என்னை கவனிப்பவர்கள்

முகநூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகநூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

2015ல் கிழித்தது என்ன? பதிவர்கள் முகநூலுக்கு தாவுவது ஏன்?


2015 இல்  கிழித்தது
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த 
இந்த தினசரி நாட்காட்டி
என்னைப் பார்த்து சிரித்தது
2015 ல் நீ கிழித்தது 
இவ்வளவுதான் என்று

***********

அற்ப சந்தோஷங்கள்

2015 எப்படி இருந்தது? எனது பதிவுகளைப் பொறுத்தவரை 2014 ஐ விட பரவாயில்லை .2014 இல் 55 பதிவுகள்தான் எழுதி இருந்தேன். 2015 இல் கொஞ்சம் அதிகமாக  65  கடந்து விட்டேன்.  இந்த எண்ணிகையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க விருப்பமுண்டு.  2015 இல் குமுதத்தில் ஒரு கதையும் விகடன்.காம் இல் இரண்டு படைப்புகளும் புதிய தலைமுறையில் ஒன்றும்வெளியானது.  விகடனில் இருந்து 400 ரூபாய் சன்மானம் கிடைத்தது. 2015 இன் அற்ப சந்தோஷங்கள் இவை.

நிறைவு :
வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இதன் சாதனை அரசுத் துறையையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று பள்ளி கல்லூரிகளில் கணிப் பேரவை தொடங்கபடுகின்றன. வலைப்பூக்கள்  விக்கிபீடியா பதிவுகள் எழுத பயிற்சிகள் அளிக்கத் தொடங்கியுள்ளது தமிழ் இணைய பல்கலைக் கழகம். இனி வரும் ஆண்டுகளில் கணித் தமிழ்  மேலும் வளர்ச்சியுறும் என்று நம்பலாம்
       மழை வெள்ளத்தின் போது சமூக வலை தளங்கள் ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.  குறிப்பாக முகநூல்   வெட்டி அரட்டையாகவும் வீண் பொழுது போக்கும் களம் என்று அறியப்பட்ட  நிலையிலும் திடீரென்று ஒரு ஆவேசம் வந்தது போல் விழித்தெழுந்து இளைஞர்களையும் ஆர்வம் கொண்டுள்ளவர்களையும் ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளுக்கு உதவியது மறக்க இயலாதது. உதவி செய்யும் உணர்வைத் தூண்டியதில் அதன் பங்கு முக்கியமானது. பல்வேறு தரப்பினர் ஓடிவந்து தன்னலம் கருதாது உதவி செய்ததை உலகம் அறிந்து கொள்ளவும் உதவியது சமூக வலைத் தளங்கள்.  அனைவரின் சார்பாக நன்றிகள்

எதிர்பார்ப்புகள்-2016
 கூகுள் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழுக்கு ஆதரவு அளித்தாலும் அதிகப் பேர் பயன்பாட்டை வைத்துத்தான்  கூகுள் ,ஆட்சென்ஸ் வழங்கி வருகிறது. ஹிந்தி மொழி ஆட் சென்ஸ் வசதியை பெற்றுள்ளது போல தமிழும் பெற வேண்டுமாயின் இணையத்தில் அதிக அளவு தமிழைப் பயன்படுத்த வேண்டும். மின்துறை பதிவுத் துறை, போன்ற அரசுத் துறைகள்  தமிழ் ஆங்கிலம் இரண்டிலும்  வசதிகள் வழங்குகின்றன. அவற்றில் தமிழைப்பயன்படுத்த நாம் முயல வேண்டும். வங்கிகளின் ATM இல் தமிழ் பயன்பாடு உள்ளது அவற்றையும் நாம் பயன்படுத்தவேண்டும். நாம் கணினியில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது செயல்பாடுகள் அனுமதியுடனோ அனுமதி இன்றியோ தகவல்களாக சேகரிக்கப் படுகின்றன. இந்த தகவல்களின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றை கணினி நிறுவனங்கள ஆராய்ந்து தங்கள் எதிர்கால  செயல்திட்டங்களை மேற்கொள்கின்றன, அதனால் நாம் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரித்தால் அதன் முக்கியத்துவம் கணினி நிறுவனங்களால் உணரப்படும் வாய்ப்பு  ஏற்படும் 

  ஆனால் வங்கி இணைய சேவைகளில் தமிழ்ப் பயன்பாடு காணப் படவில்லை. இவற்றையும் வலியுறுத்த வேண்டும்,கைபேசிகளில் தமிழ்ப் பயன்பாடு பரவலாக்கப் படவேண்டும். பெரிய சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் ,மருத்துவமனைகள், போன்றவற்றில் தமிழில் பில் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவை நிறைவேற நம் பங்கை அளிக்க முயற்சி செய்வோம்.

வலைப்பூவிலிருந்து முகநூல் தாவல்


 வலைப் பதிவர்கள் பலரும் முகநூலுக்கு சென்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு  சொல்லப்பட்டு விடுகிறது . சமீபத்தில் "தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற வலைப்பூவில் தொடர்ந்து மூத்த வலைப் பதிவர் திரு ரமணி ஐயா அவர்கள் கூட முகநூலின் பலம் என்று ஒரு பதிவை எழுதி இருந்தார்.

 வலைப் பதிவில் பிரகாசித்த  பலர்  ஒவ்வொரு ஆண்டும்  முகநூலுக்கு இடம் பெயர்வது வாடிக்கையாக உள்ளது  நகரத்திற்கு குடி பெயர்ந்த கிராமத்தார் எப்போதாவது சொந்த ஊர் பக்கம் வருவது போல வலைப்பூவிலும் அவ்வப்போது பதிவுகள் இட்டு வருகின்றனர்.

  பதிவுலகம் இப்போது தொய்வுற்றுக் கிடக்கிறது.அதனால்தான் பலர் முக நூலுக்கு மாறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.  எது சிறந்தது என்ற விவாதமும் ஒப்பிடும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

     இரண்டு தளங்களும் வெவ்வேறானவை.ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலும் சில  அம்சங்களை பார்ப்போம்.

   முகநூல் பதிவுகள் செய்ய சிறந்த ஞானமோ எழுத்தாற்றலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (இருப்பவர்கள் சிறப்பு கவனம் பெறுகிறார்கள் எனபதில் ஐயமில்லை) புகைப்படத்தை பதிவேற்றவோ, வாழ்த்துக்கள் சொல்லவோ, பிறர் கருத்துக்களை பகிரவோ தெரிந்திருந்தால் போதுமானது. சாதாரணர்களும் பங்கேற்க முடியும் என்பதே அதன் பலம்.. மேலும் பகிர்வது எளிதானது . இன்னொருவருடைய பதிவை பகிர்ந்தே லைக்குகள் பெறமுடியும். லைக் எனும் மந்திரச்சொல் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அதுவும் கொடுக்கல் வாங்கல் வகையை சார்ந்தது என்பது நிதர்சனம். அதன் இன்னொரு சிறப்பு கைபேசியில் எளிதில் கையாள முடியும் என்பது. முகநூல் பதிவிட சிறப்புத் திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து போகக் கூடிய பூங்கா முகநூல். முகநூல் வாசகர்கள் பெரும்பாலும் மேலோட்டமான வாசிப்புத்தன்மை வாசகர்களாக இருக்கிறார்கள். வலைப்பூ வாசகர்கள் சற்று ஆழ்ந்த வாசிப்பு மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். 

    நான் என் முகநூலை  என் வலைப்பதிவு  இணைப்புக்காக மட்டும் பயன்படுத்தி வந்தேன். அதில் இருந்து வரும் பார்வையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.அவர்களும் ஏற்கனவே நம் வலைப்பதிவு நட்பு வட்டத்தை சார்ந்தவர்களே . இது எனது அனுபவம். இது மற்ற வலைப் பதிவர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை 

