என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 மே, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா?


நம்புங்க! அரசு பள்ளிதான்
  வரும்கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு அறிவித்துள்ளது  குறைந்தது 20 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி தொடங்க அனுமதிக்கலாம் என்ற செய்தி  அனைவரும் அறிந்ததே! 

   ஏற்கனவே பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கிலம்  மூன்றாம் வகுப்பில்தான் கற்றுத் தரப்பட்டது. பின்னர் ஜெயலலிதா தான் அரசு பள்ளிகளில் முதல்  வகுப்பில் இருந்தே கற்பிக்கப் படவேண்டும் என்று மாற்றி அமைத்தார் . இதற்கு ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது 

  தற்போது ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்களிடையே வரவேற்பு இருக்குமா?  பொது மக்கள்  இதை வரவேற்கிறார்களா? அரசியல்வாதிகளின் நிலை என்ன?  இன்று இவை விவாதப் பொருளாக மாறி இருக்கின்றது.
   கடந்த ஆண்டே தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் ஆங்கில வழி பரிட்சார்த்தமாக கொண்டு வரப்பட்டது.அதன் விரிவாக்கமாக இன்று எல்லா அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி தொடங்கப் பட இருக்கிறது
.
  உண்மையில் இது திடீரென்று முதல் அமைச்சர் எடுத்த முடிவு அல்ல என்றே நினைக்கறேன். காரணம் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக  செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை. அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் படைப்பாற்றல் கல்விமுறை மிகச் சிறப்பானது இந்த முறை எந்த பெரிய புகழ்பெற்ற பள்ளிகளிலும் பின்பற்றப் படுவதில்லை. பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை  கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள்.
   இதற்குமுக்கிய காரணம் மக்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதுதான்,  என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.  ஆங்கில வழியில் படித்தால்தான் எதிர்காலத்திற்கு நல்லது என்று பெரும்பாலோர் நினைப்பது கண்கூடு. தமிழ் வழியில் படித்த முந்தைய தலைமுறையினர் தன் பிள்ளைகளை எவ்வளவு செலவானாலும் ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்க வைக்கவேண்டும். வசதி வாய்ப்பு அற்றவர்களும், படிப்பு வராத மாணவர்களும்தான் அரசுப் பள்ளிகளில்தான் படிப்பார்கள். அவர்களுக்காகத்தான் அந்தப் பள்ளிகள். நாம் அப்போது வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. நம் அரசு பள்ளியில் சேர்ப்பது கௌரவத்திற்கு இழுக்கானது  போன்ற எண்ணங்கள்  பல பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.

. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு முன்னோட்டமாக தேர்ந்தெடுக்கப் பட்ட சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் முதல் வகுப்பில் ஆங்கில வழியில்  சேர்க்கப் பட்டனர். தமிழ்வழிக் கல்வி இருந்தும் பெற்றோர்கள் ஆங்கில வழியையே தேர்ந்தெடுத்தனர். ஒருவர் கூட தமிழ் வழியில் சேராத பள்ளிகளும்  உண்டு. சென்னையில் இப்படி சில மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.

   இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு அனுமதித்திருக்கக் கூடும். சாதரணமாக 1:40(அதாவது ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள்) என்பது அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமாகும். ஆனால் இப்போது 1:20 அளவுக்கு குறைந்து விட்டது. இதனால் பல பள்ளிகளில் (அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உட்பட) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வர, மாணவர் எண்ணிக்கையோ குறைந்து வர ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை மிக தனியார் பள்ளிகளில் அவர்கள் செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதுவும் நகர்ப்புறத்தை  ஒட்டியுள்ள பகுதிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கடந்த ஆண்டு கணிசமான அளவுக்கு உபரி ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு  கட்டாய மாறுதல் செய்யப்பட்டனர். அங்காவது  மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எவ்வளவு குறைவாக மாணவர்கள் இருந்தாலும் ஒராசிரியர் பள்ளிகள் கூடாது என்ற விதியின் படி இரண்டு ஆசிரியர்கள்  அப்பள்ளிகளில் பணி புரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை 40 க்கும் குறைவாகவே இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆசிரியர் ஒய்வு பெற்று விட்டால் அப்பணியிடம் நீக்கப்பட்டுவிடும்

