என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 மே, 2012

கர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்

    தமிழகத்திற்கு தண்ணீர் தர  கர்நாடகா மறுத்து விட்டது.
    தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவின் அராஜகப் போக்கை கண்டு மனம் நொந்த காவிரித்தாயின் கண்டனக் கவிதை குரல் 

        கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் 
                கண்டனக்  குரல் 

              பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் 
                  பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
              நெஞ்சத்தை  கல்லாக்கி நேர்மை மறந்தீர்
                  நடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்!
              கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும் 
                  கோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்
              அஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம் 
                  ஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்!

              தங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்
                  தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
              பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு 
                  போகாமல் செய்திடுதல் முறையே தானா?
              எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு 
                  என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!
              தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் 
                  தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!

              காவிரித்தாய்  கன்னடர்க்கே சொந்தம் என்று 
                   கயவர்கள் ஒன்றுகூடி கூட்டம் போட்டு 
              கைவிரித்து  நீரில்லை என்றே  சொன்னீர்!
                   போதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.
              பைவிரித்து பணம் தேட  பண்பாடிழந்து 
                   பைந்தமிழர் வாழ்வினையே பதற  வைத்தீர் 
              கைவிட்டுப்  போன தந்த  உரிமைபெறவே
                   நதிநீரை தேசியமாய் என்று செய்வீர்?

              ஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க 
                   தண்ணீரை மறைத்து வைத்து  தரமறுத்து
              மறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து 
                  மகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்?   
              சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
                  சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் 
              மறுப்பில்லை  தாய்க்கென்று  நினைந்து விடாதீர்?
                  மவுனமாய் அழுகின்றேன் மறந்துவிடாதீர்.

15 கருத்துகள்:

  1. பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம்
    பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
    நெஞ்சத்தை கல்லாக்கி நேர்மை மறந்தீர்

    ஆதங்க வரிகள் . நம்மால் புலம்பதானே முடியும் .

    பதிலளிநீக்கு
  2. பிறந்த இடம் (கர்நாடகம்) விட்டு, புகுந்த இடம் (தமிழ் நாடு) வரும் காவேரிக்கு சீர் சிறப்புச் செய்து அனுப்பாமல் சின்னாபின்னம் செய்கின்றனர். காவிரியின் மெளனக் குரலை கண்டனக் கவிதையாக வடித்து விட்டீர்கள்! காலம்தான் மழையாய்ப் பொழிய வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. //திண்டுக்கல் தனபாலன் said..
    நல்ல ஆதங்க வரிகள் சார் !/
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா30 மே, 2012 அன்று PM 8:04

    கர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ணீர் இல்லாத போது எப்படி கொடுப்பார்கள்?

    மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விளை நிலைங்கள் அதிக விளைச்சலை தேடுகின்றன. நீர் தேவை அதிகரிப்பு. இதுவே காரணம்.

    சும்மா கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள்

    பதிலளிநீக்கு
  5. தங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்
    தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
    பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு
    போகாமல் செய்திடுதல் முறையே தானா?

    நல்லகவிதை! தமிழர்களிடைய ஒற்றுமை இல்லாத வரை கன்னடரும் கேரளத்தாரும் ஆட்டம் போடவே செய்வார்கள்! நாம் துன்பப் பட்டுதான் ஆக வேண்டும்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. Anonymous said...
    //கர்நாடகாவில் மழை இல்லை. கடும் வறட்சி. அங்கேயே தண்ணீர் இல்லாத போது எப்படி கொடுப்பார்கள்?
    மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விளை நிலைங்கள் அதிக விளைச்சலை தேடுகின்றன. நீர் தேவை அதிகரிப்பு. இதுவே காரணம்.
    சும்மா கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள்//
    அன்பில்லா Anonymous அவர்களே!
    இருப்பதை பகிர்ந்து வாழ்வதுதான் சரியானது. தமிழ் நாட்டில் கிடைக்கும் நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் நமக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லமுடியுமா? மின்சாரத் தேவை நமக்கு மிக அதிகம் அதனால் மின்சாரம் வேறு யாருக்கும் தரமாட்டோம் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?.தீர்ந்து போகும் பொருள்களே பொது உடமையாக இருக்கும்போது இயற்கை அளிப்பதை சமமாகத்தானே பகிர்ந்தளிக்க வேண்டும். ஆபத்தான அணு உலைகளில் இருந்து தரும் மின்சாரம் நமக்கு மட்டுமே அளிக்க சட்டம் இடம் கொடுக்கிறதா?
    மீண்டும் மீண்டும் கிடைக்கக்கூடிய நீரை பதுக்கி வைப்பது நியாயமல்ல. நீதி மன்றங்களின் தீர்ப்பை அரசாங்கமே மதிக்க வில்லை என்றால் அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு? நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் தண்டைனைகளும் பாமர மக்களுக்குத்தானா?
    அவர்கள் என்ன தனி நாடா?
    தனி நாடுகள் கூட மற்ற நாடுகளின் தேவைக்கேற்ப செயல்படவேண்டிய காலமிது.

