தில்லை அகத்து குரோனிக்கல்ஸ் வலைப் பதிவில் பதிவர் துளசி கீதா அவர்கள் கல்வி சார்ந்த நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். கல்வியின் மீதான முக்கியத்துவத்தையும்
அவர் சமுதாயத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையையும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது . கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப் பட வேண்டும் என்ற ஆதங்கம் அவரது கட்டுரை முழுதும் காணப்படுகிறது. அவருடை நல்லெண்ணத்திற்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுக்கள் . அவரை சில முறை சந்தித்திருக்கிறேன்.அவரது ஆர்வமும் சுறுசுறுப்பும் பரந்த அறிவும் என்னை வியக்க வைக்கும் ஒன்று
அறிஞர்களும் கல்வியாளர்களும் மட்டுமே எழுதி வந்த கல்வி பற்றிய கருத்துகளும் விவாதங்களும் இன்று பொது வெளிக்கு வந்துள்ளது இவை சாத்தியமானதற்கு இணையமும் ஒரு காரணம். நம்மைப்போன்ற சாதாரணர்களும் நமது கருத்தையும் வெளிப்படுத்த உதவும் களமாக இணையம் விளங்குகிறது. பல்வேறு கோணங்களில் விவாதங்கள் முன் வைக்கப் படுகின்றன. இவை நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கொள்ளலாம் .
கல்வி தொடர்பான என் சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துகளை கூற விரும்புகிறேன்.இதில் கூறப்பட்டுள்ளவை எனது சொந்தக் கருத்தே . நான் குறிப்பிடுபவை அனைத்தும் பள்ளிக்கல்வியைப் பற்றியதே .
பொதுவாக பலரும் விரும்புவது ஒரே சீரான கல்வி வேண்டும் ஏழைக் கொரு கல்வி பணக்காரர்களுக் கொரு கல்வி என்ற நிலை இருக்கக் கூடாது ,நாடு முழுவதும் கல்வியில் சமச்சீர் தன்மை வேண்டும் என்பது.
இவ்வாறு குறிப்பிடுவதில் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் . ஒன்று கற்பிக்கும் பாடத்திட்டத்தில் சமச் சீர் தன்மை, பள்ளி வசதிகளில் கிடைக்கும் சமச்சீர் தன்மை. பணக்காரப் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் உள்ள அத்தியாவசிய குறைந்த பட்ச வசதிகளாவது ஏழைப் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் பாடத் திட்டத்தில் சமச்சீர் தன்மை கொண்டு வருவதில் சில சிக்கல்கள் உள்ளன
அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை விட மெட்ரிக் சற்று கடினம், சி.பி.எஸ்.சி. அதைவிட கடினம். எளிய பாடத்திட்டம் சற்று கடின பாடத் திட்டம், மிக கடினமான பாடத் திட்டம் என்ற பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டதன் நோக்கம் மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் திறமையை மேலும் வளர்ப்பதாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி வியாபாரத்தை பெருக்கிக் கொண்டன.
இந்தியாவில் ஏராளமான பாடத் திட்ட முறைகள் பின்பற்றப் படுகின்றன . தமிழ் நாட்டிலும் மாநில அரசு பள்ளி ,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய,மத்திய அரசின் சி,பி எஸ்.சி பள்ளிகள் ,இன்டர்நேஷனல் பள்ளிகள் என பல்வேறு கல்வித் திட்டங்கள் நடை முறையில் உள்ளன. இதில் மாநில அரசின் கல்விப் பிரிவுகளாக அரசு,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய கல்வித் திட்ட முறைகள் பத்தாம் வகுப்பு வரை நடைமுறையில் இருந்தன தற்போது சமச்சீர் கல்வி முறை மூலம், தமிழ்நாடு மாநில அரசு கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாகி விட்டன. அவை அனைத்தும் +2 வரை ஒரே பாடத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும்.
