கிரிக்கெட்டில் ஆர்வம் உடையவன் நான். ஓரளவுக்கு நன்றாக விளையாடவும் செய்வேன். அக்னிபுத்ரா கிரிக்கெட் க்ளப். இதுதான் எங்கள் கிரிக்கெட் டீமின் பெயர்.சென்னை 28 திரைப்படம் போல சுவாரசியங்கள் எங்கள் டீமில் உண்டு.அவற்றை வைத்து தொடராக எழுதி உங்களைப் படுத்தவும் எதிர்கால திட்டம் உண்டு(இப்போதைக்கு இல்லை ) பள்ளி விட்டு வந்ததும் எங்கள் பகுதியில் உள்ள குளத்திற்கு வந்து விடுவோம். அதுதான் எங்கள் கிரிக்கெட் மைதானம் . காலைக் கடன் மாலைக் கடன் கழிப்பவர்கள்தான் எங்கள் ரசிகர்கள்(?). ஹோம் பிச்சான அந்த மைதானத்தில் செஞ்சுரி அடித்த அனுபவமும் உண்டு.
நாங்கள் விளையாடும்போது விக்கெட் கீப்பருக்குப் பின்னால் பந்து சென்றால் அதைஎடுத்துப் போட்டுக் கொண்டிருப்பான் ஒரு சிறுவன். விளையாட்டில் இல்லாத அந்த சிறுவன் வேறு யாருமல்ல பிரபல பதிவரும், புதிய தலைமுறை பத்திரிகை துணை எடிட்டருமான யுவ கிருஷ்ணாதான் அவர். எனது வலைப்பூவில் அவர் இட்ட பின்னூட்டத்தின் மூலம்அவர் சொல்லித்தான் இந்த விஷயம் எனக்கே தெரிந்தது. பின்னர் இருவரும் நண்பர் வீடு திரும்பல் மோகன்குமாரோடு ஒரு பள்ளி விழாவில் சந்தித்தோம்,அவரது சகோதரர் பாலாஜி என் நெருகிய நண்பர் மற்றும் உடன் படித்தவர்
அருகருகே வசிப்பவர்கள்- நண்பர்களைக்கூட வலைப்பூ/முகநூல் மூலமே சந்தித்துக் கொள்வது காலத்தின் கோலம் .
நான் சொல்ல வந்த விஷயம் இது அல்ல. டெஸ்ட் மேட்ச்,ஒன்டே மேட்ச் எதுவாயினும் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு விவாதித்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டு கண்கொட்டாமல் பார்த்ததுண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஐ.பி.எல் மேட்சுகளைக் கூட முழுமையாகப் பார்ப்பதில்லை.முதல் ஐ.பி.எல் இல் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. கிரிக்கெட் சூதாட்டமாகவும் வியாபாரமாகவும் மாறிப் போனதும் ஒருகாரணமாக இருக்கலாம். இப்போதெல்லாம் ஸ்கோர் தெரிந்து கொள்வதோடு சரி. அதுவும் இந்த முறை பல்வேறு சூழ்நிலை காரணமாக ஒரு ஐ.பி.எல் கூட முழுமையாக பார்க்கவில்லை. முதல் ஐபிஎல்லில் இருந்த ஆறாம் இன்று படிப்படியாக குறைந்து விட்டது என்று பலரும் கூறுகின்றனர்.
எவ்வளவுதான் கிரிக்கெட் விளையாட்டு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் விளையாட்டை ரசிப்பவர்கள் குறையவில்லை. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்கு மட்டும் எப்படி மவுசு ஏற்பட்டது?.
(அதனை விவரிக்க ஒரு தனி பதிவு பின்னர் எழுதப்படும்.)
ஐ.பி. எல் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. தெருக்களில் மாணவர்கள் இளைஞர்கள் பைனல் பற்றியும் நேற்று சேவக்கின் சதம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் . இறுதிப் போட்டியை முழுவதுமாக பார்க்க முடிகிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.
போகட்டும். ஒரு ஐ.பி.எல் ரசிகர் குறள் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை. சும்மா ஜாலிக்காக ...... படித்ததும் மறந்து விடவும்.
1. தேவையா ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள்
சொல்வதை தள்ளி விடு.
2. இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
தலை'மை' அடித்தாவது செல்
3. ஆண்டியும் வந்திடுவார் காண்பதற்கு ஐ.பி.எல்
தூண்டும் கிரிக்கெட் வெறி
4. ஒன்றும் இரண்டும் ஓடாதே எப்போதும்
நான்கும் ஆறும் அடி.
5. தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது
கடுப்பாகி வீசுவார் கல்
6. கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.
7. ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
விறுவிறுப்பு கூடுமே பார்.
8. ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
ஏப்பையும் எட்டுவார் இலக்கு.
9. ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு தப்பாது
அழகியர் ஆட்டம் ரசி.
10. சூதாடும் புக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு
சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.
**************************************************************************
1 சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்