     வலைப் பூக்களோ எழுத்தாற்றலை மையப்படுத்தி உள்ளது.அறிவியல் கருத்துக்கள், சிறப்பான கட்டுரைகள் படைப்புகள் போன்றவற்றிற்கு வலைப்பூவே சிறந்தது. வலைப்பூவைப் போல  முக நூலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முடியாது . வலைப்பூவில் சுதந்திரம் சற்று கூடுதலானது. வலைப்பூவில் ஆவணங்களை இணைக்க முடியும். ஒரு பொருள் சார்ந்து தேடி அறிவது முகநூலில் கடினம். வலைப்பூ அதுக்கு வாகானது . எந்தக் காலத்திற்கும் ஏற்ற பதிவாக இருந்தாலும் பத்து நாட்கள் முன்பு எழுதிய பதிவிற்கு லைக் போட்டதாக முகநூல் சரித்திரம் இல்லை. நாம் (படித்தாலும் படிக்காவிட்டாலும்) தொடர்ந்து லைக் போடாவிட்டால் நம் பக்கம் யாரும் திரும்பிக் கூட பார்க்க  மாட்டார்கள். முகநூல், பேருந்தில் செல்லும்போது சாலையோர விளம்பரத்தை ரசித்து அடுத்த சில நிமிடங்களில் அது மறந்து போக வேறொன்று இடம் பிடிப்பது போன்றது. வலைப்பூக்கள் பல நாட்களுக்குப் பிறகு கூட தேடிபிடித்து படிக்கப் படுவது உண்டு 

        ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுதிக் குவித்து விட்டு அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் ஏற்படும் ஒரு மந்த நிலையே வலைப்பதிவர்கள் முகநூலுக்கு வரக் காரணம் என்பது என் கணிப்பு. தொடர்ந்து தரமான பதிவுகளை எழுதுவது என்பது சாத்தியமன்று. ஆனால் முகநூலில் இடும் ஒவ்வொரு இடுகையும் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பது இல்லை. காலையில் எழுந்து ஒரு காலை வணக்கம் போட்டு விட்டு முகநூலை உயிர்ப்போடு வைத்து கொள்ளலாம். வலைப்பூ எழுத கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிந்தனைச்சோம்பல் முகநூல் பக்கம் வலைப் பதிவர்களையும் ஈர்க்கிறது. முகநூல் ஜனரஞ்சகமானது. வலைப்பூ கொஞ்ச தேர்ந்த வாசிப்பாளர் களுக்கானது. தரவுகள் சுட்டிக் காட்டுவதற்கு  ஏற்றது. வலைபூக்களுக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. முகநூல் பதிவை அதிகம் படித்துள்ளனர் என்பதை விட பார்த்துள்ளனர் என்றே பெருமை கொள்ள முடியும் . ஆனால் வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களும் முகநூலில் இயங்க முடியும். என்பது அதன் சிறப்பாக இருக்கிறது. அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்கான காணொலிகள், படங்கள் நகைச்சுவைகள், செய்திகள் சுவாரசியமான சர்ச்சைகள், வதந்திகள், ஏராளமாக முகநூலில் உலா வருகின்றன.. Chat  செய்வதற்கான வசதியும் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே முகநூல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் வருகைக்குப் பின் முகநூலின் வசீகரம் குறைந்துள்ளது என்று கருதப்பட்ட நிலையில் வாட்ஸ் அப் ஐயும் விலைக்கு வாங்கி தன கைக்குள் வைத்துக் கொண்டது முகநூல் நிறுவனம் 

   குழுவாக இயங்குவது   இணையத்தில் சகஜமானது.பதிவர்களில் குழுவாக இயங்கியவர்கள்  முகநூலுக்கு தாவிநாளும் பழைய வலைபூ   நட்பு வட்டமே அங்கும் நீடிப்பதை காண முடிகிறது. இணைய செயல்பாடுகள் பெரும்பாலும் நட்பின் அடிப்படையில் தொடங்குகிறது தொடர்கிறது .எனது முகநூல் பதிவுகளை நண்பர்களால்தான் கவனிக்கப் படுகின்றன 

  இரண்டுமே நல்லவை அல்லாதவை நிறைந்தவை என்பது பொதுவானது. வலைப்பதிவுகள் அதன் தன்மைக்கேற்ற வகையில் சிறப்பாகவே உள்ளன. தரமாக எழுதப்படும் பதிவுகள் அதிக பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன .

  என்னதான் இலவசமாக இவற்றை பயன்படுத்த முடிகிறது என்றாலும் இதற்குள் ஒரு வியபாரத் தன்மை ஒளிந்துள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இரண்டையும் அதன் சிறப்பு அம்சங்களைப் புரிந்து கொண்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்த முயற்சி செய்வோம். 

 2016 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 


******************************************************************

இன்னொரு சமூக வலைத்தளமான டுவிட்டர் பற்றியும் , வாட்ஸ் அப் பற்றியும் இன்னொரு பதிவில் விவாதிப்போம் 



செவ்வாய், 7 ஜூலை, 2015

நடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்


"என்றுமே என்னை மனிதப் புனிதன் என்றோ - வழிகாட்டும் தலைவன்
என்றோ - வாரி வழங்கும் வள்ளல் என்றோ - பேரறிவாளன் என்றோ -
நடிப்புக் கலை - ஓவியக்கலையில் கரை கண்டவன் என்றோ - பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
       இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.
என் உலகம் சிறியது, அதில்என் வாழ்க்கை மிகவும் எளிமையானது
இது உங்கள் உலகம் !
உங்கள் சுதந்திரம் !!
நீங்கள் நினைத்தபடி வாழுங்கள் !!!
எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன் ..." என்று உருக்கத்துடன் தனது முகநூல் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார் நடிகர் சிவகுமார்.  பின்னர் பலரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் எழுதத்  தொடங்கி இருக்கிறார்.
அவரது முக நூல்முகவரி https://www.facebook.com/ActorSivakumar

    சிவகுமார் நல்ல நடிகர் நல்ல மனிதர், சிறந்த பண்பாளர், ஒழுக்கம் மிக்கவர் நல்ல ஓவியர் .அனுபவம் மிக்கவர். இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். சிவகுமார் அவர்களோடு நெடுங்காலம் நெருங்கிப் பழகிய அமுதவன் அவர்கள் சிவகுமார் அவர்களைப் பற்றி தனது வலைப் பதிவில் எழுதிய  கட்டுரையைப் (நடிகர் சிவகுமாரின் மறுபக்கம்! – ஒரு எக்ஸ்ரே பார்வை!!படித்த போது சிவகுமார் அவர்களின் நற்பண்புகளை இன்னமும் விரிவாக அறிய முடிந்தது. 
சிவகுமார் நல்ல நடிகர் ஓவியர்,பேச்சளார் என்பதையெல்லாம் விட ஒரு திரை உலகின் மிக ஒழுக்கமான மனிதர் என்ற பெயர் அவரது புகழுக்கு கூடுதல் பலம் சேர்த்தது என்று சொல்லலாம் .

      அப்படிப் பட்டவரை மனம் நோக செய்துவிட்டனர் முகநூல் நண்பர்கள். முகநூல் கணக்கு இல்லாத பிரபலங்கள் இல்லை எனலாம். சிலர் பெயருக்கு கணக்கு வைத்திருப்பார்களே தவிர அதில் சில வாழ்த்து செய்திகள் அறிவிப்புகள் தவிர வேறு எதையும் பகிர்வது இல்லை. . ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். சாதாரணர்கள்  எது சொன்னாலும்  யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள் , ஆனால் பிரபலங்கள் வாய் தவறி ஏதாவது சொல்லி விட்டால்போதும் உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள்.அப்படி மாட்டிக் கொண்ட பாடகி சின்மயி விவகாரம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவகுமார் அப்படிப் பட்டவர் அல்ல தான் கற்ற கேட்ட படித்த அனுபவித்த  விஷயங்களை சுவையாக சொல்வதில் வல்லவர் என்பதை அவரது பதிவுகள் சொல்கின்றன. 
    கம்பராமாயண சொற்பொழிவு மூலம் இலக்கியத்திலும் தனக்கு இருந்த ஆற்றலை வெளிப்படுத்திய அவரது எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திரையுலகில் பன்முகத் திறன் கொண்டவர்கள் மிகக் குறைவே. அவர்களில் ஒருவராக சிவகுமார் விளங்குகிறார் 

   திரைஉலக பிரபலங்களுக்கு  சில  வசதிகள் உண்டு. அவர்கள் என்ன எழுதினாலும் லைக்குகள் குவிந்து விடும்.சிவகுமார் முகநூலில் ஒவ்வொரு பதிவுக்கும் 10000 அளவுக்கு லைக்குகள் கிடைத்திருப்பதை காண முடிந்தது

  அவரது  ஒவ்வொரு பதிவையும் ஏராளமானோர் விரும்பியுள்ளதோடு பகிர்வும் செய்து வந்துள்ளனர். கலைத்துறை அனுபவங்கள், சொந்த அனுபவங்கள்,வரலாறு இலக்கியம் என ஓராண்டுக்கும் மேலாக எழுதி வந்துள்ளார்.  கருத்துகளில் அவரை பலர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.  அவர் காந்தி பற்றிய எழுதியதில் மட்டும் ஏராளமான மாற்றுக் கருத்துகள் பதிவாகி இருந்தபோதும் யாரும் வரம்பு மீறவில்லை. நாகரிகமாகவே தங்கள்  கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

  இதற்குமுன்  சிவகுமாரின் முகநூல் பக்கத்திற்கு சென்றதில்லை சிவகுமார் முகநூலில் இருந்து விடுபட முடிவு செய்துள்ள செய்தியை அறிந்ததும்தான் அவரது முகநூல் பக்கத்திற்கு சென்றேன்.

சர்ச்சைக்குள்ளான அவரது பதிவில்  கருத்திட்ட சிலரின் முகநூல் அடையாளத்தை பாருங்கள்
arish Vanniyar Singam ,கொங்கு கவுண்டர் Nmurali Naicker, Ponnuvel Deeran Kongu
 முகநூலில் சாதிப்பற்றுடன் பலர் உலவி வருவதை இது காட்டியது. சாதி வெறியுடனும் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனது இனமே உயரந்தது என்று சொல்ல முற்படுவதும் மாற்று இனத்தை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கும் சகஜமாக  காணப்படுகிறது 

     சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள்  குறித்து எழுதி இருந்தார் சிவகுமார் 

      அதில் முன்னதாக வேலு நாச்சியார் பற்றி எழுதினார் .நல்ல எழுத்து நடையும் சுவாரசியமாக சொல்லும் திறனும் அவரது பலமாக அமைந்து  அப்பதிவு பலரையும் கவர்ந்தது 

          அதன் பிறகு தீரன் சின்னமலை பற்றி எழுதிய பதிவும் அதற்கு கிடைத்த சில கடுமையான எதிர்ப்புக் கருத்துகள் அவரை முகநூல் விட்டே விலகும் அளவுக்கு விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது. தீரன் சின்னமலை பற்றி உணர்வு பொங்க கூறியதை அவர் தனது சாதிப் பெருமையைக் கூறுவதாக குற்றம் சாட்டினர் சிலர் 
   'தீரன் சின்னமலையின் பெருமையைக் கூறி நம் இனத்தை பெருமைப் படுத்திவிட்டீர்கள்' என்று அவரை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்தார் ஒருவர்.'தீரன் சின்னமலை என்று ஒருவர் இருந்ததே இல்லை. அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை' என்கிறார்  இன்னொருவர் 
'தீரன் சின்னமலை பற்றி  எழுதி சாதி பாசத்தைக் காட்டிய நீங்கள் சாமி நாக படையாச்சிஅஞ்சலையம்மாள் போன்றோர் பற்றி  எழுதி உங்கள் தமிழ் பாசத்தைக் காட்டுங்கள்'  என்று சிவகுமாரின் பாரபட்சமின்மைக்கு பரீட்சை வைத்தார் ஒருவர் .

"ஆட்சேபத்துக்குரிய வசனங்களும், வன்னியர்களை மறைமுகமாக தாக்கும் விதமான காட்சிகளையும் துணிச்சலுடன் நடித்த உங்கள் மகனின் திடத்தை நான் பாராட்டுகிறேன்... 
ஆனால் வரும் காலங்களில் இதே சகிப்புத் தன்மையை எங்கள் சமுதாயம் தொடர்ந்து கடைபிடிக்குமா என்பது சந்தேகமே..." என்றும் 
கார்த்தி நடித்த மெட்ராஸ் வான்னியருக்கு பதிலாக கொங்கு வேளாளர்களை இழிவ படுத்தி இருந்தால் நடித்து இருப்பாரா ? என்றும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வேதனைப் படுத்தியுள்ளனர்.
 இவற்றையெல்லாம் பார்க்கும்போது  சமூக வலைத்தளம் எதற்கு பயன்படவேண்டுமோ அதற்கு எதிராக பயன்படுவது கண்டு மனதில் அச்சம் எழத்தான் செய்தது. எத்தகையவராக  இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.ஆனால் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியும் வன்மும் இருப்பது கண்டிக்கப் படவேண்டியது.  அல்லவா? ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படக் கூடியதே 

