என்னை கவனிப்பவர்கள்

கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 நவம்பர், 2014

நீயா நானா? படிப்பு வராதது குற்றமா?

    கடந்த வாரம் நீயா நானாவில் படிக்கப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். படிப்பு வாரதவர்கள் ஒரு பக்கம்; அவர்களை காலையில் படி கடும்பகல் படி, மாலையில் படி , இரவு படி என்று படியாய்  பாடாய் படுத்தும் பெற்றோர் மறுபக்கம்.
   முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் இத் தலைமுறைப் பெற்றோர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் கல்வியை விட்டால் நடுத்தர குடும்பத்தினருக்கு நாதியில்லை. அதிக மதிப்பெண் பெறாவிட்டால் வாழ்க்கையே அவ்வளவுதான்.  என்றெல்லாம் சொல்லி குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்கள் கல்வி என்று குறிப்பிடுவது (நினைத்துக் கொள்வது)  10, +2 வில் அதிக மதிப்பெண் பெற்றுமருத்துவம் மற்றும் இஞ்சினீரிங்கில்  இடம் பிடிப்பது) மட்டுமே.
    படிப்பு எதற்கு? உடல் உழைப்பின்றி சம்பாதிப்பதற்காகவே கல்வி என்ற மனோபாவமே காணப்படுகிறது. நாம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தோம். நம் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக் கூடாது எனபது பெற்றோர் உறுதியாய் இருக்கிறார்கள்.  கல்வியில் வெற்றி பெறாதவன் மட்டும்தான் உடலுழைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள்.கல்வி அறிவு பெற்றவன் (மதிப்பெண்முறைப்படி)   மற்றவர் களைவிட உயர்ந்தவன். இந்த மனப்பாங்குதான் தங்கள் குழந்தைகளை வருத்தியாவது படிக்க வைத்து விடவேண்டும் என்று முழு மூச்சாக கொண்டு செயல்படுகிறார்கள் . 
  மிக சிறப்பாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்  என்று நம்புகிறார்கள். அதற்காக தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குழந்தைகளை தயார் செய்வதே தமது கடமை என்றும் கொள்கிறார்கள்.  அப்படி செய்ய முடியாவிட்டால் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டதாக நினைக்கிறார்கள். இதையே நீயா நானா நிகழ்ச்சியும் வெளிபடுத்தியது.
   ஆனால் படித்தவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் தந்து வேலை தருகிற பெரும்பாலான முதலாளிகள் படிப்பில் சராசரியாக இருந்தவர்களாகவே வரலாறு கூறுகிறது. எழுதப் படிக்கத் தெரியாத அக்பர்தான்  நிர்வாகத்திறன் மிக்க மன்னனாக விளங்கினார் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. 
        மருத்துவமனையில் நர்சின் கையில் இருந்து விடுபட்டு  நேரே நர்சரி பள்ளிக்கு செல்லக் கூடிய சூழல் இன்று உள்ளது. மொத்த வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐந்தில்  ஒரு பங்கு பகல் வாழ்க்கை வகுப்பறையில் செலவழிக்கப் படுகிறது. வகுப்பறைக்குள் அத்தனையும் கற்றுவிட முடியும்  என்ற நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. வகுப்பறை தாண்டி கற்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.
    படிப்பு வராதவர்களை தண்டசோறு என்று கூறுதல், 'அவன் மட்டும் எப்படி நல்லா படிக்கிறான்' என்று பிற மாணவர்களோடு ஒப்பிடுதல் போன்றவை எல்லாம் நடுத்தர குடும்பங்களில் சகஜம் என்றாலும் அதிக பட்சமாக  "நீ எல்லாம் எதுக்கு இருக்க? செத்துப் போ என்றுகூட  சொல்வார்களா? ஆச்சர்யமாகத் தான் இருந்தது . இல்லை இல்லை அதிர்ச்சியாகவும் இருந்து. அவர்கள் மனதார அதை சொல்லியிருக்க மாட்டார்கள்  என்றாலும் குழந்தைகளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எப்படி உணராமல் போனார்கள்? ஒரு வேளை குழந்தை விபரீத முடிவு எடுத்தால் என்ன ஆவது? (இது போன்று நிகழ்ந்தால் முந்தைய தினம் ஆசிரியர் திட்டினார் அதனால்தான் இப்படி நேர்ந்தது ஆசிரியர்களை மாட்டிவிட்டு விடுவார்கள்)
   ஆசிரியர்கள் சார்பாக பேசிய ஒருவர் இவர்களை படிக்க வைக்க எடுக்கும் முயற்சிகளையும் அதில் ஏற்படும் தோல்விகளையும் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும் விவரித்தார். ஆனால் இவை பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கே பொருந்தும்.
   முன்பெல்லாம் மாணவனை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இருப்பதாக பெற்றோர் கருதினர். அடித்தால் கூட  பெற்றோர் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். மாணவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. தேர்வு முடிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அனால் அப்போது அனைத்து வகை மாணவர்களும் அரசு பள்ளிகளில் இருந்தனர். இப்போது சராசரிக்கும் கீழே உள்ள மாணவர்களை தேர்ச்சி வைப்பதற்கு ஆசிரியர்கள் போராட வேண்டி இருக்கிறது. அப்போது படிக்க வைக்க  சாம,தான,பேத தண்ட முறைகளை கையாள முடியும் . ஆனால் தற்போது முதல் இரண்டு முறைகள் மட்டுமே கையாளவேண்டும் .

