என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

புதன், 29 ஜூலை, 2020

ஏ.ஆர்.ரகுமான் புலம்பல் சரியா?


அன்புள்ள ரகுமான்!.
      90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள்  அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன.  அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் உதடுகள் உச்சரித்ததில்லை.  
         எனக்குத் தெரிந்து நீங்கள் மனம் திறந்து பேசியதாக நினைவு இல்லை.  ஆனால் சமீபத்தில் நீங்கள் சொன்னதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் உங்களுக்கு  எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில்  பணியாற்றும் வாய்ப்புகளை அந்தக் குழு தடுத்து வருவதாகவும் நீங்கள் சொன்னதாக, அறியப்படும் செய்திதான் அது. ஒரு வேளை அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படும் ஆரம்ப நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?.  உங்களை உச்சியில் வைத்து அழகு பார்த்ததும் பாலிவுட்தான். உங்களை உலகறியச் செய்ததும் பாலிவுட்தான். அவர்களும் உங்களைத் தென்னவராகப் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகத்தான் உங்களைக் கண்டனர். நீங்களும் வடவராகவே மாறிப் போனீர்கள். இன்றுவரை நீங்கள்தான் இந்தியத் திரைஇசை உலகின்  நம்பர் 1 என்று   கூகுளின்  பக்கங்கள் காட்டுகின்றன. உங்கள் வருத்தமும் ஆதங்கமும் உங்கள் தகுதிக்கு சரியானதுதானா? 
        சின்னச் சின்ன ஆசையில் தொடங்கி இன்றுவரை எத்தனை எத்தனை பாடல்கள்! உற்சாகம்,ஆரவாரம்,அமைதி,காதல்,சோகம்,வீரம்,பக்தி என உணர்வுக் குவியல்கள் இசைக் கலவையாக உங்கள் வாத்தியங்களில் இருந்து புறப்பட்டு எங்கள் செவிகளை நிறைத்தன
      ’என்மேல் விழுந்த மழைத்துளியே’ போன்ற அமைதியான பாடலாகட்டும், ’முக்காபலா’ போன்ற ஆர்ப்பாட்டமான பாடலாகட்டும், ’ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே’  என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே! உயிரே! என்று உருகிய பாடலாகட்டும் நேற்றைய சிங்கப் பெண்ணெ வரை உங்கள் இசையால் மயங்கிக் கிடக்கிறவர்கள் பல பேர். 
       சற்று சிந்தித்துப் பாருங்கள்!  முதல் அடி எடுத்த வைத்த நாளில் இருந்து நீங்கள் பணிபுரிந்தது எல்லாமே மணி ரத்தினங்களோடும் சங்கர்களோடும்தான்.
     அப்போதெல்லாம் தினமணியில் வாராவாரம் அதிகம் விற்பனையாகும் கேசட்டுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெறும். அதில் உங்களுக்குத்தான் முதல் இடம்.  17 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த  தீவிர பக்தர்களைக் கொண்ட  இசைஞானி இளையராஜாவைத் தாண்டி இடம் பிடித்தீர்கள். இந்தியிலும் உங்கள் வெற்றிக் கொடி பறந்தது. வசிகரமான இளமைத் துள்ளல் இசையின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டீர்கள்.  ஒரு வருடத்திற்கு இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை  குறைவு என்றாலும் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. உங்கள் நூதனமான இசை வடிவங்கள் மனதை வருடின.  ஆனால் நானறிந்தவரை சாதரண தயார்ப்பாளர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தீர்கள். இன்றுவரையிலும் அப்படித்தான் இருக்கிறீர்கள்
        ஏற்கனவே முன்னனி நடிகர்களும் இயக்குநர்களும் உங்கள் இசைக்காகக் காத்திருந்தார்கள். தொடர்ந்து இளையராஜாவோடு கூட்டணி வைத்தவர்கள் உங்கள் பக்கம் தாவினார்கள்.  பாரதிராஜாவே உங்களிடம் வந்து சேர்ந்தார். ஆனால்  என்னைப் புறக்கணிக்க சதிநடக்கிறது என்று இளையராஜா கூறவில்லை.  உங்கள் கூட்டணி  எப்போதுமே  பிரம்மாண்டக் கூட்டணியாக இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால் கூட உங்கள் பாடல்கள் வெற்றி பெற்றன. விதம்விதமான  ஒலியிசைகள் முலம் இன்பத் தேன் வந்து பாய்ந்தது எங்கள் காதுகளில்.
