என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 17 ஜூன், 2013

தாயிடம் தோற்கும் தந்தைகள்

 தந்தையர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது. நேற்று வெளியிட முடியவில்லை. தந்தைக்கு  சிறப்புக்கள் எப்போதும் தாமதமாய்த்தான் கிடைக்கும் போலிருக்கிறது.

  என்னுடைய ஹீரோ ரோல் மாடல்  எங்கப்பாதான் என்று  பிரபலங்கள் தங்கள் தந்தையைப் பற்றி கூறுவார்கள்.  அப்படி எல்லாம் நான் நினைத்ததில்லை. அப்பாவுக்கென்று பெரிதாக குறிக்கோள்கள் ஏதும் இருந்ததில்லை. அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்தான் கவனம் செலுத்தினார். பல வீடுகளில் அம்மாக்களின் அளவுக்கு மீறிய ஆளுமை தந்தையின் தனித்துவத்தை உணர விடாமல்  செய்து விடுகிறது. அப்படித்தான் எனது தந்தையும். எங்களை இதுதான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதில்லை. எங்களை படி என்று வற்புறுத்தியதில்லை. படிப்புதான் வாழ்க்கை என்று மூளை சலவை செய்ததில்லை. ஒரு நாளும் அடித்ததில்லை; ஏன்? திட்டியது கூட இல்லை. அவர் மிகவும் நல்லவர் என்று பெயர் எடுத்திருக்கிறார் ஆனால் சாமர்த்தியசாலி என்று பெயர் எடுக்கவில்லை . அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. எந்தவித கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்ததில்லை.. வெற்றிலை கூட போடமாட்டார்.  அவரை ஒரு அப்பாவியாகவே பலரும் பார்த்தனர். இதுவே அவரது பலமாகவும் இருந்தது பலவீனமாகவும் இருந்தது. நீண்ட நாட்களாக அவரை பற்றி எழுத வேண்டும் நினைத்திருப்பேன்.   அவரது  நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தந்தையர் தினத்துக்கு நன்றிகள் .சொல்லத்தான் வேண்டும்
 
  எனது தந்தை ஒரு ஆசிரியர். அதுவும் தலைமை ஆசிரியர் என்பதால் நல்ல ஆசிரியருக்கு  உரித்தான் பல குணங்கள் அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்தன.பிற்காலத்தில் அவை எனக்கும் தொற்றிக் கொண்டன.

   நான் பிறந்த நேரத்தில்  எனது தந்தை பள்ளியில் இருந்தததாகவும் கடுமையான புயல் மழை என்பதால் மாணவர்களை பாதுகாப்புக்காக இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்க வேண்டி இருந்தது என்றும் அம்மா சொல்வார்கள். அந்த கிராமத்தில் வாத்தியார் என்றால் அதிக மரியாதை உண்டு. ஊரில் வசதியும் செல்வாக்கும் உள்ள ஒருவர்  இலவசமாகவே தங்கு வதற்கு  இடவசதி செய்து  கொடுத்திருந்தார். அவர்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையை ஒரு முனையை தடுத்து வீடாக்கி கொடுத்தார்கள்.வேலையில் சேர்ந்தபோது அந்த வீட்டுக்கு வந்த அப்பா  ஒய்வு பெறும் வரை  அந்த வீட்டில்தான் இருந்தார். எனது அண்ணன் அக்கா ஆகியோர் மருத்தவமனையில் பிறந்தவர்கள். நான் மட்டும் அந்த வீட்டில் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. (புயல் காரணமாக மருத்துவமனை செல்ல முடியவில்லையாம். )

  மாலை நேரங்களில் பெரிய  வீட்டுக் குழந்தைகள்  ட்யுஷன் படிக்க வருவார்கள். அம்மாவையும் டீச்சர் என்றுதான் அழைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் படிப்பேன்.ட்யுஷனுக்கு பணம் ஏதும் தரமாட்டார்கள்.  ஆனால்  தன் வயலில் விளையும் நெல், நிலக்கடலை, போன்றவற்றை அறுவடை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

 அவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியிலேயே என்னையும் சேர்த்தார். ஆறாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். தந்தையே ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கும். அது எனக்கும் கிடைத்தது.  என் தந்தைக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உண்டு. அதனை பயன்படுத்திக் கொண்ட இன்னொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்  பணியாற்றிய இடத்தை விட்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு ,  மனமொத்த மாறுதல் பெற்றுக்  கொண்டார். அந்தப் பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும் .பேருந்து வசதியும் கிடையாது. அப்பாவுக்கு சைக்கிள் ஒட்டவும் தெரியாது. எங்கு சென்றாலும் நடந்துதான் செல்வார்.  நடராஜன் என்ற பெயருக்கு ஏற்ப நடராஜா சர்வீசிலேயே காலத்தை  கடைசி வரை கழித்து விட்டார்.

   அப்பா மாணவர்களை அடிக்க மாட்டார், அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் கையைக் குவித்து முதுகில் லேசாக அடிப்பார். சத்தம் மட்டும்  பெரிதாக கேட்கும்; வலிக்காது என்று அவரிடம் படித்தவர்கள் கூறுவார்கள். அப்பாவுக்கு சில விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பாட்மிண்டன் ஆடுவார்.

   பம்பரம் வாங்கிக் கொடுத்து பம்பரம்  விடுவதற்கு எனக்கு கற்றுத் தந்தார். அதில் சில வித்தைகளையும் செய்து காட்டுவார். வழக்கமாக பம்பரத்தை தரையில் சுற்றவைத்தது விட்டு பின்பு அதை கையில் லாவகமாக எடுப்பார்கள். அனால் அப்பா சாட்டையை வீசி அப்படியே பாமபரத்தை கையிலேயே நேரடியாக பிடித்து சுழலச் செய்வார். அதை பலமுறை செய்து நானும் கற்றுக் கொண்டேன்,
  சர்க்கசில் செய்வது போல மூன்று பந்துகளை மாற்றி மாற்றி கைகளில் தூக்கிப்போட்டு பிடித்துக் காட்டுவார்.நீண்ட குச்சியை விரல்களில் நிற்கவைத்துக் காட்டுவார். அதோடு அதை தூக்கிப் போட்டு அதன் மறுமுனையை அப்படியே விரல்களில் விழாமல் பிடிப்பார். 

    பனை ஓலையில் காற்றாடி செய்து வேல முள் கொண்டு வேகமாக சுழலச் செய்வார். பட்டம் செய்து கொடுப்பார். படத்திற்கு சூத்திரம் போடுவது எப்படி என்று சொல்லித் தருவார். பட்டம் விடும்போது நூல் வழியே ஓலை துண்டை அனுப்பு வார். அது சுற்றிக்கொண்டே வேகமாக உயரே சென்று பட்டத்தை சென்றடயும். அதை தந்தி என்று சொல்லி மகிழ்விப்பார்.

  விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும்; குடை செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரு மாதத்துக்கு முன்பே மூங்கில் காகிதம் இவற்றை சேகரித்து வைப்பார். விதம் விதமாக அழகான குடைகள் கடைகளில் கிடைத்தாலும் அவர் கையால் செய்து அதை பயன்படுத்துவதுதான் அவருக்கு பிடிக்கும். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  இவை எல்லாம் அப்போது எனக்கு ஆச்சர்யமாக தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. 

   ஏற்கனவே சொன்னது போல அப்பாவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தாத்தாவின் ( மாம்பலத்தில் ) சொத்தில் தன் உரிமையை  விட்டுக் கொடுத்தார்.  அதனால் கோபம் அடைந்த  அம்மாவின் வற்புறுத்தலால் சென்னையின் புறநகர் பகுதியில் மனை வாங்கினார். அண்ணனின் மேல் படிப்புக்காக சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.   எப்படியோ கஷ்டப்பட்டு வீடும் கட்டி விட்டார்.  நாங்கள் இங்கே தங்கி இருக்க அப்பா ஊரிலேயே இருந்தார். மாதம் ஒரு முறைதான் வருவார். 

   அப்பாவுக்கு சங்கீத  ஞானமும் கொஞ்சம் உண்டு. ராகங்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடல் அப்பாவுக்கு மிகவும் படிக்கும். எங்களை தூங்க வைக்க அந்த பாடலையே பாடுவார் . அப்பாவுக்கு சமைக்கவும் தெரியும். ருசித்து சாப்பிடவும் செய்வார்.  கதை புத்தகங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. செய்தித்தாளை வைத்துக் கொண்டு நாள் முழுதும் வாசித்துக் கொண்டிருப்பார்.

    அப்பாவுக்கு எப்போதுமே எல்லோரும் நல்லவர்கள்தான் என்றே எண்ணுவார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் நம் மீது தவறு இருக்குமோ என்றுதான் சிந்திப்பார். 