முழுமையான சமச்சீர் கல்வி என்பது
விவாதத்திற்குரியது .தனியார் பள்ளிகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப் பட்டால் ஒழிய
கல்வியில் சமத்தன்மை பின்பற்றுவது சாத்தியமல்ல. என்னைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு எளிமையான கல்வி பணம் படைத்தவர்களுக்கு கடினமான கல்வி முறை பின்பற்ற வேண்டும் என்று கருதுகிறேன். இதன் பொருள் அரசு பள்ளிகளுக்கு சற்று எளிமையான கல்வி திட்டம். காரணம் வாழ்க்கையே போராட்டமான சூழலில் இருந்து வருபவர்க்கு ஆதரவு அளிப்பது அரசு பள்ளிக் கூடங்களே .கல்வி திட்டம் கடுமையாக இருந்துவிட்டால் இடைநிற்றல் அதிகமாகி விடும். அதனால்தான் 8 ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி வழங்கப் படுகிறது. அனைவருக்கும் தேர்ச்சி வழங்கக் கூடாது அதனால்தான் தரம் குறைந்து விட்டது என்று கூறுவோர் உண்டு /இதில் ஆசிரியர்களும் அடக்கம். நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை உணர முடியும் முன்பெல்லாம் மாணவர்களை பெயில் ஆக்க முடியும். அப்படி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டில் தேர்ச்சிக்குரிய அடைவைப் பெற்றிருப்பார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.அடுத்த ஆண்டு வேறு வழியில்லை என்று பாஸ் செய்து அனுப்பி விடுவார்களே தவிர கற்றல் நிலையில் முன்னேற்றம் இருக்காது . தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் பள்ளியை விட்டு நின்று விடுவார்கள். இதைத் தவிர்க்கவே முழுத் தேர்ச்சி அனுமதிக்கப் படுகிறது. அதனால் தேக்கம் செய்வதில் எந்த பயனும் இல்லை.. எளிமையான பாடத்திட்ட த்திற்கே இந்த நிலை என்றால் கல்வி கடினமாக இருந்தால் எப்படி இருக்கும்?. பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்கே பெரும்பாடான நிலையில் தரமான கல்வி என்ற பெயரில் கடுமையான பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளுக்கும் பொருத்தினால் ஒரு தேக்க நிலை உருவாக வாய்ப்பு உண்டு. (கடினமான பாடத் திட்டத்தை தரமான கல்வி என்று பலரும் நம்புகிறார்கள் உண்மையில் கல்வியின் தரம் பாடத்திட்டம் மட்டும் சார்ந்தது அல்ல. அதற்கு ஒரு தனிப் பதிவு எழுத வேண்டும்)
சீரான கல்வி திட்டம் செயல் படுத்தப்
படும்போது சில சிக்கல்கள் எழுவது இயல்பானதே. தமிழ் நாட்டில் இப்போது சமச்சீர் கல்வி முறை உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் +2 தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே
அனைத்து முறை பள்ளிகளுக்கும் ஒரே +2
சிலபஸ்தான் . ஒரே பொதுத் தேர்வுதான் சி
பி. எஸ் சி பள்ளிகளைத் தவிர. இதர பள்ளிகளான மெட்ரிக் ,ஆங்கிலோ இந்தியன்,பள்ளிகளிலும் +2 வுக்கு மட்டும் ஒரே பாடத் திட்டம்தான் பின்பற்றப் பட்டு வருகின்றன. முன்பு இவை 10 வகுப்பு வரை வெவ்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றி வந்தன. தற்போது சில ஆண்டுகளாகத்தான் 10 வகுப்புவரையிலான பாடத் திட்டமும் மாநில கல்வித்திட்ட பள்ளிகளுக்கும் ஒன்றாக உள்ளது. அது மிக
எளிமையானது. அது மெட்ரிக் பள்ளிகளுக்கு சாதகமாகப் போய் விட்டது . எளிமையான பாடத்
திட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் மதிப்பெண்களை வாரிக் குவித்து விடுகின்றன. இதனால்
பாதிக்கப் படுவது அரசு பள்ளி மாணவர்கள்தான். என்றாலும் தனியார் பள்ளிகள் 10 வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை விரும்புவதில்லை.
என்னைப் பொருத்தவரை தனியார்
பள்ளிகளுக்கு கடுமையான பாடத் திட்டம் வைக்கவேண்டும். அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் தங்கியுள்ள நிலையில் உள்ள முதல்
தலைமுறை மாணவர்கள் படிக்க வரும்போது எளிமையாக கல்வி அவர்களை அச்சுறுத்தாத வகையில் அமைய
வேண்டும். படித்த தலைமுறையினரின் பிள்ளைகளோடு ஏழைப் பிள்ளைகள் போட்டியிடுவது
எளிதல்ல .
பொறியியல் மருத்துவம் முதலியவற்றில் சேர்க்க +2 வில் பெறும் மதிப்பெண்களே அடிப்படை. +2 பாடத் திட்டம் அரசுபள்ளிக்கு தனியாகவும் , தனியார பள்ளிகளுக்கு தனியாகவும் வைக்க வேண்டும். என்பது என் கருத்து. கடினமான சிலபஸில் குறைவான மதிப்பெண்களே பெற முடியும். அதனால் அதை பெற்றோர் விரும்ப மாட்டார்கள் அப்படி செய்தால் பல மெட்ரிக் பள்ளிகள் நிலை சரியத் தொடங்கும். கல்வி வியாபாரத்தை ஓரளவாவது தடுக்கலாம்.
சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும் வரை தனியார் பள்ளிகள் 10 வகுப்பு வரை கடினமான சிலபசை பயன்படுத்திவிட்டு +2 வுக்கு எளிதான ஸ்டேட் போர்ட் தேர்வில் மதிப்பெண்கள் பெற வைத்து விடுகின்றன . இப்போது எளிமையாக்கப் பட்ட சமச்சீர் கல்வி அவர்களுக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். 10வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை தரமற்றது என்று எதிர்த்த தனியார் பள்ளிகள், தொடங்கிய காலத்தில் இருந்தே பொதுவாக இருந்து வரும் +2 பாடத் திட்டத்தை தங்களுக்கென்று தனியாகக் கோரவில்லை.காரணம் இந்த +2 வில்தான் அதிக மதிப்பெண் பெற வைக்க முடியும். சி.பி எஸ்.சிக்கு மாறி விடுவோம் என்று பூச்சாண்டி காட்டினவே தவிர மாறவில்லை.ஏனெனில் சி.பி.எஸ்.சி +2 வில் மதிப்பெண்கள் எடுக்க வைப்பது கடினம்.
சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. புகழ் பெற்ற கல்லூரிகளில் மருத்துவம் பொறியியல் சேர்க்கைக்கு சி.பி.எஸ்.சி யில் பெறும் மதிப்பெண்கள் போதுமானதாக இருப்பதில்லை. அதீத திறமை வாய்ந்தவர்களே இதில் சாதிக்க முடியும். அதனால் ஸ்டேட் போர்டு +2 வுக்கு மாறி விடுகிறார்கள் இப்படி கல்வி முறையை விருப்பம் போல் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துகிறது.அவர்கள் பின் தள்ளப் படுகிறார்கள்.
இன்று அரசு பள்ளிகள் மாணவரின்றி காலியாகக் கிடக்கின்றன. எவ்வளவுதான் இலவச திட்டங்கள் நடைமுறைப் படுத்தபட்டாலும் ஆங்கில மோகம் காரணமாகவும் சற்று வசதிவாய்ப்புகள் பெருகியதன் காரணமாகவும் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் பெற்றோர்.இதன் காரணமாகத் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியும் நடை முறைப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாணவர் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயரத்த இது உதவவில்லை. அரசு பள்ளியில் பயின்றவர்க்கு
அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் உட்பட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். நடுத்தர மக்களை அரசு
பள்ளிகள் பக்கம் ஈர்க்க இது ஒரு வழியாக அமையும்.
ஆனால் அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது.அப்படியானால் அரசு பள்ளிகளில் குறைகளே இல்லையா என்றால் ஏராளமாக உள்ளது, ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக் குறைவு,உள்கட்டமைப்பு வசதிகள்(தற்போது பல தனியார் பள்ளிகளை விட மேலான நிலையிலேயே உள்ளது)நிர்வாக சிக்கல்கள் கிராமப் புறங்களில் ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பாமை, வேறு சில நிர்பந்தங்கள் போன்றவை அரசு பள்ளிகளுக்கு தடையாக உள்ளன .
தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப் படுவதாக வந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்திருக்கலாம் ஆசிரியர் இல்லாத காரணத்தால் பள்ளிகள் மூடப் படுவதில்லை. மாணவர்கள் இல்லாததால்தான் பள்ளிகள் மூடப் படும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு பள்ளியாவது இருக்கிறது.
இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்பில் ( L.K.G , VI) 25% இட ஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவினர். நலிவடைந்த பிரிவினருக்காக வழங்க வழி வகை செய்யப் பட்டிருக்கிறது. இதில் மைனாரிட்டி பள்ளிகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு. இதன்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத் தொகையை அரசாங்கமே வழங்க முன் வந்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் சேர்க்கை மேலும் குறைவதற்கானநிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏரளமான தனியார் பள்ளிகளும் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன.
கடந்த தலைமுறையில் அரசு பள்ளியில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள பெற்றோரின் மனப்பான்மை காரணமாகவே கல்வி வியாபாரமாகி விட்டது. இந்த அணுகுமுறையே கல்வியை சந்தைப் பொருளாக்கி விட்டது. இன்னும் சிந்திக்கப் படவேண்டியதும் விவாதிக்கப் படவேண்டியதும் பல உள்ளன. நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தொடர்கிறேன்.
கீதா அவர்களின் பதிவில் ஜோதிஜி அவர்கள் கூறியுள்ள கருத்து கவனிக்கத் தக்கது..தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் முறைகள், அவை பின்பற்றும் நடைமுறைகள், பற்றி எழுத பல பக்கங்கள் தேவை.
அரசு பள்ளிகளில் செயல் படுத்தப்படும் செயல் வழிக் கற்றல்.படைப்பாற்றல் கல்வி முறை, முழுமை மறு தொடர் மதிபீட்டு முறைகள் பற்றியும் ,நல திட்டங்கள் இவைபற்றி சற்று இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.
******************************************************************
விரிவாக அலசி உள்ளீர்கள் நண்பரே....