   தொடக்கக் கல்வியைப் பொருத்தவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட இப்போது உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக குறைந்து வருவதால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் காரணமாகவே ஆங்கில மீடியம் தொடங்கப் பட்டால் மாணவர் எண்ணிக்கை கூடும். உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும்.  ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியத் தொகை  வீணாகாமல் இருக்கும். உபரி ஆசிரியர்கள் என்பதால் இவர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியாது. பணிப்பாதுகாப்பு  அளிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவது உபரி  ஆசிரியர்கள்தான். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா என்பது இந்த ஆண்டு சேரும் மாணவர் எண்ணிக்கையை  பொறுத்தே  அமையும். லட்சங்கள் கொடுத்து நகர்ப்புறங்களுக்கு மாறுதல் பெரும் ஆசிரியர்கள் எப்போது வேறு ஒன்றியத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ தூக்கி அடிக்கப் படுவோமா என்ற அச்சத்துடன் உள்ளனர்  
  அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்து விட முடியும். ஆனால் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் இதுபோன்ற மாறுததல்களுக்கு அதிக வாய்ப்பில்லை. பணிப்பாதுகாப்பு இருப்பதால் ஒய்வு பெறும் வரை உபரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
   ஆங்கில வழிக் கல்வியால் அதிக மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தனியார் பள்ளிகளைப் போல பல்வேறு விளம்பரங்கள் மூலம் அரசு பள்ளிகள் மாணவர் பிடிக்கும் வேலையில் இறங்கி வருகிறது. மாணவர் இன்றி  சில பள்ளிகள் மூடும் நிலைக்குக் கூட  தள்ளப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி ஓரளவிற்காவது அப் பள்ளிகளை மீட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆசிரியர்களும் தங்கள் பணி இடத்தை  தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

  ஆனால் ஆங்கில வழிக் கல்வி நிதி உதவி பள்ளிகளில் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி  அளித்தால் ஏராளமான உபரி  ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். ஆனால் இப்பள்ளிளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அரசு பள்ளிகளில்சேரும் மாணவர்களை இவர்கள் கவர்ந்து இழுத்து விடுவார்கள் என்ற கருத்தும் உண்டு.

   அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப் படுத்துவதால் காலப் போக்கில் தமிழ் வழிக் கல்வி முறையே இருக்காது. இது அரசே தமிழை அழிக்கும் செயலாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்று கருணாநிதி வைகோ உட்பட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
     இதற்கு எதிரான கருத்தைக் கூறுவோர் அரசுபள்ளிகளில்  ஆங்கில வழியை எதிர்ப்பவர்கள் ஒருவர்கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. தாய்மொழி மூலமே சிறந்த கற்றல் திறனை பெறமுடியும் என்பவர்கள் முதலில் அதற்கு முன் உதாரணமாக விளங்கட்டும் பின்னர் ஆங்கில வழியை எதிர்க்கட்டும். தன் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கவேண்டும் ஏழை மக்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி என்பது எவ்விதத்தில் நியாயம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி என்ற பெயரில் அவர்கள்  முன்னேற்றத்தை தடை செய்வது சரியா என்று கேட்கின்றனர்.

  பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +2 ஆங்கில வழி படிப்பவர் நிறையபேர் உண்டு. ஏன் ஆங்கில வழியில் சேர்ந்தோம் என்று எண்ணி வருந்தக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில வழி கடினமாக இருக்கும் . அவர்களால் +2  வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிகிறது. முதலில் இருந்தே ஆங்கிலத்தில் படித்தால் இந்த கஷ்டங்கள் இருக்காது என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள்.தாய்மொழி வழியாக பெறக்கூடிய கல்வியே சிறந்தது. என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மகாத்மா காந்திகூட தாய்மொழி வழிக் கல்வியையே ஆதரித்தார். அது உண்மைதான் என்றாலும் உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டி இருக்கிறது. ஆங்கில வழியில் படித்தவர்களே வேலை வாய்ப்பை அதிக அளவில் பெற முடிகிறது என்று நம்பப்படுவதும் ஆங்கில வழியைவிரும்புவதகு ஒரு காரணமாக அமைகிறது 
  ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு அதற்கு மேல் பணம்கட்ட வழியின்றியோ அல்லது சரியாக படிக்காத காரணத்தாலோ தமிழ் வழியில் சேருபவர்கள், தமிழும் வராமல் ஆங்கிலமும் வராமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது
 
  பட்டப் படிப்பு வரை கூட ஆங்கிலத்தில் படித்து விட்டாலும் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதவர் பலர் உள்ளனர். வீட்டில் ஆங்கிலத்தை  பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில்  சரளமாக உரையாட முடிகிறது.

  இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வி எந்த விளைவுகளை ஏற்படுத்தும், இடைநிலை ஆசிரியர்களால் ஆங்கில வழியில் கற்பிக்க முடியமா?  ஆங்கில வழியிக் கல்வியின் மூலம்தான்  தரமான   கல்வியை அளிக்க முடியுமா? அது உண்மையிலேயே சிறந்ததுதானா? தாய்மொழிக் கல்வியை மக்கள் ஏன் விரும்புவதில்லை? இவற்றை இன்னும் கொஞ்சம் ஆராய்வோம்.  இதனால்  சமுதாயத்தில் ஏற்பட இருக்கிற சிக்கல்கள் - இடர்பாடுகள் என்ன? இவற்றை இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும் ) 
*****************************************************************************************

42 கருத்துகள்:

  1. குழந்தைகளை விட ஆசிரியர்கள் நிலை தான் கவலைக்குரியது...

