என்னை கவனிப்பவர்கள்

ஆதரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜனவரி, 2013

நீயா? நானா?காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?



   நமது சமுதாயத்தில் காலம் காலமாக காதல் திருமணங்கள் நடந்ததாலும் கூடவே அதற்கு ஆதரவும்,  எதிர்ப்பும் இருந்து  வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆதரவு கூடி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.
  20.01.2013 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் எதிர்க்கும் பெற்றோர்களும் விவாதித்தனர். வழக்கம்போல கோபியூத் சாரி கோபிநாத் காதலை ஆதரித்து பேசினார்.(கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.)

 காதல் திருமண எதிர்ப்பிற்கு காரணம் சாதிதான் என்று  நிகழ்ச்சியில்  பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் சுபவீ அவர்களின் பேச்சு எதிர்வாதம் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் வாதம் செய்ய முடியாதே தவிர மனதை மாற்றிவிடுமா என்றால் சந்தேகமே! பத்திரிகையாளர். இறைவன் ,"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை   மறுக்க முடியாது" என்றார்.

அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட  பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.

  தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் கொடுப்பதையோ எடுப்பதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தது ஒரு தரப்பு. சமூகத்தில் பலர் சொல்லவில்லையே தவிர உள்மனதின் நிலை இதுதானே!

  கிராமப் புறங்களில் காதல் திருமணம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தற்போது குறிப்பாக நகர்ப்புறப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளதாகவே தெரிகிறது. நிச்சயிக்கப்படும்  திருமணங்களிலும் இப்போது மாற்றம் வந்திருக்கிறது.   உட்பிரிவுகளை பொருட் படுத்தாமல் நிச்சயம் செய்யப் படுகிறது. காதல் திருமணத்தை விரும்பாவிட்டாலும் தீவிர எதிர்ப்பு காட்டுவதில்லை. மகன் அல்லது மகனுடன் பேசி காதல் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றிவிடுகிறார்கள்.அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுகிறது. உறவினர்களின் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை. 

  எனது நண்பர்களில் ஒரு சிலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரது காதல் பாதியில் முடிந்திருக்கிறது. இந்தக் காதல்களில் ஒரு விஷயம் கவனித்தேன். நகர்ப்புறமாக இருந்தாலும் சாதிகளின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய இனத்தை விட  உயர்ந்த சாதியாக தாங்களே கருதும் பெண்களைத்தான் காதலிக்கிறார்கள். இதனை சாதனையாகவும் நினைக்கிறார்கள்.இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு.. இதற்கு பையனின் பெற்றோர்கள் அதிக எதிர்ப்பு காட்டுவதில்லை.

    கீழ் நிலையில் உள்ளதாககக் கருதப்படும்  இனத்தின்  பெண்ணை  காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்பெண்  தன்னைவிட கீழ் சாதியாக கருதப்படும் ஆணை  காதலித்தால்  வெட்டிவிடுவேன் என்று சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சில இடங்களில் அவ்வாறுதான் நடந்து கொண்டிருகின்றன.

 நிகழ்ச்சியில்   தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை யார் காதலிப்பதற்கும் தடை ஏற்படுவதில்லை  என்றார்  எழுத்தாளர் இமயம்
   ஆனால் தன் இனத்தை விட  கீழானதாக நினைக்கும்    சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது.  காதலிப்பவனே  திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன்.  இதற்கு விலக்குகளும் உண்டு.

  ஆண்  அழகைப் பார்த்தே காதலை தொடங்குகிறான். தொடர்கிறான்
தொடக்கத்தில் ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது எனது கருத்து. பெண்கள் பெரும்பாலும் சாதிகள் பார்ப்பதில்லை என்பது நல்ல விஷயம்.

   காதலால் சாதிகள் ஒழியும் என்ற நப்பாசை நிறையப் பேருக்கு உண்டு.எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே! மேல் தட்டு வர்க்கத்தினரிடம் காதல் பெரிய  பாதிப்பை ஏற்படுத்துவதில்லை நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமுமே காதலால் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.

   எந்த  சாதியாக இருந்தாலும் அழகான அல்லது திறமையான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. காதலிக்கப்படாத அல்லது காதலிக்காத பெண்களுக்கு நிச்சயிக்கப்படும் திருமணமே கை கொடுக்கிறது. யாருக்காவது வறுமையில் வாடும் பெண்ணை பார்த்து காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.

