கடந்த வார 20.03.2016 நீயா நானாவில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் பற்றி பெற்றோர் மற்றும் கருத்துகள் விவாதிக்கப் பட்டது. இப்போதெல்லாம் ஆழமான விவாதங்கள் நடை பெறுவதில்லை. நான்கைந்து கேள்விகளுக்கு ஒருவர் பின் ஒருவராக பதில் கூற வைத்து நிகழ்ச்சி முடிந்து விடுகிறது. நம் எதிர்பார்க்கும் சில கேள்விகள் கேட்கப் படுவதில்லை. சிறப்பு விருந்தினர்களும் எப்போதும் வரக்கூடிய ஆஸ்தான சிறப்பு விருந்தினர்களே. அவர்களுடைய கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியும் அப்படியே. இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் சார்பில் ஒருவரும் அழைக்கப்படவில்லை. அடிக்கடி நிகழ்ச்சியில் பங்கு பெறும் பத்ரி சேஷாத்திரியும், இளங்கோ கல்லாணையும் கலந்து கொண்டனர். நாமும் கொஞ்சம் கல்விக் கட்டணம் பெருஞ்சுமையாக ஏன் ஆனது என்பதை கொஞ்சம் ஆராய்வோம்.
விலை கேட்டு வாங்கவா முடியும் கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும் என்றான் நறுக்கு மீசைக் கவிஞன் பாரதிதாசன். ஆனால் கல்வி இன்று சந்தைப் பொருளாக மாறிவிட்டது. எங்கே கல்வி அதிக விற்பனைக்கு விற்கப் படுகிறதோ அங்கிருந்து கல்வியை வாங்கவே பெற்றோர் விரும்புகின்றனர். விலை அதிகமுள்ள பொருளே தரமானது என்பது சந்தை சித்தாந்தம். அது கல்விக்கும் பொருந்தும் என்பதே பெற்றோர் எண்ணம். தன்னுடைய பொருளாதார நிலைக்கு மீறிய கல்வியை வாங்க துணிவதன் விளைவே பெருஞ்சுமையாக மாறி இன்று அச்சுறுத்துகிறது.
முந்தைய தலைமுறையினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இந்தத் தலை முறையினரோ கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே வீண் என்று கருதுகின்றனர். தன்னுடைய பெற்றோர் அரசு பள்ளிகளில் தங்களை சேர்த்ததால்தான் தாம் நல்ல கல்வி பெற முடியவில்லை என்று ஆதங்கம் கொண்டவர்களாகவே இன்றைய பெற்றோரை காணமுடிகிறது.. அதனால் இந்தத் தலை முறையினர் அந்தக் குறை தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடாது எனக் கருதி தனியார் பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். குறிப்பாக நடுத்தர முற்பட்ட இனத்தவர் பணக்காரர்களின் பள்ளிக்கு தங்களை பிள்ளைகளை அனுப்ப முயற்சி செய்தனர். இதற்காக தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்ளவும் தயங்கவில்லை. அறிவுரை சொல்கிறோம் என்ற பெயரில் 'நல்லா படிக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்' என்றெல்லாம் கூறி அச்சத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தினர். முற்பட்ட இனத்தவரின் இந்த மனப்பான்மை மற்ற இனத்தவருக்கும் தொற்றிக் கொள்ள கல்வி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பெரிய பணக்காரப் பள்ளிகளை நெருங்க முடியாத இவர்களின் நிலையை மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டன. ஆங்கில மோகமும் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் ஈர்க்க விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்தனர். மூட்டை மூட்டையாய் புத்தகங்களையும் நோட்டுகளையும் முதுகில் சுமந்து செல்வதை பெற்றோர் பூரிப்பில் மிதந்தனர்.