    பதிலளிநீக்கு
  2. \\பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள்.\\ எந்த ஒரு பொருளையும் காசு குடுத்து வாங்கினாத்தான் அதனுடைய அருமை புரியும், ஃ பிரீயா வந்தா அதை துச்சமாகத்தான் பார்ப்போம், இது மனித இயல்பு, கல்வியும் இதற்க்கு விதி விலக்கல்ல. மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீட்டில் [ஏழைக் குடும்பமாக இருப்பதால்], பள்ளி முடிந்த வுடன் மற்ற வேலைகள் எக்கச் சக்கமாக செய்ய வேண்டியிருக்கும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக திறமை வாய்ந்த ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்தாலும் அவர்களுடைய அக்கறையை முழுமையாக காட்டாத காரணத்தினாலும், அல்லது அவர் 100% செயல்பட்டாலும் அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் கவனமின்மையினாலும் அரசுப் பள்ளிகள் உருப்படாமல் போய்க் கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளியில் எல்லாம் தலைகீழ். எல்லோருக்கும் அக்கறை, பெற்றோர் கொட்டும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல, சராசரி ஆசிரியர்கள், சராசரி மாணவர்கள் ஆனால் அக்கறை எள்ளபுரமும் இருப்பதால் உருப்படுகிரார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பார்வையும் சரியே. இன்னும் சில கருத்துக்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்

      நீக்கு
  3. \\நம் அரசு பள்ளியில் சேர்ப்பது இழுக்கானது கௌரவத்திற்கு போன்ற எண்ணங்கள் பல பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.\\ அரசுப் பள்ளிகளின் தரம் ஒரு புறம் அதல பாதலத்திர்க்குச் சென்று விட்டது ஒருபுறம், இன்னொரு புறம் அரசுப் பள்ளியில் படித்து தனியார் பள்ளிகளின் மாணவர்களுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
  4. \\ தற்போது ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது இதற்கு ஆசிரியர்களிடையே வரவேற்பு இருக்குமா? \\ அரசு ஆசிரியர்களின் குழந்தைகளில் எத்தனை சதவிகிதம் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்? இதற்க்கனா விடையைக் கண்டுபிடித்தாலே போதும் அரசுப் பள்ளிகளின் லட்சணம் விளங்கும். ஆங்கிலப் பள்ளிகள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளுக்கப்புறம் அரசுப் பள்ளிகளுக்கு ஆங்கிலம் வந்துள்ளது, இதை ஏதோ கொலைக் குற்றமாகப் பார்ப்பது, தனியார் பள்ளிகளும் அதில் படிப்போரும் மட்டும் உருப்பட வேண்டும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை தொடக் கூடாது அதற்க்கு அவர்கள் அருகதை அற்றவர்கள் என்ற மனப் போக்கையே கட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் தேவைப்படும் நேரத்தில், பயனுள்ள கட்டுரையினை அளித்துள்ளீர்கள் அய்யா. எனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிட விரும்புகின்றேன் அய்யா. ஒரு மொழி என்பது எப்பொழுது வளரும் என்றால், அம்மொழியினைப் படித்ததனால், அவர்களின் வாழ்வு வளம்பெற வேண்டும் அய்யா. அப்பொழுதுதான் அம்மொழியினை அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். கீழ் நிலைகளில் தமிழ் மொழியை வைத்து விட்டு, மேல் நிலைகளில், பொறியியலில், மருத்துவ இயலில் மற்று துறைகளில் ஆங்கிலத்தை மட்டும் பயிற்று மொழியாக வைத்தால் தமிழ் எப்படி வளரும், மாணவர்கள் எப்படி விரும்பிப் படிப்பார்கள்.
    +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மேல் படிப்பினைத் தொடரும் ஆங்கில வழி மாணவர்கள் பலர், தங்களது கல்விச் சுமை தாளாமல் தற்கொலைச் செய்து கொண்டார்கள் என்பதை அவ்வப்பொழுது நாளிதழ்களில் படிக்கின்றோமே அய்யா. ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களாலேயே, மேற்படிப்பிற்று ஈடு கொடுக்க இயலாத நிலை என்றால், தமிழ் வழி படித்தவர்கள் அப்படிப்புகளை நினைத்துக் கூட பார்க்க இயலாது என்பது தான் உண்மை.
    பொறியியல் துறைக்கான நுழைவுத் தேர்வை நீக்கியதே, கிராமப் புற மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவு ஏற்படுகின்றது என்பதற்காகத்தானே. எதனால் அண்ணா கிராமப் புற மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவு ஏற்பட்டது. தமிழ் வழி படித்ததனால், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருந்ததனால் தானே?
    கரந்த்த் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் உமாமகேசுவரனால் விரும்பிய கல்வி முறை என்னவென்றால், தமிழைப் படித்தவர்கள், வேலை வாய்ப்பிற்காக தமிழை நம்பி இருக்கக் கூடாது, எனவே கல்விபயிலும் காலத்திலேயே அவர்கள், தொழில் ஒன்றினையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். படிப்பதற்குத் தமிழ், வாழ்க்கை வாழ்வதற்கு ஓர் தொழில். இதுதான் அவரது எண்ணமாக இருந்தது.
    மேல் நிலையில், தமிழ் வழி படித்தவர்களின் வேலை வாய்ப்பிற்கு , வேண்டிய வசதிகளை உருவாக்காமல், தமிழ் வழியில் தான் படிக்க வேண்டும் என விரும்புவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை அய்யா.
    தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் மொழியினைக் கற்க வேண்டியது அவசியம். ஆனால தமிழ் மட்டும்தான் கற்பேன் என்று கூறுவது அவ்வளவு சரியா என்று தோன்ற வில்லை அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே பொறியியல் மருத்துவம் என்று இலக்கு வைப்பதால்தான் இந்நிலை ஏற்படுகிறது.
      நீங்கள் அரசு உதவி பெரும் பள்ளியில் பணியாற்றுகிறீர்கள்.10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று உங்கள் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
      நல்ல கருத்துக்கள். இன்னும் விரிவாக பார்ப்போம்

      நீக்கு
  6. இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வி எந்த விளைவுகளை ஏற்படுத்தும், இடைநிலை ஆசிரியர்களால் ஆங்கில வழியில் கற்பிக்க முடியமா? ஆங்கில வழியிக் கல்வியின் மூலம்தான் தரமான கல்வியை அளிக்க முடியுமா? அது உண்மையிலேயே சிறந்ததுதானா? தாய்மொழிக் கல்வியை மக்கள் ஏன் விரும்புவதில்லை?
    இக்கேள்விகளே என்னிலும் எழுந்தன.. அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் . மாணவர்கள் ஆசிரியர்கள் நிலை என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விரைவில் இவற்றை விளக்கமாக பதிவிடுகிறேன்.

      நீக்கு
  7. தமிழ் நாட்டில் மின்சாரமில்லாத நல்லாட்சி நடந்துகொண்டு இருக்கு.. இப்போ அரசுப் பள்ளிகளிலும் தமிழை அகற்றி ஆங்கிலத்தை கொண்டுவந்து சாதனை படைக்கிறார் நம்ம "மதர்"..டாஸ்மாக் வியாபாரமும் அமோகமா நடந்துக்கொண்டு இருக்கு..

    டி என் பி என் சி கேள்வி/செலக்சன் முறைகளெல்லாம் பார்ப்பான் சோமாரி ராமசாமி அறிவுரையின் பேரில், உயர்தரத்துக்கு கொண்டு போகப்பட்டு சாதாரண குடும்பத்துக இருந்து வர்ரவன் எல்லாம் பாஸ்பண்ண முடியாத அளவுக்கு ஆகிக்கிட்டுப்போகுது.

    திராவிடனை திராவிடன் ஆண்டால் கேவலம.பார்ப்பனர்கள் ஆண்டால்த்தான் அது இருட்டாயிருந்தாலும் நல்லாட்சி னு நெனைக்கிறானுக எவ்ளோ காலமானாலும் திருந்தாத முட்டா திராவிடர்கள்?

    அது ஏன் மதர் ரெஸ்டாரண்ட் னு வைக்காமல் ஆத்தா உணவகம்னு பேரு வச்சுக்கிட்டு? இனிமேல்தான் எவனுக்குமே தமிழ் தெரியாதே?

    நான் என்னைக்குமே பார்ப்பனர்களை குறை சொல்லமாட்டேன். They are like parasites! Just like viruses do- they get into someones body and use the cells for their growth. Because they can not survive on their own- Brahmins belong to that category. They know how to use திராவிட முட்டாள்கள் to survive and rule them> It has been happening thousands of years. Even today, that's happening. Let me make it clear here.. Who worships parasitic brahmins?

    The dravida morons!

    Why blame the parasites??? Blame the one who worships them and invites them to rule them!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா30 மே, 2013 அன்று PM 7:46

    என்னைப் பொறுத்தவரை தரம் ஒன்று முதல் ஆங்கிலத்தில் கல்வி பயில்வது தமிழ்மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது என் எண்ணம்.இலங்கையில் பொதுவாக தரம்ஆறு முதலே ஆங்கில மொழிமூலமான கற்றல் கற்பித்தல் நடைபெறுகின்றது.இதுவே ஏற்றுக் கொள்ளத்தக்கது என் எண்ணமாகும்.ஆங்கிலத்தில் எம் திறனை வளர்த்துக்கொள்வதுடன் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்பது அத்தியாவசியமாகும்.பெரும்பாலான புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகள் வேற்றுமொழியில் கல்வி பயின்றாலும் பெற்றோரது முயற்சியால் நன்கு தமிழைப் பேசவும் எழுதவும் செய்வதுடன் கலாச்சாரத்தினை பேணிக்காக்கவும் செய்கின்றனர்.இங்குள்ள பெற்றோர் தமிழ்மொழி,கலாசாரம் தொடர்பில் எவ்வளவு அக்கறையுடையவர்கள் என்பது தான் பிரதான பிரச்சினை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @டினேஷ் சுந்தர்
      //என்னைப் பொறுத்தவரை தரம் ஒன்று முதல் ஆங்கிலத்தில் கல்வி பயில்வது தமிழ்மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது என் எண்ணம்//
      உண்மை.
      எனக்கு நல்லாக தெரிந்த வகையில் இலங்கையிலும் 6ம் வகுப்பு முதல் தமிழ் மொழி மொழிமூலமே கல்வி சிறப்பாக கற்பிக்கபடுகிறது. இதுவே ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நீங்க தவறுதலாக //இலங்கையில் பொதுவாக தரம்ஆறு முதலே ஆங்கில மொழிமூலமான கற்றல் கற்பித்தல் நடைபெறுகின்றது// என்று எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  9. அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியிலிருந்தே ஆங்கில வழி கல்வி வந்துவிட்டால் அரசு ஆசிரியர்களாவது தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வருவார்களா? அரசு பள்ளிகளில் படிப்பதை கௌரவ குறைச்சலாக அல்லவா நினைக்கறாங்க.

    நன்றாக அலசியுள்ளீர்கள். கடைசியாக வைத்துள்ள கேள்விகளுக்கான உங்கள் பார்வையை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் கருத்து ஏற்கும்படியாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  10. முதலில் ஒரு அடிப்படை உண்மையை எல்லோரும் உணர வேண்டும்.ஒரு குழந்தை தன் தாய்மொழியில் கற்கும்பொழுது தான் சிந்தனை வளமும்,பரந்த அறிவாற்றலும் பெற இயலும்.பிறமொழி எதுவாயினும் ,அதை ஒரு மொழி என்ற அடிப்படையில்,திறம்பட எழுதவும்,சரளமாக பேசவும் தொடக்கக்கல்வியில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.தற்பொழுது ஆங்கிலம் தவிர்க்கப்பட முடியாத மொழியாக இருப்பதால் ,அம்மொழியை சரளமாக எழுதவும் பேசவும் குழந்தைகளுக்கு தொடக்கக்கல்வியில் இருந்து கற்றுக்கொடுப்பது தான் முக்கியத் தீர்வாக இருக்க முடியும்.அறிவியல் ,கணிதம் ஆகிய பாடங்களில் வரும் முக்கிய சொற்களுக்கு இணையான ஆங்கிலச்சொற்களை அடைப்புக்குறியில் கொடுக்கலாம்.தற்பொழுது தமிழகபள்ளிகளில் சமச்சீர்க்கல்வி நடைமுறையில் இருப்பதால் தனியார்பள்ளி அரசுப்பள்ளி வேற்றுமை கிடையாது.எனவே தமிழக அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு, ஆங்கில மொழியை கீழ்நிலையிலிருந்து சிறப்பாகக் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தனியார் பள்ளிகள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் ஒரு தலைமுறையை உற்பத்தி செய்து தள்ளியிருக்கின்றன.அந்த வரிசையில் அரசுப்பள்ளிகளும் சேர வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே அரசியல். கல்வியின் நிலையும் இப்படி இருப்பது வருத்தமாய் உள்ளது

    பதிலளிநீக்கு
  12. கல்வித் தரம் ஒரு மொழியால் மேம்படவோ குறையவோ செய்யும் என்பதை ஏற்கமுடியவில்லை. முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பிள்ளைகளுக்குக் குறைந்தது இரண்டு விளையாட்டுக்களையும், இரண்டு இசைக்கருவிகளையும், நான்கு மொழிகளையும் கற்பிக்க வேண்டும் என்பேன். இசை, மொழிகள், கணிதம் இவை போதும் முதல் ஐந்து வகுப்புக்களுக்கு. ஐந்தாம் வகுப்பில் அறிவியல் தொடங்கலாம். அதற்குப் பிறகு இருக்கவே இருக்கிறது.

    ஆங்கில வழிக் கல்வியினால் தமிழ் கெடப்போவதில்லை. இப்படிச் சொல்லியே இந்தியை ஒழித்தார்கள் திராவிடக் குஞ்சுகள். அதனால் யாருக்கு நட்டம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண்களே கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் என்ற போக்கே தற்போது உள்ளது,

      நீக்கு
  13. சரியாச் சொன்னீங்க அப்பா ஸார்! தமிழ்வழிக் கல்வி இருக்கற பள்ளிகள்ல கூட ஆங்கிலத்தையும் தரோவா சொல்லித் தந்திருக்கணும், நம்மவர்கள் கத்துக்கிட்டிருக்கணும்கறது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாம் நன்றி கணேஷ் சார்

      நீக்கு
  14. மிக மிக சூப்பர் பதிவு...தெளிவான அழகான ஒரு கல்வித் துறை அதிகாரியால் எழுதப்பட்ட பதிவு

    பதிலளிநீக்கு
  15. விரிவாக சொல்லியிருக்கிறீர்கள் . முழுமையாக ஆங்கிலம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை .

    நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளும் , ஆராய்ச்சிகளும் குறைந்துவிட்டதா அல்ல போதிய வசதிகளும் , வாய்ப்புகளும் , ஊக்கமும் கொடுக்கப்படவில்லையா என்று தெரியவில்லை . அனைவரும் அடுத்தவர்களுக்கு சேவகம் செய்து பிழைப்பு நடத்தவே பழக்கப்பட்டிருக்கிறோம் இல்லை விரும்புகின்றோம் .அதற்கு ஆங்கிலம் அதி அவசியமாகிறது . இன்று ஒட்டு மொத்த இந்தியாவே நுகர்வோராக மாறிக்கொண்டிருக்கின்றது . நுகர்வோராக மட்டுமே இருக்கும் பட்சத்தில் , தமிழ் என்ன அனைத்து இந்திய மொழிகளும் வெகு விரைவில் அழிந்துவிடும் .

    face book ஐ ஒரு வெளிநாட்டவன் கண்டுபிடித்தால் அதை நாம் முகநூல் என்று மொழிமாற்றி சந்தோசப்பட்டுக்கொள்கிறோம் , மைக்ரோ சாப்டில் வேலை பார்ப்பவர்களில் முப்பது சதவீதம் இந்தியன் அதில் இருபது சதவீதம் தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அவ்வளவு தான் ..

    நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் ....? அடுத்தவனுக்கு பல்லக்கு தூக்குவதை தவிர ....?

    புதிய கண்டுபிடிப்புகளும் , ஆராய்ச்சிகளும் ,புதுப்பித்தலும் இல்லாத எந்த ஒரு நாடும் , மொழியும் , இனமும் நிச்சயமாக நிலைத்து நிற்க முடியாது . அதற்கு தாய்மொழி கல்வியே அவசியம் .உண்மையான வளர்ச்சி அவரவர் தாய்மொழியில் தான் சாத்தியப்படும் என்றே திடமாக எண்ணுகின்றேன் .

    ஆங்கிலத்தை ஒரு தகவல் தொடர்பு மொழியாக முறையாக சொல்லிக்கொடுத்தாலே போதும் . அதைவிடுத்து அனைத்தும் ஆங்கிலம் என்பது தாய்மொழிக்கு நாமே வெட்டிக்கொடுக்கும் சவக்குழி போலதான் எனக்கு தோன்றுகிறது .

    வாழ்வாதார மொழியாக . பொருளாதார மொழியாக தமிழ் வரவேண்டும் . புதிய கண்டுபிடிப்புகள் ,ஆராய்ச்சிகள் தமிழ் மொழியில் தொடங்கப்பட வேண்டும் ...!

    பதிலளிநீக்கு
  16. உங்கள் துறை சார்ந்த ஒரு செய்தியை சரியான கோணத்தில் பார்த்து அலசியுள்ளீர்கள்!மிக நன்று

