பெட்டிக்கடை 7
குட்டியா ஈசியா ஒரு புதிர் போடுவோமா ?
புதிர் வேண்டாம்னு நினைத்தால் அடுத்ததற்கு தாவலாம்
பள்ளி வயசுல இருக்கிற உங்க தம்பி தங்கை, பிள்ளைகள் கிட்ட இந்த கேள்விய கேளுங்க . பெருக்கினாலும் கூட்டினாலும் ஒரே விடை .ரெண்டு எண்களை கண்டு பிடிக்க முடியுமா? .
உடனே அவங்க சொலுவாங்க இது என்ன ஜுஜுபி . 2 + 2= 4 2 x 2 =4ன்னு சொல்வாங்க
உடனே நீங்க சொல்லணும் ரெண்டும் ஒரே எண்ணா இருக்கக் கூடாதுன்னு ஒரு கண்டிஷன் போடுங்க. அப்படி இருந்தால் அந்த மாதிரி எத்தனை எண்கள் இருக்கும்
வேணும்னா ரெண்டு க்ளூ குடுங்க.
1.ரெண்டும் ஒரே எண்ணா இருக்க வேண்டிய அவசியம் இல்ல
2. ரெண்டு எண்களும் முழு எண்களாகத்தான் இருக்க வேண்டிய காட்டாயம் இல்ல.
நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களா? ஒரே ஒரு நிபந்தனை
இணையத்தில தேடி பதில் சொல்லக் கூடாது.
( விடை விரைவில்)
******************************************************************************************
தமிழ்மணம்
சமீப காலமாக தமிழ்மணம் திரட்டி புதிய பதிவுகளை இணைக்காதது குறித்து பலரும் எழுதி விட்டனர் . நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்மணம் பதிவுகளை இணைத்துள்ளது . திரட்டிகளால் பதிவர்களுக்கு நன்மையா அல்லது பதிவர்களால் திரட்டிகளுக்கு நன்மையா என்றால் இரண்டுக்கும் ஆம் என்று சொல்ல வேண்டும். இந்த மாதத்தில் இணைக்கப் பட்ட ஐந்து வலைப்பூக்களே தமிழ்மணத்தின் சேர்க்கை அனுமதிக்கு காத்திருக்கின்றன. முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவர் என்று ஒருபதிவரை தேர்ந்தெடுத்து அவரது பதிவுகளை ஒருவார காலத்திற்கு நட்சத்திரப் பதிவர் என்ற தலைப்பில் முகப்பிலேயே தொடர்ந்து தெரியும்படி அமைத்திருப்பார்கள். இப்போது நட்சத்திரப்பதிவர் பகுதி இடம் பெறுவதில்லை. 2012 இல் நானும் நட்சத்திரப் பதிவராக இருந்தேன். அப்போது பதிவு எழுதிய ஒரு வார காலத்தில் எனது வலைப்பூவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது என்பது உண்மை. அப்போது எழுதிய பதிவுகளில் ஒன்றான நான் கழுதை என்ற கவிதை நல்ல வரவேற்பைப் பெற்றது பதிவை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
தற்போது தமிழ் மணத்தில் தினமும் சராசரி பதிவுகளின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு 170 ஆக இருந்தது. பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதனை பலரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அல்லது தமிழ் மணத்தில் இணைப்பவர்கள் எண்ணிகை குறைந்திருக்க வேண்டும்.
நிறையப் பேர் நல்ல பதிவுகள் எழுத முன்வரவேண்டும் . வலைப்பூவில் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்க வேண்டும்.
****************************************************************************************
தெலுங்கானா
அரசியலில் மேலோட்டமான ஆர்வம் மட்டுமே உடையவன். இருந்தாலும் தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக பல போராட்டங்களை நடத்தி ஆந்திராவையே ஸ்தம்பிக்க வைத்து தெலுங்கானாவை உருவாக்கி விட்டார் சந்திர சேகர ராவ். தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தின் தேவைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது என் மரமண்டைக்கு இப்போதுதான் புரிந்தது. நீங்களும் என்னைப் போல்தானா? இந்த செய்தியப் பாருங்க
*******************************************************************
மனம் கவர்ந்த கவிதை
எத்தனையோ கதை கவிதை கட்டுரை படிக்கிறோம். ஆனால் அவற்றில் சில மனதில் பச்சென்று இடம் பிடித்துக் கொள்கிறது. அவை பெரும்பாலும் பெரும்பாலும் அந்தப் படைப்புகள் அனைத்தும் பிரபலங்கள் சொல்லியதாக இருக்கும்.
ஆனால் சமீபத்தில் மகிழ் நிறை என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களின் ஒரு கவிதை அத்தகைய உணர்வை ஏற்படுத்தியது. மூன்றே பத்திகளில் கவிதை முடிந்து போனாலும் நம்பிக்கையைத் தூவி மெஸ்மரைஸ் செய்து போனது, அந்தக் கவிதையில் வரும் வீழ்ந்தவனின் புன்னகை வீழ்த்தியவனை நிலைகுலைக்கும் . என்ற வரிகள் பல்வேறு எண்ண உணர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வரிகள் ஒரு பேரறிஞனின் பொன்மொழிபோல அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரி
முழுக் கவிதை கீழே !
