என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 7 மே, 2013

நெஞ்சே எழு!ஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி?

  இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் வெளியிடும்போது திரை இசை ரசிகர்கள் மத்தியில்  ஒரு பரபரப்பு எழுவதுண்டு.   தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கிய  மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடல் யூ டியூபில் (YOUTUBE-தமிழ்ல என்ன?) வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

  நான் ஒன்றும் பெரிய திரை இசை ரசிகன்  இல்லை என்றாலும் ரசிகர்களின் ஆர்வம் என்னையும் தொற்றிக் கொள்ள யூ டியூபுக்குள் நுழைந்தேன்.

  பாடலை முதல் முறை கேட்கும்போது ஒரு  புதிய கூட்டணியான  ஏ.ஆர்.ரகுமான்-குட்டி ரேவதி கூட்டணி என்னைப் பொருத்தவரை ஏமாற்றத்தையே தந்தது! ரகுமானிடம் சரக்கு குறைந்து வருகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.  

   இப்பாடலின் முதல் வரியான "நெஞ்சே எழு!"( உண்மையில் முதல் வரி அல்ல பல முறை வரும் வரியே! மற்ற வரிகளின் மொத்த எண்ணிக்கை விட இதன் எண்ணிக்கை அதிகம்)  என்றதும் ஏதோ தன்னம்பிக்கைப் பாடல் என்று நினைத்து விட்டேன். இசை அமைப்பு பாடல் வரிகள் எல்லாம் அதை சரி என்று சொல்வது போல்தான் இருந்தது. சில சினிமாக்களுக்கும் அதன் தலைப்புகளுக்கும் பொருத்தம் இருக்காது. தலைப்பின் வரியை எங்கேயாவது ஒரு இடத்தில் திணிப்பார்கள் அது போல இந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தைதான் இதை காதல் பாடல் என்று நம்பவைக்கிறது. பரத்பாலாவின் படம் என்பதாலோ என்னவோ வந்தே மாதரம் பாடலின் இசையை நினைவு படுத்துகிறது. இதே பாடலை வேறு யாரேனும் இசை அமைத்திருந்தால் தாராளமாகப் பாராட்டலாம். ஆனால் ரகுமானிடம் எதிர் பார்ப்பது அதிகமாக இருப்பதால் பாடல் சாதாரணமாகவே படுகிறது. இப்பாடலில் அவரது பல பாடல்களின் சாயல் காணப்படுகிறது (மத்தவங்க சாயல் இருந்தாதானே தப்பு ) பெரும்பாலும் நல்ல மெட்டுக்குப் பாடல் எழுதப்பட்டால் அப்பாடல் சிறப்பாக அமையும். எழுதப் பட்டபாடலுக்கு மெட்டமைப்பது என்பது மிகக் கடினமானது. அப்படி மெட்டமைத்தாலும் வேறு ஒன்றின் சாயல் தன்னையும் அறியாமல் அமைந்து விடும். அதுவும் புதுக் கவிதைகளை மெட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக இருந்தாலும் கடினமே. இந்தப் பாடலும் எழுதிய பின்னர் இசை அமைத்துள்ளதாகவே தெரிகிறது. (ஒரு வேளை மெட்டுக்கு எழுதப்பட்டு இருந்தால் ரேவதிக்கு மெட்டுக்கு பாட்டெழுத இன்னும் பயிற்சி தேவையோ?) பல இடங்களில் ரகுமான் பாடல் வரிகளை மெட்டுக்குள் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. பாடலுக்கான பின்னிசையைவைத்து சமாளித்து விட்டார். தன்னைத் தவிர வேறு யாரும் இந்தப் பாடலை சரியாக பாடுவார்களா என்ற சந்தேகத்தில் தானே பாடி விட்டாரோ? பாடலை ரகுமானின் தீவிர ரசிகர்கள் வெற்றிபெற வைத்து விடுவார்கள் என்றாலும் பாமரர்களை எட்டுமா? படம் வரும் வரை காத்திருப்போம். 