    பதிலளிநீக்கு
  17. முதல்தரமான அலசல். ஜெயதேவதாஸ் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். இப்போதைய நிலையில் கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பவர்கள் எல்லோருமே தன்னுடைய குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கிறான் என்று சொல்லவே தயங்குகிறார்கள். சேர்ப்பதுமில்லை. பணம் எப்படியாவது சேர்த்து ஆங்கிலப் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும்.ஆங்கிலக் கல்விக்கு மாற்றலாமா??என்று யோசிக்கும் முன் மாற்றினால் மட்டும் என்ன நடக்கப் போகிறது.அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு திறமை வாய்ந்தவர்கள் என்பதே நிதர்சனம்.அப்படி இருக்க எதனால் அரசு பள்ளிகள் இன்று வரையில் தேர்ச்சி விகிதத்தில் பெரும்பாலும் பின் தங்கியே இருக்கிறது.அரசு பள்ளி மாணவர்கள் மீது அந்தப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்??
    அவர்களுக்கு, தனியார் பள்ளியைப் போல் 100% ரிசல்ட் தர வேண்டும் என்ற அழுத்தம் தரப் படவில்லை.அப்படித் தானே??ஒரு வேளை தரப் பட்டால் , அரசு பள்ளிகள் முன்னிலைக்கு வந்து ,அந்தப் பள்ளிகளை எல்லோரையும் திரும்பி பார்க்கச் செய்யும்.அப்படி நடந்தால், அரசு பள்ளிகளில் படிப்பது கேவலம் என்ற நிலை மாறும்.இந்த கேள்விக்கு விடை தெரியாமல், ஆங்கிலக் கல்வி அறிமுகப் படுத்தி ஒரு பயனும் இல்லை.அரசு பள்ளிகள் அப்படியே தான் இருக்கும், ஆங்கிலம் பள்ளியின் மூலையில் தூங்கிக் கொண்டிருக்கும்.தரமான ஆசிரியர்கள் இருந்தும், மாணவர்கள் தரமான கல்வி முறையில் உருவாக்கப் படவில்லை என்பது தான் உண்மையே தவிர, இலவசமாக கிடைப்பதால் ,அதன் பலன் தெரியவில்லை என்பது உண்மையல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திட்டமைக்கு நன்றி .
      வெளியில் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தோன்றும். அவர்களுக்கு கொடுக்கப் படும் அழுத்தம் பற்றி நீங்கள் அறிய வாய்ப்பில்லை.பலர் தேர்ச்சி சதவீதம் குறைந்ததன் காரணமாக மாற்றம் செய்திருகிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை குறைவாக எடை போடுவதும் தவறு. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் ஒப்பிடமுடியாது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கல்விப் பின்புலம் இல்லாதவர்கள்.பலர் கும்பத்தில் முதன் முறையாக 19, 12 ம் படிப்பவர்கள்.வீட்டில் அவர்களை யாரும் படிக்க சொல்ல மாட்டார்கள். ட்யுஷன் அனுப்ப மாட்டார்கள். ஏனென்றால் வறுமையுடனான அவர்கள் போராட்டமே அதற்கு காரணம்.
      அரசு பள்ளிகளில் மாணவர்கள் எந்தவித தேர்வு வைத்து சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. பெற்றோர்களின் கல்வியை ஆராய்வதில்லை. எந்த புகழ் பெற்ற தனியார் பள்ளியாவது எழுத்தறிவில்லாத பெற்றோர்களின் பிள்ளைகளை சேர்த்ததுண்டா.படித்தவர்களின் பிள்ளைகளில் சிலர் சரியாகப் படிக்காமல் போவதுண்டு,அவர்களை ஒன்பதாவது வரை தங்கள் பள்ளியில் பணத்துக்காக படிக்க அனுமதித்து விட்டு கொஞ்சம் கூட கருணை இன்றி பள்ளியை விட்டு அனுப்புவதுதான் தனியார் பள்ளிகளின் வழக்கம்.இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசு பள்ளிகள்தான் .
      எனக்குத் தெரிந்து எவ்வளவு புகழ் பெற்ற பள்ளியாக இருந்தாலும் எவ்வளவு நன்றாகப் படிப்பவனாக இருந்தாலும் வெளியில் ட்யுஷனும் படிப்பார்கள். பெற்றோகள் பள்ளியை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. என்பதே இதற்கு காரணம். நன்றாக யோசித்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் அப்படி ஒருவர் இருக்கலாம்.
      மதிப்பெண்கள் பெறுவதற்காக தனியார் பள்ளிகள் செய்த தில்லுமுல்லுகள் அம்பலமானதை படித்திருப்பீர்கள். கடந்த ஆண்டு திருவண்ணாமலை பள்ளி தகிடு தத்தம் செய்தது இவ்வாண்டு நாமக்கல் பள்ளி ஒன்று இதை செய்தது. அதிக மதிப்பெண்கள் வாங்கிக் குவிக்கும் தனியார் பள்ளிகளின் லட்சணம் இதுதான்
      அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களைப் போல பாவம் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை. மாணவர்களை அவர்களுடைய முன்னேற்றத்திற்காக க் கூட கண்டிக்க முடியாது.. ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் பெற்றோர்களை அழைத்து பல மணி நேரம் நிற்க வைத்து மிரட்டி அனுப்பும் தனியார் பள்ளிகள். எத்தனை நாள் வாழவில்லை என்றாலும் பெற்றோர்களை வரவழைக்க முடியாது.பிள்ளகளில் பெத்ரொரூ அடங்காதவர்கள்தான் அதிகம் அரசு பள்ளிகளில் .
      தனியார் பள்ளிகளால் தேற வைக்க முடியாது என்று கழித்து கட்டப் பட்டவர்களே அரசு பள்ளியில் எந்த வித நிபந்தனை இன்றியும் சேர்க்கப் படுகிறார்கள்.
      ஒரு அரசு பள்ளியில் +2 மாணவர்களை தத்து எடுத்துக் கொண்டு எந்த வித நிபந்தனை இன்றி அவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைத்தால் உண்மையில் அவர்கள் அளிப்பது தரமான கல்வி என்று சொல்லலாம்.
      தனியார் பள்ளியில் அளிக்கப் படுவது கோச்சிங்.அரசு பள்ளிகளில் அளிக்கபடுவது கல்வி .என்பதை பல வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.
      அஞ்சும் மூணும் அடுக்க இருந்தா அசதி கூட சமைப்பா? என்பது பழமொழி
      இதைத்தான் தனியார் பள்ளிகள் செய்து வருகின்றன.இதில் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டு சமைக்கும் பணியைத்தான் அரசு பள்ளிகள் செய்து வருகின்றன