ஓரளவிற்கு பொருளாதார நிலை உயர்ந்தபோது ஏழைகள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதை கௌரவக் குறைவாகக் கருதத் தொடங்குவதும் அதிகரித்தது. அரசு பள்ளிகளில் பயின்றால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கிடைக்காது என்று எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டனர் . ஆனால் தாங்கள் அரசு பள்ளியில்தான் படித்தவர்கள் என்பதை மறந்து விட்டனர் .தங்கள் பிள்ளைகள் அசாத்திய திறமை பெற வேண்டுமெணில் தனியார் பள்ளிகளே அதனை அளிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் நிகழ்ச்சியில் விவாதிக்கவில்லை
நிகழ்ச்சியில் ஒருபெண்மணி சொன்னார் நாங்கள் அரசு பள்ளிகளில் படித்ததால் எங்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை. தொடர்புத் திறன் (communication Skill) இல்லை என்று கூறினார். அதிகம் படிக்காத அரசியல் வாதியிடம் இருக்கும் Communication Skill ஆங்கிலம் படித்த எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஐயத்துக்கிற்குரியதே. ஆங்கிலத்தில் பேசுவதுதான் Communication skill என்ற புரிதலே இதற்கு காரணம்
ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் பல்வேறு அரசுப்பணிகளில் அதிகாரிகளாக உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியுமா என்பது ஐயமே. ஆனால் சிறப்பான நிர்வாகத் திறமை பெற்றவர்களாகத்தான் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
நிகழ்ச்சியில் சர்வதேச பள்ளி சார்பாக பேசியவரிடம் ஏன் இவ்வளவு பணம் வாங்குகிறீர்கள். என்று கேட்டதற்கு, தரும் வசதிகள் ஆசிரியர் சம்பளம் போன்றவையும், கூடுதலாக சொல்லித் தரப்படும் நீச்சல், கராத்தே,யோகா செஸ் பேஸ்கட் பால், இவற்றிற்குத்தான் காசு என்றார்.
3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி தருகிறார்கள் ஆனால் என் மகனுக்கு இன்னும் நீந்தத் தெரியாது என்று உண்மையை போட்டு உடைத்தார் ஒருவர்.
அதை சொல்லித் தருகிறோம் இதை சொல்லித் தருகிறோம் என்று சொல்லும் இந்தப் பள்ளிகள் ஒரு குற்றாலீஸ்வரனையோ விஸ்வநாதன் ஆனந்தையோ உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்வியை இந்தப் பள்ளிகளை கோபிநாத் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசைப் புயல் AR ரகுமான் சென்னையில் புகழ் பெற்ற பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் படித்தார். அடிக்கடி பள்ளிக்கு வராததால் அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அந்தப் பள்ளியின் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒரு ஆஸ்கார் நாயகன் உருவாகி இருப்பாரா என்பது ஐயமே. அவரை அனுப்பியதற்காக அந்தப் பள்ளிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
சட்டப்படி கல்வியை லாபம் பார்க்கும் தொழிலாக நடத்தக் கூடாது என்பது பள்ளிகள் நடத்தும் பலருக்கு தெரியாமல் இருப்பதை அறிய முடிந்தது . அனுமதி பெறுவதற்கு செய்யப்படும் செலவுகள் அதிகம் அந்த தொகையை நாங்கள் எங்கிருந்து பெறமுடியும் என்று கேட்கிறார்கள் .
சட்டம் அனுமதிக்காவிட்டாலும் உண்மையில் லாபம் பார்க்கும் தொழிலாகத்தான் செய்யப் படுகிறது. இப்போதும் நிறையப் பேர் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுதான் பள்ளிகள் நடத்துகிறார்கள். நாங்க முதல் போடுகிறோம் லாபம் வேண்டாமா என்றார் இன்னொரு நிர்வாகி.பெற்றோர் கல்விக் கட்டணம் அதிகம் வாங்கப் படுவதையும் பள்ளிகளில் சேர்ப்பதற்கு கஷ்டப் படுவதையும் என்று புகாராகக் கூறினார்கள் . கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளிலும் அல்லது அரசு பள்ளிகளிலோ சேர்க்க தயாராக இல்லை. குறைவான கல்விக் கட்டணங்களை இப்பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.பணக்காரர்களிடமிருந்து பணம் பிடுங்கவே இப்பள்ளிகள் தொடங்கப் பட்டன. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் நானும் அந்தப் பள்ளியில்தான் என் பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று தானாகப் போய் விழுவதும் சீட் கிடைக்க போடப்படும் நிபந்தனைகளைக் கண்டு ஆதங்கப் படுவதும் , கட்டணம் குறைக்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமானதாக உள்ளது.
