என்னை கவனிப்பவர்கள்

உலகக் கோப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகக் கோப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஏப்ரல், 2015

கலகக் கோப்பை 2015


    கிரிக்கெட் உலகக் கோப்பை பைனல்ஸ்ல இந்தியா நுழைஞ்சிடும்னு நம்பி ஏமாந்து போய் இருப்பீங்க. அட விடுங்க .  உலகக் கோப்பை என்னங்க பெரிய உலகக் கோப்பை. . எங்க ஏடாகூடம் ஃபிளாட்ஸ்ல நடக்கிற  கலகக் கோப்பையை விடவா அது சுவாரசியமா இருக்கப் போகுது. 
        எங்க ஏரியாவில ஏடாகூடம் ஃபிளாட்ஸ்னு கேட்டு பாருங்க சின்ன கொழந்தைங்க கூட சொல்லும். அது என்ன வித்தியாசமான பேரா இருக்கேன்னு பாக்கறீங்களா? அதை கட்டின பில்டர் உண்மையில ஒரு ஏடா கூடம். அது மட்டுமில்ல அதுல குடியிருக்கிற குடும்பங்களும் ஏடாகூடம்தான். சரியான கலகக்கார குடும்பங்கள். கோள் மூட்டறது, போட்டு கொடுக்கறது, புரளி பேசறது எல்லாம் இவங்களுக்கு கைவந்த கலை இல்ல; இல்ல வாய்வந்த கலை. ஆனா பேரு அப்படி இருக்கிறதுக்கான காரணம் அது இல்ல. ஒவ்வொரு ஊருக்கும் ஒருபெயர் காரணம் இருக்கும். பிளாட்சுக்குக் கூடவா பெயர்க் காரணம் இருக்கும்னு நீங்க ஆச்சர்யப் படலாம்  

          அந்தப் பகுதியில் முதல்ல வந்த குடியிருப்பு இதுதான். அக்கம்பக்கத்தில ஒரு கி.மீ தூரத்துக்கு எந்த வீடும் இல்லை . அதனால ஈடன் கார்டன்னு ஃபிளாட்சுக்கு  பேர் வச்சார் பில்டர். கன்னாபின்னான்னு கட்டி இருந்தாலும் பேரை மட்டும் பாருங்க. ஆனா எல்லாரும் குடி வந்ததுக்கு அப்புறமும் பேர் எழுதல.. ஒரு பெயிண்டரக்  கூப்பிட்டு Eden Garden  கிறுக்கி எழுதி கொடுத்திருக்கார். பெயிண்டருக்கு அவ்வளவா   எழுதப் படிக்க தெரியாது.  Eda godam ன்னு எழுதிட்டுப் போய்ட்டான்.அதை அப்புறமா சரிபண்ணிக்கலாம்னு விட்டுட்டதால எல்லோரும்  கிண்டலா  ஏடாகூடம்னே பேரு வச்சுட்டாங்க.

 இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா அந்த ஃபிளாட்டோட வாட்ச்மேன் நான்தான். எங்க ஃபிளாட்ஸ் தாண்டி போற யாரும் மூக்குமேல கை வைக்காம போக மாட்டாங்க.  அப்படி என்ன அதிசயம்னுதானே கேக்கறீங்க. அதிசயம் ஒண்ணும் இல்லீங்க. சாக்கடை தண்ணி பிளாட் வாசல்ல தேங்கி நின்னு நாத்தம் அடிக்கும். அப்புறம் எப்படி மூக்குமேல கை வெக்காம போகமுடியும். அக்கம் பக்கத்தில இருக்கவங்க அடிக்கடி வந்து கம்ப்ளைன்ட பண்ண வருவாங்க. அவங்களுக்கு  பதில் சொல்லாம   அத்தனை பேரும் ஒண்ணா சேந்து ஒருத்தரை ஒருத்தர் கை காட்டி   நீதான் காரணம்னு சொல்லி திட்டி சண்டை போட்டுக்குவாங்க. அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைய விட சாக்கடை எவ்வளவோ பரவாயில்லன்னு ஒடுவாங்க பாருங்க! 

