என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

அன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்


தமிழ்ச்சரம் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கான எழுதியது-இரண்டாம் பரிசும் பெற்றுவிட்டது
நான் ரொம்ப நல்லவன் சார்

    சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா! அன்றாட வாழ்க்கையில நல்லவனா இருக்கறது. எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியாது. சொன்னா சிரிப்பீங்க.
    வடிவேலுவோட பிரபலமான காமெடி ஒண்ணு எல்லோருக்கும் தெரியும்.  ஒரு படத்தில அவரை நல்லா அடிச்சி அனுப்புவாங்க.  அப்ப ஒருத்தி கேப்பா,  இவ்வளோ அடிச்சி அனுப்பி இருக்காங்களே,. நீங்க திருப்பி அடிக்கக் கூடாதான்னு கேட்க” “நானும் அடிக்கலாம்னுதான் நினச்சேன்; அப்ப ஒருத்தன் சொன்னான். இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்டா ரொம்ப நல்லவன்டான்னு” என்று வடிவேலு சொல்வதைப் பார்த்து நாம் சிரிப்போம். அது உண்மைதான். மத்தவங்க நல்லவன்னு சொல்றதுக்காக நாம நம்மையே  மாத்திக்கறோம். அடிக்கடி இப்படி யாராவது சொல்லிக்கிட்டே இருக்கறது நம்ம மனசுல பதிஞ்சு போகுது
     எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் ரொம்ப நல்லவன் சார். சின்னவயசுல. இருந்தே என்னை அப்படி வளத்துட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.நான் குழந்தையா இருகும்போது, எங்கம்மா ஒரு நாள் ஹால்ல அரிசியை முறத்தில வச்சுட்டு துணி துவைக்க போய்ட்டாங்க. போறதுக்கு முன்னாடி "நீ ரொம்ப சமத்தாம். ரொம்ப ரொம்ப நல்ல பையனாம்.  அரிசிய இறைக்காம  விளையாடனும்"னு சொல்லிட்டு போனாங்க. அம்மா நல்லவன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது,  ஆனா அரிசிய கையில எடுத்து ஹால் பூரா இறைச்சு  விளையாடனும்னு ஆசையா இருந்தது.  என்ன பண்றது என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்களே! என் ஆசைய அடக்கிக்கிட்டேன்.  
  ஒரு முறை ஒடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட எங்கம்மா அழைச்சிக்கிட்டு  போனாங்க. வெளிய டாக்டர பாக்கறதுக்காக காத்திருந்தோம். உள்ள ஒரு  பையன் ஓ..ன்னு அலறி அழுதுக்கிட்டிருக்கிற சத்தம் கேட்டது. கண்ண மூடிக்கோ வலிக்காம டாக்டர் ஊசி போடுவார்னு” ஒருத்தர் சொல்ல , ஆனாலும் அந்தப் பையன் கேக்கல. வெளிய வந்த நர்சு என்னப் பாத்துட்டு டக்குன்னு உள்ள கூட்டிட்டுப் போனாங்க. உள்ள டாக்டர் கையில் ஊசியோட நின்னுக்கிட்டிருந்தார்.  எனக்கு பயமா இருந்தது . வெளிய ஓடலாம்னா நர்சு என்ன கெட்டியா புடிச்சிக்கிட்டிருந்தாங்க. டாக்டர் என்னைக் காட்டி சொன்னார், "இதோ பாரு இந்தப் பையனுக்கும் நான் ஊசி போடப்போறேன். அந்தப் பையன் அழமாட்டான். அடம் புடிக்க மாட்டான் சிரிச்சிக்கிட்டே ஊசி போட்டுக்குவான். ரொம்ப நல்ல பையனாம், இல்லடா கண்ணா!” என்று சொல்ல நானும் மனசுக்குள்ள ரொம்ப பயமா இருந்தாலும் ஆமான்னு” தலையாட்டினேன்.  அப்புறம் எங்கம்மாவைக் கூப்பிட்டு எனக்கு என்ன ஒடம்புன்னு கேட்டு ஒரு  ஊசிய எடுத்து அந்தப் பையன் முன்னாடியே எனக்குப் போட,  ஏற்கனவே சொன்ன மாதிரி நானும் பல்ல கடிச்சிக்கிட்டு அமைதியா பொறுத்துக்கிட்டேன். அதைப் பாத்துக்கிட்டிருந்த அந்தப் பையனும் ஊசி போட்டுக்கிட்டான். எல்லாம் எதுக்காக? நல்லவன்னு சொன்ன அந்த வார்த்தைக்குத்தானே!
