என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 5


 **********************************************************************************************************
 பகுதி 5 

   மீண்டும் தடங்கள் பதிந்திருந்தது எங்களுக்கு  பெருத்த கவலையை உண்டாகியது. பலவிதமான குழப்பங்களுக்கு உள்ளானோம். வீட்டைக்  காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குச் சென்று விடலாமோ என்றும் யோசனை செய்தோம். மீண்டும் ஒரு முறை பாம்பு பிடிப்பவரை அழைத்து ஒருமுறை பார்த்துவிட்டு இறுதி முடிவு எடுக்கலாம்  என்று சிலர் கூறினர். ஏற்கனவே பாம்பு பிடிக்க வந்தவன் மேல் கொண்ட அவநம்பிக்கை காரணமாக உண்மையான இருளர் ஒருவரை பல்லாவரத்தில் இருந்து வரவழைத்தோம்.

     அவர் நிதானமாக துணிமணிகள்,புத்தகங்கள்,பெட்டிகள்,டப்பாக்கள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. நிச்சயமாக உள்ளே பாம்பு இருக்காது என்றார்.

     கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் அந்தப் பாம்பின் மீது எங்களுக்கு கோபமாக வந்தது. பாம்பு வரவில்லை என்றால் தடம் மட்டும் எப்படி வந்தது. அந்தத் தடங்கள் வேறு பூச்சிகள் ஏதேனும் சென்ற தடங்களாக இருக்குமோ? என்று கேட்டோம். இது போல் தடங்களை வேறு பூச்சிகள் உருவாக்கும் என்று அவரால் உறுதியாக கூற இயலவில்லை.

     அப்போது நான் வெளியில் இருந்த ஒரு அட்டைப் பூச்சியை எடுத்து வந்து பரப்பிவைத்த மாவின்மீது விட்டேன். அது மாவின்மீது எந்த அடையாளமும் ஏற்படுத்தாமல்  சென்றது. அதுபோல மரவட்டைப் பூச்சியும் எந்த தடங்களையும் உருவாக்கவில்லை. ஜூனோ வைக் கொன்ற அந்தப் பாம்பை விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

  (அழகாக தூங்கிக் கொண்டிருக்கும் ஜூனோ)

     இரவுமுழுவதும் விழித்திருந்து பார்க்கலாமா? அல்லது வீடியோ கேமரா வைத்து பார்க்கலாமா என்றெல்லாம் யோசனை செய்தோம். மனைவியையும் மகனையும் அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துவிட்டு நான் மற்றும் அந்த பாம்பு பிடிப்பவர் இருவரும் இரவு முழுவதும் விழித்திருந்து கண்காணிக்கலாமா என்றும் சிந்தித்தோம். வேறு சில காரணங்களுக்காக அதனை கைவிட்டோம்.

            மனதை திடப் படுத்திக்கொண்டு இரவு முழுவதும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து பார்த்து விடுவது முடிவெடுத்தேன்.
     
   இதற்கிடையில் கதவு ஜன்னல்களில் உள்ள மிகச்சிறிய இடைவெளிகளையும் சரி செய்து விட்டோம். இரவு தூங்குவதற்கு முன்
வழக்கம்போல் ஹாலில் மாவைப் பரப்பி வைத்து  உப்புக் கலவையை அறைகளின் வாசற்படி, ஜன்னல் மற்றும் இதர இடங்களிலும் தூவினோம்.

     இரவு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து பார்த்தேன். காலைவரை அடையாளம் எதுவும் இல்லை. சற்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம்.    அடுத்த சில வாரங்களுக்கு பாம்பு வந்ததற்கான எந்த தடமும் இல்லாததால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனாலும் தினமும் கண்காணித்தலைத் தொடர்ந்தோம். எங்கள் மன உளைச்சல் சிறிது சிறிதாக குறைந்து  கொண்டே வந்தது. எப்படி இருப்பினும் ஜூனோ வைப் பற்றி தினமும் பேசிக்கொண்டிருப்போம். அது எங்களுக்கு திருப்தியைத் தந்தது. 
       கொஞ்சம் உரத்த குரலில் திட்டிவிட்டால் அவ்வளவுதான்; மாடிப்      படியில் சோகமாக அமர்ந்துகொள்ளும். நாமாகக் கூப்பிடும் வரை வராது. ஜூனோ! ஓடி வா! ஓடி வா! என்றால் போதும்; அதற்காகவே காத்திருந்ததுபோல் கட கட வென ஓடி வந்து மடிமீது அமர்ந்து கொள்ளும் அழகே தனி. அதன் நினைவுகள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

     ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீரென மீண்டும் ஒரு நாள்  அதிகாலை கீழ்க்கண்டவாறு நாங்கள் கண்ட காட்சி எங்கள் சில நாள் நிம்மதியைக் குலைத்தது. 

         
       இதைப் பார்த்ததும் அடுத்த நாள் இரவு இந்த வீட்டில் தங்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம் யோசித்துக் கொண்டிருந்தோம்.

                                   ( அடுத்த பகுதியில் நிறைவுறும் )


1 கருத்து:

  1. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வளர்த்த நாய் குழந்தையை போன்றது. அதன் பிரிவு என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

    விரைவில் மீண்டு வர எனது வழிபாடுகள்.

    தொடரை பற்றி:

    தொடரை அருமையாக எழுதுகிறீர்கள். அடுத்த பகுதி எப்பொழுது வரும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895