   நீயா நானா போன்ற ஷோக்களில் குட்டி ரேவதியைப் பாத்திருக்கிறேன். நவீன பெண்ணியக் எழுத்தாளரும் கவிஞரான இவர் திரை இசைக்கு இப்போதைக்கு. பொருத்தமற்றவாராகவே தோன்றுகிறார். இந்தக் கவிதை தன்னம்பிக்கையா காதலா என்ற குழப்பத்தில் எழுதியது போல் காட்சி அளிக்கிறது. 

 காணொளியில்  உள்ள காட்சிகள் கவரும் விதத்தில் இருந்தாலும் திரைப்பட பாடல் வரிகளில் காணப்படும் காதல் ஈர்ப்பு குறைவாகவே காணப்படுகிறது, ஒருவேளை கதை தெரிந்தால்தான் அதை உணர முடியுமோ என்னவோ? பார்க்கலாம் . 

"ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும்" என்று தொடங்கும் இந்தப் பாடலில்  நவீனக் கவிஞர் குட்டி ரேவதி வர்ணம் அதர்மம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  வண்ணம் என்று எழுதி இருக்கலாம். பாடல் வரிகள் மிக சாதாரணமாகவே உள்ளது. சில வரிகள் தொடர்பின்றி காணப்படுகின்றன. (உதாரணம்: குழந்தை சிரிக்க மறந்தாலும்) முதல் வாய்ப்பை இன்னமும் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

  இந்தப் பாடலுக்கு கவிஞரை நிச்சயம் ரகுமான் தேர்வு செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பரத்பாலாவின் சாய்சாகத்தான் இருக்கும். ஒரு வேளை அவரது கவிதைகளால் ஈர்க்கப் பட்டிருக்கலாம். ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது கவிதைகளின் கருத்துகளை வெளிப்படுத்த  ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா? "திரைப்படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்" என்று சொல்லி விட்டு பின்னர் சமரசம் செய்து கொண்ட வைரமுத்துவைப் போல ஆவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

பாடலின்  காணொளியும் பாடல் வரிகளும்


இதோ  பாடல் வரிகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்,
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

*************************************************************************************************************


கொசுறு:1
குட்டி ரேவதி வலைப்பூ ஒன்றும் வைத்துள்ளார். இவர் மூன்று கவிதை தொகுப்புகள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்றின் தலைப்பு ஏடா கூடமாக உள்ளது. இதனால் தான் புறக்கணிக்கப் படுவதாக குற்றம் சாட்டுகிறார்.
கொசுறு 2
யுவன்சங்கர்ராஜா இப்படத்தில் ரகுமானின் இசையில் பாடி இருக்கிறாராம். 
கொசுறு3 
குட்டி ரேவதியின் வலைப்பதிவு முகவரி http://kuttyrevathy.blogspot.in/


**********************************************************************

24 கருத்துகள்:

 1. இதுவரை கேட்கவில்லை.... கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. \\இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின்\\ எதை வச்சு இந்த முடிவுக்கு வந்தீகளோ தெரியலை, ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. ரகுமானுக்கு முன்னர் தமிழிலும் வடக்கிலும் பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள், ரகுமானுக்கு ஆஸ்கார் வரை போக வாய்ப்பு கிடைத்தது மற்றவர்களுக்கு அது இல்லை, ஆஸ்கார் வாங்கததால் அவர்கள் இசைஞானத்தை நாம் குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. மேலும் ரஹ்மான் எத்தனை படங்களுக்கு இசைமைத்துவிட்டார் என்பதையும் பார்க்க வேண்டும். இளையராஜாவைப் பார்த்தால் வருடத்துக்கு 40-50 என 950 படங்களுக்கு இசையமைத்தவர். அப்படி இவரால் முடியுமா.... ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி,
   நான் நிச்சயமாக மற்ற இசை மேதைகளை குறைத்து மதிப்பிட வில்லை. ரகுமானுக்கு முன்னர் பல ஆண்டுகள் அசைக்கமுடியாத இளையாராஜாவின் இசை ராஜாங்கம் நடந்தது. அதற்கு முன்னர் எம்.எஸ்.வி கோலோச்சினார்.
   இவர்களும் ஆஸ்கார் பெற தகுதி உடையவர்களே என்பதை மறுப்பதிற்கில்லை . ரகுமானின் வரவுக்குப் பிறகு ஆடியோ விற்பனை, ரசிகர்கள்,பத்திரிகை செய்திகள் இவற்றை வைத்தே அவர் முன்னிலையில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. தினமணியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வாரமும் எந்த படத்தின் ஆடியோ அதிக மாக விற்பனை ஆகிறது என்று போடுவார்கள் அதில் ரகுமானின் பாடல்களே முன்னிலையில் இருக்கும். ராஜாவின் ரசிகர்கள் பெரும்பாலும் இப்போதைய நடுத்தர வயதினர்.ரகுமானின் விசிறிகள் பெரும்பாலும் இளைஞர்கள். முக நூலில் அவர் 11 மில்லியன் பேர்களில் ஆதரவைப் பெற்றிக்கிறார். டெண்டுல்கருக்குக் கூட இதை விட குறைவுதான் அது அவருக்கு பெரிய பலமாக அமைந்திருக்கக் கூடும். குறைவான படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தொழில் நுட்பம் மார்கெட்டிங் டெக்னிக் போன்றவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார். நிறைய படங்களுக்கு இசை அமைத்திருந்தால் எப்போதோ காணாமல் போயிருப்பார் என்பது உண்மையே!
   இது போன்ற வாய்ப்புகள் ராஜாவுக்கு கிடைக்க வில்லையே என்ற குறை எனக்கும் உண்டு.
   இம்மூவரைப் பற்றியும் நன் எழுதிய பதிவு ஒன்று உண்டு,

   நீக்கு
  2. பெயரில்லா13 மே, 2013 அன்று PM 3:38

   அன்பு நிறைந்த அய்யா,பல கட்டுரைகளில் நான் தற்போது முகநூல் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதுவதைப் பார்கிறேன். சென்னையில் நடந்த புத்தக சந்தை முழுதும் அலைந்து பார்த்துவிட்டேன். அது வாங்க கிடைக்கவில்லை. அதன் ஆசிரியர் பேரும் தெரியாததால் விசாரிக்கக் கூட முடியவில்லை. அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகம் பெயரையும் தந்தால் தன்யனாவேன்.

   தருமராஜ்

   நீக்கு
 3. இனிய வணக்கம் நண்பரே...
  நானும் இதுவரை பாடலைக் கேட்டதில்லை...
  ==
  பாடலுக்காக புனையப்பட்ட கவிதை..
  ஒன்றுக்கொன்று இணைத்து
  புனையப்பட்டவையாக இல்லை
  என்பது நிதர்சனமான உண்மை...
  ==
  பார்ப்போம் படம் வந்த பிறகும் கதையுடன் ஒன்றுகிறதா என்று...

  பதிலளிநீக்கு
 4. பாடலைக் கேட்டதில்லை... பாடல் வரிகளுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 5. கதை மற்றும் காட்சியமைப்புடன் பார்த்தால்தான்
  சரியாகப் புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்
  விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பாட்டுக்கு மெட்டமைத்தால்
  கொட்டு தான் கிடைக்கும்.
  மெட்டுக்குப் பாட்டமைத்தால் தான்
  துட்டு கிடைக்கும்...

  இது தெரியாதா மூங்கில் காற்று?

  (கொசுறு - நான் கூட மெட்டுக்குப் பாட்டெழுதி
  இன்று பதிவிட்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் வந்து பாருங்கள்.)
  பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாராயோ வாராயோ அருணா மேடம் .
   உங்கள் பாடலை படித்துவிட்டேன். நன்றி

   நீக்கு
 7. ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது கவிதைகளின் கருத்துகளை வெளிப்படுத்த ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா? "/// புரியலையே????????????????????/.........
  அருணா செல்வம் சொன்னதையே எனது கருத்தாய் எடுத்து கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரியலையா? ஹையா! கூடிய சீக்கிரம் நான் இலக்கியவாதி ஆயிடுவேன் போல இருக்கே

   நீக்கு
 8. ஜெயதேவதாஸ் கருத்தை ஆமோதிக்கிறேன். வைரமுத்து அப்படிச் சொல்லியிருந்தாரா என்ன! பாடலாகப் பார்க்காமல் ஜஸ்ட் ஒரு கவிதையாகப் பார்த்தால்/படித்தால் கவிதை நன்றாக(வே) உள்ளது! அவர் வலைப்பூவுக்கு அப்புறம் போக வேண்டும்! யூ டியூப் (இப்படியே தமிழில் சொல்லலாம்! அல்லது 'நீ(ங்கள்) குழாய்'!!!!!! பாடல் இப்போது கேட்கவில்லை! என் கணினி தாமதப் 'படுத்தி' விடும்! அப்புறம் எப்படியும் தவிர்க்க முடியாமல் காதில் விழும். அப்போது கேட்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய பனை ஓலை சுவடிகள் என்ற வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் திரைப்படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்று ஒரு கவிதை உண்டு. இதை பற்றி வைரமுத்துவிடமும் கேட்கப் பட்டிருக்கிறது. மழுப்பலாக பதில் சொல்லிவிடுவார்.

   நீக்கு
 9. சுமாரான பாட்டு - சூப்பர் ஹிட்டாகும். என்ன செய்ய!
  குட்டி ரேவதியின் ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். மிகத் துணிச்சலாக எழுதுகிறார் - most of the time அர்த்தமும் புரிகிறது :)

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா8 மே, 2013 அன்று PM 1:59

  பாடலில் கவிநயமே இல்லை. என்னுடைய நண்பர் வருண் எழுதிய கவிதைகள் மாதிரி ட்ரையாக இருக்கிறதே.

  சாத்தப்பன்

  பதிலளிநீக்கு
 11. நன்றி அய்யா. பாடலைக் கேட்டதில்லை. பாடல் வரிகளைத் தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா9 மே, 2013 அன்று PM 1:55

  அவர் பெயர் சுட்டி ரேவதி குட்டி ரேவதி அல்ல .. இதை பல பேட்டிகளில் சொல்லியிருந்தாலும் கூட சண்டைக் கோழியில் எஸ்.ரா எழுதிய மாதிரி அவர் பெயரை எழுதுவது கண்டனத்துக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருடைய வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள் அங்கும் குட்டி ரேவதி என்றுதான் இருக்கிறது.

   நீக்கு
  2. பெயரில்லா12 மே, 2013 அன்று PM 5:54

   ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா?-என்று எழுதிவிட்டு ஆதிக்க மனோபாவம் தொனிக்க இப்படி குறிப்பிடுவது சரியா ?

   அவர் அப்படி எழுதியிருந்தாலும் கூட , கவிதாயினி ரேவதி என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்தது. நான் படித்த தமிழ் என்னை அவ்வாறே சொல்ல வேண்டுமென கட்டாயப்படுத்தும், படுத்துகிறது. தமிழன் பெண்களை பொதுவில் மரியாதையாய் நடத்துவதைத் தான் 2000 வருட பரம்பரியமாக கொண்டிருக்கிறான்.

   சங்கரபாண்டியன்

   நீக்கு
 13. பெயரில்லா18 மே, 2013 அன்று PM 8:20

  பதிவு பார்த்தேன் மிக நன்றி...பாடலும் கேட்டேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895