 கையில வாட்ச் இல்லாத வாட்ச் மேனா  இருந்தாலும்  பல நேரங்கள்ல காட்ச் மேனா இருப்பேன். கேப்டன் தோனி கூட விக்கட் பின்னாடி ரிலாக்சாத்தான் நிப்பார். ஆனா நான் அப்படி கேட்ல நிக்க முடியாது எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எப்ப எந்த வீட்டில இருந்து என்ன பொருள் பறந்து வரும்னு தெரியாது. அப்படியே காட்ச் புடிக்கணும்; இல்ல சாமார்த்தியமா நகந்துக்கணும்

 மறந்துட்டேன் பாருங்க.இங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்லலியே . நாலு கலகக் குடும்பங்கள் சார். ஒவ்வொண்ணும் கலகத்தில எக்ஸ்பர்ட். ஆரம்பத்தில அவங்களுக்குள்ளேயே கலகம் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அப்புறம் அது போரடிச்சுப் போய் வெளியிலே தங்கள் திறமையக்  காட்ட எங்க ப்ளாட்ஸ் பேமஸ் ஆயிடுச்சு .

    உங்களுக்கு உ.வே.சா தெரியும். அ.வே.சா தெரியுமா? அழுக்கு வேட்டி சாமிநாதனோட சுருக்கம்தான் அது. பெயர்க் காரணம் பேர்லயே இருக்கே! ரிடயர்ட் ஆகிட்டதால முழு நேர கலகம்தாங்க அவரோட தொழில்.  அழுக்கு வேட்டி சாமிநாதன் தினமும் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போறது வழக்கம். அந்த கோவிலோட அர்ச்சகர் ஒருநாள்  "சாமிநாதன்! பளிச்சுன்னு  நல்ல வேட்டி கட்டிக்கிட்டு  கோவிலுக்கு வரப்படாதா?" என்று கிண்டலாக  கேட்க, என் வேட்டிய பத்தியா பேசற? உன்ன என்ன பண்றேன் பார்” என்று கருவிக்கொண்டே சமயம் வாய்த்தபோது 'அர்ச்சனை கணக்கெல்லாம் சரியாய் காட்றது இல்லேன்னு' ட்ரஸ்ட்டீகிட்ட நைசா போட்டு குடுத்துட்டார். ட்ரஸ்ட்டீ இவர் எதிர்லயே  சம்பளத்தில கட் பண்ணிடுவேன்னு அர்ச்சகரை மிரட்ட பாவம் நொந்து திரி நூல் ஆயிட்டார் .
   
     அப்படித்தான் ஒருமுறை ஒரு பெண் இவரிடம் "சவுக்கியமா மாமா" என்று  தெரியாத்தனமாய் கேட்க அவரும் "அட சுசீலாவா? எப்படி இருக்க?  உன் வீட்டுக்காரனை இன்னைக்கு தாம்பரம் டாஸ்மாக் கடைகிட்ட பாத்தேனே! மெரூன் கலர் சட்டையும் ப்ளூ பேன்டும்தானே (அது அவர் வேலை செய்யும் கம்பனி யூனிஃபார்ம்) போட்டிருந்தான். எதுக்கும் ஒரு கண் வச்சுக்கோ” என்று சொல்ல, ஜாலியா  கோவிலுக்கு வந்தவங்க காளியா கோபத்துடன்  வீட்டுக்கு திரும்பினாங்க  சுசீலா. பாவம் அவன் துரதிர்ஷ்டம் அன்னைக்குன்னு பாத்து ட்ரையின்ல வரும்போது எவனோ குடிகாரன் இவன்மேல வாந்தி எடுத்து வைக்க, அதை ஸ்டேஷன்லயே சுத்தப் படுத்தியும் அந்த நாத்தம் போகல. வீட்டுக்குள்ள நுழையும்போதே நாத்தம் லேசா வர, அ.வே.சா சொன்னது உண்மைதான்னு நினச்சு, எவ்வளோ சொல்லியும் வீட்டுக்காரன நம்பாம சண்டை போட்டு கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.

     சுசீலா வீட்டுக்காரன்  ஆவேசத்துடன் அ.வே.சா விடம் சண்டைக்கு கிளம்பினபோது  அங்க இருந்தவங்க  'வேண்டாம்  அப்புறம் அந்த ஆள் இன்னும் மோசமா கலகம் மூட்டிடுவான்னு' சொல்லி   தடுத்து விட்டனர்.

