என்னை கவனிப்பவர்கள்

எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு?

    
  சமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது மரியாதை உண்டு. வசீகரா பாடல் மூலம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர். மன்னிப்பாயா பாடலால்  இளம் உள்ளங்களை உருக்கியவர் தாமரை. ஆண்களே திரைப் படப் பாடலாசிரியராக பரிமளிக்க  முடியும் என்ற மரபை உடைத்தவர். 

   பொறியியல் பட்டதாரியான தாமரை கோயம்பத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர் . ஆர்வம் உந்தித் தள்ள தன் பார்த்த பணியை விட்டு விட்டு  கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் பயணத்தை தொடர்ந்தார். இவருடைய படைப்புகள் இயக்குனர் சீமானை ஈர்த்தன. வாய்ப்பும் அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் தாமரை.

   பின்னர்   தமிழர் தேசிய இயக்க பொது செயலாளராக இருந்த
தோழர் தியாகுவோடு மணவாழ்க்கையில் இணைந்தார் தாமரை. இருவருக்கும் பழைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாத நிலையில் புது வாழ்வு வாழத் தொடங்கியதாகத் தெரிகிறது. 

   தியாகு நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர். கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டவர். மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தனது சிறை அனுபவங்களை தொடராக ஜூனியர் விகடனில் எழுதி வந்தார்.அது பெரும் வரவேற்பு பெற்றதாக அறிய முடிகிறது. தியாகு சிறையில் இருந்தபோது காரல் மார்க்சின் டாஸ் கேபிடல் என்ற புகழ் பெற்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

   சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டே இவர்கள் இருவரைப் பற்றியும் பரபரப்பான செய்திகள் வெளிவந்ததை அறிந்திருக்கலாம். தியாகு தமிழ் தேசிய இயக்கத்திலிருந்து நீக்கப் பட்டார். தியாகுவின் லீலைகள் என்று விமர்சனத்துக்குரிய வீடியோக்களும் யூ ட்யூபில் உலா வந்தன.

   இலங்கையில் நடைபெற இருக்கின்ற காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் தியாகு. பதினைந்து நாட்கள் நீடித்த பின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்தான் தாமரையின் முக நூல் பக்கத்தில் படத்தில் உள்ள status வெளியாகி உள்ளது.

.............. இந்தத் துன்பமான காலகட்டத்தில் தன்னோடு துணை நிற்கும்படி மேற்கண்ட பதிவில் கூறப பட்டுள்ளது.  தன் உள்ளத்தை மன வருத்தத் தோடு பதிவு செய்திருப்பதற்கு தியாகுவிற்கும் இவருக்கும் உள்ள பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது காரணம் என்று கூறப்படுகிறது. தியாகு உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பத்திரிகைகளை பார்த்துத்தான் தெரிந்து கொண்டாராம்  தாமரை

   தன்னை தவிர்த்து வந்த தியாகுவிடம் அனைவரின் முன்னிலையில் நியாயம் கேட்க உண்ணாவிரத நிறைவு நாளன்று அங்கு சென்றதாக தமிழக அரசியல் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

   இதன்  பின்னர் வெளியானதுதன் தாமரையின் முகநூல் ஸ்டேடஸ்.செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் என்ற முறையில் தாமரையின் நிலை கவலைக் குரியதுதான். தைரியமும் மன உறுதியும் கொண்ட பெண்ணான தாமரை இதை எதிர் கொள்ள முடியாமல் உடைந்து போய் முக நூலில் நிலையை பதிவு செய்தது சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.  பிரபல கவிஞர் அதுவும் பெண் ஆயிற்றே வழக்கம்போல் முகம் காணா முக நூல் நட்புக் கூட்டம் கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு துணையாக நாங்கள் நிற்கிறோம் என்ற தொனியில் கம்மெண்டுகளை அள்ளி வீசினர். எந்த வகையில் துணை நிற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  சொந்த சோகங்களை பதிவு செய்து அதற்கு ஒரு அரசியல் வாதியைப் போலஆதரவு தேடுவது எதற்காக என்பது புரியவில்லை. காவல் நிலையம் நீதி மன்றம் அல்லது நேரடி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியுமே!