சேர்க்கைக்கு போட்டி இருக்கும்போது கட்டணம் உயர்த்தப்பட்டு விடுகிறது.சேர்க்கைக்கான பிற விதிகளை இது புறந் தள்ளிவிடுகிறது . மாதம் இவ்ளோ பீஸ் கட்டறோம் என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்களும் உண்டு
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் அனைவருக்கும் சமமான கல்வியை சாதாரணர்களுக்கானது அது குறைந்தபட்ச கல்வி என்று நினைப்பதும் இப்பள்ளிகளை நாடுவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வகுப்பறைகளை கலர்புல்லாக வைத்திருக்கிறோம் . Smart Class வைத்திருக்கிறோம் கண்காணிக்க வாட்ஸ் அப், போன்ற நுட்பங்களை பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டார்கள். இவற்றில் எந்தப் பள்ளியில் நங்கள் நல்ல குடிமக்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லவில்லை
தமிழ் நாட்டில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அதற்கென ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. கமிட்டியின் மூலம் கட்டணம் நிர்ணயிக்கப் படாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படமாட்டாது. அதன்படி அனைத்துப் பள்ளிகளும் தங்கள் கட்டணத்தை தாங்கள் தரும் வசதிகளை குறிப்பிட்டு கட்டணம் நிர்ணயித்துக் கொண்டன. செல்வாக்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணமும் நிர்ணயம் செய்யப்டுவதாகவும் சொல்லப் படுகிறது. உண்மையில் பல பள்ளிகள் இந்தக் கட்டணத்தை விட அதிகமாகவே வசூலிக்கின்றன. முறையான ரசீதுகள் வழங்கப் படுவதில்லை. இவற்றையெல்லாம் குற்றச்சாட்டாக சொல்லும் பெற்றோர் விசாரணையின்போது பல்டி அடித்துவிடுவதே வழக்கமாக உள்ளது. புகார் கூறினால் தன் குழந்தையை பழி வாங்கக் கூடும் என்ற அச்சமே அதற்கு காரணம்
ஒரு நபர் கமிட்டி நிரனயித்துள்ள மெட்ரிக் பள்ளிகள் கட்டண விவரம் அறிய வேண்டுமா?
க்ளிக் செய்யுங்கள்
|
ஒரு பெண்மணி சொல்கிறார் எவ்வளவு செலவானால் என்ன அதற்கேற்ற கல்வி கிடைக்கிறதே என்று. பள்ளியை தேடுவதை ஸ்கூல் ஷாப்பிங் என்று வர்ணித்தார். அப்படி ஷாப்பிங் செய்து படித்த பள்ளியில் அவர்கள் பிள்ளைகள் என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை.
ஒரு பள்ளி தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை தொடங்கினேன் என்றார் ஒருவர். செலவு அதிகம் என்று சொல்கிறீர்களே உங்கள் வருடாந்திர Turn over எவ்வளவு? செலவு அதிகமெனில் மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை எப்படி திறக்க முடிந்தது என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை.