    உங்கள் வந்தே மாதரம் ஆல்பம் ஒலிக்காத இடம் உண்டா?. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில்  தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது?. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? 
  சிலபடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் உங்களைப்பற்றிய  சிலர் ஆரூடம் கூறினார்கள். இளையராஜாவிற்குப் பிறகு யாரும் நீண்ட  காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அதனை தவிடு பொடியாக்கி 25 ஆண்டுகளுக்கு மேல்  உச்சத்தில் இருந்தீர்கள்.  இருக்கிறீர்கள். தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் ஆட்சி புரிந்தீர்கள். நாடுகள் கடந்தது உங்கள் இசை. ஹாலிவுட்டிலும் தடம் பதித்து, உலகமே அண்ணாந்து பார்த்த ஆஸ்கார் விருதும் பெற்று,  ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப் படுத்தினீர்கள். ஆஸ்கார் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றே கூறியபோது பெருமிதம் கொள்ளாத தமிழர்கள் இல்லை. அந்த மேடையில் நீங்கள் விருது பெற்ற போது நாங்கள் பெற்றதாகவே .குதூகலித்தோம்; கொண்டாடினோம். 
       தமிழ்நாட்டுக்கு  எப்போதும் ஒரு பெருமை உண்டு.  திரை இசை மேதைகள் இங்கு போல் வேறேங்கும் இல்லை. எம்.எஸ்.வி இளையராஜா, நீங்கள். மூவரும் திரை இசை மும்மூர்த்திகளாக விளங்கி பெருமை சேர்த்தீர்கள். 
  வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக  அதிகம் இசை அமைத்து தரம் குறைத்துக் கொள்ளாமல் குறைவாக இசைத்தாலும்   நிறைவாக நின்றீர்கள். ஆனால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் சம்பாதிக்க முடியாத செல்வம் உங்களை  அடைந்தது. இசை அறிவு மட்டுமல்ல.  முந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு அதிகம் இல்லாத   தொழில்நுட்ப அறிவு, காப்புரிமை மேலாண்மை,  இயல்பாகவே உங்களிடம் இருந்தது. அதைவிட அதிகம் பேசிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத புத்திசாலித்தனமும் உங்களிடம் இருந்தது  அமைதி உங்களுக்கு வாய்த்த பலமான ஆயுதம் .   இப்போது அமைதி கலைந்திருப்பது எங்களுக்கு அதிசயம்தான்.
             இளையராஜாவுக்குப் பின் இசையில் என்ன செய்து விடமுடியும் என்று இருந்த நிலையில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி எங்களை உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள். எம்.எஸ்.வி.,இளையராஜா போல ஒரு ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தீர்கள். உங்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள் உங்கள் பாணியிலேயே இசை அமைக்கும் இசை அமைப்பாளர்களைத் தேடிப் போனார்கள்.      
    நீங்கள் வந்தபின் ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இசையில் உதவிய கலைஞர்களின் பெயர்களையும்  கேசட் அட்டையிலும் சிடியிலும் பதித்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தீர்கள்.  உங்கள் இசையில் ஒரு பாடல் பாடுவதற்கு முன்னனிப் பாடகர்களே தவம் கிடந்தார்கள். உங்கள் இசைக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று பாடலாசிரியர்கள் ஏங்கினார்கள்.  சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நீங்கள் எட்டாக் கனியாக விளங்கினீர்கள். அத்தனையும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது
     வயதானவர்களுக்கு  தாங்கள் ஒதுக்கப் படுகிறோம் என்று தோன்றுவது உண்டு. அதே போன்ற மனநிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.    