    தீரன் சின்னமலை பற்றி  எழுதிய பதிவில்  ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்திய கையாள் என்ற வார்த்தை தவறானது என்று சிலர் தெரிவிக்க,அதைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான் இன்னும் வரலாறை படிக்கவேண்டும் என்றும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டு தன்பண்பை நிருபித்தார். ஆனாலும் கல்லூரிகளில் பேச அழைத்தால் மறுப்பவர் தனது இனத்தை சேர்ந்தவர்களின் கல்லூரிகளில் மட்டும் சொற்பொழிவாற்ற வருகிறார். என்று  அவர்மீது பழிசொற்களை வீசிக் கொண்டுதான் இருந்தனர். 


    இது போன்ற கருத்துரைகளால் மனம் வருந்தியதன் விளைவே முகநூல் வெளியேற்றம் என்ற முடிவு. அக்கருத்துகளை ஒதுக்கித் தள்ளி இருக்கலாம்.அல்லது அப்படி முடிவு செய்தவர் சிறிது காலத்திற்கு அதனை பின்பற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.  தனது களத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம். இணையத்தில் எழுத வலைத்தள வசதி விரிந்து கிடக்க  ஏன் முகநூலில் மட்டுமே மூழ்கிக்கிடக்க வேண்டும். அவரது வலைத்தளம் www.actorsivakumar.com என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை  

  சிவகுமார் சார்! நீங்கள் லைக்குகளுக்கும் புகழ்பாடும் பின்னூட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர் என்கிற படசத்தில்  முகநூலில் எழுதுவதை விட வலைப்பூவில் எழுதினால் சிறப்பாக   இருக்கும் என்று நம்புகிறேன்.  விரிவாகவும் எழுத முடியும் . வாசகர் எண்ணிக்கையும் முகநூலுக்கு குறைவில்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை   விரும்பினால் கருத்திடும் வசதி வைத்துக் கொள்ளல்லாம்,அல்லது கருத்துகளை கட்டுப் படுத்தி வைக்கமுடியும்  பிரபல எழுத்தாளர்கள் யாரும் படிப்பவர் யாவருக்கும்  கருத்தளிக்கும் வசதியை அளிப்பதில்லை.

  சிவகுமார்  அவர்களுடைய நீண்ட கால நண்பரும் அவரை நன்கு அறிந்தவருமான திரு அமுதவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
முடிந்தால்அவரை  தனி வலை தளத்தில் எழுதும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.என்ன லைக்குகள் வசதி இல்லையே தவிர நிறையப் பேர் பார்ப்பார்கள் படிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவரது அற்புதமான பதிவுகள் எப்போதும் யாராலும் எளிதில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் .

************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு?

    
  சமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது மரியாதை உண்டு. வசீகரா பாடல் மூலம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர். மன்னிப்பாயா பாடலால்  இளம் உள்ளங்களை உருக்கியவர் தாமரை. ஆண்களே திரைப் படப் பாடலாசிரியராக பரிமளிக்க  முடியும் என்ற மரபை உடைத்தவர். 

   பொறியியல் பட்டதாரியான தாமரை கோயம்பத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர் . ஆர்வம் உந்தித் தள்ள தன் பார்த்த பணியை விட்டு விட்டு  கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் பயணத்தை தொடர்ந்தார். இவருடைய படைப்புகள் இயக்குனர் சீமானை ஈர்த்தன. வாய்ப்பும் அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் தாமரை.

   பின்னர்   தமிழர் தேசிய இயக்க பொது செயலாளராக இருந்த
தோழர் தியாகுவோடு மணவாழ்க்கையில் இணைந்தார் தாமரை. இருவருக்கும் பழைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாத நிலையில் புது வாழ்வு வாழத் தொடங்கியதாகத் தெரிகிறது. 