வாழ்க்கையோடு ஒரு உடன்படிக்கை!
இரவின் இருள்நிறக்கோப்பையில்
இசை நிரப்பி
இசை நிரப்பி
புத்தகம் நுகர்ந்து, போதையில்
தலை சுற்ற
எத்தனை துயரும், வலியும்
எதிர்க்கொள்வேன்
வாழ்க்கையே வா விளையாடிப்பார்க்கலாம் !!
உன் விஷமங்கள் எல்லாம்
ஒரு மந்திரச்சொடுக்கில் மாற்றிவிடும்
வித்தை அறிந்தவள் நான்
கரைபொருளாகவும், கரைப்பானாகவும்
ஒரு மந்திரச்சொடுக்கில் மாற்றிவிடும்
வித்தை அறிந்தவள் நான்
கரைபொருளாகவும், கரைப்பானாகவும்
கண்கட்டு வித்தை காட்டும் இசைக்கு
காது கொடுத்துப்பார்
இறந்திறந்து மீளும் வழியறிவாய்
என்னை போலவே!!
வீழ்ந்தவனின் புன்னகை
வீழ்ந்தவனின் புன்னகை
வீழ்த்தியவனை நிலைகுலைக்கும் -என்ற
புத்தியை புத்தகச்சங்கு
புகட்டியிருக்கிறது எனக்கு
நான் நீட்டிய நட்புக்கரத்தை
தவறாது பற்றிக்கொள் வாழ்க்கையை
புத்தியை புத்தகச்சங்கு
புகட்டியிருக்கிறது எனக்கு
நான் நீட்டிய நட்புக்கரத்தை
தவறாது பற்றிக்கொள் வாழ்க்கையை
நட்புக்கு பரிசாய் தருகிறேன்
இசை சரிகை சுற்றிய இனிப்பு புத்தகம் ஒன்று!!
நன்றி: மைதிலி கஸ்தூரி ரங்கன்
*****************************************************************************
இவரா பார்வையற்றவர்?
தினந்தோறும் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. விதம் விதமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை அது தந்திருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் யாரோ பைபிள் வாசங்களை கதைகளை வாசிக்கும் குரல் கேட்டது. ஏற்ற இறக்கத்துடன் படித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவ்வழியே செல்லும் அனைவரும் ஒரு வினாடியாவது அவரை நோக்கி பார்வையை செலுத்தி விட்டு சென்றனர். அப்படிப் பார்க்கும்போதுதான் தெரிந்தது அவர் பார்வை அற்றவர் என்று. ப்ரெயில் முறையில் புத்தகத்தில் உள்ளதை அவர் வேகமாக வாசித்தது ஆச்சர்யத்தை அளித்தது. ப்ரெயில் புள்ளிகளை தடவி உணர்ந்து அவர் சரளமாக வாசித்த விதம் நம்மை வெட்கப் பட வைத்தது. உண்மையில் மாற்றுத் திறனாளி என்பதை நிரூபித்து விட்டார் அவர் .
அரசாங்கம் இவர்களுக்கு ஏற்ற வேலை கொடுக்கலாம். நிச்சயமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக இவர்களால் செய்ய முடியும்.
**************************************
சித்ராவின் கோபம்
ஐபிஎல் போலவே இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது. எப்போதாவதுதான் பார்ப்பது உண்டு.
சில நாட்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய ஜெஸ்ஸிகா என்ற பெண் தமிழ் தெரியாது என்று சொல்ல நடுவராக இருந்த சித்ரா அவளைப் பார்த்து கேட்டார் உன் தாய் மொழி என்ன என்று. தமிழ் என்று சொன்னதும் சித்ரா,"தாய்மொழி பேச தெரியாதுன்னு சொல்றது அசிங்கமா இல்லையா என்று கோபத்துடன் கேட்டார். எப்போதும் மென்மையாக பேசும் சித்ரா எதிர்பாரா விதமாக சற்று கோபமாக பேசியது ஆச்சர்யமாக இருந்து. யாரும் சித்ரா அப்படிக் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. வெளியில் நண்பர்களுடன் மற்றவர்களுடன் எந்த மொழியில் பேசினாலும் வீட்டில் தாய்மொழி பேசக் கூடாதா என்று நறுக்கென்று கேட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பதில் சொல்ல முடியாமல் பரிதாபமாக விழித்தாள் அந்த சிறுமி. சிறுமியின் பெற்றோர் உண்மையில் வெட்கப்பட வேண்டும் . ஜெசிகாவை கண்டிப்பதற்கு பதிலாக பெற்றோரை அழைத்து கண்டித்திருக்கலாம்.
தமிழ் பேசத் தெரியாதவர்களை தேர்ந்தெடுப்பதை விஜய் டிவி தவிர்க்க வேண்டும்
***************************************************************************************
நினைவிற்கு: இது எனது வழக்கமான பெட்டிக்கடைதான் தலைப்பில் பெட்டிக்கடையை சேர்க்காமல் வெளியிட்டுவிட்டேன். சரி செய்வதற்குள் கரண்ட் போய் விட்டது. காலையில்தான் திருத்தம் செய்தேன்.
*************************************************************************************
முந்தைய பெட்டிகடை பதிவுகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்