          எங்கப்பாவோட  ஃபிரண்டு ஒரு நாள் வந்தார் . பொறந்த நாளுக்கு ஒரு பொம்மைய வாங்கி எனக்கு பிரசன்ட் பண்ணார். அந்த பொம்ம எனக்கு பிடிக்கவே இல்லை. கீழ போட்டு உடைக்கலாம்னு நினைச்சேன். அப்பா அவர் எங்கப்பாகிட்ட சொன்னாரு "உங்க பையன் ரொம்ப நல்ல பையன்னு என் வைஃப் அடிக்கடி சொல்வா! என் பையன் இருக்கானே ரொம்ப மோசம் எந்த பொருளைக் கொடுத்தாலும் உடனே உடைச்சிடுவான்"
  அவர் அப்படி சொன்னதும் நான் என்ன சார் பண்ண முடியும்? பொம்மைய தூக்கி போட்டு உடைக்கும் ஆசைய தூக்கி போட்டுட்டேன். புத்தகத்தை கிழிக்கனும் தண்ணியகொட்டணும், குளிக்கறதுக்கு அடம் பிடிக்கணும், ஓ ன்னு கத்தணும் இப்படி எல்லாம் செய்யணும்னுதான் நினைப்பேன்... ஊஹூம்
   எனக்கு ஒரு தங்கை உண்டு  சார். அவளை நைசா கிள்ளனும், முதுகில ஓங்கி அறையனும். அவ அழறத பாத்து சிரிக்கணும் நினைப்பேன். எங்க சார் அதெல்லாம் முடிஞ்சுது.? அக்கம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க எல்லாம் அவங்க பசங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதா எங்க அம்மாக்கிட்ட சொல்வாங்க. உங்க பசங்க பரவாயில்லையே ஒத்துமையா இருக்காங்களேன்னு பாராட்டுவாங்க. அதுவும் உன் பையன் இருக்கானே அவன் சமத்தோ சமத்துன்னு சொல்வாங்க. அதுக்காகவே சண்டை போடறதில்லை சார்.
  வீட்டிலதான் இப்படின்னா ஸ்கூல்லயும் அப்படித்தான்.  நல்லவன்னா என்ன நெத்தியில எழுதி ஒட்டியா வச்சுருக்கும்? எங்க மிஸ்கூட அப்படித்தான் சொல்வாங்க. ஒரு நாள் ஒரு பையன் இன்னொரு பையனை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட்டான். உடனே மிஸ்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டான். உடனே மிஸ் என்னைக் காமிச்சி இவன் என்னைக்காவது கெட்ட வார்த்தை பேசி இருக்கானா? அவனை மாதிரி நீங்களும் எப்பவும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று சொல்ல . சில சமயங்கள்ல கெட்ட வார்த்தை வாய் வரை வந்துட்டாலும் அடக்கிக்குவேன்.  இன்னைக்கு வரை திட்டறது கூட மரியாதையாத்தான் திட்டுவேன்
    இன்னொரு நாள் கிளாஸ்ல எல்லோருக்கும் டிக்டேஷன் குடுத்தாங்க. அதுல சிலதுல்லாம் எனக்கு தெரியல. சரி முன்னாடி இருக்கவன பாத்து எழுத எட்டிப் பாக்கலாம்னு நினச்சேன்.  இன்னொரு பையன் அவனுக்கு முன்னாடி இருந்த பையனை பாத்து எழுதிக்கிட்டிருந்தான், அதை பாத்துட்ட மிஸ் அவன் காதைத் திருகி அவன் கிட்ட என்னைக் கைய நீட்டி  காமிச்சி, "அவனைப்  பாரு! அவனுக்கு தெரியலன்னாகூட காப்பி அடிக்க மாட்டான். அவன மாதிரி நல்ல பையனா இருக்கணும்"னு  சொன்னதுக்கப்புறம் காப்பி அடிக்க மனசு வரல சார் எனக்கு. 