   தியாகு நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர். கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டவர். மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தனது சிறை அனுபவங்களை தொடராக ஜூனியர் விகடனில் எழுதி வந்தார்.அது பெரும் வரவேற்பு பெற்றதாக அறிய முடிகிறது. தியாகு சிறையில் இருந்தபோது காரல் மார்க்சின் டாஸ் கேபிடல் என்ற புகழ் பெற்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

   சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டே இவர்கள் இருவரைப் பற்றியும் பரபரப்பான செய்திகள் வெளிவந்ததை அறிந்திருக்கலாம். தியாகு தமிழ் தேசிய இயக்கத்திலிருந்து நீக்கப் பட்டார். தியாகுவின் லீலைகள் என்று விமர்சனத்துக்குரிய வீடியோக்களும் யூ ட்யூபில் உலா வந்தன.

   இலங்கையில் நடைபெற இருக்கின்ற காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் தியாகு. பதினைந்து நாட்கள் நீடித்த பின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்தான் தாமரையின் முக நூல் பக்கத்தில் படத்தில் உள்ள status வெளியாகி உள்ளது.

.............. இந்தத் துன்பமான காலகட்டத்தில் தன்னோடு துணை நிற்கும்படி மேற்கண்ட பதிவில் கூறப பட்டுள்ளது.  தன் உள்ளத்தை மன வருத்தத் தோடு பதிவு செய்திருப்பதற்கு தியாகுவிற்கும் இவருக்கும் உள்ள பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது காரணம் என்று கூறப்படுகிறது. தியாகு உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பத்திரிகைகளை பார்த்துத்தான் தெரிந்து கொண்டாராம்  தாமரை

   தன்னை தவிர்த்து வந்த தியாகுவிடம் அனைவரின் முன்னிலையில் நியாயம் கேட்க உண்ணாவிரத நிறைவு நாளன்று அங்கு சென்றதாக தமிழக அரசியல் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

   இதன்  பின்னர் வெளியானதுதன் தாமரையின் முகநூல் ஸ்டேடஸ்.செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் என்ற முறையில் தாமரையின் நிலை கவலைக் குரியதுதான். தைரியமும் மன உறுதியும் கொண்ட பெண்ணான தாமரை இதை எதிர் கொள்ள முடியாமல் உடைந்து போய் முக நூலில் நிலையை பதிவு செய்தது சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.  பிரபல கவிஞர் அதுவும் பெண் ஆயிற்றே வழக்கம்போல் முகம் காணா முக நூல் நட்புக் கூட்டம் கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு துணையாக நாங்கள் நிற்கிறோம் என்ற தொனியில் கம்மெண்டுகளை அள்ளி வீசினர். எந்த வகையில் துணை நிற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  சொந்த சோகங்களை பதிவு செய்து அதற்கு ஒரு அரசியல் வாதியைப் போலஆதரவு தேடுவது எதற்காக என்பது புரியவில்லை. காவல் நிலையம் நீதி மன்றம் அல்லது நேரடி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியுமே!

   தமிழுக்காகவும் தமிழ் சமுதாயத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும் ( சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஒரு வேலை நான் அறியாமல் கூட இருக்கலாம்). என் மொழிப் பற்றும் இனப் பற்றும தான் என் அவல நிலைக்குக் காரணம் என்றும் கூறுகிறார். இது அவர்களது சொந்தப் பிரச்சனை. பிரச்சனைகள் தீர்ந்து  நல்லபடியாக வாழ பிரார்த்திக்கிறேன்.

       என்னை பொறுத்தவரை பெண்களோ ஆண்களோ தங்கள் குடும்ப விவகாரங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து ஆறுதல் தேடுவது சில சிக்கல்கள் உருவாக காரணமாக அமையக் கூடும்.   முகநூல் பயன் படுத்துபவர்கள் தங்கள் வீட்டில் நடந்த சிறு பிரச்சனையைக் கூட எல்லாரும் அறியும் வண்ணம் வெளியிட்டால் அந்த சூழலை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவிகளை, நல்லவர் போல் நடித்து ஏமாற்றும்  சமூக  வலை தளங்களில் வலம் கயவர்களுக்கு வாய்ப்பாக அமையும் அல்லவா?

    நல்ல  விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்

********************************************************************************************
முந்தைய பதிவுகள் 
*********************************************************************************************