பதிலளிநீக்கு100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளை எல்லாம் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றிவிட்டு. மிச்சமுள்ள தனியார் பள்ளிகளை எல்லாம் அரசு மூடுமாறு உத்தரவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். வளர்ந்த நாடுகளில் எல்லாம் அரசு பள்ளிகள் தான். விரல் விட்டு எண்ணுமளவில் மட்டுமே தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் நம் நாட்டில் தான் நிலைமை தலைகீழ்.
பதிலளிநீக்குதங்கள் சொந்தக் கருத்துகளை படித்தேன் சார்!
பதிலளிநீக்குgood analysis!
சமச்சீரான கல்வியே நலம் பயக்கும். நன்கு விவாதித்துள்ளீர்கள். சற்றொப்ப ஒரேமாதிரியான கல்வி முறையே மாணவர் சமுதாயத்திற்கு உதவியாக இருக்கும். தொடர்ந்து பணி நிலை, மேம்பாடு என்ற நிலைகளில் ஒரே மாதிரியாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும். சமச்சீரான கல்வியில் பொது அறிவு, வேலை வாய்ப்பு, நீதி வகுப்பு, இன்றைய அறிவியல் என்ற நிலையில் பல வகுப்புகள் சேர்க்கப்பட்டால் இன்னும் மேம்பாடு காணமுடியும்.
பதிலளிநீக்குகல்வி இன்று வியாபாரப் பொருளாகிவிட்டமைக்கு முதற் காரணம்
பதிலளிநீக்குபெற்றோர்களே
ஏன் அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட
தங்கள் சொந்த பிள்ளைகளை, அதிக தொகை செலுத்தி
தனியார் பள்ளிகளில் தானே சேர்க்கின்றனர்.
நன்றி ஐயா
தம +1
நல்ல அலசல்.....
பதிலளிநீக்குஉங்களின் கருத்தும் சிந்திக்க வேண்டியவை...
பதிலளிநீக்கு+2 வரை பெற்றோர்களும் குழந்தைகளும் படும்பாடு இருக்கிறதே... ம்...
நல்ல அலசல். அரசுப் பள்ளிகளின்மேல் பெற்றோர்களுக்கு நம்பிக்க போனது எப்போது தொடங்கியது? அரசுப் பள்ளிகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனியார் பள்ளிகளுக்கு வகைதொகை இல்லாமல் அரசு அனுமதி வழங்கியது ஏன்?
பதிலளிநீக்குஆரம்பக் கல்வியைப் போல் பொறியியல் படிப்பும் இன்று சந்தையில் விற்கப்பட்டு சீப்பட்டு நிற்கிறது!
வசதி வாய்ப்புக்களில் சமச்சீர், பாடத்திட்டத்தில் வேறுபாடு என்ற உங்களின் கருத்தோடு ஒத்துப் போகின்றேன். இந்த தலைமுறை பெற்றோர்களால்தான் தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். மாதம் பத்தாயிரத்துக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் கூட கடன் பட்டாவது குழந்தையை தனியார் பள்ளியில் எல். கே.ஜி யின் மூன்று வயதில் சேர்த்துவிடுகின்றனர். நான் எனது பெண்ணை அரசுப்பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். அந்த பள்ளியில் வெறும் முப்பது மாணவர்கள்தான். என்னை குறை சொல்லாதவர்கள் இல்லை. என் உறவினர்கள் எல்லோரும் அரசுப்பள்ளியில் டிசிப்ளின் குறைவு என்று ஏளனம் செய்தபோதும் அரசுப்பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். எனது மற்ற குழந்தைகளையும் அரசுப்பள்ளியில் சேர்க்க உள்ளேன். ஆனால் அதுவரை அரசுப் பள்ளிகள் இருக்குமா என்ற ஐயம் தோன்றிவிட்டது. அருமையான பதிவு. நன்றி!
பதிலளிநீக்கு#சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.#
பதிலளிநீக்குஇந்த எண்ணத்தில் நானும் என் பையனிடம் சொன்னேன் ,ஆனால் ,மாறவே மாட்டேனென்று சொல்லி விட்டான்,அவன் விருப்பப் படியே விட்டுவிட்டேன் !
பல மாணவர்கள் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை என்பதே உண்மை !
Read more: http://www.tnmurali.com/2015/08/equality-in-indian-education.html#ixzz3hqULUYZB
பிள்ளைகளின் கருத்தை கேட்பவர் உங்களைப் போல் ஒரு சிலரே. ஆனால் பல பெற்றோர் கட்டாயப் படுத்தி ஸ்டேட் போர்டுக்கு மாற்றியதை நான் பார்த்திருக்கிறேன்.
