என்னை கவனிப்பவர்கள்

கடவுள் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

யாருமே படிக்காத முதல் பதிவு

எனது முதல் பதிவு அனுபவம்.

     ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம்  போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள்  தொடர் பதிவில் இணைத்து விட்டதால் மீண்டும் இதை எழுத வேண்டியதாகி விட்டது. 
     முதல் என்ற சொல்லுக்கு தனி ஈர்ப்பு  உண்டு. முதல் பிறந்தநாள், பள்ளிக்கு போன முதல் நாள்,முதல் ரேங்க் வாங்கிய நாள் ,முதலில் பேசிய மேடை(அதற்கப்புறம் அது தொடரவில்லை என்றாலும்)முதல் திருமண நாள் என்றுபட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இணைய இணைப்பு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யார் வேண்டுமானும் வலைப்பதிவு தொடங்க முடியும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. மற்றவர்களின் வலைப பதிவைப் பார்த்து வலையில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 
   கவிதைகள் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு.ஏற்கனவே சும்மா பொழுதுபோக்காக எழுதிய கவிதைகள்(?)கிட்டத்த நூறு இருந்தது. அவை பல்வேறு சூழல்களில் பள்ளியில் படிக்கும்போதில் இருந்து தொடங்கி அவ்வப்போது எழுதி வைத்தது. அவற்றை ஒரே நோட்டில் எழுதி வைக்க முடிவு செய்தேன். அப்படி எழுதும்போது ஏற்கனவே எழுதியவற்றில் எதை முதலில் எழுதுவது என்பthil எதை முதலில் எழுதுவது என்பர் குழப்பம் ஏற்பட்டது. 
   பள்ளியில் படிக்கும்போது  தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடல் மிகவும். பிடிக்கும். அவை ஓசை நயம மிக்கதாக அமைந்திருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட மதக் கடவுளைக் குறிக்காமல்  பொதுவானதாக இருக்கும். அதனால் கடவுள் வாழ்த்தை முதல் பக்கத்தில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

   கடவுள்  வாழ்த்து வெண்பாவில் எழுதவேண்டும் என்ற விபரீத ஆசை துளிர் விட்டது.  காரணம் வெண்பா வடிவத்தின் மீது ஒரு  சிறு வயதில் இருந்தே ஒரு ஒரு ஈர்ப்பு இருந்தது .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
சங்கத்தமிழ் மூன்றும் தா 

    என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் துவக்க வகுப்புகளில் படித்த வெண்பாக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க, பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை வைத்து துணிந்து கடவுள் வாழ்த்தை எழுதிவிட்டேன்.இவை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் இருந்ததே தவிர ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அறிந்ததில்லை. வலைப்பூ  தொடங்கியதும் முதல் பதிவாக இதையே பதிந்தேன்.இப்பதிவை ஆரம்பத்தில் யாரும் படிக்கவில்லை என்றாலும் பின்னர் அவ்வப்போது யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ படிக்கத்தான் செய்தார்கள். சில நூறு பெரியாவது இந்த பதிவு எட்டியதில் மகிழ்ச்சியே

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
சங்கத்தமிழ் மூன்றும் தா 

என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் 

      கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்
      பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
      உற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா!
     
பற்றியெனைத் தூக்கி விடு. 


     எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் பொதுவாக பேரிறைவா என்று விளித்ததில் எனக்கு கொஞ்சம் திருப்தி.



முதல்  பதிவின் இணைப்பு
   அப்படியே, சிவன், திருமால், சரஸ்வதி,மழை,தாய், தந்தை,பசு, நிலா, தமிழ், தலைப்புகளில் தட்டுத்தடுமாறி எழுதி வைத்திருந்தேன்.
வலைப்பூ ஆரம்பித்ததும் இவை அனைத்தையும் சேர்த்து முதல் பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் நல்ல காலம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் .பொதுவான  ஒன்றை மட்டும்  இறைவாழ்த்து என்ற தலைப்பில் பதிவிட்டேன். கொஞ்ச நாளைக்கு அதை நான் மட்டுமே பார்த்தேன். படித்தேன். 

   பின்னர் எது கவிதை , இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  என்று பதிவுகள் எழுதினேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு நீண்ட நாட்கள்  யாரும் கருத்திட வில்லை, பின்னர் முதன்முறையாக ஈழன் என்பவர் இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  பதிவிற்கு கருத்திட்டார். அந்தக் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. இருந்தபோதும் பார்வையாளர் எண்ணிக்கை உயரவில்லை. உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் அப்போது அறிந்திருக்கவில்லை.


    பின்னர் பதிவிடுவதை நிறுத்திவிட்டு. "எழுத்து" தளத்தில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதி வந்தேன். இதற்குள் சில வலைப் பக்கங்கள் அறிமுகமாக , ஓராண்டுக்குப் பிறகு  பதிவெழுதும் ஆசை மீண்டும் துளிர்விட  தொடர்ந்தேன். அடுத்தடுத்து  பதிவுகள் எழுதிய போதும் பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை. தமிழ்மணம்,தமிழ்10 இன்டலி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்த பின்பு முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னணி பதிவர்கள் பலர் என் வலைப் பக்கத்திற்கு வருகை தந்ததோடு கருத்திட்டும் ஆதரவு அளித்தனர். ஆனால் ஒரு சுவாரசியம்  79 வது  பதிவில்தான் ரமணி சாரின் முதல் கருத்து கிடைத்தது பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை எனது 80 வது பதிவுதான் சந்தித்தது.  அதன் பின்னர் பலரின் தவறாது தொடர்ந்து  ஆதரவு கிடைக்க ஓரளவிற்கு மற்ற பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டேன்.  


    277 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.


    குழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட எனது அந்த சுமாரான முதல் பதிவு, இன்று வரை கொடுத்தது  என்றால் மிகையாகாது.


*******************************************************************************

இந்த  பதிவை எழுதுமாறு கேட்டுக் கொண்ட அம்பாளடியாள் அவர்களுக்கு என் நன்றிகள் 
இதுவரை  முதல் பதிவைப் பற்றி  எழுதாத அனைவரையும்  எழுதும்படி அழைக்கிறேன்.


****************************************************************************
  

சனி, 11 செப்டம்பர், 2010

கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு.