என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 9 ஜூன், 2013

வடிவேலு சொன்னது உண்மையாப் போச்சு

        காணாமல் போன கிணறுகள்
  வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.


            சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன. கிணறுகள் மட்டுமல்ல மனங்களும் குப்பைகளால்தானே நிரம்பி இருக்கிறது?
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.


        கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு. 
     இப்போதும்  எங்கள் வீட்டில் கிணறு இருக்கிறது.அந்தக் கிணற்றுக்குள் பலமுறை இறங்கி இருக்கிறேன். ராட்டினத்தில் வேகமாக தண்ணீர் இறைப்பது ஒரு கலை .சில சமயங்களில் கயிறு அறுந்து பக்கெட் கிணற்றுக்குள் விழுந்து விடும்.  பாதாள கொலுசின் மூலம் துழாவி பாக்கெட்டை எடுப்பது ஒரு சுகமான அனுபவம். 
  இப்போது அந்தக் கிணற்றில் மோட்டார் போடப்பட்டுவிட்டது.பழைய ராட்டினங்கள் காயலான் கடைக்கு சென்று விட்டன. கிணறு மூடி போட்டுக் கொண்டது. வாய் திறக்க முடியாத கணவனைப் போல. எப்போதாவது அந்தக் கிணற்றின் மேல் உட்கார்ந்து  கொண்டு புத்தகம் படிப்பது உண்டு.
   அப்போதெல்லாம் தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் நோயாளியைப் போல கிணற்றின் நிலை இருப்பதாக எனக்கு தோன்றுவது உண்டு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே" 

காணாமல் போன கிணறு
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?

****************************************************************************************************** 

48 கருத்துகள்:

  1. இன்னும் என்ன கொடுமையெல்லாம் பார்க்கப் போறோமோ, நினைக்கும்போதே நெஞ்சு அடிக்குது..............

    பதிலளிநீக்கு
  2. By the by, this joke was published in Dinamani Kathir long before Vadivelu became an actor!!

    பதிலளிநீக்கு
  3. இங்கும் அதே நிலைமை தான்... சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொண்ட கிணறுகளை பார்க்கும் போது வருத்தமாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. கிணறுகள் மட்டுமா காணாமல் போயின.. திண்ணை வைத்த வீடுகள் கூடத்தான் இன்று இல்லை. தீப்பெட்டிக்குள் அடைபட்ட குச்சிகள் போல கட்டம் கட்டமாக, உயரம் உயரமாக வீடுகள் கட்டி மனிதக் குச்சிகள் அடைபட்டுக் கிடக்கின்றன! இயற்கையை அழித்து, வாழ்‌‌க்கையைத் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறோம் முரளி. விஞ்ஞானத்தின் வசதிகளை அனுபவிப்பதற்கு நாம் கொடுக்கும் விலை அது!

    பதிலளிநீக்கு
  5. கிணறு, திண்ணை, வீட்டின் நடுவில் திறந்தவெளி முற்றம், பால்ய கால விளையாட்டுக்கள் என ,நாம் தொலைததது அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைத்து விட்டோம் என்பதை உணரமுடியாம் இருப்பது இன்னும் வேதனை.

      நீக்கு
  6. கிணறுகள் மட்டுமா காணாமல் பொய்விட்டன?ஆறு ஏரி,குளங்கள் நீர்வரத்து வரு கால்வாய்கள் எல்லாமே மூடிப்போய்விட்டதே/

    பதிலளிநீக்கு
  7. ஆமாம்.ஆழ்துளைக் கிணறுகள் அதிகரித்து விட்டன

    பதிலளிநீக்கு
  8. நிலத்தடி நீரை உறிஞ்சி என்றைக்கு வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்றே கிணறுகள் தொலைந்துவிட்டன. இனி கிணறு என்பது அகராதியில் மட்டும் தான் இருக்கும். நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர் மேலாண்மை பற்றி நாம் சரிவர அறியாததால் ஏற்படும் விளைவு இது.

