என்னை கவனிப்பவர்கள்

வவ்வால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வவ்வால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜனவரி, 2016

தயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே!


   இணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்கும். சிலர் சந்தர்ப்பம் வாய்க்கும்போது நண்பர்களை சந்திக்கிறார்கள். நெருங்கிய நட்பாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது  சில நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். இந்த ஆண்டின் துவக்கத்தில் வருத்தம் தந்த செய்தியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.'பார்வையில்' என்ற வலைப்பதிவு எழுதி வந்த ராஜநடராஜன் அவர்களின் மரண செய்திதான்அது . எதிர்பாராவிதமாக மாரடைப்பால் மரணம் அடைந்து மிகவும் வருத்தம் தந்த செய்தி. அவருடன் இணைய வழியில் கூட அதை அளவு தொடர்போ அறிமுகமோ இல்லாது போனாலும் நெருங்கிய ஒருவரை இழந்தார்ப் போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை.  .டிசம்பர் 30 அன்று கூட ஒருபதிவு எழுதி இருக்கிறார். அவரது மரணம் எதிர்பாராதது அது சமீபத்தில் டிசம்பரில் எனது பதிவு ஒன்றுக்கு கருத்திட்டிருந்தார். அவர் 2007 இல் இருந்து எழுதி வருகிறார் என்பது அவரது வலைப்பூ தொகுப்பை பார்த்தபோது தெரிய வந்தது. 

     சீனியர் பதிவரான அவரது மறைவு செய்தி நம்பள்கி ,வருண், போன்றவர் ஐயத்துடன் வெளியிட்டனர். பின்னர் ஜோதிஜி அவர்கள் உறுதிப்படுத்தினார். எனக்கும் அவருக்கும் அவ்வளவு தொடர்பில்லை. நாம் வலைப் பதிவு எழுத வந்த பின்  அதிக அளவு எழுத வில்லை என்பதால் அவர் வலைத தளம் செல்ல வாய்ப்பு இல்லாது போனது. வவ்வாலின் பதிவுகளில்  அவரது கருத்துரைகளை படித்திருக்கிறேன். ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவரைப் பற்றி விரிவாக எழுதி இருந்தார். 
     வருண்  ராஜ நடராஜன் பெரும்பாலும் எதிர் கருத்துடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். வருண் தனது உருக்கமான பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்தும் அவரும் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாகவே எழுதி இருக்கிறார். ராஜ நடராஜன்  ஜோதிஜிக்கு அறிமுகமானவராக  இருந்திருக்கிறார் . ஜோதிஜி ராஜாநடராஜனின்  வலை தளத்தில் அவரைப் பற்றி உருக்கமாக விவரித்திருக்கிறார். இந்த விஷயத்த்தில் ஒரு சிலர் மூலம் தகவலை உறுதிப் படுத்த்திக் கொள்ள முடிகிறது. அன்னாருடைய குடும்பத்தாருக்கு ஒரு பேரிழப்பு . ராஜ நடராசன் சிலருடனாவது நட்பு பாராட்டி இருப்பதால் அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்து  நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்தது. 
   ஆனால இணையத்தில் சிலர் நெடுநாட்களாக உலா  வந்தவர்கள் திடீரென்று வலைப்பக்கமே வராமல் இருப்பது கண்டு அவரது கருத்துக்கு ஒத்த கருத்து உடையவர்களும்  எதிர்கருத்து உடையவர்களும் அவர்களது  வலைப்பக்கம் அவ்வப்போது சென்று  பார்த்து வருகிறார்கள்

 இணையத்தில் எழுதிவரும் பலர் திடீரென்று பலமாதங்கள் இணையப் பக்கம் வராமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் நான் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று சொல்லி விட்டு செல்வார்கள்.  சிலர் முகநூல் டுவிட்டர் என்று வேறு தளங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்கள். இவர்களை பெரும்பாலும் கண்டுபிடித்துவிட முடியும். 

   ஆனால் சிலர்  வலைபதிவுகளில் சிலர்  தங்களது முகம் காட்ட விரும்புவதில்லை. தன் புகைப் படங்களை இணைப்பதில்லை.முகம் காட்டாமல் இருப்பதில் சில சௌகர்யங்கள் உண்டு . வயது தெரியாது. தங்கள் கருத்துக்களை சற்று சுதந்திரமாக கூறமுடியும். முகம் காட்டாமல் இருப்பது சுவாரசியம். அவர் எப்படி இருப்பார் என்பர் அறிகிற ஆவலை தூண்டும். எழுத்தாளர்கள் சிலர் தன் முகம் வெளிப்படமால் இருக்க விரும்புவது உண்டு. ஒருவருடைய எழுத்தை வைத்து அவருடைய வயதை கணிப்பது சற்று  கடினம்தான். இளைய வயது பதிவர்கள் சிலர் முதிர்ந்த எழுத்தை வெளிப்படுத்துகின்றனர். வயதான சிலரின் எழுத்துக்களோ சகிக்க இயலாத அளவுக்கும் இருக்கிறது.