நீக்கு#சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.#
பதிலளிநீக்குஇந்த எண்ணத்தில் நானும் என் பையனிடம் சொன்னேன் ,ஆனால் ,மாறவே மாட்டேனென்று சொல்லி விட்டான்,அவன் விருப்பப் படியே விட்டுவிட்டேன் !
பல மாணவர்கள் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை என்பதே உண்மை !
Read more: http://www.tnmurali.com/2015/08/equality-in-indian-education.html#ixzz3hqULUYZB
சகோதரரே! உங்கள் கருத்துகளும் சிந்திக்க வைக்கின்றது. மிக்க நன்றி தாங்கள் எங்கள் கட்டுரைக்கு ஒரு பதிவாக எழுதியது. நீங்கள் சொல்லும் கருத்துகளும் சரிதான் ஒரு கேள்வி என் மனதில் எப்போதும் ஒலிப்பது...தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி கொடுப்பதும் அரசுதானே. மட்டுமல்ல வித விதமான சிலபஸ்களை அனுமதிப்பதும் தவறு. மத்திய அரசு சிபிஎஸ்சி வைத்துக்கொள்ளட்டும். அதைப் படிக்க முடிந்தவர்கள் படிக்கட்டுமே....அதையும் அரசு ஏற்று நடத்தலாமே. சரி அடுத்து மாநில அரசுக் கல்வி. அதையும் ஓரளவிற்கு மத்திய அரசின் கல்விக்கு ஏற்றாற் போல் வைத்தால் அந்த மாணவர்களும் பயன் அடைவார்களே. இந்த இரண்டு மட்டும் போதாதா. சமச்சீர் என்பது நல்ல ஒரு திட்டம் என்றாலும், இந்த அளவேனும் திட்டங்களைக் கொண்டுவரலாமே. இதில் இன்டெர்னாஷணல் என்று ஒன்று ஆரம்பித்து பெயரை வைத்துக் கொண்டு சிபிஎஸ்சி திட்டத்தைப் பின் பற்றி ஆனால் பணம் மட்டும் லட்சக் கணக்கில் கறக்கின்றார்களே. இது முகமூடிதானே. அரசுதானே அனுமதி வழங்குகின்றது...
பதிலளிநீக்குகிராமப்புறத்து குழந்தைகள் மிகவும் அறிவுள்ளவர்களே. நானே அதனை நேரில் கண்டிருக்கின்றேன். அவர்களுக்கு வறுமைதான் தடை. கல்வியை ஏன் அரசு ஏற்று நடத்துவதில்லை. நீங்கள் சொல்லுவது போல் பணக்காரர்களுக்கு ஒரு பள்ளி இருக்கட்டும் ...அப்படி வரும் போது மற்ற மாணவர்கள் போட்டியிட வரும் போது பின் தள்ளப்படுகின்றார்களே. சிஎபிஎஸ்சி ஆயாக இருந்தாலும், ஸ்டேட் போர்ட் சிலபஸாக இருந்தாலும், இரண்டுமே தனியார் பள்ளிகளாலும் நடத்தப்படுகின்றன. அந்தத் தனியார் பள்ளிகளிலேயே கூட கட்டணம் வித்தியாசப்படுகின்றது. வசதிகளுக்கு ஏற்ப. அப்படி தனியார் மயமாக்குவதை விட அதே சிலபசை ஏன் அரசே ஏற்று நடத்தக் கூடாது. எத்தனையோ ஆசிரியர்கள் வேலை இல்லாமல் தானெ இருக்கின்றார்கள்...
தங்கள் கருத்துகளும் யோசிக்கத்தான் வைக்கின்றது...ஏற்கக் கூடியதாகவும் இருக்கின்றது...நீங்கள் அதே துறையில் இருப்பதாலும் ...மிக்க மிக்க நன்றி சகோதரரே. ஆனால் என்னைப் பற்றி தாங்கள் வியப்பதாகச் சொல்லி இருக்கின்றீர்கள். நான் மிகவும் சாதாரணமானவள்.
எங்கள்தளம் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ்.
மீண்டும் மிக்க நன்றி சகோதரரே. இன்னும் உங்களது கட்டுரையை வாசிக்க வேண்டும்....நீங்கள் சொல்லுவது போல் தனியார் ஒழிக்கப்பட்டால் நல்லது நடக்கும்....ஏனோ நம் நாடு கல்வியில் மிளிர்ந்தால் பல முன்னேற்றங்களைக் காண முடியும் என்ற ஒரு ஆதங்கம்.....மிக்க நன்றி சகோதரரே!