      நீக்கு
  9. சரியாகச் சொன்னீர்கள்
    கிணற்றின் மாதிரியை பொருட்காட்சியில்வைத்து
    அடுத்த தலைமுறைக்குக் காட்டும் காலம்
    வந்துவிடுமோ எனபயமாக இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. உங்க ஊரில் கிணறுகள் காணாமல் போவது போல இங்கு புத்தகங்கள் அழியத் தொடங்கி இருக்கின்றன... வருங்காலத்தில் புத்தகங்களை மீயூசியத்தில்தான் பார்க்க முடியும் போல

    பதிலளிநீக்கு
  11. எங்கள் வீட்டினருகில் கூட இப்படி ஒரு கிணறைத் தொலைத்திருக்கிறோம்.... எப்போதாவது தேடத்தான் போகிறோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழப்பதும் இழப்பது தெரியாமல் இருப்பதும்தான் கவலை அளிக்கிறது.

      நீக்கு
  12. விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும் வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?
    >>
    நிஜம்தான் சகோ! கோடை காலத்தில் வீட்டில் இருக்கும் கிணறு வத்தி காய்ஞ்சு போய் கிடக்கும். ஆனா, ஏரி, குளம் அருகே இருக்கும் பொது கிணறு வற்றாது கொஞ்சமூண்டு தண்ணி இருக்கும். அதை. ஆண்கள் இறங்கி ஆழப்படுத்தி வைப்பாங்க. ஊற்று சுரந்துக்கிட்டே இருக்கும். பெண்கள் நாங்கலாம் அதுல தண்ணி சொட்டி, சொட்டி எடுக்குற அழகே அழகு..,அதை வடிக்கட்டி குடிப்போம். கொஞ்சம் கலங்கலாதான் இருக்கும். இருந்தாலும் நோய் நொடி எதும் வந்ததில்லை.

    அப்படி , கிணறு வத்தும்போதுதான் கோமளா பாட்டியின் பக்கெட், வேணி அக்கா சும்மாடுக்காக கொண்டு வந்து தவறவிட்ட தாவணி, சுமதி அத்தை துவைக்க கொண்டுவந்து கிணற்றில விழுந்த மாமா வேட்டி.., இப்படி பல பொருட்கள் கிடைக்க்கும்... ம்ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு பொற்காலம்

    பதிலளிநீக்கு
  13. திரு விமலன் சொல்லியிருப்பது போல ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன.
    ஆதம்பாக்கத்தில் ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது என்று சொன்னால் இன்று யார் நம்புவார்கள்?

    இங்கும் இப்போது நாங்கள் இருக்கும் பகுதிக்கு சென்னம்மன கேரே (சென்னம்மா ஏரி) என்று பெயர். இப்போது அதன் மேலேயே எங்கள் கட்டிடங்கள்!

    பல விஷயங்கள் இன்றைய தலைமுறைக்கு அருங்காட்சியகத்தில் தான் காண்பிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கம் உறுதியாக செயல் பட்டால் சிலவற்றையாவது தடுக்க முடியும்.

      நீக்கு
  14. இந்தத் தலைமுறைக்கு தெரியும் என்று பல விஷயங்கள் இருந்தாலும் தெரியாமல் போகப் போகிறது என்ற பட்டியலில் பல விஷயங்கள் அடங்கியுள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தலைமுறையினர் அறிவாளிகள் என்பதில் ஐயமில்லை. அளவுக்கு மீறிய புத்திசாலித் தனம் நல்லதைகூட ஒதுக்கி விடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

      நீக்கு
  15. சென்னைய விடுங்க எங்க ஊர்லையே எனக்கு தெரிஞ்சு இருந்த கிணறு குளம் அனைத்தையும் காணோம் நான் என்ன பன்றது தல

    பதிலளிநீக்கு
  16. ஏன் தொலைந்து போவதை நினைத்து கலக்கம்.
    அறிவியல் மனபாங்கு எங்கே ? கல்வி பெற்றது எதற்கு.
    பல வழிகள் உண்டு.
    முதலில் போது குளங்களை அழிக்காமல் இருக்க குழுவாக சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். காய்ந்து உள்ள போது தூர் வாறி நன்றாக ஆழ படுத்தவேண்டும் பின் அதற்கு நீர் வருவதற்கான மலை நீர் ஆதாரங்களை சரி படுத்த வேண்டும்.
    இதற்கு தொகுதி அமைச்சரை அணுகி வேண்டுவன செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை வீட்டுக்கு அனுபவேண்டும்.
    இருக்கும் நமது அணைத்து ஆறுகளிலும், 3 கி.மீ தூரத்துக்கு ஒன்றாக தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை மேலும் செய்ய வேண்டும்.கடலிலேயே காற்றாலை மின்சாரம் தயாரித்து உபயோகம் செய்யலாம்.
    பிறகு பாருங்கள் தமிழ் நாட்டில் எப்போது தண்ணி பஞ்சம் என்று ?
    உங்கள் கிணறுகளில் எப்போதும் நீர் இருக்கும்.
    மரம் வைத்து நாட்டை குளிர்ச்சி படுத்த வேண்டும்.
    இதற்கெல்லாம் வேண்டும் பணம் அரசிடம் , மக்களிடம் உண்டு..
    மனம் தான் இல்லை .
    நம் மக்கள் விதி , கர்மா என்று கூறி கொண்டு தங்களால் முடியும் எதையும் செய்வதில்லை .
    வெளி நாடுகளில் மக்களுக்கு வேண்டும் என்றால் நிலவுக்கே பாலம் கட்டுவார்கள் ..
    மனித சக்தி IPL ,சினிமா ,சீரியல்களில் தொலைந்து போவதை விடுத்து , முடியும் என்று சிந்தித்தால் நம்மால் எல்லா பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும். மனம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது நம்பிக்கை அளிக்கிறது. அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்தால் இவற்றை சரி செய்யலாம். ஆனால் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

      நீக்கு
  17. மின்மயானம் வந்த பிறகு இடுகாடு, சுடுகாடுகள் எல்லாம் மாயமாய் மறைந்துகொண்டிருக்கின்றன!

    மனதை உருக்கிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுடுகாடுகள் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன
      நன்றி பரமசிவம் சார்

      நீக்கு
  18. நகரமயமாதலிலும் நவீன மயமாதலிலும் தொலைந்து போன ஒன்று ஆகி விட்டன கிணறுகள்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பல இன்று உண்மையாகிக் கொண்டு இருக்கின்றன. வீட்டில் இருக்கும் சொந்தக் கிணற்றை இடவசதிக்காக மூடுவதுகூட பரவாயில்லை. ஊர்க் கிணற்றையே ஆக்கிரமித்தவர்களைப் பற்றி என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மவர்களுக்கு ஆக்ரமிப்பு என்பது அல்வா சாப்பிடுவது போல. போதுசொத்துக்களை தன சொத்துக்காலாக நினைக்கும் மனோபாவம் உள்ளவர்களை என்ன செய்வது?
      நன்றி ஐயா

      நீக்கு
  20. உங்க வீட்டு கிணற்றில தண்ணி இருக்கா? ஆச்சர்யம்தான். எங்கள் வீட்டு பக்கம் கடந்த ஒரு வருஷமா தினம் எங்காவது போர்வெல் போட்டு கொண்டே இருக்கிறார்கள். அந்த மெஷின் சத்தம் இரவும், பகலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படி எல்லாரும் ஆழப்படுத்தி இருக்கிற தண்ணியை உறிஞ்சிட்டா எதிர்காலத்தை நினைச்சா பயமாத்தானிருக்கு...!
    த.ம-8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் சிக்கனத்தை அறியாதவர்களாக இருக்கிறோம்.இதை அரசு வலியுறுத்த வேண்டும்.இல்லையெனில் மிக விரைவில் மிகப் பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
      ஒட்டல்களில் குழாயைத் திறந்து வைத்து விட்டு நீண்ட நேரம் கைகழுபவர்களை பார்த்தால் கோபம வரும் என்ன செய்வது.

      நீக்கு
  21. எங்க பெரியம்மா வீட்டில் இன்றும் கிணறு இருக்கு அதிலிருந்தான் மொத்தமாக தண்ணீர் சிலவுக்கே மோட்டர் பொருந்தி எடுக்கிறோம். அள்ள அள்ள வற்றாது, கொடுக்க கொடுக்க குறையாது என்பது மெய்பொருந்திய உண்மை..

    நல்லதொரு பதிவு ..பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  22. மிக நல்ல பதிவு.

    “கிணறு மூடி போட்டுக் கொண்டது. வாய் திறக்க முடியாத கணவனைப் போல.

    எப்போதாவது அந்தக் கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படிப்பது உண்டு. அப்போதெல்லாம் தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் நோயாளியைப் போல...“

    அருமையான உவமைகள் பதிவை மேலும் மெருகூட்டின.
    வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895