   பெரியவங்க இருக்கட்டும் என்கூட படிக்கிற  பிரண்ட்சுங்க கிட்ட கூட எனக்கு நல்ல பேருதான் சார். நாங்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம். எதிர் டீம் பசங்ககூட என் நேர்மைய பாராட்டுவாங்க சார். பேட்ல லேசா பட்டு கேட்ச் புடிப்பாங்க. அது அவங்களுக்கே தெரியாது.  அவுட் கொடுக்காமலே நானே வெளிய போய்டுவேன். இந்த மாதிரி மேட்சுல பேட்டிங் டீம்ல ஒருத்தர அம்பயரா நிப்பாங்க. யாரா இருந்தாலும் ரன் அவுட், ஸ்டம்பிங் , ஒத்தக்க மாட்டாங்க. நான் மட்டும் கரெக்டா அவுட் குடுத்துடுவேன். ஆப்பனன்ட் டீம்காரங்க நான்தான் அம்பயரா இருக்கணும்னு ஒத்தக்கால்ல நிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
  காலேஜ் போற காலம் வந்துச்சு சார். என்கூட படிக்கிற பசங்க எல்லாம் ஜாலியா பொண்ணுங்க கூட அரட்டை அடிப்பாங்க. கிண்டல் பண்ணி விளையாடுவானுங்க.  லேடீஸ் காலேஜ் வாசல்ல சைட் அடிக்க போவாங்க. நான் ரொம்ப நல்லவனாம். என்னை கூப்பிட்டுக்கிட்டுப் போக மாட்டாங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் ஆனா  அவங்கள மாதிரி என்னால இருக்க  முடியாது.
   அடிக்கடி கட் அடிச்சிட்டு பரங்கிமலை ஜோதியில சினிமா பாப்பானுங்க. அடுத்த நாள் அந்த சினிமாவைப் பத்தி பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருப்பாங்க. நான் பக்கத்தில போகும்போது நிறுத்திட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம் சார். எங்கிட்ட பேசும்போது மட்டும் பாடத்தைப்பத்தி மட்டும்தான் பேசுவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் கன்னாபின்னான்னு பேச மாட்டேனாம். எப்படி இருக்கு பாருங்க சார். காலேஜ் லைஃப் இப்படியே முடிஞ்சு போச்சு .
   அப்புறம் வேலை கிடைச்சது. அங்கயும் இதே கதைதான். நான் திறமையானவனாம் ரொம்ப பொறுமையானவனாம். எந்த வேலையா இருந்தாலும் முடியாதுன்னு சொல்ல மாட்டேனாம். என்கூடவேலை செய்யறவங்களும் அப்படித்தான் சொன்னாங்க. ‘சாருக்கு மட்டும் எப்படி கோவம் வராம இருக்குன்னு கேப்பாங்க’. அப்புறம் எனக்கு எப்படி சார் கோவம் வரும்?
   கல்யாணமாச்சு  சார் எனக்கு. மாமியார் வீட்டில எனக்கு ரொம்ப நல்ல பேரு. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. . என்ன சார் பண்றது. நல்லவனா இருந்துதானே ஆகணும். அப்புறம் என் மனைவிக்கும் என்மேல நல்ல அபிப்ராயம்னா பாத்துக்கோங்களேன். நம்ப முடியல இல்ல? நம்பறதெல்லாம் நடக்காததும், நம்பாததெல்லாம் நடக்கறதும்தனே வாழ்க்கை !