   தமிழுக்காகவும் தமிழ் சமுதாயத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும் ( சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஒரு வேலை நான் அறியாமல் கூட இருக்கலாம்). என் மொழிப் பற்றும் இனப் பற்றும தான் என் அவல நிலைக்குக் காரணம் என்றும் கூறுகிறார். இது அவர்களது சொந்தப் பிரச்சனை. பிரச்சனைகள் தீர்ந்து  நல்லபடியாக வாழ பிரார்த்திக்கிறேன்.

       என்னை பொறுத்தவரை பெண்களோ ஆண்களோ தங்கள் குடும்ப விவகாரங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து ஆறுதல் தேடுவது சில சிக்கல்கள் உருவாக காரணமாக அமையக் கூடும்.   முகநூல் பயன் படுத்துபவர்கள் தங்கள் வீட்டில் நடந்த சிறு பிரச்சனையைக் கூட எல்லாரும் அறியும் வண்ணம் வெளியிட்டால் அந்த சூழலை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவிகளை, நல்லவர் போல் நடித்து ஏமாற்றும்  சமூக  வலை தளங்களில் வலம் கயவர்களுக்கு வாய்ப்பாக அமையும் அல்லவா?

    நல்ல  விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்

********************************************************************************************
முந்தைய பதிவுகள் 
*********************************************************************************************



சனி, 10 நவம்பர், 2012

புஷ்பா மாமியின் எச்சரிக்கை


  புஷ்பா மாமி ஏதோ வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு களைத்து எங்கள் வீட்டைக் கடந்து செல்கையில் என்னைப் பார்த்துவிட்டார். உடனே நீலம் புயல் போல திசை திரும்பி  எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்.

  "என்னடா!முரளி பாத்துண்டே இருக்க.உங்கப்பாவோ உங்கம்மாவோ இருந்தா என்ன மாமி எப்படி இருக்கேள்? னு விசாரிப்பா?நீ என்னடான்னா கண்டும்  காணாத மாதிரி இருக்க. அதெல்லாம் பெரியவாளோட போச்சு. "

"அப்படி எல்லாம் இல்ல மாமி!"

"உன் ஆத்துக்ககாரிய மாவு மிஷன்ல பாத்தேன். தீபாவளி வந்துதுடுத்தே. நீ போய் அரச்சுண்டு வரக் கூடாதா!நான் எங்க போய்ட்டு வரேன் தெரியுமா?"

"தெரியாது"

"அது  எப்படிடா எல்லாம் ஒன்வோர்ட்ல யே பதில் சொல்ற! நீ இன்சூரன்ஸ் ஏதாவது போட்டிருக்க யா! இன்சுரன்சே போடக் கூடாது.ஐ.சி.ஐ.சி.ஐ தான் படுத்தறான்ன. நம்ம பணத்த கட்டறதுக்கே LIC காரன் படாத பாடு படுத்தறான். நீ ஏதாவது ஹெல்ப் பண்ணக்கூடாதா!!"

"என்ன ஆச்சு மாமி"