எத்தனையோ திறமை இருந்தும்  கண்டு கொள்ளப் படாமல் வாய்ப்புக் கிடைக்காமல் அங்கீகாரமும் கிடைக்காமல் போனவர்கள் பலருண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டது.  இந்தித் திரையுலகும்  கொண்டாடியது. ஹாலிவுட்டும் அரவணைத்தது. 
    மாற்றம் ஒன்றுதான் மாறாதது ,  ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்திலும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும். அதுவும்  கலை ரசனையில் நடக்கும் மாற்றம் வேகமானது  ஒன்றுபோய் இன்னொன்று இடம் பிடிக்கும். அதுவும் சில காலத்திற்கே.  அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பியதால்தான் உங்களுக்கு  ஒரு மிகப் பெரிய இடம் கிடைத்தது. காலத்திற்கேற்ப நவீனப் படுத்திக் கொள்ளும் திறமை உங்களுக்கு இருந்ததால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப் பிடிக்க முடிந்தது. அதுவே மிகப் பெரிய சாதனை. அதனை இனி வேறு யாராலும் நெருங்க முடியாது.  ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றம் அதிவேகமானது.  ரசனையின் வாழ்நாள் மிகக் குறுகியது. தயவு தாட்சயணமின்றி தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.
தேசியவிருதுகள் உங்களைப் போல் பெற்றவர் யாருமில்லை. விதம் விதமான விருதுகள் உங்களுக்குப் பெருமை சேர்த்தன; பெருமை அடைந்தன. 
        இத்தனை பெருமைகளைக் கொண்ட நீங்கள்  இந்தியில் எனக்கு வாய்ப்பு  திட்டமிட்டு மறுக்கப் படுகிறது, சதி செய்யப்படுகிறது  என்று வருந்தி  இருப்பதும்  இந்தித் திரை உலகம் உங்களைப் புறக்கணிப்பதாக புகார் கூறுவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.   தமிழில் கூட உங்களுக்கு வாய்ப்பு  அதிகம் இல்லை. காரணம், நிச்சயம் புறக்கணிப்பாக இருக்க முடியாது.. ஆனால்   இன்னமும்   சாதாரண தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு எட்டாத உயரத்தில்தான் இருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை. நீங்கள் தமிழ்ப்  பாடகர்களுக்கு வாய்ப்பளித்ததைடை விட வடக்கத்திய தமிழ் தெரியாத பாடகர்களையே அதிகம் ஆதரித்தீர்கள். உங்களுக்காக அவர்களையும் கொண்டாடினோம். நீங்கள் இந்திக்கே அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள். ஆனால் அப்போதும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பதாகக் நாங்கள் கருதவில்லை. 
  நீங்கள் பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். அதுபோல தயாரிப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளிப்பதாக கருதிக் கொள்ளுங்கள். .  இவ்வளவு சாதனைக்குப் பின் இன்னமும் வாய்ப்பு இல்லை என்று புலம்புவது எங்கள் அபிமான ரகுமானுக்கு அழகல்ல. உங்கள் சாதனைகள் காலம் கடந்து நிற்பவை. உச்சம் தொட்ட இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை. இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர்  நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்.உங்களாலும் அதுபோல் முடியும்.
        தனிக்குடித்தனம் போய் அவ்வப்போது தாய் வீடு வந்து போன பிள்ளை போலத்தான் இருந்தீர்கள்.  இங்கேயும் திறமையான இளம் இயக்குநர்கள்  தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்த பட்ஜெட்  உங்கள் சம்பளத்துக்குக் காணாது. உங்கள் இரும்புக்கோட்டையை தளர்த்தி உங்கள் இசையை அவர்களுக்கும் கொடுங்கள்.               
     இந்தியை விட்டுத் தள்ளுங்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள்.  தமிழர்கள் என்றுமே உங்களைக் கொண்டாடுவர்கள். எங்கள் இசைச் சிங்கம்  ஏ.ஆர் ரகுமானாக எப்போதும் கம்பீரமாக இசைகர்ஜனை புரியுங்கள்