இக் கட்டணக் கொள்ளைகளை தடுப்பது எப்படி.? இரண்டு வழிகளை பத்ரி சேஷாத்ரி கூறினார். ஒன்று அரசே பள்ளிகள் நடத்தவேண்டும் வேண்டும்.அது இப்போதைக்கு சாத்தியமில்லை, சட்டப்படியே சிறு லாபத்துடன் நடத்த அனுமதிக்கலாம் என்றார். அப்படி செய்தால் இன்னும் நிறையப் பேர் வருவார்கள் கல்விக் கட்டணங்கள் குறையும் என்றார். இப்போதும் ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. உண்மையில் சட்டம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டலும் லாபகரமான தொழிலாக பள்ளிகளை நடத்துவதையே குறிக்கோளாக வைத்துள்ளார்கள். தற்போது பள்ளிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ப்ளாக் மணிதான் என்று அதிரடிக் கருத்து ஒன்றையும் கூறினார் பத்ரி. மேலும் இப்பள்ளிகள் செய்யும் விதிமீறல்களை பெற்றோர் பொருட்படுத்தப் படுவதில்லை. சொல்லவும் துணிவதில்லை.அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் எங்களுக்கு இடம் கொடுத்தால் போதும் என்ற எண்ணமே இருப்பதை சுட்டிக் காட்டினார்
கட்டணங்களை அரசு குறைக்கவேண்டும் பெற்றோர் என்று விரும்புகின்றனரே தவிர கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை மூடுங்கள் என்றும் கல்வியை அரசுதான் வழங்கவேண்டும் என்றும் ஒருவரும் சொல்ல தயாராக இல்லை ன்பதை நீயா நானா உணர்த்தியது
அப்படியானால் இப்பளிகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்கவும் அனுமதிக்கலாமா? என்றால் கூடாதுதான் .என்னதான் செய்யலாம் .
கல்விக்கான அரசின் செலவை குறைப்பதற்காக தனியார் ஊக்குவிக்கப் பட்டன. இன்று அரசு பள்ளிகளே அழிந்துவிடும் நிலை உருவாகி விட்டது. அரசு இப்பள்ளிகள் மீதான கண்காணிப்பை சட்டத்தின் துணை கொண்டு வலுப்படுத்த வேண்டும் . விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு அரசியல் வாதிகளிடமிருந்தோ உயர் அதிகாரிகளிடமிருந்தோ எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. சமரசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்தவர்க்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப் படவேண்டும். சாதாரண பணியாளராய் இருந்தாலும் சரி ஐ.ஏ எஸ். அதிகாரியாய் இருந்தாலும் சரி அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் படவேண்டும்.
ஆனாலும் கல்விக் கட்டணம் குறைப்பது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமாகி விடாது. பெற்றோர் தனியார் பள்ளிகளின் மீது கொண்டுள்ள மோகத்தை கைவிட வேண்டும். பிறருக்கு அடிமை வேலை செய்யும் மனப்பான்மையை விடுத்து சுய தொழில் செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
இன்னும் விவாதிக்க வேண்டியவை பல இருந்தாலும் நீளம் கருதி தற்போதைக்கு முடித்துக் கொண்டு பின்னர் தொடர்வோம்.
******************************************************************************
#ஆஸ்கார் நாயகன் உருவாகி இருப்பாரா என்பது ஐயமே.#
பதிலளிநீக்குஉண்மைதான் ,அவரவர் திறமையே வாழ்க்கையில் முன்னேற வைக்கும் !