கல்வி பற்றி எழுதுபவர்கள் இப்போது இருக்கும் நடை முறைக்குச் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யவே விரும்புகின்றன. என்னைப் பொறுத்தவரை கல்வி பொது உடைமை ஆக்கப் பட வேண்டும். அதை ஒரு கன்கரெண்ட் சப்ஜெக்டாக எடுத்க்ஹுக் கொள்ளக் கூடது. மேலும் கல்வி சமூகத்தில் உயர்வு தாழ்வுகளைப் போக்கும் வகையில் இருக்க வேண்டும் அதற்கு ஒரே வழி ஏழை பணக்காரன் என்னும் பேதமில்லாமல் அனைவருக்கும் இலவசக்கல்வி, உணவு, சீருடை என்று கொடுக்கப் படவேண்டும் பலரும் தரம் என்பது கொடுக்கும் அதிக விலையில் இருப்பதாக எண்ணுவது போல் தோன்றுகிறாஊ. Lateral thinking is the need of the hour.
பதிலளிநீக்குசில எழுத்துப் பிழைகள் தட்டச்சில் வந்து விட்டது. திருத்தி வாசிக்க வேண்டுகிறேன் நன்றி.
பதிலளிநீக்குகடந்த நாலைந்து மாதங்களாக குழந்தைகளின் பள்ளிப் பாடங்கள், அவர்களின் ஒவ்வொரு புத்தகங்களிலும் உள்ள சமாச்சாரங்களை ஆய்வு செய்வதே என் ஓய்வு நேர பொழுது போக்கு. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு பாடங்களில் உள்ள தலைப்புகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக வியப்பாக உள்ளது. நான் கல்லூரி வந்து தெரிந்து கொண்ட விசயங்கள் அது. ஆனால் எந்த அளவுக்கு அதை முழுமையாக புரிந்து உள்ளனர் என்றால் மிகவும் வருத்தப்படப் வேண்டியதாக உள்ளது. ஏன் என்று ஒவ்வொரு விசயமாக ஆராய்ந்து பார்த்த போது ஆசிரியர்களின் தரம் புரிந்தது.
பதிலளிநீக்கு1) ஆங்கில வழிக்கல்வியில் பயின்று வந்த ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு பாடம் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை.
2) பள்ளிக்கூடம் தவிர மற்ற அத்தனை இடங்களிலும் ஒவ்வொரு குழந்தைகளும் அவரவர் தாய்மொழியில் தான் பேசுகின்றனர், யோசிக்கின்றனர் என்பதை ஆசிரியர்கள் உணர மறுக்கின்றர்.
3) கல்லூரியில் பேராசிரியர்கள் நடத்துவது போல ஒரே மூச்சில் ஒப்புவித்து விட்டுச் செல்வதால் அந்த பாடங்களில் கொடுக்கப்பட்ட விசயங்கள் குழந்தைகளின் சிந்தனைக்கு எந்த விதத்தில் பயன் இல்லாமல் போய்விடுகின்றது.
4) சென்றவாரம் பள்ளியில் குமுறிவிட்டு வந்தேன். இப்போது களையெடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது.
தற்போதைய சூழ்நிலையில் தனியார் வழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் கல்வியில் முழுமையாக அக்கறை வைத்து அதனை கவனித்து புரியாத பாடங்களை அவர்களுக்கு புரிய வைத்தால் மட்டும் தான் கொஞ்சமாவது தேறும். இன்னும் நாலைந்து ஆண்டுகளில் தமிழ் தேசம் கூமூட்டைகளில் தேசமாக மாறப் போகின்றது.
இன்னும் நிறைய எழுத முடியும்.
ஜோதி சார்,உங்கள் கருத்துகளை விரிவாக எழுதுங்கள்
நீக்குஅரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள செயல்வழிக் கற்றல் , படைப்பாற்றல் கல்வி ,போன்றவை பழைய முறைகளை விட சிறப்பானவை..ஆனால் அவற்றை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. காரணம் தனியார் பள்ளிகளின் வீட்டுப் பாட முறை, மனப்பாட முறைகளுக்கு இவர்களும் அடிமையாகி விடுகிறார்கள், கல்வி கேள்வி பதில் எழுதும் பயிற்சியாக் மட்டுமே நினைகிறார்கள்.அரசு பள்ளிகளில் கட்டாயப் படுத்துதல் காரணமாக கற்பித்தலில் கற்றல் துணைக் கருவிகள் பயன்படுத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் அவை என்னவென்றே தெரியாது. ஒரு முறை பகா எண்கள் கற்பிக்க உதவும் ராடஸ்தானிஸ் சல்லடை என்ற கற்ற துணைக் கருவியை செய்து ஐந்தாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் மகனிடம் பள்ளிக்கு( அந்தப் பகுதியில் எளிதில் சீட் கிடைக்காத பிரபல பள்ளி அது )கொடுத்து அனுப்பி இருதேன்.கணிதம் சொல்லிக் கொடுத்த பி.எட்.பட்டம் பெற்ற கணித ஆசிரியருக்கு அது என்னவென்றே தெரியவில்லையாம். தமிழாசிரியர் மட்டும் பாராட்டினர் என்று தெரிவித்தான்.