    பதிலளிநீக்கு
  7. //தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால்
    தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!//

    தமிழகத்தின் தலைவிதி.அண்டை மாநிலங்கள் அனைத்தும் நமக்கு தண்ணீர் தர ஏனோ மறுக்கின்றன.

    என்று தீரும் இந்த அவலம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

    கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. இந்த இடத்தில் நாம் கொஞ்சம் மாற்று சிதனைகளை ,திட்டங்களை யோசிக்க வேண்டும்/

    பதிலளிநீக்கு
  9. ''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு
    போகாமல் செய்திடுதல் முறையே தானா?
    எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு
    என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!...''
    ''எரிமலையோ,
    பூமிக்கொந்தளிப்போ
    சுனாமிக்கு சமமான ஒரு இயற்கைக் கொந்தளிப்பு வந்தால் இந்த மனநிலைகள் தீர்மானங்கள் எங்கு போகும்!
    முரளிதரன் இந்த இடுகையை கட்டுரை வடிவாக இருந்திருந்தால் அரசியல் என்று திரும்பிப் போயிருப்பேன். கவிதையானதால் நின்று அழகாக வாசித்தேன் .கருத்து, பிரச்சனை ஒரு புறமிருக்க, தங்கள் கவிதை நடை அருமை எனக்குப் பிடித்தது. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. அத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க முரளி !

    பதிலளிநீக்கு
  11. //kovaikkavi said...
    ''...பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு
    போகாமல் செய்திடுதல் முறையே தானா?
    எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு
    என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!...''
    ''எரிமலையோ,
    பூமிக்கொந்தளிப்போ
    சுனாமிக்கு சமமான ஒரு இயற்கைக் கொந்தளிப்பு வந்தால் இந்த மனநிலைகள் தீர்மானங்கள் எங்கு போகும்!
    முரளிதரன் இந்த இடுகையை கட்டுரை வடிவாக இருந்திருந்தால் அரசியல் என்று திரும்பிப் போயிருப்பேன். கவிதையானதால் நின்று அழகாக வாசித்தேன் .கருத்து, பிரச்சனை ஒரு புறமிருக்க, தங்கள் கவிதை நடை அருமை எனக்குப் பிடித்தது. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.///
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  12. //ஹேமா said...
    அத்தனை வரிகளிலும் ஆதங்கம்.அழகாய் தொடுத்திருக்கீங்க முரளி !//
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! ஹேமா!

    பதிலளிநீக்கு
  13. உலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . தண்ணீரையும் தர மறுக்கும் மனிதர்களும் உண்டா . கயமை என்றால் என்னவென்று இதன் மூலம் தான் உணர்கின்றோம்.கவிதை வடிவில் கண்கள் குளம் ஆக்கினீர்கள்

    பதிலளிநீக்கு
  14. //சந்திரகௌரி said...
    உலகம் எங்கும் நீர்மயம் ஆனால் நீருக்குப் பஞ்சம் . தண்ணீரையும் தர மறுக்கும் மனிதர்களும் உண்டா . கயமை என்றால் என்னவென்று இதன் மூலம் தான் உணர்கின்றோம்.கவிதை வடிவில் கண்கள் குளம் ஆக்கினீர்கள்//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895