      நீக்கு
  19. அருமையான அலசல். தெளிவான கருத்துகள். திருகரந்தை ஜெயகுமார் கூறி இருப்பதையும் ஆமோதிக்கிறேன். அரசியல்வாதிகளின் குழந்தைகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள், கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் போன்றவற்றிலேயே பயில்கிறார்கள். தமிழ் அவர்களுக்குப் பேச்சு மொழிதான். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை எளிய மக்களுக்குமே தமிழ்வழிக் கல்வி என்னும்போது அவர்கள் மேலும் முன்னேற வாய்ப்பில்லாமல் தான் போகும். இது குறித்து என் விரிவான கருத்தை மீண்டும் வந்து சொல்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. oru palli nalla peyar vanginal the credit goes to higher official..aanal oru palli sariyillai enral aasiriyargalai mattum kurai solvargal..nalla thalamai amainthal nichayam arasu palligalum sathanai padaikkum...niraiya alasa vendiya thalaipputhan..aanal nalla mudivu yyar kaiyil enbathuthan theriyavillai..

    பதிலளிநீக்கு
  21. பதிவிலும் பின்னூட்டங்களிலும் பல பலனுள்ள தகவல்களை முன் வைத்ததற்கு நன்றி. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை, மக்களின் மனப்பான்மை, தனியார் பள்ளிகளின் வணிக நோக்கம் என்று பிரச்சனையின் பல கோணங்களிலிருந்து விஷயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சில கேள்விகள்:

    1. ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழ் வழியில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும் ஆங்கில வழியில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்குமா? புதிதாக பயிற்சி எடுக்க வேண்டி வருமா? அல்லது கூடுதல் தயாரிப்பு மூலம் சமாளித்துக் கொள்ளலாமா?

    2. மாணவர்களின் கற்கும் திறன் ஆங்கில வழியில் கற்பிப்பதால் மேம்படும் என்று கருதுகிறீர்களா? அல்லது ஆங்கிலத்தை கண்டு மிரண்டு போகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமா?

    3. அப்பா, அம்மா படிக்காதவர்களாக அல்லது குறைந்த அளவு படித்தவர்களாக இருக்கும் மாணவர்களுக்கு வீட்டில் தகுந்த ஆதரவு இல்லாமல் ஆங்கில வழிக் கல்வியை சமாளிப்பதற்கு என்ன சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்?

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சிவகுமார். நல்ல கேள்விகளை எழுப்பி உள்ளீர்கள். நீங்கள் ஆசிரியராக இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.விரைவில் இவை தொடர்பான பதிவை இடுகிறேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  22. நாம் தாய் மொழியின் மீது நமக்கிருக்கும் அளவுக்கு மீறிய பற்று பலருடைய பின்னூட்டங்களில் தெரிகிறது. இது தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. தமிழ் ஒரு மொழி அவ்வளவுதான். ஆங்கிலமும் ஒரு மொழி. இந்த இரண்டையும் நமக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு மொழியால் நம்முடைய வாழ்க்கைத்தரம் உயரும் என்றால் அதை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. இதற்குபோய் ஏன் உணர்ச்சிவசப்பட்டு தமிழ், தமிழ் என்று கோஷமிடவேண்டும் என்றே எனக்கு புரியவில்லை. இதை வேறு எந்த மொழியினரிடத்திலும் நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றும் ஒரு மலையாளி முதலில் செய்வது தினத்தந்தியை வாங்கி தமிழ் வாசிக்க மட்டுமல்ல எழுதவும் பயில்வது.... தப்பும் தவறுமாக என்றாலும் தயங்காமல் வங்கிக்கு வரும் வாடிக்கையாளரிடம் தமிழில் பேச முயல்வதை பார்த்திருக்கிறேன். ஆனால் கேரளாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தமிழர்கள் மலையாளத்தில் முழுதாக ஒரு வாக்கியம் கூட பேச முடியாமல் தடுமாறுவார்கள். நான் எதற்கு பிற மொழியை படிக்க வேண்டும் என்ற நினைப்பு! அதே போல்தான் மும்பையிலும், குஜராத்திலும்.... ஏன் ஆந்திராவில் பணியாற்றும் மலையாளிகளில் பலரும் அந்தந்த மொழிகளை ஓரளவுக்காவது பேச முயல்வார்கள். அவர்களை பார்த்து நாமும் படிக்க வேண்டும். வாழ்க்கைக்கு உதவாத மொழி தேவையில்லை. ஆகவேதான் தமிழ் செத்தால்தான் என்ன என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு ஆவேசம் வந்தது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895