என்னை கவனிப்பவர்கள்

தாய்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மே, 2012

அவனியில் இதை எது மிஞ்சும்?



  இன்று உலக அன்னையர் தினம்.உலகின் மிக உயர்ந்த உறவு தாய். அனைத்து உறவுகளுக்கும் அடிப்படை தாய்.அந்தத் தாயைப் பற்றி சந்தத் தமிழில் எனது சொந்தத் தமிழில் கவிதையாக்கி, அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பிக்கிறேன்


                  சொல்லவே முடியாத் துயரில்
                      சோர்ந்தே விழுந்த போதும் 
                  மெல்ல எடுத் தணைத்து
                       மழலையை  இதமாய்த் தொட்டு 
                  வெல்லக் கட்டி என்றும்
                         வேங்கையின் மகனே என்றும்
                  செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
                        சேயினைக் காப்பாள் அன்றோ?            1


                   காலை  எழுந்த  உடன்
                          கடிகாரம் கடிது ஓட
                   சேலையை சரியாய்க்  கட்ட
                          சிறிதுமே நேரமும் இன்றி
                   வேலை செய்து கொண்டே
                          விரைவாய் இடையில் வந்து
                    பாலை வாயில் இட்டு
                            பக்குவமாய்  சுவைக்க வைப்பாள்        2


                     சத்துணவு நமக்கே தந்து
                            சுவையுணவு  மறந்த போதும்
                     பத்தியம் பலவா ரிருந்து
                              பகலிரவாய் விழித்த போதும்
                      நித்திய வாழ்க்கை தன்னில்
                              நிம்மதி இழந்த போதும்
                      சத்தியத்  தாய் தன் அன்பில்
                             சரித்திரம்  படைத்து நிற்பாள்        3


                      பச்சிளம் பாலகன் தன்னை
                             அம்மா என்றழைக் கும்போதும்
                      அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
                             அறிஞனாய் ஆகும் போதும்
                      மெச்சி அவன் புகழை
                               மேலோர்கள் சொல்லும் போதும்
                       உச்சியே குளிர்ந்து போவாள்
                                உவகையில் திளைத்து நிற்பாள்        4


                       பேய்குணம் கொண்டே பிள்ளை
                                பெருந்துயர் தந்திட் டாலும் 
                       சேய்குனம் சிறிதும் இன்றி
                                சிறுமையை அளித்திட் டாலும்
                        நாய்குணம் மனதில் கொண்டே
                                நல்லன மறந்திட் டாலும்
                        தாய் குணம்  மாறா தம்மா
                                 தரணியில் உயர்ந்த தம்மா!               5 


                        விண்ணைத் தொடும் அளவு
                               வளர்ந்திட்ட தென்னை போல்
                        என்னையே எடுத்துக் கொள்
                                என்றீயும்   வாழை     போல்
                        தன்னையே நினையா நெஞ்சம்
                                தன்னலம் பாரா நெஞ்சம்
                        அன்னையின் அன்பு நெஞ்சம்
                               அவனியில் இதை எது மிஞ்சும்?       6


*******************************************************************************



       

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இனிமைத் தமிழ்மொழி எமது

  
இன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். 

          இனிமைத் தமிழ் மொழி எமது-எமக் 
             கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது 
          கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் 
             கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு
          தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் 
               தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை 
           நனியுண்டு நனியுண்டு காதல்-நற்
               றமிழர்கள் யாவருக்கு மேதமிழ் மீதில்  

இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் "எங்கள் தமிழ்" என்ற தலைப்பில் எழுதிய பாடலின் முதற் பகுதி. இதை நான் எப்போது எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்த செய்யுள் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இது தமிழின் மீது கவிஞர் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனக்கும் தமிழின் மீது சிறிதளவாவது பற்று  இருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்தப் பாடலும் ஒரு காரணம். 
ஆனால் இன்று 
நனியுண்டு நனியுண்டு காதல்-நற்
   றமிழர்கள் பலருக்கும் ஆங்கிலம் மீதில்

என்ற நிலையே நிலவுகிறது. தமிழ் எனக்குத் தெரியாது என்று சொல்வதை பெருமையாகக் கருதுகின்றனர்.  என் பையனுக்கு தமிழே வரமட்டேங்குது. என்று பெற்றோர்கள் பெருமையுடன் சலித்துக்  கொள்வதை பார்த்திருக்கலாம்.
அவர்களுக்கெல்லாம் முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்த கவிதையை சில திருத்தங்களுடன்  சொல்ல ஆசைப் படுகிறேன்.

          அலறும்போது  மட்டும்   அ , ஆ 
          சிரிக்கும்போது மட்டும்    இ , ஈ 
          சூடு பட்டால் மட்டும்    உ , ஊ 
          அதட்டும்போது மட்டும்   எ , ஏ 
          ஐயத்தின்போது மட்டும்   ஐ 
          ஆச்சர்யத்தின் போது மட்டும்   ஒ , ஓ
          வக்கனையின்போது மட்டும்   ஒள
          விக்கலின் போது மட்டும்    ஃ , ஃ 
          என்று  தமிழ் பேசி 
          மற்ற நேரம் வேற்று மொழி பேசும் 
          தமிழர்களிடம் மறக்காமல் சொல் 
          உன் தாய்மொழி 
          தமிழ் என்று 

   இன்று இந்த தமிழ் புத்தாண்டு தினத்திலாவது தமிழை நினைத்திருப்போம்! தமிழால் இணைந்திருப்போம்! 
************************************************************
இதையும் படியுங்க!

நினைவுதிர் காலம்