல.  இல்லாதவர்களிடம் எதையாவது தந்து  உள்ளதையும் பிடுங்குவது என்பது உணரப் படாத உண்மை. வியாபார நிறுவனங்களும், அரசியல் சக்திகளும்  இந்த தந்திரங்களை வெற்றிகரமாக கையாள்கிறார்கள். இலவச மாயையில் இருந்து விடுபடுவது எளிதன்று    கவி ஞாயிறு தாராபாரதி அவர்களின் தன்மான உணர்வு பொங்கும் இக் கவிதையை படித்துப் பாருங்கள் நமக்கும் கோபம் வரத்தான் செய்யும் 

                               அன்ன சத்திரம் இனி வேண்டாம்
                               அதனை இழுத்து மூடுங்கள்!
                               இன்னும் அட்சயப் பாத்திரமா?
                               இதனைத் தூக்கி எறியுங்கள்

                               எங்கள் கைகள் எப்போதும்
                               ஏந்துவதற்கே முளைத்தவையா?
                               எங்கள் தோள்கள் எதற்காக
                               இரவல்களுக்கே குனிவதற்கா?

                               உண்ணும் ஒருகை பிடி சோறும்
                               உழைத்துத் தின்ன விரும்புகிறோம்
                               மண்ணில் நாங்கள் தொழில் செய்து
                               மதிப்பாய்  வாழ விருபுகிறோம்

                               பசிக்கு இரந்து தின்பதினும்
                               பட்டினிச் சாவே மரியாதை 
                               நசித்து சாகும் நிலை வரினும்
                               நாங்கள் இனிமேல் கையேந்தோம்

                               ஏற்பது இகழ்ச்சி எனக் கூறும்
                               எங்கள் பிள்ளைப் பாடங்கள்
                               ஏற்பது மகிழ்ச்சி என மாறும்
                                எங்கள் பள்ளிக் கூடங்கள்

                               பிச்சைப் பரம்பரை ஆக்காமல்
                               பிழைக்க ஒரு வழி காட்டுங்கள்
                               உச்சியைத் தேடும் படிக்கட்டு
                               உழைப்பின் அருமையைப் படிக்கட்டும்

                               அரசாங்கத்தின் பிச்சைஎனின்
                               அதற்கு உதவி எனப் பெயரா?
                               பரிசா தருகிற இலவசங்கள்
                               பாமரர் நாட்டின்  அகதிகளா?

                               மக்கள் பதிப்பில் ஏழைகளை
                               மலிவுப்  பதிப்பாய் எண்ணாதீர்
                               மக்கள் மதிப்பில் எங்களையும்
                               மன்னர்களாக வரவிடுங்கள்

                               எங்கள் கால்களில் வலுவில்லை
                               என்பதனால் எழ முடிய வில்லை
                               உங்கள் உயரம்தான் நாங்கள்
                               உட்கார்ந்ததனால் தெரியவில்லை

                               தேனீக்களுக்கு காகிதப் பூ
                               தீனி கொடுக்கத் தேவை இல்லை
                               தேனீக்களுக்கு தோட்டத்தில் 
                               தேவைப்படுவது மரக் கிளைதான் 

                                எந்தப் பங்கும் இனி நீங்கள் 
                                இரக்கப் பட்டுத் தர வேண்டாம் 
                                தந்தையர் நாட்டில் எம் பங்கை 
                                தந்தால் போதும் தாருங்கள் 

                                சலுகையல்ல விரும்புவது 
                                சமமாய் உரிமை எப்பொழுது?
                                உலகம் நமக்குப் பொதுவுடைமை 
                                ஒவ்வொருவருக்கும் சமவுடைமை 

                                அதிகாரங்கள் சுரண்டியதை 
                                அரசியல் கைகள் சுருட்டியதை  
                                 முதலை வாய்கள் விழுங்கியதை 
                                 முதலில் மீட்டு வாருங்கள் 

                                 இலவசங்களையே நம்புகிற 
                                 எச்சில் பிறவிகள் ஆக்காதீர் 
                                 இலக்கை நோக்கி முன்னேறும் 
                                 இலட்சியப் பிறவி ஆக்குங்கள் 



----------------------------------



14 கருத்துகள்:

  1. மிக மிக அற்புதமான கவிதையை
    இன்றைய நிலையில்
    மிக மிக அவசியமான கவிதையை
    அருமையான அறிமுகத்துடன்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இதைப்படிப்பவர்களில் எத்தனை பேருக்கு கவிதையில் காணும் உணர்வுகள் வரும் இப்போதெல்லாம் இலவசங்கள் விலையில்லாதது அல்லவா

    பதிலளிநீக்கு
  3. இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கவிதை.

    பதிலளிநீக்கு
  4. சேலை வேட்டியை வேண்டாமென்று வேலைவெட்டியைக் கேளுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை....

    இலவசங்களையே நம்புகிற
    எச்சில் பிறவிகள் ஆக்காதீர்
    இலக்கை நோக்கி முன்னேறும்
    இலட்சியப் பிறவி ஆக்குங்கள்.

    ஆனால் நல்லதுதான்... ஆவோமா?

    பதிலளிநீக்கு
  6. இலவசம் என்று யார் சொன்னது..? அதற்கான விலையை நீங்கள் பிறிதொருநாள் கொடுத்தே ஆகணும்..

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் முரளி அய்யா. நீங்கள் சொல்வதுபோல, “இல்லாதவர்களிடம் எதையாவது தந்து உள்ளதையும் பிடுங்குவது என்பது” முற்றிலும் உண்மை. இதை அற்புதக்கவிதையாக்கிய தாராபாரதியின் கவிதையை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. இதுபற்றிய எனது பதிவொன்றும் உள்ளது. நேரமிருக்கும்போது படிக்க- http://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_3.html த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா தங்கள் கட்டுரையைப் படித்து கருத்திட்டதாகவும் நினைவு இருக்கிறது.

      நீக்கு
  9. அருமை!கவிதை கூறிய கருத்துகள் அனைத்தும் அனைவரும் அறிய வேண்டும் நன்றி!
    முரளி!

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்.

    இலவசம் என்பது தன்மானத்திற்கு இழுக்கு என்பார் அப்துல் ரகுமான்.

    தாராபாரதியின் நெருப்புக் கவிதை பேருணர்வூட்டுகிறது.

    அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895