என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஒன்னுமில்ல!


   புதுக்கோட்டை வீதி இலக்கிய இதழில் வெளியிடமுகநூலில்  '  ஒன்னுமில்ல!'  என்ற தலைப்பில் கவிதை  அனுப்புமாறு  ஒரு செய்தியைப் படித்தேன்.  அதன் விவரம் அறிய மீண்டும் தேடினால் கிடைக்கப் பெறவில்லை. எனவே எனது வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன். சகித்துக் கொள்வீர்.

                                 சமையலறைப்  பாத்திரங்களின்
                                 கூடுதல் சத்தமும் .
                                 புலம்பல் என்று தெரியாத முணுமுணுப்புகளும் 
                                 குழந்தைகள் மீதான சம்பந்தமில்லாத கோபமும்
                                 ஏதோ மாற்றம்என்பதை  மெதுவாக உணர்ந்து
                                 என்ன என்று கேட்கும் கணவன்களுக்கு
                                 மனைவிகள் சொல்லும் வார்த்தை
                                 ஒன்னுமில்ல!

                                 அலுவலகத்தில்
                                  உயர் அலுவலரிடம் திட்டு வாங்கிக் கொண்டு
                                  வீட்டில் எரிச்சல் காட்டும் கணவனைப் பார்த்து
                                  மனைவி கேட்டால்
                                  கணவன் சொல்லும் பதில்
                                    ஒன்னுமில்ல!

                                   பள்ளியில் சக மாணவனிடம்
                                   ஏதோ பேசியதற்காக
                                   வீட்டில் சொல்லிவிடுவேன்
                                   என்று மிரட்டும்
                                   ஆசிரியைக்கு பயந்து
                                   பள்ளி செல்ல தயங்கும்
                                   மகளிடம் அம்மா கேட்டால்
                                   கிடைக்கும் பதில்
                                     ஒன்னுமில்ல!

                                   கைபேசியை
                                   நோண்டிக் கொண்டிருக்கும்  மகன்  
                                    திடீரென்று மொட்டை மாடிக்கு ஓடி
                                    பேசுவதைப் பார்த்து அப்படி என்னதான் பேசுகிறாய்
                                    என்று  கேட்டால் கிடைக்கும் பதிலும்
                                      ஒன்னுமில்ல!

                                    ஏதோ உதவி கேட்க
                                    வீட்டுக்கு வந்து
                                     தயங்கி தயங்கி கடைசியில்
                                     ஏதும் கேட்காமலே  புறப்பட
                                     என்ன விஷயம் என்று கேட்பதற்கு
                                     பக்கத்து  வீட்டு நண்பர்சொல்வது
                                      ஒன்னுமில்ல!

                                     பூச்சியம் என்றால்
                                     ஒன்றுமில்லை என்று
                                     படித்த நினைவு இருந்தும்
                                    ஆறாம் வகுப்பில் பூச்சியத்துக்கும்   கீழும்
                                      எண்கள் இருக்கிறதென்று விளக்கி
                                     சந்தேகம் ஏதும்  இருக்கிறதா ஆசிரியர் கேட்க
                                     'அப்ப படிச்சது  தப்பா '
                                     என்று ஐயம்  இருந்தும்
                                      மாணவன் பயத்தில் சொல்வது
                                      ஒன்னுமில்ல!

                                     முற்றும் துறந்தவர்களாயினும்
                                     முழுதும் அனுபவித்தவர்களாயினும்
                                     வாழ்க்கை பற்றி சொல்வது
                                        ஒன்னுமில்ல!

                                      பல சமயங்களில்
                                      மனம் ஆயிரம் நினைத்தாலும்
                                       வாய் சொல்லும் வார்த்தை
                                       ஒன்னுமில்ல!

