இது எனது 150 வது பதிவு
கடந்த வாரத்தில் பதிவுகள் தொடர்பாக மூன்று பதிவுகள் படித்தேன். ஒன்று அதிரடி ஹாஜா வின் "தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்". மற்றொன்று ரசீம் கசாலியின் "இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல." மூன்றாவது மதுமதியின் 'இப்படித் தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?'
அதிரடி ஹாஜா தனது பதிவில் "வாசகர் பரிந்துரையில் 7 ஓட்டுகளை பெரும் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன....ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய ஒரு ஓட்டை தவிர மீதி ஆறு ஓட்டுகள்
அதாவது 6 பேர் பரிந்துரைக்கும் பதிவு எப்படி வாசகர் பரிந்துரையில்
இடம்பெறலாம் மொக்கையான பதிவாக இருந்தாலும் நண்பர்கள் ஒட்டு போட்டுவிடுவதால் வாசகர் பரிந்துறையில் இடம் பெற்று விடுகிறார்கள் இதனால் வாக்கு பெற முடியாத புதிய பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறார்.
அவர் சொல்வது உண்மை என்றாலும் பதிவுலகைப் பொருத்தவரை எனக்குத் தெரிந்து நெருங்கிய நண்பர்கள் கலந்து பேசி வலைப்பூக்கள் ஆரம்பித்து தங்களுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்வது இல்லை. பதிவுலகில் நுழைந்த பின்னேதான் நண்பர்களாகிறார்கள். . ஒத்த அலைவரிசை உடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் மற்றவர் பதிவுகளுக்கு கருத்திடுவதும் வாக்களிப்பதுமாக இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு ஒட்டு போட்டது யார் என்று தெரியாமலிருக்கும். எனக்கு வாக்களித்த ஒரு சிலரை நான் பதிவர் சந்திப்பின்போதுதான் நேரில் பார்த்தேன்.
ஏழு பேர் மட்டும் வாக்களித்தால் எப்படி வாசகர் பரிந்துரையாகும் என்பது சரி என்றாலும் ஏதாவது ஒரு அளவுகோல் வேண்டுமல்லவா!,அந்த அளவுகோல் ஏழாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தமிழ் 10 இல் பத்து வாக்குகள் பெற்றால்தான் பிரசுரமானவை தலைப்பில் வெளியாகும். அதற்கு கீழ் உள்ளவை காத்திருப்பவை பட்டியலில்தான் இருக்கும்.
ஏழு வாக்குகள் பெறுவது சாதாரண விஷயம் இல்லையென்றாலும் புதிய பதிவர்களும் கொஞ்சம் முயற்சித்தால் ஏழு வாக்குகள் பெற்றுவிட முடியும்.இன்னும் அதிக வாக்குகளை நிர்ணயித்தால் புதிய பதிவர்களுக்கு மேலும் சிக்கல்தான். இன்னும் குறைத்தால் பரிந்துரைக்கு அர்த்தம் இல்லாமலே போய்விடும்.வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக வேறு பெயர் வேண்டுமானால் வைக்கலாம்.
இந்த ஏழு வாக்கு விஷயத்தில் தமிழ்மணம் கடைபிடிக்கும் நடைமுறை புதியவர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால் இப்பகுதியில் வெளியாகும் பதிவுகள் வாக்குகளின் எண்ணிக்கைப் படி வரிசைப் படுத்தப்படுவதில்லை. ஏழு வாக்குகள் பெற்றதும் உடனே வெளியாகி விடுகிறது.பின்னர் வாக்குகள் பெற்றாலும் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை. 50 வாக்குகள் பெற்றாலும் பின்னேதான் செல்லும்.அடுத்து 7 வாக்குகள் பெறுவது முதலிடத்தில் வருகிறது.
அதனால் புதியவர்கள் (என்னையும் சேர்த்துத்தான் ) பல பதிவுகளைப் படித்து சரியான பின்னூட்டம் இட்டாலே வாக்குகள் கிடைக்க வழி கிடைக்கும்.
நூறு நூற்றி ஐம்பது ஹிட்ஸ் கிடைத்தால் வாசகர் பரிந்துரையாக இருக்கவேண்டும் என்று சொல்லும் ஹாஜாவிற்கு கசாலி சொன்னது போல இவ்வளவு ஹிட்ஸ் பிரபல பதிவர்களுக்கே கிடைக்கும் புதிய பதிவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இன்னும் அரிதாகும்.
பிரபல பதிவர்களுக்கு கண்மூடித்தனமாக வாக்குகளும் கம்மென்ட்சும் குவிகின்றன என்பது உண்மைதான்.(உதாரணம்:கேபிளாரின் என்டர் கவிதை. விமர்சனம் இந்தப் பதிவின் இறுதியில் காண்க!) ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பதை உணரவேண்டும்.ஆரம்பத்தில் அவர்கள் இட்ட நல்ல பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்திருக்கக் கூடும்.
.கடந்த அக்டோபரில் தமிழ் மணத்தில்
இணைந்த நான் எனது நிறைய பதிவுகளுக்கு ஏழு ஓட்டுக்கள் பெற்றதில்லை.