  அதிக அறிமுகம்  இல்லாத பதிவராக இருந்தாலும் நீண்ட நாட்கள் ஒருவர் எழுதாமல் இருந்தால் இப்போது இவர்கள்  என்ன செய்கிறார்கள் ஏன் எழுதுவதில்லை என்று தோன்றுவதுண்டு. 
     ஒரு சிலர் திடீரென்று பதிவுலகில் காணாமல் போனால் யாருக்கும் தெரிவதில்லை . தேடுவதில்லை ஆனால் பதிவுலகில் தீவிரமாக இயங்கி, விவாதங்கள்,சர்ச்சைகள் பதிவுகள் என்ற  சுற்றிவந்த பதிவர் திடீரென்று பல நாட்கள் வலைப் பக்கம் வராவிட்டால் என்ன காரணத்தால் அவர் இணையப் பக்கம் வரவில்லை  உடல் நிலை சரியில்லையா. அல்லது வேறு ஏதேனும் காரணமா  என்று அறிய விரும்பினாலும் முடிவதில்லை.  
    அப்படிப் பலரும் தேடுகின்ற ஒரு பதிவர்  முகமூடிப் பதிவர்களில் ஒருவர்தான் வவ்வால். 'தலைகீழ் விகிதங்கள்' என்ற வலைப்பூவில் எழுதிவந்த வவ்வால் ஆகஸ்டு 2014 க்குப்   பின்னர் ஏதும் எழுதவில்லை. அனல் பறக்கும் பின்னூட்டங்கள், ஏராளமான தகவல்கள், விரிவான பதிவுகள் என்று வலையுலகை கலக்கி வந்த வவ்வால் என்ன ஆனார்  என்று இதுவரை தெரியவில்லை. இவரைக் கண்டால் பல பதிவர்களுக்கு அலர்ஜிதான். இவருக்கு ஈடு கொடுத்தவர்கள் வருண் மற்றும் ஜெயதேவ் என்று சொல்லலாம். எந்த பிரபலமாக இருந்தாலும் முகத்தில் அடித்தாற்போல் கருத்துக் கூறத் தயங்கமாட்டார். விவாதம் என்று வந்து விட்டால் கடைசி வரை விடமாட்டார். விவாதத்தில் கடைசி கருத்து இவருடையதாகத்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதக்காரர். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நுழைந்து ஒரு அலசு அலசி விடுவார். வலைப்பதிவுகளை சுவாரசியமாக்கியது அவரது பின்னூட்டங்கள்.
இவரைப் பற்றி அமுதவன் அவர்களும் ஒரு பதிவு எழுதி இருந்தார் இன்று வரை அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
       
         இதற்கு முன்னர்2009 இல் இன் பிற்பகுதியில் பதிவு எழுதிய நிறுத்திய இவர் 2012 இல் மீண்டும் பிற்பகுதியில்தான் மீண்டும் எழுதினர். இப்படி இடை வெளி விடுவது அவரது வழக்கம்தான். இம்முறையும் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. பலர் அவர் பக்கத்தை  பார்வையிட்டு ஏதேனும் எழுதி இருக்கிறாரா என்று பார்த்து வருகின்றனர். இப்படி   எப்போது வருவார் என்று பலரையும் எதிர்பார்க்க வைத்திருப்பது அவரது வெற்றி என்று கொள்ளலாம்.வருணும் ஜெயதேவும் விவாதத்திற்கு தகுந்த ஆள் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

     வவ்வால் தனக்கு நெருங்கிய நண்பராக யாரையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவரது எழுத்துக்களை வைத்து பார்க்கும்போது  அவரது இயல்பை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது. அவரிடம் நெருங்கிப் பழக எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். சுவாரசியத்துக்கு முகமூடி அணிவது தவறில்லை. முகமூடிக்குள் மறைந்திருப்பது யார் என்று கடைசி வரை ஒருவருக்கும் தெரியாமல் போவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரிருவருக்காவது தகவல் தெரிந்தால்தான் அவரது நிலையினை மற்றவர்க்கு சொல்ல முடியும். மற்றவர்கள் விடுத்த வேண்டுகோளைப் போல வவ்வால் மீண்டும் வந்து பதிவுகளும் கருத்தும் இடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
   பதிவர்களே! நீங்கள் எழுதி வருவதை உங்கள் குடும்பத்தார்க்கு தெரிவியுங்கள்.(வீட்டம்மா திட்டத்தான் செய்வாங்க அதெல்லாம் கண்டுக்கப்படாது)  ஒரு சில நண்பர்களுடனாவது  நேரில் முடியாவிட்டாலும் தொலைபேசியிலாவது   தொடர்பாவது கொள்வது நல்லது. ஏதேனும் உதவி தேவைபட்டாலும் கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். ஓரிரு வலையுலக நட்புக்கேனும் தன்னைப் பற்றிய குறைந்தபட்ச விவரங்களை பரிமாறிக் கொள்வதில் தவறு ஏதுமில்லையே! 
           மதுரைத் தமிழன், ஜெயதேவதாஸ்  வருண் போன்றவர்களும் தங்கள் முகம் மறைத்துள்ளவர்களே. இவர்களின் மதுரைத் தமிழன் முகம் காட்டாதபோதும் (நாங்க பாத்துட்டம் இல்ல)  பல நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். வருண், ஜெயதேவ்தாசும் முகம் காட்டியதில்லை என நினைக்கிறேன். இப்படி பலர் இருகிறார்கள். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் . உங்கள்  முகத்தை காட்டாவிட்டாலும் உங்கள் முகத்தைப் பார்த்த ஒரு நண்பரின் முகத்தையாவது அறிமுகப் படுத்துங்கள் 
இதெல்லாம் உனக்கெதுக்கு வேலையப் பாத்துட்டு போவியா! என்று கேட்கலாம்.
என்ன செய்வது? ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில்  பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!

*************************************************************