  அப்புறம் சாரதாம்மா இன்னொரு கலக சிரோன்மணி, அந்த ஏரியா  வீடுகள்ல மாமியாரைப் பற்றி மருமகளிடமும் மருமகள் பற்றி மாமியாரிடமும் வாயைக் கிளறி  கேட்டு அவங்க மனக்குறைய அவங்க வாயாலேயே சொல்ல வச்சு  அதை மறக்காம “உங்க மருமக இப்படி! உங்க மாமியார்  இப்படி சொன்னா!” என்று சொல்லி  குழப்பம் விளைவிப்பதில் சாரதாம்மா  ஒரு நவீன நாரதாம்மா. உதாரணத்துக்கு உங்க மருமக ஆபீஸ்ல இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரை ஆபீஸ்ல வேல செய்யறவரோட வண்டியிலதான் தினமும்  வராளாமே!” என்று சொல்ல  அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லணுமா என்ன?  அந்தப் பகுதியில் பல தனிக் குடித்தன குடும்பங்களை குறுகிய காலத்தில் உருவாக்கிய பெருமை அவருக்கு தாங்க

    அப்புறம் நாட்டியப் பேரொலி நளினா. நான் தப்பா எழுதிட்டதா நினைக்காதீங்க. கொஞ்சம் இருங்க!  பேரொலிதான் கரெக்டுன்னு புரிஞ்சிக்குவீங்க. டான்ஸ் கிளாஸ் நடத்தற அவங்க கிட்டயும் நாலு பசங்க டான்ஸ் கத்துக்க வராங்களேன்னு ஆச்சர்யமா இருக்கும்.  அவங்க டான்ஸ் “தை தை”ன்னு கத்துக் குடுக்கும்போது  பேரொலி வரும் பாருங்க! ஏடாகூடம் பிளாட்சே அதிரும். ஏற்கனவே பைசா கோபுரம் மாதிரி சாஞ்சி கிடக்கிற காம்பவுண்ட் இன்னும் கொஞ்சம் சாயறமாதிரி தெரியும்.  இவங்க டான்ஸ் கத்துக் கொடுக்கறத விட கத்துக்க வர்ற பசங்க கிட்ட அவங்க வீட்டு  சண்டை சச்சரவுகளை விசாரிச்சு தெரிஞ்சுக்கத்தான்   அதிக நேரம் செலவு பண்ணுவாங்க. இந்தப் பசங்களை டான்ஸ் கிளாஸ் முடிச்சு கூட்டிட்டு போறதுக்காக வர்ற அண்ணன் அக்காவெல்லாம் காத்திருக்கிற நேரத்தில போன்ல பேசும்போது ஒட்டுக் கேட்டு, லவ் பண்ற விஷயம், செமஸ்டர்ல அரியர் வச்சுருக்கிற ரகசியம், காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமா பாத்தது,   இதையெல்லாம் பசங்க வழியே அவங்க வீட்டுக்கு பாஸ் பண்றது ஒரு இனிமையான பொழுதுபோக்கு. சம்பந்தப் பட்டவங்களுக்கோ அது அதிர்வேட்டு.

    ஏடாகூடத்தின் இன்னொரு ஏடோகூடக் குடும்பம் பெட்டிஷன் பெரியசாமியோடது . ஒரு பெட்டிஷன் எழுதினதில்லன்னாலும் கையில ஒருகொயர் பேப்பர், பேனாவோடுதான் சுற்றிக் கொண்டிருப்பார்  தான் பெட்டிஷன் எழுதித்தான்  ரோடு வந்தது, தண்ணி வந்தது, லைட்டு போட்டாங்க, மேல போற கரண்டு கம்பிய மாத்தினாங்க என்று ரீல் விடுவார், அவரோட திருவிளையாடலும் மத்தவங்களுக்கு சளச்சது இல்ல.

       ஒரு முறை அந்த ஏரியாவின் வார்டு கவுன்சிலர் தன் குடும்ப திருமணத்திற்கு ஊரையே அழைந்த்திருந்தார். பெட்டிஷன் பெரியசாமியும்  கல்யாணத்திற்கு பந்தாவாக போனார். அங்கு மாவட்ட செயலாளருடன் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலரிடம்  குறுக்கிட்டு  "அண்ணே! ஊர் முழுக்க அடிச்சு இருக்கிற போஸ்டர் எல்லாம் சூப்பர். வருங்கால மேயரே!” ன்னு  அடிச்சிருக்கிற போஸ்டர்ல உங்க போஸ் அட்டகாசமா இருக்குண்ணே!", என்று அப்பாவி போல்  சொல்லிவிட்டுப் போக, மாவட்டம் ஒரு மாதிரியாகப் பார்க்க, அடுத்த முறை சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோன்னு  துக்கத்தில் ஆழ்ந்தார் கவுன்சிலர். (இந்த கவுன்சிலர்தான் ஒரு முறை வீட்டுவரி ஏன் கட்டலைன்னு திட்டிட்டுப் போனவர். அதனோட விளைவுதான் இது)  அதிலிருந்து பெரியசாமியைப் பார்த்தாலே சுப்ரமணியசாமியப் பார்த்த அரசியல்வாதி மாதிரி ஓடுவார்.
   அந்த பிளாட்ஸ்ல   இருக்க நண்டு சிண்டுகள்  கூட கலகம் செய்யறதுல யாருக்கும் குறைஞ்சவங்க  இல்ல. நாரதர் கலகம் நன்மையில் முடியும். ஆனால்  இந்தக் கலகக் கண்மணிகளின் கலகம் நன்மையில் முடிந்ததாக சரித்தரம், பூகோளம், எகனாமிக்ஸ் எதுவும் இல்லை.

    கிரிக்கட் வோல்டு கப் பைனல்சம் சப்பென்று முடிஞ்சி போச்சு. பரவாயில்ல விடுங்க அடுத்த வாரம்  எங்க பகுதியில இருக்கிற நல சங்கத்தோட  ஆண்டு விழா நடக்கப் போகுது. அன்னைக்கு ஏடாகூடம் பிளாட்ஸ்ல இருந்து யாரும் வரக்கூடாதுன்னு, அந்த ஏரியா மக்கள் கோவில்ல விரதம் இருந்து வேண்டிக்கிட்டிருக்காங்க. ஆனா எங்க கலகக் கண்மணிகள் புதியதோர் கலகம் செய்வோம்னு அந்த கலகக் கோப்பை2015  பைனல்ஸ் நாளுக்காக காத்துக்கிட்டிருக்காங்க.. நேரம் இருந்தா வந்து பாருங்க. இந்த நாலு பேர்ல யாருக்கு கலகக் கோப்பை கொடுக்கலாம்னு நீங்கதான் சொல்லணும் .அதன் பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும் பரவாயில்லையா?
***************************************************************************

முந்தைய பதிவு 
நானொரு முட்டாளுங்க!


சனி, 21 ஜூலை, 2012

கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

     வணக்கம். இந்தியாவின்  தென்பகுதியான தமிழகத்தின்  வசிக்கும் சாதாரண  கிரிக்கெட் ரசிகர்களில் ஓருவனாகிய நான் எழுதும் மடல் .
   கிரிக்கெட்டில் வல்லமையோ புள்ளி விவரங்களில் புலமையோ இல்லாத என்னைப் போன்ற சராசரி ரசிகர்கள்கூட  சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி கண்டு வேதனை அடைந்தோம்.
    கபில்தேவை பொது மன்னிப்பு கேட்க வைப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களாமே! .மன்னிப்பு கேட்டால் ஒரு கோடி ரூபாய், பென்ஷன், மற்றும் இதர சலுகைகள் கிடைக்குமாம்.
     நன்றாக இருக்கிறது. கபில்தேவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, புறக்கணிப்பு, அவமதிப்பு  இவற்றிற்கு பி.சி.சி.ஐ அல்லவா அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்?.
     பொதுமன்னிப்பு கோரும் அளவிற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன?
     இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது அந்த மாவீரன்தானே? அவர் உலகக் கோப்பையை வென்று தந்த பிறகுதானே உலகின் கிரிக்கெட் வல்லரசாகத் நாம் திகழ முடிந்தது!.மற்ற நாடுகள் இந்திய கிரிக்கெட்டை எள்ளி நகையாடிய வேளையில் எதிர் பாராத வகையில் உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவத்தை பெற்றுத் தந்தது கபில்தேவ்தானே!