                                                                                                              அன்புடன்
                                                                                           உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
கொசுறு: 1

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதில் ரஹ்மான் ஆவரேஜ் மியூசிக் கம்போசர் என்று ஜோக்காக சொவதுபோல ரகுமானிடமே சரியா என்று கேட்பார். (இதற்கு சல்மானுக்கு கடும் கண்டனங்களை இந்தி ரசிகர்கள் பதிவு செய்தனர்)  ரகுமான் எப்போதும் அமைதிப் புன்னகைபுரிவார்
       மேலும் அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பாளர் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார்.  சல்மான்கான் கைகுலுக்க முயற்சிக்கும்போது ரகுமான்  கையை சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் பதிலடி கொடுப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொண்டே கூறுவார்.

ARR is unaffordable’

       ....... former Stardust editor-turned-filmmaker Ramkamal Mukherjee, who has made award-winning films like Cakewalk and Season’s Greetings, says that the claim that Oscar winners are being kept out are far from reality.
“The fact is it’s tough for filmmakers to afford Rahman. As a filmmaker, I would love to collaborate with Rahman, but will he work within the budget that our film can afford? Unfortunately, none of the music companies is paying producers for the songs.
The days are gone when the rights of movie songs would fetch lakhs and crores. But now music companies ask us to give it away as a complimentary deal against a marketing spend, which is not even clearly shared with the producers.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய முந்தைய பழைய பதிவுகள் கீழே
 ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
இளையராஜா செய்த தவறு
 

19 கருத்துகள்:

 1. பாலிவுட் திரையுலகம்மும்பை நிழலுலக தாதாக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று பலராலும் சொல்லப்படுகிறது நடப்பது என்ன என்று நமக்குத் தெரியவில்லை அவர் இதுவரையிலும் குற்றம் சுமத்தி நாம் கண்டதில்லை அவரே சொல்கிறார் என்றால் அதற்கு உள்ளே ஏதோ விஷயம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்க்ள். ஆனாலும் இதுவரை வாயே திறக்காத ரஹ்மான் மவுனம் கலைத்திருக்கிறார் என்பதால் இதில் உண்மை இருக்கலாம்.ஒரு பிரபல முன்னணி இசையமைப்பாளர் தேவையின்றி இப்படி குற்றம் சுமத்தவேண்டிய அவசியம் இல்லையே. அருமையா பதிவு. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. நல்ல கட்டுரை.   அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு


 4. முழுமையாக வாசித்தேன். பழைய கட்டுரை என்பது தெரிந்த போது சில ஆலோசனைகள் சொல்லியாக வேண்டியுள்ளது. முதலில் எழுதும் போது எடிட் செய்யாமல் அப்படியே போட்டு விடுவோம். ஆர்வக் கோளாறு அல்லது அக்கறையின்மை அல்லது நேரமின்மை. ஆனால் மீண்டும் எடுத்துப் போடும் போது தேவையற்ற வார்த்தைகள் வாக்கியங்களை நீக்கி விடலாம். இதில் தொடக்கத்தில் சர் என்று பறக்கின்றது. பிறகு தொய்வு. பிறகு தள்ளாட்டம். கடைசியில் நச். நானும் இப்படித்தான் தவறு செய்தேன். இப்போது பழையது என்றாலும் மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை வலைபதிவில் எடுத்துப் போடும் போது மீண்டும் மீண்டும் வாசிக்கின்றேன். காரணம் அதன் மூலம் நாம் மாறிய வாசிப்பு சூழலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ளவும் முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பழைய கட்டுரை அல்ல. இப்போது எழுதியதுதான்.கடைசியில் பழைய பதிவுகளின் இணைப்பைக் கொடுத்துள்ளேன். அதில் இப்போது மாற்றம் செய்வது சரியாக இருக்காது அல்லவா?

   நீக்கு
 5. எனக்கு தொடக்கத்தில் ரகுமான் மேல் ஒரு ஆச்சரியம் இருந்தது. இளையராஜா எப்படி எம்எஸ்வியை மறக்கடிக்கச் செய்தாரோ அதைப் போல செய்து விடுவார் என்றே நினைத்தேன். மானூத்து மந்தையிலே என்ற பாடல் நிச்சயமாக நவீனமும் கிராமியமும் சரியாக கலந்த கலவை. எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இளையராஜாவிற்கு வைரமுத்து பலம் போல இவருக்கும் இருந்தார். ரோஜா பாடல் எல்லாம் அதியமாக பார்க்க வைத்தது. ஆனால் எல்லா சமயங்களிலும் கேட்க முடியுமா? என்றால் கேட்க முடியாது. ஆனால் இவர் நவீனத்தை நம்பினார். படிப்படியாக தன் திறமையை நம்பாமல் போய்விட்டார். தமிழ் மொழிக் கொலைக்கு இவர் சூத்ரதாரியாகவும் இருந்தார். இருக்கின்றார். அதற்கு கிடைத்த வெகுமதி தான் காலம் கொடுத்த புறக்கணிப்பு.