பெற்றோர்கள் மட்டுமல்ல ஐயா
பதிலளிநீக்குஅரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை,அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள்
இவர்களது மோகம் முதலில் தீர வேண்டும்
நன்றி ஐயா
நல்ல அலசல். அருகில் இருப்போர், உடன் அலுவலகத்தில் வேலை செய்வோர் அனைவரும் நல்ல பள்ளிகளில் சேர்த்திருக்க, தங்கள் செல்வங்களை சாதாரண பள்ளியில் சேர்க்க நினைத்தாலும் முடியாமல் போவதற்கு இந்த ஒப்பீடு தடையாகிப் போகிறது. ப்ளஸ் டூ முடித்த மாணவ மாணவியரில் 80 சதவிகிதம் பொறியியல் பாடத்தையே நாடியதன் விளைவு இன்று பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கைக் கூடி, வேலை வாய்ப்புகள் அருகி விட்டன. நிறைய சொல்லத் தோன்றுகிறது. அத்தனையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். நீங்களும் எழுதி இருப்பதுதான். என்ன பயன்? பெற்றோரின் மனோபாவம் இனி மாறப் போவதில்லை.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா,அருமையான பகிர்வு ஐயா.அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசுத் துறையில் முன்னுரிமைக் கொடுத்தால் இந்நிலையில் மாற்றம் நிகழும் ஐயா.நம்ம மக்கள் எப்படி தெரியுமா ஐயா,அரசு பள்ளி,கல்லூரி,மருத்துவமணை இதற்கெல்லாம் போகமாட்டார்கள் ஆனால் அரசுப் பணி மட்டும் வேண்டும் என்று நினைப்பார்கள்.முதலில் இதை தடுக்க வேண்டும் ஐயா.அரசு பள்ளிகள் மூடப்பட்டுவிட்டால் நிச்சயம் நடுத்தரவர்க்கத்தினர் பலர் பாதிக்கப்படுவரார்கள்.மேலும் அந்த அம்மா கூறியப்படி பள்ளி ஷாப்பிங் என்பது அதிகரித்துவிடும் ஐயா.அதுமட்டுமா நம்ம பெற்றோர்கள் எப்படி தெரியுமா எந்த பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்களோ அந்த பள்ளி தான் சிறந்த பள்ளி தம் பிள்ளை அங்கு படித்தால் நிச்சயம் பெரிய இடத்திற்கு வந்திருவான் என்ற எண்ணம்.ஆனால் படிக்கற பசங்க எங்க படிச்சாலும் முன்னேற முடியும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை ஐயா.அரசின் அலட்சியம் தான் இன்று தனியாரின் வியாபாரத்தில் பெற்றோருக்களும் மாணவர்களும் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி.
கல்வி என்பது
பதிலளிநீக்குநாட்டின் முதலீடு (எழுத்தறிவு) - அதை
வணிகமாக்கி விளையாடுவது அழகல்ல!
பெற்றோர் பணம் செலுத்தி
தனியார் கல்விக் கூடங்களை
ஊக்குவித்தால்
அரச பள்ளிக்கூடங்களை
கடவுளா நடாத்துவது?
ஆழ்ந்து சிந்தித்து ஒன்றுவிடாமல் விவாதித்துள்ளவிதம் நன்று. கல்வி என்பது வணிகமயமாக்கப்படும்போது சற்றே வேதனையாகத்தான் உள்ளது.
பதிலளிநீக்குExcellent Post Sir , நீயா ! நானா ! நிகழ்ச்சியில் விறுவிறு விவாதமோ, நெத்தியடி கருத்துக்களோ! இப்போது அதிகம் இருப்பதில்லை, டெம்பிளேட் தனமான உரையாடல்கள், (ஒருவேளை நல்ல கருத்துக்கள் எடிடிங்க் ல் நீக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை After all நீயா நானா too a business and concentrate on increasing TRP Rating. ).
பதிலளிநீக்குஅதிக காசுக்கு கிடைப்பதெல்லாம் நல்லது என்கிற மடத்தனமான சித்தாந்தம் மக்களிடையே பரவியிருக்கிறது , மிகச்சரி Sir, கல்வித்துறைக்கு அரசு பட்ஜெட் அடிப்படைல மிக சொற்ப அளவிலான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்கிறது., அரசாங்கம் எத எடுத்து நடத்தனமோ அத நடத்தாம,சாரயக்கடையை நடத்திட்டு இருக்கு. அதிக லாபம் தரும் துறை னு சொல்லி மது விற்பனையை செய்கிறது .TASMAC என்பதற்கான விரிவு Tamilnadu State Marketing Corporation னு சொல்றாய்ங்க, வேற உருப்படியான எந்தஒரு பொருளையும் இவங்க விற்பனை செய்ததாக தெரியவில்லை !
கல்வி என்பது விலைகொடுப்பதால் கிடைப்பதில்லை, கற்பதால் படிவது என்கிற பாரதியின் வரிகள் நச் !! நம்ம தேசத்துக்கு கல்வி புரட்சி ஒன்னு அவசியம்னு நெனக்கிறேன் சார்.