பெரும்பாலும் எனது வோட்டுக்களை எனக்காக போடுவதில்லை. ஏழு ஓட்டுக்கள்
பெற்றால் வாசகர் பரிந்துரையில் இடம் பெறும் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து
கொண்டேன்.எப்படியோ தட்டுத் தடுமாறி இன்று தமிழ் மணத்தின் தரவரிசையில் 23
வதாக இருக்கிறேன்.
ஒரு சினிமாவைப் போலவே பதிவுகளின் ஹிட்டும் கணிக்க
முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நாம் எதிர் பாராத வகையில் சில பதிவுகள்
ஹிட்டாகி விடுகின்றன.என்றாலும் மினிமம் கேரண்டியாக 100 முதல்150 பேர் வரை
பார்க்க வைக்க நல்ல பதிவுகளை எழுதினால் மட்டுமே முடியும் என்பதை எனது குறைந்த வலைப்பதிவு அனுபவத்தின் மூலம் அறிய முடிகிறது. சில நேரங்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பதிவிற்கு குறைவான வாக்குகள் விழுவதும் உண்டு. எனது சமீபத்திய ஒரு பதிவு மட்டும் இரண்டாயிரம் பேருக்கு மேல் பார்வை இடப்பட்டது. அதிக கருத்துகளும் கிடைத்தன, ஆனால் வாக்குகளோ 6 மட்டுமே கிடைத்தன. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு எனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஏழாவது வாக்கை நானே போட்டேன். ஏற்கனவே அதிகம் பேர் பார்த்து விட்டதால் அதற்கு மேல் அதிக பயன் ஒன்றும் விளைய வில்லை.
முதலில்
நட்புக்காக வாக்களிப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து எல்லா பதிவுகளுக்கும்
வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.பதிவுகளின் தரம் மட்டுமே
வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.
புதிய பதிவர்களுக்கு தனி பகுதி தொடங்கலாம் என்ற
பிரபல பதிவர் கஸாலி சொன்னஆலோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ஆனால அதிலும் சிக்கல் உண்டு, புதிய
பதிவர் என்பதை எப்படி வரையறுப்பது பதிவுகளை எண்ணிக்கை வைத்தா? தமிழ்
மணத்தில் சேர்ந்ததை வைத்தா? காலத்தை வைத்தா என்ற கேள்வி எழுகிறது. எந்த முறையிலும் அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது.
புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர்
செய்துவருகிறார்கள்.ஒருவர் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
ரமணி, திண்டுக்கல் தனபாலன்,"வரலாற்றுச் சுவடுகள்" போன்றோர் எந்தப் பதிவாக
இருந்தாலும் அதில் சிறப்பு அம்சத்தை தேடிப் பாராட்டுவதோடு யாராக
இருந்தாலும் வாக்களிக்கிறார்கள்,. அவர்களது வாக்குகள் பிறரையும் வாக்களிக்கத் தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை. அதனால் பல புதியவர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.
****************************************************
மிகவும் பிரபல பதிவர் கேபிள் சங்கரை அறியாதவர்கள் பதிவுலகில் இருக்க மாட்டார்கள். அவரது சமீபத்திய என்டர் கவிதை ஒன்று 50 வாக்குகள் பெற்று தமிழ்மணத்தில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக இருந்தது. அதை அவரது பிரபலத்திற்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்ளலாம். அது மிகச் சுமாரான கவிதை. அதை உறுதிப் படுத்தும் விதமாகவே அதற்கு இடப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன. இனி கவிதை எழுத வேண்டாம் என்றும் அன்புக் கட்டளைகூட இட்டுள்ளனர்.ஆனால் கேபிள் அத்தனை கருத்துக்களையும் வெளியிட்டிருந்த நேர்மை பாராட்டுக் குரியது. இதே கவிதை வேறு யாரேனும் எழுதி இருந்தால் பாராட்டுக்கள் கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் மீது அதிக எதிர் பார்ப்புகளே விமர்சனங்களுக்கு காரணம்
குட்டி விமர்சனம்
கேபிள் ஜி மன்னிப்பாராக!
அந்தக் கவிதை
அடர் மழை
மூடிய கார் கதவுகளுக்குள்
ஏஸியின் குளிர்
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்
மழைக்கு ஒதுங்கிய
முழுக்க நனைந்த வெண்ணுடை
டைட் ஸ்லீவ் பெண்
யார் கண்ணுக்கும்
தந்தூரி சிக்கன் தெரியவில்லை.
இந்தக் கவிதையில் மூடிய கார் கதவுகளுக்குள் ஏஸியின் குளிர்.இது தேவயில்லை என்று கருதுகிறேன். தந்தூரி சிக்கன் இருமுறை வந்துள்ளது.இதையும் தவிர்த்திருக்கலாம்.டைட் ஸ்லீவ் இதுவும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காகவே தெரிகிறது. முழுக்க நனைந்த வெண்ணுடை பெண் இதுவே போதுமானது.
மாற்றி அமைத்தால் கவிதை எப்படி இருக்கும்.?
அடர் மழை!
மழைக்கு ஒதுங்கிய
முழுக்க நனைந்த
வெண்ணுடை பெண்!
யார் கண்ணுக்கும்
தெரியவில்லை
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்!
இப்படி இருந்திருந்தால் ஒருவேளை கவிதையாகி இருக்குமோ.
(இந்தப் பாணி சுஜாதா விடமிருந்து கற்றுக் கொண்டது)
**************************************************************************************