   ஒல்லியான தோற்றம் அவருடையது .அவருக்கு நடையே உடற்பயிற்சியாக இருந்ததால் ப்ரெஷர், சுகர் என்று எதுவும் அவருக்கு வந்ததில்லை.அவரது வாழ்நாளின் இறுதி நாட்களில் மட்டுமே சிறிது சிரமப் பட்டார். அவருக்காக மேற்கத்திய கழிப்பறை அமைத்தோம். சில நாட்கள் மட்டுமே பயன் பட்டது. 

    ஒரு நாள் காலை அப்பா லேசாக நெஞ்சடைக்கிறது என்று சொல்ல ஒன்றுமில்லை காப்பி சாப்பிடுங்கள் என்று காபியை கொடுக்க, விழுங்க முடியாமல் அவதிப் பட்டார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் மெல்லப் பிரிந்தது. அதை மனம் நம்ப மறுத்து சினிமாவில் வருவது போல மார்பில் லேசாக இரு கைகளாலும் வேகமாக தட்டிப் பார்த்தேன். பயன் ஏதுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்றேன். உடனே அழுகை வரவில்லை. பின்னர் கண்கள் கலங்க ஆரம்பித்தன. ஓ! வென்று கதற நினைத்த நான் அடக்கிக் கொண்டேன்.  கடைசி நேரத்தில் அவரது அருகில் இருந்தமைக்காக லேசான திருப்தியுடன் அடுத்த பணிகளை கவனிக்க சென்றேன்.அவரை பொருத்தவரை நிறைவாகவே வாழ்திருப்பார் என்று நம்புகிறேன்.

   எங்கள் பகுதியில் முதலில் வீடு கட்டியது அப்பாதான். அவர் பணியாற்றிய போது ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. அதனால் வீடு கட்டியதை பெருமையாகக் கருதினார்.

   இன்று அது பழமையானதாக மாறி விட்டது அதன் பின்னர் கட்டிய பல வீடுகள் இன்று பிளாட்டுகளாக மாறி விட்டது.அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட நினைத்துள்ளோம் ஆனால் மனம் வரவில்லை. ஒவ்வொரு கல்லும் என்னை இடிக்காதே என்று சொல்வது போல் எனக்குத் தோன்றும்.. அதனால் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறோம்

   தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மை தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். 
நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா? 
அது  தெரிய இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும்.


****************************************************************************************



25 கருத்துகள்:

  1. குறிக்கொள்கள் இல்லை, ஆசைப் பட்டதில்லை... வற்புறுத்தியதில்லை... மூளை சலவை செய்ததில்லை... அடித்ததில்லை... திட்டியதில்லை... அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுதல்... அவர் தாங்க உண்மையிலே சாமர்த்தியசாலி...

    தனக்காக வாழ்வதில்லை என்பது மிகச்சரி... தாய் தந்தைகளிடம் வெற்றி தோல்வியா...???

    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. //நம்மை தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். // மிகச்சரியான வார்த்தைகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. உங்கள் அப்பா, அமைதியான எளிமையான அப்பா. அவருடைய அனபை நினைவுகூர்ந்த உங்களுக்கு “ HAPPY FATHER'S DAY ! “ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மை தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் .......//தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா?
    அது தெரிய இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும்.
    >>
    நிஜமோ நிஜம்

    பதிலளிநீக்கு
  6. மிகச்சரியாக சொன்னீர்கள். இறந்தபின்பு போற்றுவதை விட இருக்கும் போது தவிக்கவிடாமல் இருப்பதே சிறந்தது.

    பதிலளிநீக்கு
  7. தந்தைக்கு சிறப்புக்கள் எப்போதும் தாமதமாய்த்தான் கிடைக்கும் போலிருக்கிறது.

    தந்தையைப்பற்றிப் பெருமிதமான பகிர்வுகள். பாராட்டுக்கள்..

    என்றென்றும் நினைவில் வாழும் தந்தைக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  8. அழகாகச் சொன்னீர்கள். இறந்தபின் போற்றுவதைவிட இருக்கும்போதே அவர்களுணர்வுக்கு மதிப்பளித்து அவர்களை தாங்குவது மகத்தானது.