"அட ரெண்டு வார்த்தை பேசிட்டயே" மாமி ஜோக்கடித்துவிட்டு "நீ பேசறதுக்கே யோசிக்கற.ஆனா இன்சூரன்ஸ் ஏஜென்ட்டெல்லாம் பேசியே நம்மை ஏமாத்தி பாலிசியை தலையில கட்டிட்டு போயிடறான்.தெரிஞ்சவா, உறவுக்காரான்னு வந்து கேக்கறப்ப முடியாதுன்னு மூஞ்சில அடிச்சாப்பல சொல்ல முடியல தாட்சன்யத்துக்கு போடவேண்டியதாப் போச்சு. இப்ப அவஸ்தைப் படறேன். ஒரு பாலிசியில ரெண்டு ப்ரீமியம் கட்டாம விட்டுட்டேன். அதையும் சேத்து இப்ப கட்டிடலாம்னு வேளச்சேரி ப்ராஞ்ச்சுக்கு போனா, ட்யூ இருந்தா இங்க கட்ட முடியாது. அந்த பிராஞ்சுக்குத்தான் போகணும் சொல்றான். என்ன கம்ப்யூட்டர் வந்து என்ன பிரயோஜனம்.கட்டரதுக்கே இப்படின்னா திருப்பி குடுக்கறதுக்கு என்னென்ன பண்ணுவானோ. அதுவும் ஏதாவது ஆச்சுன்னா ஒழுங்கா குடுப்பானா? LIC,கவர்ன்மென்ட்டுன்னு நம்பிதான் போடறோம்." மாமி மூச்சு விடாமல் பேசினார்."

"ஆமாம் மாமி,அவங்க ரூல்ஸ் படிதானே நடப்பாங்க!. நெட்ல கூட பழைய ட்யூ எதுவும் இல்லன்னதான் கட்ட முடியும். "

"நீ எப்பவுமே அவங்களைத்தான் சப்போர்ட் பண்ணுவே.!"

"நீங்க  டீட்டெயில்ஸ் குடுங்க நான் வேணும்னா அந்த பிராஞ்சில கேட்டுட்டு வரேன்."

"சரிடாப்பா! ரொம்ப தேங்க்ஸ். நீ ICICI ல ஏதாவது பாலிசி போட்டிருக்கயா!"

"ஆமாம்  மாமி. ஒரு பாலிசி இருக்கு"

"அப்படின்னா நான் சொல்றதைக் கேட்டுக்கோ. எங்காத்து மாமாவுக்கு  தெரிஞ்சு ஒருத்தர் ஏதோ பென்ஷன் பிளான் ன்னு சொல்லி மூணு வருஷம் 10000 ரூபாய் ICICI ல ப்ரீமியம்  கட்டி இருக்கார்.அது ஷேர் சம்பந்தப் பட்டதாம்.  என்னமோ IRD யாமே!?"

"ஆமாம் IRDA ன்னா Insurance Regulatory and Development Authority "

"அங்கிருந்துதான் ஒருத்தன் போன் பண்றேன்னு  பேசினானாம்.பேர், பாலிசி நம்பர்.எவ்வளவு ரூபா கட்டி இருக்கீங்கன்னு கரெக்டா சொல்லிட்டு. இப்ப இந்த பாலிசியோட மார்க்கட் வேல்யூ ரொம்ப குறைவாப் போகுது. நீங்க கட்டின பணத்தில 35% தான் கிடைக்கும்.அதுவும் ஒழுங்கா தரமாட்டான்.IRDA கண்ட்ரோல் ல எல்லா இன்சுரன்சும் இருக்கறதால எங்களுக்கு   கம்ப்ளைன்ட் வந்துக்கிட்டு இருக்கு. நாங்க இப்ப வாங்கி குடுத்துக்கிட்டு இருக்கோம்.நீங்களும் சொன்னீங்கன்னா உங்க பாலிசி அமவுண்டும் வாங்கி  குடுக்கறோம், 600 ரூபா மட்டும் நாங்க சார்ஜ் பண்ணுவோம்.நேர்ல வரவான்னு கேட்டு  பீதியைக் கிளப்பிட்டானாம்."

"அப்புறம்"

"அவரும் பயந்து போய் அடுத்த நாளே லீவு போட்டுட்டு .அங்க போய் இந்த விவரத்த சொல்லாம இப்ப க்ளோஸ் பண்ணா எவ்வளவு வரும்னு கேட்டிருக்கார். கட்டின பணத்தைவிட கூட கொஞ்சம் வரும்னு சொன்னதும் சந்தோஷமா  பாலிசிய சரண்டர் பண்ணிட்டார்.