    ஒரு நாள் நான் கம்ப்யூட்டர்ல ஒக்காந்து ஏதோ பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவியும் அவங்க பிரண்டும் ஹால்ல  ஒக்காந்து பேசிக்கிட்டிருந்தாங்க. "எங்க ரொம்ப நாளா காணோமேன்னு' என் மனைவி கேட்க, 'அதை ஏன் கேக்கற. எங்க வெளியில வரமுடியுது. காலையில இருந்து  ராத்திரி வரை வீட்டு வேலை சரியா இருக்கு. எங்க வீட்டில எல்லோருக்கும் நாக்கு ஒரு மொழம் நீளம். விதம் விதமா சமைக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு. யாரும் துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டாங்க. ஆனா அது சரியில்ல இது சரியில்லன்னு குறை மட்டும் சொல்வாங்க . உங்க வீட்டுக்காரர் மாதிரி இருந்தா பரவாயில்லையே. எப்பவும் அமைதியா இருக்கார். ரோட்டில போகும்போது கூட இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பாக்கமாட்டார்?" என்று புகழ  
 ஆமாம். எங்க வீட்டுக்காரர் நல்லவர்தான். நான் எப்படி சமச்சு போட்டாலும் குத்தம் சொல்லவே மாட்டார். உப்புமா செஞ்சு பொங்கல்னு சொன்னாக் கூட சரின்னு ஒத்துக்குவார். எனக்கு வீட்டு வேலையில ரொம்ப ஹெல்ப் பண்ணலன்னாலும் எப்பவாவது லீவு நாள்ல டீ ல்லாம் போட்டு கொடுப்பார்" னு என் மனைவி சொன்னது என் காதில விழுந்தது.
  அப்புறம் என்ன நடந்திருக்கும்னு  நீங்க நினைக்கிறது சரிதான் சார். ஆமாம் நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே கிச்சனுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டுப் போய் குடுத்தேன். 
    இப்படியே காலம் போய்க்கிட்டிருந்தது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீட்டுக்கு திரும்பினதும் டேபிள்ல  5 வது படிக்கிற என் பையனோட ரேங்க் கார்டு பாத்தேன். மார்க்கெல்லாம் குறைவா இருந்தது. எனக்கு கோவமா வந்தது. ரெண்டு சாத்து சாத்தனும்.  கையெழுத்து போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். எங்க பையனைக் காணோமேன்னு தேடினேன். வெளிய ரோட்ல அவன் ஃப்ரெண்டு கூட பேசிக்கிட்டிருந்தான் அவன் என் பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்  "டேய்! எங்கப்பாகிட்ட  ரேங்க் கார்டு இன்னும் காட்டலடா. நான் வாங்கி இருக்கிற ரேங்க்குக்கு என்ன செம அடி அடிப்பாருடா? கையெழுத்து போடமாட்டார். உங்க அப்பா அடிப்பாரா"ன்னு கேட்டான். என் பையன் சொன்னான், "எங்கப்பா ரொம்ப நல்லவரு. அடிக்க மாட்டாருன்னு”.
   அதை  என் காதில கேட்டுட்டனே சார். அப்புறம் எப்படி நான் அடிக்க முடியும்? இனிமே நல்லா படின்னு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்.
      இப்பல்லாம் ஃபேஸ்புக், வாட்ஸாப்னு பிளாக்குன்னு  பொழுது போயிடுது. அங்க எவ்வளோ பேர் என்னென்னவோ எழுதறாங்க. நானும் எப்பவாவது எழுதறது உண்டு. ஆரம்பத்தில மத்தவங்க எழுதறதுக்கு  லைக்கும்  ”அருமை”, சூப்பர்” னு கம்மெண்ட் போடறது உண்டு. சாருக்கு நல்ல மனசு. எப்பவுமே எல்லோருக்கும் லைக்கும், பாசிட்டிவ்வாதான் கம்மெண்டும் போடுவாருன்னு ஒரு கருத்து உருவாகிடுச்சு. என்ன பண்றது எனக்குப் பிடிக்காத , என்கருத்துக்கு எதிரானதாக இருந்தாலும்  ஆஹா,ஓஹோன்னு புகழ்ந்து கம்மெண்ட் போடவேண்டியதா போயிடுது என்ன பண்றது.  அப்படி ஒரு இமேஜ் உருவாகிப் போச்சே!
       இன்னும் எவ்வளவோ இருக்கு சார் . எதை சொல்றது/ எதை விடறது?.