எனக்கு தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. இதை நான் 200 பள்ளி, கல்லூரிகளை பற்றி எழுதிய அனுபவத்தை வைத்து சொல்கிறேன். யாரோ ஒருவர் கோடீஸ்வரனாக நாம் வட்டிக்கு வாங்கி கட்டணம் கட்டி கொண்டிருக்கிறோம். அந்தளவிற்கு கிடைக்கும் கல்வியின் தரம் இல்லை. நானே 15 வருடங்களுக்கு ஒரு கீத்துக் கொட்டகை போட்டு பள்ளி ஆரம்பித்துவிடலாம் என்று இருந்தேன். அந்தளவிற்கு அதில் லாபம் கொட்டிக் கிடக்கிறது. இதைப் பற்றி பலப் பதிவுகள் எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. முடிந்தால் பதிவிடுகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே!
த ம 4
//அதை சொல்லித் தருகிறோம் இதை சொல்லித் தருகிறோம் என்று சொல்லும் இந்தப் பள்ளிகள் ஒரு குற்றாலீஸ்வரனையோ விஸ்வநாதன் ஆனந்தையோ உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்வியை இந்தப் பள்ளிகளை கோபிநாத் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்//
பதிலளிநீக்குமுத்தாய்ப்பான கேள்வி நண்பரே நன்றாகவே அலசி இருக்கின்றீர்கள் தொடர்கிறேன்.
தமிழ் மணம் 6
சில தவறுகள்
பதிலளிநீக்கு- அனைத்து பள்ளிகளும் அரசியல்/சாதி தொடர்புள்ளவை (சில தவிர)
- முடிந்தவரே பள்ளியிடம் சென்று அவர்கள் பாக்கெட்டில் பணத்தை திணிக்கின்றனர்(அவர்கள் கொள்ளை அடிகிறார்கள் என்று சொல்ல கூடாது)
- கொடுப்பவர் எந்த ரசிதும் கேட்பதில்லை. பிள்ளைகள் பாதிக்க படுவார்கள் என்று. அவர்கள் ஆதாரத்துடன் தருவதை வாங்கி கொண்டு அவர்களை காட்டி கொடுக்க கூடாது.
- பள்ளிகள் தொழில் செய்கின்றனர். அதனால் வரி கட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். (தமிழகமே செய்யலாம்)
- அரசு பள்ளிகளை அரசுடைமை ஆக்கி விட வேண்டும். இதுவும் முடியும். அரசியல் வாதிகள் விட மாட்டார்கள். மக்கள் இதை தேர்தல் நேரத்தில் வலிமையாக கேட்டால் நிச்சயம் நடக்கும். ஒரு காலத்தில் பஸ்/வங்கி எல்லாம் தனியாரிடம் இருந்தது. கொள்ளை அதிகம் ஆனதால் அரசுடைமை ஆனது.
இதற்குப் பின்னூட்டம் இடுவதற்குப் பதில் நானே என் கருத்துக்களை ஒரு பதிவாக வெளியிடுவேன்
பதிலளிநீக்குஎன்னுள் எழுந்த பல எண்ணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி! இவ்ளோ சொல்றோம் நம்ம புள்ளைக என்ன அரசு பள்ளிகளிலா படிக்கிறார்கள்? எனக்குத் தெரிந்த அரசு பள்ளியாசிரியர்கள் சிலர் மதுவருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவது மிகவும் இயல்பு..
பதிலளிநீக்குநல்ல ஸ்கூல எப்படி தேர்வுசெய்வது? தனியார் பள்ளிகளின் இன்னொரு பெயர் `பாங்க்`/Bank.
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையான ஆய்வு,
இரண்டாம் பாகம் எப்போ ?