    ஆமை வேகத்தில் பந்து  வீசுபவர்களை பார்த்து பழக்கப்பட்ட நாம் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இப்படி நமக்கு கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்  இந்தியத் துணைக் கண்டத்தில் புயலாய் நுழைந்த வேகப் பந்து வீச்சாளரல்லவா அவர்? வேகமாக ஓடி வந்து அழகாக எகிறி குதித்து பந்து வீசி எதிரணியைத் திணறச் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நினைவில்லாமல் போனது?அவரது பந்து வீச்சு அசைவுக்கு மயங்காதவர்கள்  யாரேனும் உண்டா?
      இந்திய வேகப் பந்து வீச்சும் எதிரணியை மிரளச் செய்யும் என்பதை முதலில் உணர்த்தியவர் அவர்தானே? இன்று வரை அவருக்கு ஈடான வேகப் பந்து வீச்சாளரை உங்களால் உருவாக்க முடியவில்லையே!
      அப்போதெல்லாம் டெஸ்ட் பந்தயங்களில் நமது முன்னணி வீரர்கள்கூட 6ம், 4ம் அடிப்பது அரிதாக அல்லவா இருக்கும்? ஆறாவது விக்கட்டுக்கு மேல் களத்தில்  புயல் போல் நுழைந்து வான வேடிக்கை நிகழ்த்தி ஆறும் நான்கும் அடித்து ரசிகர்களை  பரவசப்படுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை  என்றாலும் கேள்விப் பட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா என்ன?
      இத்தனைக்கும்  மேலாக 1983 உலகக் கோப்பையில்  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலையில் சூறாவளி ஆட்டம் அடி  175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததை எந்த  கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியுமா? அந்த  ஆட்டம்தானே உலகக் கோப்பையை நம் வசமாக்க வாய்ப்பளித்தது.
   என்றாவது அவர் சுயநலமாக விளையாடி இருக்கிறாரா?சொந்த சாதனைக்காக அணியின் வெற்றியை விட்டுக் கொடுத்திருக்கிறாரா? ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிராறாரா? இருக்கிறவரை தூய்மையாகத்தானே இருந்திருக்கிறார் 
    சாதரண நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர்களும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று இளைஞர்களுக்கு  நம்பிக்கை ஏற்பட்டது இவர் வரவுக்குப் பின்தானே!
     ரிச்சர்ட் ஹார்ட்லி யின் சாதனை முறியடித்தது மட்டுமில்லாமல் 
434 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர்  என்ற சாதனையை நீண்ட  நாட்கள் தக்கவைத்துக் கொண்ட தன்னிகரற்ற ஆட்டக்காரரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா?
 என்றாவது அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்கிரீர்களா?
   நுனி நாக்கு ஆங்கிலம் பேசி போர்டு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு வாரியத்தின் ஏதேனும் ஒரு பதவியை பெறத்  தெரியாதவராக இருந்ததும்  அவர் செய்த குற்றமோ?
    அவரது ஒய்வுக்குப் பின் உங்களில் ஒருவருக்குக் கூட அவருடைய திறமையை இந்திய கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பயன்படுத்த தோன்றவில்லையா? என்ன விந்தை இது?

   கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் எந்த முயற்சியும் செய்யாத நிலையில் கிரிக்கட்டை வளர்க்கவும் புதிய திறமை மிக்க வீரர்களை அடையாளம் காணவும் ICL என்ற அமைப்பை உருவாக்கியதுதானே அவர் மீது நீங்கள் சுமத்தும் குற்றம்?
    பி.சி.சி.ஐ க்குப் போட்டியாக ICL வந்துவிடுமோ என்று எண்ணிதானே அப்போட்டிக்கு தடை விதித்தீர்கள்?.அதில் பங்கேற்றால் தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்காது   என்று வீரர்களை மிரட்டினீர்கள்.  ICL ஐ பார்த்துத்தானே IPL உருவானது?  விளையாட்டை  வியாபாரம் செய்து கோடிகளில் இன்று குளித்துக் கொண்டிருப்பதெல்லாம் அவரது எண்ணத்தின் விளைவுதானே!அந்த நன்றியை கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?
  
     இது நாள் அவரை ஓரம் கட்டிவிட்டு இன்று மன்னிப்பு கேளுங்கள் பணமும் சலுகைகளும் தருகிறோம் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறீர்களே? இது எதற்காக? உங்கள் வற்புறுத்தலால் அவர் மன்னிப்பு ஏதும் கேட்டுவிடக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

   உண்மையாகவே அவரது திறமையும் அனுபவமும் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை என்று நினைத்தால் நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி மன்னிப்பு கேட்க மனம்  இல்லை என்றால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் அந்த சாதனை வீரனை வரவேற்று உரிய மரியாதை அளியுங்கள். ரசிகர்களாகிய நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.

நன்றி !


இப்படிக்கு
              
******************************* 
இதையும் படியுங்க!