  பதிலளிநீக்கு
 6. இளையராஜா பாடல்களை பகுதி பகுதியாக பிரித்துப் பாருங்க. என் மகள்கள் மௌன ராகம் இப்போது பார்த்தார்கள். பாடல்கள் நல்லாத் தானே இருக்கிறது என்கிறார்கள். நினைவில் வைத்து பேசுகின்றார்கள். ரோஜாவும் பார்த்தார்கள். ரசித்தார்கள். திரும்பக் கேட்டால் விவரிக்கத் தெரியவில்லை என்கிறார்கள். நான் கணினியில் பணிபுரியும் போது இளையராஜா பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர்கள் ரசிக்கின்றார்கள். இளையராஜா பாடல் நான்காவது தலைமுறைக்கும் வந்து சேர்ந்துள்ளது. ரகுமான் பாடல் அடுத்த தலைமுறைக்கு சென்று சேருமா என்று தெரியவில்லை. வெறுப்பு விருப்பு இன்றி ரகுமான் பாடலை பலமுறை கேட்டு யோசித்த போது வாயில் ஹால்ஸ் போட்டது போல சுர் என்று உள்ளது ஆனால் தொடர்ந்து வாயில் வைத்திருக்க முடியாது. கரைந்து விடும். இன்றைய தலைமுறை அனிருத் க்கு அடிமையாகவே ஆகி விட்டார்கள். கிடைத்த இடைவெளியை அப்படியே இட்டு நிரப்பியவர் அனிருத். நமக்கு அந்தப் பையனின் இசை பிடிக்காது என்றாலும் கூட அந்த நிமிடத்தில் கிலுகிலுப்பை உருவாக்குகின்றது என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 7. இசைத் திறமைகளை விட ரகுமான் வேறொரு விசயத்தில் மகத்தான சாதனை செய்துள்ளார். இளையராஜா பாடகர் பாடகி இசை கோர்ப்பாளர்கள் யாரையும் வளர அனுமதிக்கவே இல்லை. அதை முதல் முறையாக உடைத்தவர் ரகுமான். எளிய மக்களை இசைக் கல்லூரிகள் உருவாக்கி வளர்த்தவர் ஆதரித்தவர். பம்பாயில் இருந்து தான் இசை கோர்ப்பார் வந்து கொண்டிருந்தனர். இப்போது சென்னையில் இருந்து தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். அந்த அளவுக்கு அந்த லாபி வட்டத்தை உடைத்து நொறுக்கி விட்டார்.
  இசை என்பதனை வணிக ரீதியாக வளம் கொழிக்கும் தொழிலாக தனக்கு சேர வேண்டிய பணத்தை சரியான நிர்வாகத் திறமை மூலம் உருவாக்கி ஒரு பைசா கூட மற்றவர்களுக்குச் செல்லாமல் தன் திறமைக்குரிய அனைத்து பணத்தை வசூலிக்குத் சூத்ரதாரியாக ரகுமான். இந்த திறமை இன்று வரையிலும் இளையராஜாவிடம் இல்லை.
  உங்கள் பதிவு போல எழுதிவிட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இவரைப் பற்றி பிறைசூடன் கொடுத்த பேட்டி இவரை இன்று வரையிலும் மதம் சார்ந்த விசயங்களில் சந்தேகக் கண்ணோடு தான் பார்க்க வைத்துக் கொண்டு இருக்கின்றது. இவரை விட இவர் அக்கா மகன் ஜிவி பிரகாஷ் பல இடங்களில் அதீத திறமையை காட்டியுள்ளார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. வெயில் படப் பாடல்களை கேட்டுப் பாருங்க. இராமநாதபுர மாவட்டங்களில் வாழ்ந்தவர்களுக்கு வெயில் அருமை தெரியும். அந்தப் பக்கமே போகாத அந்தப் பையன் திறமை எனக்கு இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது.

  பதிலளிநீக்கு
 9. அழகாக உணர்த்தி இருக்கிறீர்கள். இதை ஏ.ஆர்.ரஹ்மான் படிக்க வேண்டும் என்பது எமது அவா!

  பதிலளிநீக்கு
 10. 1997 ல் ஜென்டில்மேன், காதலன், திருடா திருடா, காதல்தேசம், இந்தியன் உள்ளிட்ட படங்களில் சில பாடல்களை தேர்வு செய்து T Series 60 கேசட்டில் பதிவு செய்து வாங்கினேன். அப்போது எங்கள் வீட்டில் ரெக்கார்ட் பிளேயர் கிடையாது. நான் பணியாற்றிய திரையரங்கத்தில் ஒலிபரப்பிதான் நானும் கேட்டு மகிழ்ந்தேன்.

  ஆனால் இப்போது கணிணியில் வேலை பார்க்கும்போது அவ்வப்போது ஏஆர் பாடல்கள் ஒலித்தாலும் ராஜாவின் பாடல்கள்தான் அதிகம் கேட்கிறேன்.

  ஜோதிஜி பின்னூட்டத்தில் மானூத்து மந்தையிலே பாடல் இப்போதும் கேட்கக்கூடியது என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அதேபோல் தவில் இசை ஒலித்த அழகிய தமிழ் மகன் படத்தில் வலையபட்டி தவில் பாடலை கேட்கத் தோன்றவில்லை

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க முரளி சகோ. நல்ல பதிவு.

  ஏ ஆர் ஆரின் எல்லாப்பாடல்களும் என்னை ஈர்ப்பதில்லை. ஒரு சில பாடல்கள் மட்டுமே. அவரது இசையை விட அவரது மாடெஸ்ட் குணம் நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் அவரது குணம் அதுதான் அதிகம் ஈர்த்தது. கர்வமில்லாத அமைதி காக்கும் குணம். பல கலைஞர்களை உயர்த்திவிட்டவர் போன்றவை மட்டுமே.

  நல்ல பாயின்ட்ஸ். அவரின் ஆதங்கம் உண்மையாகவே இருந்தாலும் கூட உலகமே அவரைக் கொண்டாடும் போது இதற்கு அவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்றே தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. // இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை... இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர் நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்... உங்களாலும் அதுபோல் முடியும்... //

  ஆஸ்கார் பெற்றவருக்கு இது தேவை தான்...!

  ஆனால் என்னைப் பொறுத்தவரை...

  இவற்றிலும் பிரித்துப் பார்ப்பது பிடிக்காதது...

  மனதிற்கு பிடித்த வரிகளோடு பரவசப்படுத்தும் இசையும்
  மனதிற்கு பிடித்த இசையோடு தாலாட்டும் வரிகளும்
  என்றும் ரசிக்கத்தக்கவைகளே...

  படைப்பவர்களை ஆராயாமல் படைப்புகளை ரசிப்பேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அதுதான் ரசனைக்கு அழகு. இசையை யாரிடம் இருந்து வந்தது என்றுபார்க்காமல் எப்படி இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் ஆண்கள் மனதில் இசை அமைப்பாளர் சார்பு நிலை உண்டு. ஆனால் பெண்கள்தான் யார் இசை அமைத்திருக்கிறார்கள் யார் பாடியது,எழுதியது யார்? என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள்.அவர்களுக்கு ராஜா,ரஹ்மான் தேவா எல்லாம் ஒன்றுதான். பெண்களைக் கவர்ந்தால் அந்தப் பாடல் நல்ல பாடல் என்று அர்த்தம்.

   நீக்கு
 13. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் (?)

  இதற்கு பதில் குறளை கண்டுபிடியுங்கள்... அனைத்தும் புரிந்துவிடும்...!

  பதிலளிநீக்கு
 14. அவர் மனதுக்கு தோன்றியதை சொல்லி விட்டார் அது அவர் கருத்தசரி தவறு என்று நாம் கூறகூடாது முடியாது

  பதிலளிநீக்கு
 15. உச்சத்திற்குச் சென்றவர், இவ்வாறு கவலைப்படுவது சரியானதாகத் தோன்றவில்லை

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895