  அப்புறம்  மெதுவா அவன்கிட்ட போன் விவரத்தை சொல்ல, நல்ல காலம் ஏமாறாம இருந்தீங்களே அதெல்லாம் unauthorised Call. IRDA இலிருந்து நிச்சயமா யாரும் போன் பண்ண மாட்டாங்கன்னு சொன்னானாம். எப்படியெல்லாம் ஏமாத்தறா பாரு. நீயும் ஜாக்கிரதையா இரு. அவனுக்கெல்லாம் எப்படிதான் போன் நம்பர் கிடைக்குதோ தெரியல. இது இல்லாம கண்ட இன்சூரன்ஸ் காரனுங்ககிட்ட இருந்து வேற ஒரே போன் தொல்லையாம். " 

"ஆமாம் மாமி விஷயம் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.இவ்வளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே.அதுவும் விளக்கமா சொல்றீங்களே! ஆச்சர்யமா இருக்கு."

"நான் அந்தக் காலத்து PUC யாக்கும்.உனக்கு ஒண்ணு தெரியுமா எங்காத்து மாமாவே SSLC தான் ." என்றார் பெருமையாக!

****************************************
 இதைப் படிச்சிருக்கீங்களா?



ஞாயிறு, 20 மே, 2012

அது உன் கவலை! எனக்கென்ன?


 அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி,  பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். .மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

    பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை  வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக்  கொண்டிருந்தான், "இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்"

  தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

   அதைகேட்ட  கோழி, "ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டப் போகிறேன்?." என்று அலட்சியத்துடன் சொன்னது.

  வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,"இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" என்று எச்சரித்தது.

   "முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!" துரத்தியது வாத்து.

   வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை"

   "ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான்  உள்ளது. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!"
என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.

    என்ன  செய்வது என்று புரியாமல் நின்ற எலி பன்றியைப் பார்த்து, "பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" எனக் கூவியது.

    "எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.? அதனால் எனக்கு கவலையில்லை. நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?" என்று சொல்லிவிட்டது பன்றி.

    கடைசியாக பசுவிடம் வந்த எலி, "ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

  "உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல  நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!" என்று கிண்டலடித்து சிரித்தது பசு.

   யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.
      
   நடு இரவில் திடீரென்று  எலிப்பொறி மூடிக் கொள்ளும் சத்தம் கேட்டது. எலி மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள் அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
  
  கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள்  என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
   வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

  எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும்  பணம் இல்லாதால் தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.

    இவை  அனைத்தையும்  வீட்டுக்குள்ளிருந்து   வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி "நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது." என்று சொல்லி அழுதது.

"பிறர்  ஆபத்தில்  இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்."
எலி  எனக்கு சொன்ன பாடமிது. இல்லை! இல்லை  எலி  எனக்கு சொன்ன வேதமிது.

பிடித்திருந்தால்  கருத்தளிப்பீர்! வாக்களிப்பீர்!

***********************************************************************************************
இதையும் படியுங்க!


  

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்!

இது சூப்பர் ஹிட் தானே? ஒத்துக்கறீங்களா?

என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது. சில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்கு ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாது.

       என்னடா  என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா?. உண்மையைத்தான் சொல்றேன். பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா? அது எப்படித்தெரியும்?. எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.
    
 பதிவு போடும்போதெல்லாம் என் மனைவிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறதுக்காக ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு இன்னுமா எழுந்திருக்கலன்னு  ஒரு ஹிட். வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்கன்னு சொல்லி ஒரு ஹிட்.

 என்னமோ பெரிசா பதிவு போடறேன்னு   நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே  அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு  கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட்.   இந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவுதான்னு கோவமா ஒரு ஹிட்.  இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட  பாக்கல   போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்

       இப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.

       இனிமேலாவது புரிஞ்சிக்கோங்க . நாந்தான் இனிமே தமிழ் பதிவுலகின்  ப(தி)வர் ஸ்டார்

 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா இன்னும் பல பதிவுகளை போடுவேன்னு சொல்லி எச்சரிக்கிறேன்.
*************************************************************
இதையும் படியுங்க!