    உங்கள் உண்மையான உணர்வினை நான் போற்றுகின்றேன்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. \\நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா? \\ என்ன தான் ஆஹா.ஓஹோ......எனச் செய்தாலும் இந்த கால பையன்கள் பின்னால் நினைத்துப் பார்ப்பார்களா? என்ற நிலை தான் இப்போது உள்ளது

    பதிலளிநீக்கு
  10. உங்கள் தந்தையின் நற்குணங்களை அழகாக சொன்னீர்கள்! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. தங்கள் தந்தையின் குணங்கள் பெருமை கொள்ளச் செய்கின்றன அய்யா. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சிறிது பொறாமையும் கொள்ளச் செய்கின்றன. தந்தையர் தின வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  12. இனிய நினைவுகள்!தந்தையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் முதல் இருவரிகளின் அர்த்தத்தில் இப்போதுதான் இன்னொரு தளத்தில் பின்னூட்டமிட்டு வந்தேன். என் தந்தையையும் நினைக்க வைத்தது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  14. மிக உருக்கமான நினைவுகள்..எனது தந்தையும் ஆசிரியர் அவர் பெயரும் நடராஜன். அவருக்கும் சைக்கிள் ஓட்ட தெரியாது. யாரிமோ ஒரு சபதத்தினால் நீண்ட காலம் செருப்பு அணியாமல் இருந்தார். என் தந்தையுடனா நாட்களை, நினைவுகளை உங்கள் பதிவு தூண்டி விட்டது. தந்தையின் அன்பின் வெளிப்பாட்டை அழகாக சொல்கிறது உங்கள் பதிவு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நேர நெருக்கடியில் நான் விரும்பும் எந்த வலைப்பக்கமும் கடந்த பத்து நாட்களாக செல்ல முடியவில்லை...பொதுவாக நான் அலுவலகத்தில்தான் அதிகம் படிப்பது. ஏனோ அலுவலகத்தில் இணைப்பு சரியாக வருவதில்லையென்பதால் தற்சமயம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வீட்டில் கொஞ்ச நேரம் மட்டுமே இணைய பக்கம் வரமுடிகிறது.

    தந்தையை பற்றிய உங்கள் நினைவுகள் மனதை கனக்க செய்து கலங்க வைத்து விட்டது. அவர் நினைவாக வைத்திருக்கும் வீட்டை இடிக்காமல் அப்படியே புதுப்பித்து அழகாக்கி கொள்ளுங்கள்.
    என் அப்பாவும் தலைமை ஆசிரியர்தான். பணி ஓய்வு பெறும் வரை ஒரே பள்ளியில்தான் பணியாற்றினார். நீங்கள் சொன்ன அத்தனை எளிமையான மென்மையான குணங்களும் என் அப்பாவிடம் உண்டு. இப்போது ஓய்வு பெற்று வீட்டில்தான் இருக்கிறார். மூட்டு வலி காரணமாக எங்கும் செல்வதில்லை. மாதத்திற்கொரு முறை என் அப்பா, அம்மாவை பார்த்துவிட்டு வந்துவிடுவேன். அன்புள்ள அப்பாவுக்கு என்ற கவிதை தொகுப்பு நூலில் என் அப்பாவை பற்றி எழுதி அவருக்கு கொடுத்த போது கண்கலங்கி விட்டார். தினமும் போனில் பேசிவிடுவேன். உலகில் விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள் அவர்கள்..!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. மிகவும் அருமையான பதிவு.

    //தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மை தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். // ;)))))

    என்றென்றும் நினைவில் வாழும் தந்தைக்கு வாழ்த்துகள்..!

    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  17. //தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மை தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். //
    உண்மைதான் நீங்கள் சொல்வது.
    நெகிழவைத்தபதிவு.


    பதிலளிநீக்கு
  18. தாயிடம் தந்தையும், தந்தையிடம் தாயும் தோற்பதுதான் குடும்பம். இதைக்குறித்து இருவருமே கவலைப்படுவதில்லை. ஏனெனில் இருவருக்கும் குடும்பம் என்ற கட்டுக்கோப்பான சூழல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்.

    தந்தையிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நல்லெண்ணங்கள், நற்பண்புகள் இவைகளை உங்கள் குழந்தைகளுக்கும் கொடுங்கள். இவைதான் நாளை நம்மை நல்ல பெற்றோர்களாக அவர்கள் நினைவில் நிறுத்தும்.

    காலம் கடந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவு தல.. நீங்க போட்டவுடன் வாசித்த பதிவு.. உண்மையில் நெகிழ்ச்சியான தந்தை மகன் (எழுத்திலும்) பாசத்தை காண முடிந்தது,,

    பதிலளிநீக்கு
  20. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்னோற்றான் கொல்எனுஞ் சொல் -குறள் 70

    தந்தையின் பண்புகளைப் போற்றி நீங்கள்
    எங்களின் முன் உயர்ந்து நிற்கிறீர்கள் மூங்கில் காற்று.
    பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. என்னவோ எனக்கு தந்தை இருந்தும் அவருடன் பாசமாய் இருந்ததில்லை காரணம் நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தது இல்லை

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895