என்னை கவனிப்பவர்கள்

நெஞ்சே எழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெஞ்சே எழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 மே, 2013

நெஞ்சே எழு!ஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி?

  இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் வெளியிடும்போது திரை இசை ரசிகர்கள் மத்தியில்  ஒரு பரபரப்பு எழுவதுண்டு.   தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கிய  மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடல் யூ டியூபில் (YOUTUBE-தமிழ்ல என்ன?) வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

  நான் ஒன்றும் பெரிய திரை இசை ரசிகன்  இல்லை என்றாலும் ரசிகர்களின் ஆர்வம் என்னையும் தொற்றிக் கொள்ள யூ டியூபுக்குள் நுழைந்தேன்.

  பாடலை முதல் முறை கேட்கும்போது ஒரு  புதிய கூட்டணியான  ஏ.ஆர்.ரகுமான்-குட்டி ரேவதி கூட்டணி என்னைப் பொருத்தவரை ஏமாற்றத்தையே தந்தது! ரகுமானிடம் சரக்கு குறைந்து வருகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.  

   இப்பாடலின் முதல் வரியான "நெஞ்சே எழு!"( உண்மையில் முதல் வரி அல்ல பல முறை வரும் வரியே! மற்ற வரிகளின் மொத்த எண்ணிக்கை விட இதன் எண்ணிக்கை அதிகம்)  என்றதும் ஏதோ தன்னம்பிக்கைப் பாடல் என்று நினைத்து விட்டேன். இசை அமைப்பு பாடல் வரிகள் எல்லாம் அதை சரி என்று சொல்வது போல்தான் இருந்தது. சில சினிமாக்களுக்கும் அதன் தலைப்புகளுக்கும் பொருத்தம் இருக்காது. தலைப்பின் வரியை எங்கேயாவது ஒரு இடத்தில் திணிப்பார்கள் அது போல இந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தைதான் இதை காதல் பாடல் என்று நம்பவைக்கிறது. பரத்பாலாவின் படம் என்பதாலோ என்னவோ வந்தே மாதரம் பாடலின் இசையை நினைவு படுத்துகிறது. இதே பாடலை வேறு யாரேனும் இசை அமைத்திருந்தால் தாராளமாகப் பாராட்டலாம். ஆனால் ரகுமானிடம் எதிர் பார்ப்பது அதிகமாக இருப்பதால் பாடல் சாதாரணமாகவே படுகிறது. இப்பாடலில் அவரது பல பாடல்களின் சாயல் காணப்படுகிறது (மத்தவங்க சாயல் இருந்தாதானே தப்பு ) பெரும்பாலும் நல்ல மெட்டுக்குப் பாடல் எழுதப்பட்டால் அப்பாடல் சிறப்பாக அமையும். எழுதப் பட்டபாடலுக்கு மெட்டமைப்பது என்பது மிகக் கடினமானது. அப்படி மெட்டமைத்தாலும் வேறு ஒன்றின் சாயல் தன்னையும் அறியாமல் அமைந்து விடும். அதுவும் புதுக் கவிதைகளை மெட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக இருந்தாலும் கடினமே. இந்தப் பாடலும் எழுதிய பின்னர் இசை அமைத்துள்ளதாகவே தெரிகிறது. (ஒரு வேளை மெட்டுக்கு எழுதப்பட்டு இருந்தால் ரேவதிக்கு மெட்டுக்கு பாட்டெழுத இன்னும் பயிற்சி தேவையோ?) பல இடங்களில் ரகுமான் பாடல் வரிகளை மெட்டுக்குள் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. பாடலுக்கான பின்னிசையைவைத்து சமாளித்து விட்டார். தன்னைத் தவிர வேறு யாரும் இந்தப் பாடலை சரியாக பாடுவார்களா என்ற சந்தேகத்தில் தானே பாடி விட்டாரோ? பாடலை ரகுமானின் தீவிர ரசிகர்கள் வெற்றிபெற வைத்து விடுவார்கள் என்றாலும் பாமரர்களை எட்டுமா? படம் வரும் வரை காத்திருப்போம். 

   நீயா நானா போன்ற ஷோக்களில் குட்டி ரேவதியைப் பாத்திருக்கிறேன். நவீன பெண்ணியக் எழுத்தாளரும் கவிஞரான இவர் திரை இசைக்கு இப்போதைக்கு. பொருத்தமற்றவாராகவே தோன்றுகிறார். இந்தக் கவிதை தன்னம்பிக்கையா காதலா என்ற குழப்பத்தில் எழுதியது போல் காட்சி அளிக்கிறது. 

 காணொளியில்  உள்ள காட்சிகள் கவரும் விதத்தில் இருந்தாலும் திரைப்பட பாடல் வரிகளில் காணப்படும் காதல் ஈர்ப்பு குறைவாகவே காணப்படுகிறது, ஒருவேளை கதை தெரிந்தால்தான் அதை உணர முடியுமோ என்னவோ? பார்க்கலாம் . 

"ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும்" என்று தொடங்கும் இந்தப் பாடலில்  நவீனக் கவிஞர் குட்டி ரேவதி வர்ணம் அதர்மம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  வண்ணம் என்று எழுதி இருக்கலாம். பாடல் வரிகள் மிக சாதாரணமாகவே உள்ளது. சில வரிகள் தொடர்பின்றி காணப்படுகின்றன. (உதாரணம்: குழந்தை சிரிக்க மறந்தாலும்) முதல் வாய்ப்பை இன்னமும் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

  இந்தப் பாடலுக்கு கவிஞரை நிச்சயம் ரகுமான் தேர்வு செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பரத்பாலாவின் சாய்சாகத்தான் இருக்கும். ஒரு வேளை அவரது கவிதைகளால் ஈர்க்கப் பட்டிருக்கலாம். ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது கவிதைகளின் கருத்துகளை வெளிப்படுத்த  ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா? "திரைப்படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்" என்று சொல்லி விட்டு பின்னர் சமரசம் செய்து கொண்ட வைரமுத்துவைப் போல ஆவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

பாடலின்  காணொளியும் பாடல் வரிகளும்


இதோ  பாடல் வரிகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்,
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

*************************************************************************************************************


கொசுறு:1
குட்டி ரேவதி வலைப்பூ ஒன்றும் வைத்துள்ளார். இவர் மூன்று கவிதை தொகுப்புகள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்றின் தலைப்பு ஏடா கூடமாக உள்ளது. இதனால் தான் புறக்கணிக்கப் படுவதாக குற்றம் சாட்டுகிறார்.
கொசுறு 2
யுவன்சங்கர்ராஜா இப்படத்தில் ரகுமானின் இசையில் பாடி இருக்கிறாராம். 
கொசுறு3 
குட்டி ரேவதியின் வலைப்பதிவு முகவரி http://kuttyrevathy.blogspot.in/


**********************************************************************