என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2016

இவன் ஒரு கட்சி! இவன் நிழல் ஒரு கட்சி!


அட!இந்தக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கே!யாரையாவது நினைவு படுத்தினா நான் பொறுப்பு இல்ல வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி . இவரது கவிதைகள் அனைத்தும் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டும் வரிகளால் நிறைந்தவை. படிப்போர் மனதில் சட்டென ஒட்டிக் கொள்பவை.பல்வேறு சூழல்களுக்கு மேற்கோள் காட்ட ஏற்றவை. அவரது கவிதைகள் சிலவற்றை அவ்வப்போது பகிர்ந்திருக்கிறேன். இதோ இன்றைய கால சூழலுக்கும் ஏற்ற இன்னொரு கவிதை 


இவன் ஒரு கட்சி இவன் நிழல் ஒரு கட்சி 

                                          அம்மா தாயே! பாரத தேவி!
                                          அரசியல் என்பது மணியாரம்!
                                          அம்மம் மாஉன் பிள்ளைகள் கையில் 
                                          அதில்தான் எத்தனை அலங்கோலம் 

                                          சும்மா இருப்பவ னெல்லாம்  நாட்டில் 
                                          சொந்தக் கட்சி தொடங்குகிறார் 
                                          சிம்மா சனத்தில் ஏறுவதற்கு
                                          சிரசா சனங்கள் பழகுகிறான் 

                                          விற்பதற்கென்றே கட்சியை தொடங்கும் 
                                          வேடிக்கை இங்கு வாடிக்கை 
                                          முற்பகல் பிற்பகல் கட்சித் தாவல்கள் 
                                          முடிவில் லாத கேளிக்கை!

                                           நிற்கும் இவனொரு கட்சிக்குள் 
                                           இவன் நிழலோ வேறோரு கட்சிக்குள்!
                                           கற்கும் பாடம் தினசரி மாறும் 
                                           காசுக்கேற்ற விகிதத்தில் 

                                           மகன் ஒரு கட்சி! தாய் ஒரு கட்சி 
                                           மனைவி ஆளுங் கட்சியிலே!
                                           முகங்கள் மாறும் அரசியல் குடும்பம் 
                                           முக்கோணத்தின் உச்சியிலே 

                                           மூன்று காலிகள் சேர்ந்தால் போதும் 
                                           முளைக்கும் புதிதாய் ஒரு கட்சி 
                                           தான்தோன்றிக்கு தலைவர் பதவி 
                                            தண்டல்கள் செயலர் பொருளாளர் 

                                           முக்கா லிகளோ ஊரை ஏய்த்து 
                                            நாற்காலிக்கு மாறுகையில் 
                                            உட்காருவதில் சிக்கல் வந்து 
                                            ஒருவன் கட்சியை உடைக்கின்றான் 

                                            கட்சித் தாவல் சட்டம் இவனை 
                                            கைது செய்ய முடியாதாம்!
                                            கட்சியில் பிரிந்தவன் மூவர் கட்சிக் 
                                            கணக்கில் மூன்றில் ஒருபங்காம் 

                                            பொருட்பால் இவர்க்கு மனப்பாடம்: பெரும் 
                                            பொய்கள் இவர்க்கு குருபீடம் 
                                            புரட்டல் அரசியல் கலையாகும்; வெறும் 
                                            போலிகள்,கொள்ளையர் கூடாரம்!

                                             ஆத்திகன் தூக்கும் காவடி போல 
                                             அரசியல் காவடி இருக்கிறது 
                                             நாத்திகன் கூட காவடி தூக்கும் 
                                             நாடகம் இங்கே நடக்கிறது 

*********************************************************************

தாராபாரதியின் பிற கவிதைகள்


************************************************************************

13 கருத்துகள்:

 1. இன்றைய அவலநிலை அரசியலுக்கு நிச்சயமாக பொருந்துகின்றது நண்பரே அருமையான பகிர்வுக்கு நன்றி
  தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

  பதிலளிநீக்கு
 2. #ஆத்திகன் தூக்கும் காவடி போல அரசியல் காவடி இருக்கிறது #அமரத்துவமான வரிகள் !காவடி மட்டுமல்ல ,அரசியல் காமெடியும் கூட :)

  பதிலளிநீக்கு
 3. இந்தக் கவிதை எந்தக் காலத்திலும் பொய்யாகாத வண்ணம் நம்முடைய அரசியவாதிகள் பார்த்துக் கொள்வார்கள் பொறுப்புடன்!

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை! இன்றைய அரசியலுக்கும் ரொம்பவே பொருத்தம்..

  //பொருட்பால் இவர்க்கு மனப்பாடம்: பெரும்
  பொய்கள் இவர்க்கு குருபீடம்
  புரட்டல் அரசியல் கலையாகும்; வெறும்
  போலிகள்,கொள்ளையர் கூடாரம்!//

  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 5. இன்றைய அரசியல் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
  த ம 5

  பதிலளிநீக்கு
 6. இன்றைய அரசியல் யதார்த்தம்
  அருமை ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 7. நாத்திகன் கூட காவடி தூக்கும்
  நாடகம் இங்கே நடக்கிறது

  உண்மை ரசித்தேன் ஐயா

  பதிலளிநீக்கு
 8. எம் ஆர் ராதாவின் ஒரு டயலாக் நினைவுக்கு வருகிறது ஆளுக்கொரு தலைவன் அவனவனுக்கு ஒரு பட்டினிப்பட்டாளம்

  பதிலளிநீக்கு
 9. அரசியலை அருமையாக படம்பிடித்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. தாராபாரதியின் கவிதைகளைப் படிக்கத் தூண்டுகிறது. பொருட்பால் இவருக்கு மனப்பாடம். மிகவும் ரசித்த வரி. நயமும் ஆழமும் நிறைந்த வரி.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895