  நல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

*****************************************************************************************

வியாழன், 10 மே, 2012

மந்திர எண் நூறு


இது எனது நூறாவதுபதிவு.

கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை -ஆனாலும்
உற்றதுணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு. 
   
  என்ற கடவுள் வாழ்த்துவெண்பாவில் தொடங்கினேன். இன்று நூறாவது  பதிவைத் தொட்டிருக்கிறேன். நூறு என்பது ஒரு மந்திர எண். நூறாண்டு வாழ்க. நூறு ரூபாய். நூறு கி.மீ. வேகம். கிரிக்கெட்டில் செஞ்சுரி. ஆயிரத்தைக்கூட நூறுகளில் சொல்வதைப் பார்த்திருக்கலாம். நூறு நாள் ஓடும் படம். இப்படி நூறுக்கு இருக்கும் வசீகரம் வேறு எங்களுக்கு இல்லை.
     நூறு பதிவு என்பது சாதனை அல்ல. பல பதிவர்கள் அனாயாசமாக நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நானும் சென்சுரி அடித்தவர்களில் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
   நான் பதிவர் என்பது நண்பர்களுக்குக் கூட தெரியாது. அலுவலகத்திலும் தெரியாது.
    எனக்கு  ஓரளவிற்கு எழுத்தார்வம் உள்ளது என்றால் அதற்கு காரணம் எழுத்தாளர் இலக்கியவீதி இனியவன் அவர்கள். நான் நான்காம் வகுப்பிலிருந்து கதை புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது இனியவன் அவர்கள் எழுதுவதை பின்னல் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அடித்தளம் என்ற எனது முதல் கதையை எழுதினேன். அதை எதிர்பாராமல் படித்த எழுத்தாளரின் உறவினரும் (தற்போது அவரின் மருமகன்) எனது நண்பர் அதனை  அரும்பு என்ற இதழில் வெளிவரச் செய்தார்.. அதை அவர் பாராட்டியது, எழுதுவதற்கு தூண்டு கோலாக அமைந்தது. கவிதைகள் கதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாகி இருந்தாலும் அதைத் தொடர இயலவில்லை. எழுதுவதை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் நான் மட்டும் அறிந்ததாகவே இருந்தது. இப்போது அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பு பதிவுலகின் மூலம் கிடைத்ததற்கு கூகுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

   இந்த நூறு எனக்கு பல அனுபவங்களை தந்திருக்கிறது.ஆரம்பத்தில் எனது பதிவுகள் யாராலும் படிக்கப் படவில்லை.(நல்லா எழுதினாத்தானே?) முதல் மூன்று பதிவுகளுக்குப் பின் கிட்டத்தட்ட ஓராண்டு வரை எந்தப் பதிவும் இடவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாரவிதமாக இறக்க  அதன் பாதிப்பில் இரங்கல் கவிதை ஒன்றை (ஜூனோ! எங்கள் செல்லமே!) பதிவிட்டேன். ஒரு சிலர் பார்த்தனர்.
  ஒரு நம்பிக்கை ஏற்பட மேலும் ஒரு சில கவிதைகளை பதிவிட்டேன்.  பிறருடைய பதிவுகளை அதிகமாக வாசிக்கத் தொடங்கினேன். மோகன் என்பவரின் வானவில் எண்ணங்கள்தான் நான் படித்த முதல் பதிவு. அப்போது பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவனாகவே இருந்தேன். பின்னர் கேபிள் சங்கரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தபோதுதான் பிரம்மாண்டமான தமிழ்ப் பதிவுலகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். விவாதங்கள், சண்டைகள், கிண்டல்கள் ,கலாய்த்தல்கள், உள்ளது என்பதையும் அறிய நேர்ந்தது, சிறிது அச்சமும் ஏற்பட்டது.