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல், 
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், 
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைத்தல் , தண்டனை கொடுத்தல்

   ஆனால் இவற்றை ஆசிரியர் செய்ய முடிவதில்லையே தவிர பெற்றோர் இந்த நான்கு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக அப்பாக்களை விட அம்மாக்கள் கொடுக்கும் டார்ச்சர் அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது .இதையே  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் பேச்சு உறுதிப் படுத்துவதாக அமைந்தது. இவர்கள் பயன்படுத்தும் உத்தி செண்டிமெண்ட் தாக்குதல். அது  இப்படி இருக்கும் 'நாங்கதான் கஷ்டப்பட்டோம்; நீங்க கஷ்டப் படக் கூடாது. மத்தவங்களை விட நாம தாழ்ந்து போய்டக் கூடாது. 'உங்க வயசுல எங்களுக்கெல்லாம் சரியான சாப்பாடு இல்ல, துணி மணி இல்ல, செருப்பு இல்ல, புத்தகம் நோட்டு வாங்கிக் கொடுக்க ஆள் இல்லை . எல்லா வசதியும் செஞ்சும் ஏன்படிக்க மாட்டேங்கறீங்க"
    'படிக்கலைன்ன பிச்சைதான் எடுக்கணும்' 'மாடுதான் மேய்க்கணும்' 'மூட்டைதான் தூக்கணும்' என்றெல்லாம் சொல்வது  அந்த வேலைகளை மட்டும் இழிவு படுத்துவது மட்டும் அன்று. சொல்வது கல்வியை இழிவு படித்துவதாகவே கருதுகிறேன்.
     10 ஆம்வகுப்பில் நானூற்று இருபது மார்க் வாங்கிய பெண்ணை அவர் தந்தை குறைபட்டுக் கொண்டதை என்னவென்பது? அந்தப் பெண்ணுக்கே அது குறைவான மார்க்தான் என்ற எண்ணத்தை ஆழப் பதித்து ஒரு தாழ்வு  மனப்பானமையை அந்தத்  தந்தை உருவாக்கி இருந்தது வேதனைக்குரியது
  இந்த மனநிலையை வளர்த்ததில் பெரும்பங்கு மெட்ரிக் பள்ளிகளையே சாரும். 80 சதவீதத்திற்கு குறைவாக எடுத்தவர்கள் கூட சாரசரிக்கும் கீழே என்றுதான் மதிப்பிடப் படுகிறார்கள். சராசரியாக இருந்தால் பள்ளியை விட்டு அனுப்பி விடுவது வழக்கம். சராசரிக்கு குறைவாக உள்ளவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் புகலிடம் கொடுக்கின்றன. இதை சிறப்பு விருந்தினர் கவிஞர் வெண்ணிலா குறிப்பிட்டார்.
     ரிசல்ட் அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தம்  காரணமாக மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றும் அதே நடை முறையை அரசு பள்ளிகளும் பின்பற்றுகின்றன. காலை  மாலை சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களை மனப்பாடம் செய்யவைக்கும் பணியில் ஈடுபடவைக்கின்றன. திரும்பத் திரும்ம ப்ளூ பிரிண்ட் மாதிரிதேர்வுகள்  மூலம் அனிச்சையாக விடை அளிக்க பயிற்சி அளிக்கப் படுகின்றன. பாடம் என்று ஒன்று இருப்பதே தேர்வுக்காகத்தான். புத்தகத்தை படிக்கத் தேவை இல்லை.புரிந்து கொள்ளத் தேவை இல்லை. கேள்வி பதில்கள் திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.
    இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருமே கேள்வி பதில் படிக்க கஷ்டமா இருக்கு பதில் பெரிசா இருக்கு. அந்தக் கேள்வி புரியல. என்றே பேசினர். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியது ஒன்று மட்டுமே. கேள்வி பதில்தான் படிப்பு என்ற எண்ணமே ஆழமாக விதைக்கப் பட்டுள்ளது. பாடப் புத்தகம் என்று ஒன்று இருப்பதாகவே மாணவர்களுக்கு நினைவில்லை.
   நிகழ்ச்சியில் நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம் பங்கேற்ற பெற்றோர் ஒருவர் கூட தன் குழந்தைகளுக்கு படிப்பு வராததற்கு காரணம் அவர்கள் படிக்கும் பள்ளி என்றோ கற்பிக்கும் ஆசிரியர் என்றோ கூறவில்லை. தன் குழந்தைகள் படிக்காததற்கு காரணம் தன் குழந்தைகளின் கவனக் குறைவே காரணம் என்று நம்புகிறார்கள். மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்று குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் புகழ்( அதிக பணம் பறிக்கும்) பெற்ற தனியார் பள்ளிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதே அரசு பள்ளியில் அந்த பிள்ளைகள் படித்திருந்தால் ஆசிரியர் சரியாக சொல்லிக் கொடுக்க வில்லை, பள்ளி சரி இல்லை. என்று சொல்லி இருப்பார்கள். தனியார் பள்ளி நிர்வாகம் உங்கள் குழந்தை படிக்காததற்கு காரணம் நீங்கள்தான் என்று தங்களை திட்டினாலும் ஏன் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது.

