என்னை கவனிப்பவர்கள்

புதன், 15 மே, 2013

சாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து

    தமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது  சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். பொதுநலப் போர்வையில் சுய நல அரசியலுக்காக சாதீயை அணைக்க விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது சுய நல அரசியல்.  மறக்க விரும்பினாலும் அது முடியாது என்பதை  உரைத்துக் கொண்டிருக்கின்றன மரக்காணம் வன்முறைகள் 

  இந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் சமீபத்தில் படித்த கவிப் பேரரசு வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும்  மழை கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் தீ அணையட்டும் என்ற கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் கவிதைதான் சாதிக்கு எதிரான இறுதிக் கவிதையாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறி தொடங்குகிறார்.

இதோ அந்தக் கவிதை
சாதீ

                  தெற்கே வடக்கே  சாதிகள் மூட்டும்
                     தீயே பரவாதே -பழங்
                  கற்காலத்து பாம்பே எங்கள்
                     காலைச் சுற்றாதே

                  மண்பானைகளும் மண்பானைகளும்
                     மல்லுக்கு நிற்பதுவோ -இங்கே
                  கண்ணீர்த் துளிகளுள் கண்ணீர்த் துளிகளும்
                     கைகள் கலப்பதுவோ

                  முன்னூறாண்டை முன்னுக் கிழுக்குது
                      முரட்டு விஞ்ஞானம்-நாமோ
                  முன்னூறாண்டு பின்னே செல்வது
                      முழுக்க அஞ்ஞானம்

                  அந்நியரோடு சண்டை இட்டது
                     ஆறோ ஏழோதான்-சொந்த
                  மன்னவரோடுசண்டையிட்டது
                     மணலினும் அதிகம்தான்

                  செயற்கை மனிதன் செவ்வாயோடு
                      சிற்றில் ஆடுகையில் -இங்கே
                  இயற்கை மனிதர் சாதி சண்டையில்
                      இடுப்பு முறிவதுவோ

                  .நீண்ட நாள் முன் யாரோ விதைத்த
                      நெருப்பின் மிச்சத்தில்-மண்ணை 
                  ஆண்ட பரம்பரை இன்றுவரைக்கும் 
                      அழிந்து கருகுவதோ?

                   புதைந்த தமிழின் சங்கம் மூன்றை 
                      புதுக்க எண்ணாமல்-நம்மை 
                   புதைக்கும் சாதி சங்கத்துக்குள் 
                      புதைந்து போவீரோ?

                   வறுமை  ஏழ்மை பேதமைக் கெதிராய்
                       வாளை எடுக்காமல் -நாம் 
                   ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
                       உற்சவம் நடத்துவதோ?

                    புத்தகம் தந்து கல்விச் சாலை 
                       போகும் சிறுபிள்ளை-கையில் 
                    கத்திகள் தந்து சாதிக் களத்தில் 
                       கருகச் செய்வீரோ?

                    மனிதன் எனும் நிஜத்தை நீங்கள் 
                        மறந்து தொலைத்து விட்டு-சாதி 
                    சனியன்  என்னும் கற்பனைக்காக 
                         சமர்கள் புரிகுவதோ?

                    ஆயு தங்களை  கட்டும் கையால் 
                         அணைகள் கட்டுங்கள்-அந்த 
                    ஆயதங்களைஉருகி உருக்கி 
                         ஆலைகள் எழுப்புங்கள் 

                     சிலைகள் எடுக்கும் செலவில் நீங்கள் 
                         சிறகுகள் வாங்குங்கள்-வீணே 
                     தரையில் சிதறும் ரத்தம் போதும் 
                         தானம் புரியுங்கள் 

                     முன்னே வள்ளுவன் பின்னே பாரதி 
                         முழங்கினர் ஊருக்கு- அட 
                     இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால் 
                         இலக்கியம் ஏதுக்கு?


***********************************************************************************************************************

23 கருத்துகள்:

  1. இந்த கலவரம், ஒரு தனி மனிதர் தான் தன்னுடைய சாதியினரிடம் இழந்த நம்பிக்கையையும் செல்வாக்கையும் மீட்டெடுத்து அடுத்த தேர்தலில் இன்னமும் நல்ல பேரம் பேச வசதி ஏற்ப்படுத்த நினைத்ததன் விளைவு........ இதன் காரணமாக சிலர் தங்கள் உயிரையே இழக்க வேண்டிய கொடுமை. இதை என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  2. \\முன்னூறாண்டை முன்னுக் கிழுக்குது
    முரட்டு விஞ்ஞானம்-நாமோ
    முன்னூறாண்டு பின்னே செல்வது
    முழுக்க அஞ்ஞானம்\\

    இப்போ நாடு இருக்கும் நிலைமையில் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை இப்போ கிடைக்காதா என்று ஏங்குகிறது. ஆற்றில் சுவையான தண்ணீர், எங்கும் பசுமை, சிட்டுக்குருவிகள் போன்ற பல பறவைகள்........... ஆனால் இப்போ? மணல் கொள்ளை பசுமை பெயின்டில் மட்டும், அற்று மணல் கொள்ளை, அதற்க்கு பதில் ஊர் சாக்கடை சாயக் கழிவுகள் ஆற்றில் கலப்பு, சிட்டுக் குருவிகள் மற்றும் பல உயிரினங்கள் மாயம், செல்போன், தொலைகாட்சி அழுகாணி சீரியல்கள், அதன் வில்லிகள்........