   என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லவனாக்கிட்டாங்க சார்.   இனிமேலும்   நல்லவனா இருக்கவே முடிவு செஞ்சிட்டேன்.  என்ன சார் சொல்லறீங்க?.
----------------------------------------------------------------------------------------------

#tccontest2020-நகைச்சுவைக் கட்டுரை-


உறுதிமொழி

இது என் சொந்தப் படைப்பு என்றும் இந்தப் படைப்பு  இதற்கு முன் மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படவில்லை என்றும் உறுதி அளிக்கிறேன்.
                                                                                   --டி.என்.முரளிதரன்

23 கருத்துகள்:

 1. டி என்...

  அட்டகாசமான நகைசுவை பதிவு..மிகவும் ரசித்தேன்.

  உண்மையாகவே நீங்க ரொம்ப நல்லவங்கதான்.. இம்புட்டு திறமையை விச்சிக்கிட்டு இம்புட்டு நாளா என்னோடைய பதிவுல.. நல்ல நகைச்சுவை நல்ல நகைச்சுவைன்னு சொல்லினு இருந்தீங்களே..

  பதிலளிநீக்கு
 2. ஹாஹா... நீங்க ரெம்ப நல்லவரு தான்! :) நகைச்சுவையை ரசித்தேன். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. ஹா... ஹா...

  // நம்பறதெல்லாம் நடக்காததும், நம்பாததெல்லாம் நடக்கறதும் தானே வாழ்க்கை //

  அடடே... குறளுக்கு வந்துட்டீங்க...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவனா மாறிட்டா எங்கிருந்தாவது எடுத்து தத்துவம் சொல்லித்தானே ஆகணும்

   நீக்கு
 4. ஹா... ஹா... ஹா...

  நல்லவனாய் இருப்பதில்தான் எவ்வளவு கஷடம்... எவ்வளவு நஷ்டம்... நீங்க தியாகி பாஸ்!

  ("தியாகி... புது பட்டம்!)

  பதிலளிநீக்கு
 5. ஹா.. ஹா... ஹா... நீங்க என்னைவிட நல்லவரு போலயே....

  பதிலளிநீக்கு
 6. அட எப்படிங்க என் சொந்தக்கதையை அப்படியே நேர்ல பார்த்து எழுதிய போல இருக்கே இதில் நீங்கள் நகைச்சுவைக்காக கூறிய பல விஷயங்கள் என் வாழக்கை அப்படியே நத்து இருக்கும் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு

  நல்லா எழுதி இருக்கிங்க முரளி சார் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 7. டீ எல்லாம் போட்டு கொடுத்து இருக்கிறீர்கள் மிக மிக நல்லவர்தான்.

  மிக அருமையாக சொன்னீர்கள்.
  நல்லவன் என்று பெயர் வாங்க நிறைய தியாகம் செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. இப்படியே நல்லவராகவே இருங்க சார், உங்களுக்குகாக பெய்யும் மழையில் நாங்களும் நினைந்து கொள்கிறோம்.
  உங்கள் எழுத்து நடை அருமை. மேலும் பிடிக்க ஆவலுடன் சந்தோஷ்

  பதிலளிநீக்கு
 9. உண்மையிலேயே ரொம்ப நல்லவராத்தான் இருந்திருக்கீங்க... என் மகன் கிட்ட (4 வயது),"நீ ரொம்ப சமத்து... இதை அங்க வையி" அப்படின்னு சொன்னா, நான் சமத்து கிடையாது... அதை அங்க வைக்க மா....ட்டேன்" னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கான்.

  பதிலளிநீக்கு
 10. தமிழ்ச்சரம் நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள். அருமையான நகைச்சுவை. இது உங்களை போன்ற நல்லவர்களுக்கான காலம். ரசித்தேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் முரளி. போட்டியில் கலந்து கொள்ளனும் என்றமுயற்சிகளில் ஈடுபதுவதே முதல் வெற்றி அதன் பின் அதிலும் வெற்றி பெறுவதும் என்பது மிக சிறப்பு மனமார்ந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 12. நல்ல நகைச்சுவை. சேம் ப்ளட் என்று சொல்லத் தோன்ற வைத்தது. வாழ்த்துகள்!

  துளசிதரன்

  ரசித்தேன் முரளி சகோ. பல இடங்கள் சிரிக்க வைத்தது. உண்மைதான்...நிஜமாவே இயல்பா இருக்க முடியாம போகும். எனக்கும் இந்த அனுபவம் உண்டு!!! ஹா ஹா ஹா ஹா....ஆனா எவ்வளவு நாள்தான் நம்ம இயல்பு வெளிப்படாம இருக்கும் அல்லது இருக்க முடியும்னும் தோன்றியதுண்டு.

  வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. ஐயகோ ... நல்லவனா இருக்குறதுல இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா ... நமக்கு தெரியாம போச்சே ...

  பதிலளிநீக்கு
 14. நல்ல காமெடி மாதிரித் தெரிஞ்சாலும் சில சமயங்களில் இது மாதிரித் தான் நடக்குது . எனக்கும் நடந்திருக்கு

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895