   தமிழ்மணம்  வலைத்திரட்டி பற்றி தெரிந்துகொண்டு என்னுடைய வலைப்பதிவையும் இணைத்த பிறகுதான் திருப்பம் ஏற்பட்டது. எனது பதிவுகள் கவனிக்கப் பட ஆரம்பித்தது. கவிதைகள் மட்டுமல்லாது பிற தலைப்புகளிலும் பதிவிட்டேன். இன்டலி, தமிழ் 10, உடான்ஸ், உள்ளிட்ட பல்வேறு திரட்டிகளில் இணைக்கக் கற்றுக் கொண்டேன். 
 தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி. பிற திரட்டிகளுக்கும் நன்றி 

  ஓரளவிற்கு எனது பதிவுகள் கவனிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. பக்கப் பார்வைகளுக்கான கேட்ஜெட்டை இணைத்த பின்பு எனது வலைப்பதிவுகளுக்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே எண்ணிக்கை சட்டென்று ஒன்றிரண்டு உயர்வது கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.யாரோ தற்போது பதிவுகளை பார்த்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறையும் இதைப்போல நிகழ, நான் பார்க்கும் பார்வைகளையே அது கணக்கில் எடுத்துக்கொண்டு எண்ணிக்கையை உயர்த்திக்காட்டியதை உணர்ந்தேன். பின்னர் செட்டிங்க்ஸில் இதற்கு ஒரு வழி இருப்பது தெரிந்தது. Dont Track Your Own Pageviews என்பதை தேர்வு  செய்தபின் எனது பதிவுகளை நான் பார்க்கும்போது எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டது.அதிலும்  ஒரு சிக்கல் ஒவ்வொரு ப்ரௌசரிலும் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டி இருந்தது.
  கூகிள்  கவுண்டர் தவிர ஹை ஸ்டேட்ஸ் கவுன்ட்டர் பயன் படுத்தும்போது கூகுளுக்கும் அதற்கும் பேஜ் வியூ எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதிலும் I.P exclusion என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுத்து நமது  I.P அட்ரஸ் கொடுத்தபோது இந்த வேறுபாடு ஓரளவிற்கு குறைந்தது.
   தமிழ்மணத்தில் சேர்ந்தபோது எனது தமிழ்மணம் தர வரிசை 2000 க்கும் மேல் இருந்தது. மெதுவாக உயர்ந்து தற்போது 272  இல் இருக்கிறேன்.
  முன்னணிப் பதிவர்கள் பலரும் பின்னூட்டம் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் மூன்று பின்னூட்டமிட்ட Elan  ராம்ஜி யாஹூ., பொன்சந்தர் மூவருக்கும் நன்றி.
  இணையம் இளைஞர்களுக்கே வாகானது எனது என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த சென்னை பித்தன்,புலவர் ராமானுசம் ,கோபால கிருஷ்ணன், நடன சபாபதிபோன்றவர்களும் பின்னூட்டமும் ஊக்கமும் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 
  எனது பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இடுவதற்கு word verfication option enable செய்யப்பட்டிருக்கிறது என்பதை கோபால கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்பே அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. இப்படிப் பல பதிவர்கள் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார்கள்.
எனது பதிவுகளுக்கு கருத்திட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த  நன்றி.
  "நான் பேச நினைப்பதெல்லாம்" சென்னை பித்தன் அவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர் 2011 இல் கலக்கியவர்கள் பட்டியலில் என்னை பற்றி வலைசரத்தில் அறிமுகப் படுத்தினார். எனக்கு Liebster Blog விருது வழங்கிய நண்பர் சுப்ரமணியத்தை மறக்க இயலாது.
   கூகிள் கனெக்ட் மூலம் எனது வலைப்பதிவை இணைத்துக் கொண்டவர்களுக்கும் இன்டலி மூலம் என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் (பின் தொடர்பவர்கள் என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை) நன்றி.
  எனது அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் நன்றி. யாரேனும்  விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் எனது நன்றி.
   வலையுலகத்தின் மூலம் நான் பெற்ற   நன்மைகளில் ஒன்று. பதிவர் "வீடு திரும்பல்" மோகன்குமார் என் வீட்டுக்கருகில் வசிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டது. ஆனாலும் அவரை இன்னும் சந்திக்கவில்லை. பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நீளம் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.

  பதிவுலகில் பல சமயம் தடுமாறி விழுந்து எழுந்து நின்றிருக்கிறேன்.
இப்போது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது விழுந்தாலும் எழுந்திருக்க முடியும் என்று.

  தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
*******************************************************************************************
வேலை  தேடும் வடிவேலு பகுதி2 -அடுத்த பதிவில்