    எனக்கு முன்னூறு வருடத்துக்கு முந்தய வாழ்வு இப்போ வேண்டும் எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  3. /// மனிதன் எனும் நிஜத்தை நீங்கள் மறந்து தொலைத்து விட்டு... ///

    இறுதிக் கவிதையாகவே இருக்க வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. தனது செல்வாக்கை உயர்த்த சாதியை பயன்படுத்தக் கூடாது

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா15 மே, 2013 அன்று 9:30 PM

    இந்தப் பதிவை இன்னும் படிக்கவில்லை. தனுஷ் பாட்டுப் பதிவில் “முகப்புத்தகம்” பற்றி கேட்டிருந்தேன். அடுத்தடுத்து பதிவுகள் வந்துவிட்டதால் அதை நீங்கள் கவணிக்கவில்லை என்றே நினைக்கிறேன். முகப் புத்தகம் எழுதிய ஆசிரியர் பெயர் சொன்னால் கூடப் போதும் எங்காவது தேடி வாங்கிவிடுவேன்.

    தொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்கள் கவிதை கடைசியில் கொஞ்சம் படித்தேன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா விட மாட்டீங்க போல இருக்கே. நீங்க கலாய்க்கறதுக்கு நான்தானா கிடைச்சேன். பரவாயில்லை. ஒரு 500 ரூபாய் T.N.MURALIDHARAN என்ற பேருக்கு D.D எடுத்து அனுப்பி வையுங்கள் முகநூல் ஒரு காப்பி அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா16 மே, 2013 அன்று 10:45 PM

      அய்யயோ அப்படின்னா அப்படி ஒரு புத்தகம் இல்லவே இல்லையா ? நான் கடைசியில் பல்ப் வாங்கிட்டனா ?

      நீக்கு
  7. ஒரு மரத்தை நட்டு, அது வளர்ந்து பயன் தர ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் பயணம் செய்ய ஏற்கெனவே போதுமான பேருந்துகள் இல்லை. சுயநல அரசியலுக்காக இவைகளை வெட்டவோ அழிக்கவோ ஐந்து நிமிடம்தான் ஆகிறது. அழிக்கும் திறமை பெற்ற, ஆக்கும் சக்தி இல்லாத சாதீக் கட்சிகள். நன்றாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.

    பதிலளிநீக்கு
  8. சுதந்திரம் பெற்று ஆண்டுகள் இத்துனைக் கடந்தும், சாரி வெறியில் இருந்து சுதந்திரம் பெற இயலவில்லை என்றால், இச்சுதந்திரத்தால் என்ன பயன்.
    சாதிகள் இல்லையடி பாப்பா
    என்று படித்தால் மட்டும் போதுமா?
    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த சாதி மனிதர்களைக் கண்டு

    பதிலளிநீக்கு
  9. ஜாதி மரத்தின் ஆணிவேரை
    அறுத்தெரியும் அருமையான கவிதை
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  10. இதுவே சாதி ஒழிப்பு பற்றிய இறுதிப் பதிவாக இருத்தல் வேண்டும் என்பது என் விருப்பம்.

    ஒரு நல்ல கவிதையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  11. படிக்க நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. கவிதை நல்லாதான் இருக்கு ஆனால் வைரமுத்து எழுதும் கதைகளில் குறிப்பிட்ட சாதியை தூக்கித்தான் எழுதுகிறார் என்பதை நான் படித்து இருக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா16 மே, 2013 அன்று 10:47 PM

      இதை எல்லாம் சொல்லிக்கிட்டா இருப்பாங்க, அதானே தமிழனின் கலாச்சாரம் மேடையில் ஜாதி ஒழி தின்னையில் ஜாதியை அனை.

      பல்ராம் நாயுடு

      நீக்கு
  13. கவிதை காலத்திற்கேற்றதுதான்... ஆனால் நாஞ்சில் மனோ அவர்கள் சொல்வது போல் தன் வீட்டிலேயே சமூக மாற்றத்தை கொண்டுவரவில்லையோ எனத் தோன்றுகிறது...அவரின் மகன் ஒரு நிகழ்ச்சியில் சாதிக்குள்ளான திருமணங்கள், வரவேற்கத்தகுந்தது அப்போதுதான் பிரச்சனைகள் இருக்காது என்ற ரீதியிலான பதிலைக் கூறினார்.... எல்லோருக்கும் தனிக்கருத்து உண்டென்றாலும் பெரும்பாலும் பெரியவர்களின் நடத்தையே(rolemodel) சிறியவர்களின் மன மாற்றத்திற்கு காரணமாகிறது....

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான கவிதை பகிர்வுக்கு நன்றி! மனங்கள் மாறுகின்ற வரையில் இந்த மோதல்கள் குறைய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா16 மே, 2013 அன்று 10:46 PM

      சார், நீங்க இந்தக் கவிதையை நல்லா புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.

      நீக்கு
  15. சாதிப்பித்தலாட்டம் அனைத்தும் பதவி படுத்தும் பாடு!

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  17. இதே வைரமுத்து தன மகனின் காதலுக்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது உலகறிந்த விஷயம்.

    பதிலளிநீக்கு
  18. அன்பு நண்பர் முரளி அவர்களுக்கு வணக்கம். நாளை திருநெல்வேலியில் “அம்பேத்கர்-பாரதி பிறந்த நாள் கருத்தரங்கம்” ஒன்றில், “சாதிகள் இருக்குதடி பாப்பா” எனும் தலைப்பில் பேசுவதற்காக இணையத்தில் தேடியபோது உங்களின் இந்தப் பதிவு கிடைத்தது. என் பதிவுகள் சிலவும் வந்தன! வைரமுத்துவின் கவிதையை நகல் எடுத்துக் கொண்டேன். உங்களுக்கும் நன்றி. நம் பதிவுகள் ஆவணங்களாகி வருகின்றன. (நான் இன்னும் கொஞ்சம் கவனமாக எழுதடா நிலவா என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்)

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895