26.08.2012
அன்று நடந்த பதிவர்
சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி நம்மோட கவிதை
எடுபடலன்னாலும் அதுக்காக சும்மா விட்டுட முடிமா? அங்க வந்தவங்க பட்ட கஷ்டத்தை
நீங்களும் பட்டுத்தான் ஆகணும்..அதைத்தான் இப்போ படிக்க போறீங்க. சாரி
படப்போறீங்க.
தலைப்பை பாத்து தப்பா இருக்குன்னு நினச்சுடாதீங்க.
நான் அப்படின்னா என்னங்க இதயமா? மூளையா?மனசா.பெரிய
பெரிய ஞானிகள் அறிஞர்கள் சொல்றது நம்ம மர மண்டைக்கு ஒன்னும் ஏறலீங்க. உன்னை நீ அறிவாய்ன்னு
சொன்னாங்க. அதுவும் புரியலீங்க
கடவுள் பாதி மிருகம் பாதின்னு கமலஹாசன் சொன்னது
மாதிரி உள்ளுக்குள்ள ரெண்டு பேர் ஒரே உடம்புல இருக்கிற மாதிரி தெரியுது. ஒருத்தன் நல்லவனா
இருக்கான் இன்னொருத்தன் கெட்டவனா இருக்கான். இந்த ரெண்டு பேரும் என்ன படுத்தற பாட்டை
கவிதையா பதிவர் சந்திப்பின் போது கவிதையா வாசிச்சேன். ரெண்டு பேருமே நாந்தான் அப்படீன்றதால
அதுக்கு நானும் நானும் னு தலைப்பு வச்சேன்.
நானும் நானும்
என்னுள் இருப்பது இரண்டு ‘நான்’கள்
என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்?’கள்
நான்
என்பது முரண்பாட் டுருவம்
நானும்
நானும் எதிரெதிர் துருவம்
பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்
மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்
புதுமை கண்டு போற்றவும் செய்வேன்
பழமை கண்டும் வியந்தும் போவேன்
முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்
முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்
தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்
குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்
கண்டதை எழுதி கவிதை என்பேன்
கவிதை படைத்துக் குப்பை என்பேன்
சிறுமை கண்டு சீறவும் செய்வேன்
துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்
வறியவர் கண்டு வாடவும் செய்வேன்
வறுமை கண்டு ஓடவும் செய்வேன்
பனியைப் போல உருகியும் விடுவேன்
பாறை போலே இறுகியும் விடுவேன்
இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்
இசையைக் கூட இரைச்சல் என்பேன்
காதலை ஒருநாள் கடவுள் என்பேன்
காமம் என்று மறுநாள் சொல்வேன்
முற்றும் துறந்திட முயற்சியும் செய்வேன்
சற்று நேரத்தில் சஞ்சலம் கொள்வேன்
அடக்கம் நானில் அடங்கி இருக்கும்
ஆணவம் இன்னொரு நானில் தொனிக்கும்
நானே வெல்வேன்! நானே தோற்பேன்!
நானின் தன்மை அறியா தலைவேன்
எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும்.
எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும்
நான்கள் எனக்கு அடங்கு வதில்லை!
வழிவகை தெரிந்தால் தீருமென் தொல்லை!
நீங்கள் 'நான்' களை அறிந்தி டுவீரா!.
தீர்வொன்று இருந்தால் சொல்லிடுவீரா?
****************************