தம +
அருமை அருமை முரளி சகோ! நான் அடிக்கடி நினைத்து ஏற்கனவே கல்வி குறித்து சில எழுதியிருந்தாலும் இன்னும் எழுத வேண்டும் என்று நினைத்து எழுத நினைத்த கருத்துகள் அனைத்தும் நீங்களே இங்குக் கொட்டிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குரஹ்மான் வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் இன்று ஆஸ்கார் நாயகனாய் ஆகியிருக்க மாட்டார்.// உண்மைதான். இது போன்ற அனுபவம் என் மகனுக்கும் ஏற்பட்டது அதைப் பற்றித் தனிப்பதிவு. கல்வி பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம்...அவ்வளவு இருக்கின்றது இன்றைய கல்வி முறை பற்றிச்க் சிந்திக்கும் போது...நானும் அரசு சார்ந்த கிறித்தவப்பள்ளியில் படித்தவள்தான்.
சகோ அரசுப் பள்ளியில் சில ஆசிரியர்கள் வேண்டாத செயல்களில் ஈடுபடுகின்றார்கள். எங்கள் வீட்டருகில் இருக்கும் குடும்பத்தினரின் குழந்தைகளிடமிருந்து அறிந்தது. மட்டுமல்ல தகாத வார்த்தைகள் உட்பட. மட்டுமல்ல அந்தக் குடும்பத்தினரின் குழந்தைகளே கேட்கின்றார்கள்..பக்கத்துவீட்டுக் குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்கும் போது எங்களை மட்டும் ஏன் அரசுப் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறீர்கள் என்று. எங்கள் குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண்ணே தனது குழந்தைகளை அடையாரில் தனியார் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறார். எப்படிச் சாத்தியமானது பொருளாதார ரீதியில் என்று தெரியவில்லை. கடன் வாங்குகிறார் என்பது வேறு விஷயம். இப்படி ஒப்பீடு நடக்கும் போது சாதாரணப் பள்ளியில் படிக்க வைக்க நினைத்தாலும் முடியாமல் போகும் தருணங்களே அதிகம். குழந்தைகளே கேள்வி கேட்கும் போது. எனவே நீங்கள் சொல்லியிருப்பது போல் அரசே கல்வியைத் தன் கையில் எடுக்க வேண்டும். இப்பொது பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளுக்கும் காரணம் அரசுதானே அது அனுமதித்திருக்காவிட்டால் பெருகியிருக்குமா..
நிறைய பேசலாம்....பின்னூட்டம் என்பதால் நிறுத்திக் கொள்கின்றேன்...முடிந்தால் பதிவு எழுதுகின்றேன்...
மிக அருமையான விரிவான தெளிவான கருத்துக்ள் கொண்ட கட்டுரை..பாராட்டுகள் சகோ!
கீதா
படிச்சு பட்டம் வாங்கறது வேற உன்மையாவே படிச்சுகிறது வேற! தந்தி டிவியில் சில மாதங்களுக்கு முன் பார்த்த பேட்டியில், சென்னையில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பென் எடுத்த மானவரிடம் தம்பீ நீ வங்காள விரிகுடா கடலை நேரில் பார்த்திருக்கிறாயா என்றதற்கு இல்லை என்றான் மானவன், மெரினா பீச்சுக்கு போயிருக்கியா அது தான் தம்பீ வங்களா விரிகுடா என்றார் பேட்டி கண்டவர். இந்த மாதிரி படிக்கிற படிப்பு ஒரு படிப்பா ? நான் அரசுபள்ளியில் தான் படிச்சேன் ( பிலோ அவ்ரேஜ்), அதன் ஜூவாலஜி முடித்தேன். கல்லூரி வந்த பிறகு தான் என்ன படிக்கிறோம் எது படிக்கிறோம் என்றே புரிந்தது, அதன் பின் சிஏ படிக்க சேர்ந்தேன், பொருளாதாரம் காரணமா ட்யூஷன் போகமால் நானே முற்ரிலும் புதிதான பாடத்தை படித்தேன், முடித்தேன். இப்போது என் மகள் பள்ளி மார்க் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. எழுதப் படிக்க தெரிந்தால் போதும் மேற்படிப்பை சொந்த முயற்சியில் படித்தவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. படிப்பிற்கும் அதை சொல்லித்தரும் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்பதே நான் இங்கே நிறுவ முயல்வது.
பதிலளிநீக்கு