இன்னும் பேசுவோம்.
NDUS VALLEY CIVILIZATON
நீக்குஎன்றொரு பாடம். குழந்தைகள் இந்தப் பாடம் இன்று நடத்தினார்கள் என்று சொன்னார்கள். பொதுவாகக் கேட்டேன். அவர்களால் இதற்குரிய தெளிவாகப் பதில் அளிக்கத் தெரியவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்? தொல் பொருள், பண்டைய நாகரிகம்? ஏன் பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்? கைபர் போலன் கணவாய் வழியாக வந்த விபரம், சிந்து சமவெளி நாகரிகம் என்று மெதுவாகச் சொல்லி புரிய வைத்தேன்.
ஒரு வேளை இவர்கள் பாடத்தைச் சரியாகக் கவனிக்காமல் வருகின்றார்களோ? என்று எண்ணி எப்படி உங்கள் ஆசிரியர் இந்தப் பாடத்தை நடத்துகின்றார்? என்று கேட்ட போது அதன் உண்மை நிலவரம் புரிந்தது. ஐந்து பக்கங்கள் உள்ள பாடத்தை நாற்பது நிமிட ஒரு பீரியட் ல் வாசித்து முடித்து விட்டு நாளை டெஸ்ட் என்று சொல்லி அனுப்பி உள்ளார். அவருக்கே பாடங்கள் குறித்த விபரங்கள் தெரியுமா? என்ற எண்ணம் அப்போது தான் எனக்குத் தோன்றியது.
ஆசிரியரைப் போய்ப் பார்த்து விட்டு வருகின்றேன் என்று மறுநாள் கிளம்பிய போது வீட்டுக்காரம்மா தடுத்து விட்டார். ஏற்கனவே பல ஆசிரியைகள் பீதியில் இருப்பதால்.
96 சதவிகிதம் வாங்கி இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் முதல் இடம் வாங்கும் மாணவி எப்படிப் படிக்கின்றார்? என்று கேட்ட போது அது பல விசயங்களை உணர்த்தியது. ஒரு வரி விடாமல், வார்த்தைகள் விடாமல் மனனம் செய்து எழுதும் திறமை அந்த மாணவிக்கு இருப்பதால் முதல் வகுப்பு எடுக்க முடிகின்றது.
குழந்தைகளிடம் சில கேள்விகள் கேட்டு அந்த மாணவியிடம் தெரிகின்றதா? என்று பார்த்த போது நொந்து போயிட்டேன். அமெரிக்காவின் தலைநகர் எது என்பது தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் கேட்டால் தெரியவில்லை. கேள்வி பதிலாகக் கேட்டால் அப்படியே ஒப்புவிக்கின்றது.
நமது அரசியல் அமைப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம் குறித்துப் பாடம் உள்ளது. ஆனால் அதன் முழு விபரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தடுமாறுகின்றார்கள்.
பலவகைகளில் பாடங்கள் சிறப்பாகத்தான் உள்ளது. ஆனால் ஆசிரியர்களின் ஈடுபாட்டில் தான் எல்லாமே அடங்கி உள்ளது.
ஆங்கிலம் பேச வேண்டும் என்று அறிவுறுத்தும் பள்ளிக்கூடங்கள் எந்தக் குழந்தைகளும் சொந்தமாக எழுதுவதை ஊக்குவிப்பதில்லை.
பள்ளியில் குழு விவாதம் என்பதே இல்லை.
எந்த ஆசிரியரும் மாணவர்களின் தனிப்பட்ட திறன் குறித்தோ? அவர்களின் விருப்பு வெறுப்பு குறித்தோ தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை. அடிப்படை அன்பு, மனித நேயம் இல்லாமல் இருக்கும் ஆசிரியயைகள் எப்படிக் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று யோசித்துப் பார்ப்பதுண்டு.
ஆண்களை விடப் பெண்களுக்குக் குறிப்பாக ஆசிரியைகளுக்குக் கொஞ்சமாவது குழந்தைகள் மேல் பிரியம் இருக்குமே? என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இல்லை. ஐந்தாம் வகுப்பு வரை பல ஆசிரியைகள் இப்படித்தான் இருந்தார்கள். ஒருவர் மிகச் சரியாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இருவர் சரியான ஆசிரியைகள் இல்லாத காரணத்தால் தற்போது தடுமாறுகின்றார்கள்.
இந்த இடத்தில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளை நாம் எந்த அளவுக்கு நாம் விரும்பும் அளவுக்குத் தெளிவாகப் புரிய வைக்க முயற்சித்தாலும் அவர்களால் பள்ளிக்கூடத் தன்மை அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை என்பதை மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றேன். எனக்கே பலமுறை குழப்பாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் முரளி? என்ன செய்ய முடியும்?