                                      ஒன்று மட்டும்
                                      கேட்போருக்கும்
                                      சொல்வோருக்கும் 
                                      நிச்சயம் தெரியும்
                                      எல்லா   ஒன்னுமில்ல! களிலும்
                                      ஏதாவது ஒன்று
                                      இருக்கத்தான் செய்யும் என்பது



********************


15 கருத்துகள்:

  1. இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ...........ஒண்ணுமில்ல
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ஒன்றும் இல்லை என்றாலே ஏதாவது இருக்கிறது என்பதுதான் பொருள்!
    கவிதை அழகு! அடுக்கிய விதம் அதனினும் அழகு! (அய்யா நீர் புலவர்தான்!)
    எனக்கொரு சந்தேகம் முரளிஅய்யா...
    ஒன்னுமில்லையா? ஒண்ணுமில்லையா?
    ஒண்ணுமில்லை என்பதே வழக்காகிவிட்டாலும்... ஒன்று என்பது ஒன்னு என்றுதானே மருவிவரும், சம்பந்தமில்லாமல் எங்கிருந்து டண்ணகரம் வந்தது? வேறொன்னுமில்லை..! சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! எது சரி என்பதை ஆராயாமல் வழக்கமானதையே பயன்படுத்திவிட்டேன். தாங்கள் கூறியுள்ள விளக்கம் பொருத்தமானது. ஒன்னுமில்லை என்பதே சரியாக இருக்கவேண்டும் இதோ மா(ற்)றி விடுகிறேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
    2. ஓ! மிக்க நன்றி நிலவன் அண்ணா...ஒன்னுமில்லைதான் சரியா....நாங்களும் ஒண்ணுமில்லை என்று தான் பேச்சு வழக்கைல் வரும டண்ணகரம் பயன்படுத்தி வந்தோம். கற்றுக் கொண்டோம் அண்ணா மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  3. சபாஷ்!ஒண்ணுமில்ல என்பதில் இவ்வளவு இருக்கா :)
    ஒண்ணுமில்லையில் காதலன் காதலி சொல்வது ஒண்ணுமில்லையா ஜி :)

    பதிலளிநீக்கு
  4. அர்த்தம் உள்ள நல்ல கவிதை என்று பாராட்டுவதை தவிர இந்த கவிதையில் குறை சொல்ல ஒன்றுமில்லை..

    பதிலளிநீக்கு
  5. ஒன்னுமில்லை என்னும் வார்த்தையில்தான் எல்லாமும் இருக்கிறது
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  6. பாராட்டுகள்! அடிக்கடிச் சொல்லும் வார்த்தையும் அதன் பின்னே நாங்களே சொல்லும்..."நீ ஒண்ணுமில்லைனு சொன்னா அதுல ஏதோ இருக்கு" என்று சொல்லுவதும் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நொடியையும் மிக அழகுற வரிகளில் வடித்து விட்டீர்கள்....ம்ம்ம்ம் வேறு என்ன..."ஒண்ணுமில்லை" சொல்வதற்கு!!!! (அப்படினா என்னவோ இருக்கே....ஆம்! மனம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!!!!!!!)

    பதிலளிநீக்கு
  7. ஒண்ணுமில்லைன்னு சொன்னாலே ஏதோ இருக்கு என்று பொருள். தங்கள் பதிவு மூலமாக ஒன்றுக்கு மேல்கூட இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. ஒன்னுமில்லை என்று சொல்வது ஏதோ இருக்கிறது என்பதைக் குறிப்பதால் ஒன்னுமில்லை ஏன் ஏதுமில்லையாகக் கூடாது

    பதிலளிநீக்கு
  9. சும்மா ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேனே தவிர ஒன்னுமில்லை

    பதிலளிநீக்கு
  10. ஒண்ணுமில்லையில இத்தனை இருக்கா?
    அடுக்கடுக்காய் நிறைய ஒண்ணுமில்லை...
    ஆமா முத்து நிலவன் ஐயா சொன்னது போல் நாமளும் பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்கான ஒன்னுமில்லைக்கு மாற வேண்டியதுதான்.... ஆனாலும் அந்த ஒண்ணுமில்லை கொடுக்கும் ஏதோ ஒன்று இதில் இல்லாதது போலிருக்கே... அப்படியே பழகிட்டேடா குமாருன்னு மனசு சொல்லுது...

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  11. ஒன்னுமில்லை! என்று சொல்லியே எத்தனை விஷயம் சொல்லி விடுகிறோம்....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. ஒண்ணுமில்லை என எழுதிய கவிதையே இப்படி எனில் இப்படி விஷயம் கொண்டது எனில், கருத்து கந்தசாமி போல சொல்ல வேண்டிய கவிதை எனில், சொல்லவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895