கல்வித்துறை பற்றி அறிந்த வல்லுநரின் அலசல்
பதிலளிநீக்குசமச்சீர் கல்விமுறையில் உள்ள குளறுபடி புரிகிறது.
பதிலளிநீக்கு//பொறியியல் மருத்துவம் முதலியவற்றில் சேர்க்க +2 வில் பெறும் மதிப்பெண்களே அடிப்படை. +2 பாடத் திட்டம் அரசுபள்ளிக்கு தனியாகவும் , தனியார பள்ளிகளுக்கு தனியாகவும் வைக்க வேண்டும்.//
இதுதான் புரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டே பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைளை கடினமான பாடத்திட்டத்தில் படிக்க வைக்கவே விரும்புகிறார்கள். ஒருவேளை தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் அரசு பள்ளிகளை விட கடினமாக இருந்தாலும் அதில்தானே சேர்க்க விரும்புவார்கள்.? இந்தக் காலத்தில் எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்க நடக்கிறார்கள்..?
இன்னொரு விஷயம்... இன்றைய சூழலில் +2 தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை வேறு. தற்போது பொறியியலில் சேர்பவர்களில் பாதிபேர் தேர்ச்சி அடைவதில்லை. குறிப்பாக கிராமத்திலிருந்து அதிலும் அரசுப் பள்ளி தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் . அவர்களுக்கு +2 வில் தற்போது உள்ளதைவிட எளிமையான பாடத்திட்டம் இருந்தால் இன்னும் திணறுவார்கள். தனியார் பள்ளியில் கடினமான பாடத்திட்டத்தில் படித்துவிட்டு வரும் மாணவர்களுடன் போட்டிபோட முடியாமல் மன அழுத்தத்திற்கு அல்லவா உள்ளாவார்கள்.. அதனால்தான் +2 வில் இன்னும் சமச்சீர் பாடத்திட்டத்தைக் கொண்டுவராமல் இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்க வேண்டுமோ?தமிழகத்தை பொறுத்தவரை + 2 தொடங்கிய காலத்தில் இருந்தேஅரசு,மெட்ரிக்,ஆங்கிலோ இந்தியன் மூன்றுக்கும் ஒரே சமச் சீர்பாடத் திட்டம்தான் பத்தாம் வகுப்பு வரைதான் வேறு சிலபஸ்.. இதை பதவில் குறிப்பிட்டுள்ளேன்..தற்போதுள்ள பாடத் திட்டம் தரமானதே .மதிப்பீட்டு முறையும் தேர்வும் வினாக்களும் எளிமையானவை..அதே முறையைத் அரசு பள்ளிகள் தொடர்ந்து பின்பற்றலாம்
நீக்குஆனால் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் போன்றவற்றில் படிப்பவர்க்கு மட்டும் இன்னும் சற்று கடினமான பாடங்களை வைக்க வேண்டும் என்பதே என் கருத்து.
நான் அறிந்தவரை 10 வகுப்பு வரை கடினப் பாடத் திட்டத்தில் படிப்பதன் நோக்கமே சமச்சீர் பாடத் திட்டத்தில் உள்ள +2 வில் அதிக மதிப்பெண் பெருவதற்காக மட்டுமே.. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் கடினமாகக் கருதப் படும் சி பி.எஸ்.சி யை பாடத் திட்டத்தில் +2 வில் தேர்ந்தெடுப்போர் எண்ணிக்கை அதிக மாக இருக்க வேண்டும் . ஆனால் உண்மையில் அப்படி இல்லை.காரணம் வெறும் மனப்பாடம் மூலம் சி பி எஸ் சி யில் அதிக மதிப்பெண் எடுத்து விட முடியாது ஆனால் சென்னையில் கூட சி பி எஸ்.சி பள்ளிகள் மிகக் குறைவு.தனியார் பள்ளிகளையும் சேர்த்து 52 பள்ளிகளே cbse பாத் திட்டம் பின்பற்றுகின்றன. மெட்ரிக் பள்ளிகள் பத்து மடங்கு அதிகமாக (500) உள்ளன அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகள் 450 உள்ளன.
//அதனால்தான் +2 வில் இன்னும் சமச்சீர் பாடத்திட்டத்தைக் கொண்டுவராமல் இருக்கிறார்கள்//.
இது தவறு தமிழக மாநில பாடத் திட்டத்தை பொறுத்தவரை அனைவருக்கும் சமச்சீர் +2 தான் அது தொடங்கிய காலத்தில் இருந்தே.
வேறுபாடுகள் அனைத்தும் 10 வகுப்பு வரைதான். இருந்தது
அருமையான பதிவு! முரளி! நான் பணியாற்றிய காலத்துக் கல்வித் திட்டம் வேறு இன்று உள்ள திட்டம் வேறு! ஆகவே கருத்துக்களை அதிகம் தெரிவிக்க இயல வில்லை!
பதிலளிநீக்கு