   எழுத்தாளர் இமயம் அவர்கள்  சொன்னது நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. உண்மையில் சாதாரணமாக கற்றவர்களே பெரிய மாற்றங்களுக்கு  காரணங்களாக இருந்திருகிறார்கள். அதனால் அதிகம் படிப்பு வராதவர்கள் கவலைப் பட வேண்டியதில்லை.படிப்பு வராதது குற்றமும் இல்லை. அவர்கள் வாழத் தகுதி அற்றவர்களாக நினைத்துக் கொள்ளத் தேவையும்  இல்லை என்று சொன்னதை பெற்றோர் மனதில் கொள்ளவேண்டும்.
    பதின் பருவத்தில் படிப்பதில் எவ்வளவு கவனச் சிதறல் இருக்கும் என்பதை எடுத்துரைத்தார் உளவியல் மருத்துவர் ஷாலினி. அந்த வயதிற்குரிய இயல்பான சந்தோஷத்தையும் அனுபவித்துக் கொண்டு படிக்கவும்  தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் என்றார். விடியற்காலையில் தூக்கக் கலக்கத்தில் படிப்பதால் பயன் ஏதுமில்லை என்பதை  அழுத்தம் திருத்தமாக ஆய்வின் அடிப்படையில் கூறியது சிந்திக்க வைப்பதாக இருந்து.
    சிறப்பு விருந்தினர் ஞானி குறிப்பிட்டார் 'இன்றைய கல்விமுறை மதிப்பெண் பெறுபவர்களை உருவாக்குகிறதே தவிர தகுதியானவர்களை உருவாக்கவில்லை. அதனால்தான் வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை' என்று கல்வி முறையை குறை கூறினார்.
    கல்வியாளர்கள் அறிஞர்கள்  வல்லுனர்கள் பலரும் கல்வி முறையை தவறு என்று கூறுகிறார்களே தவிர சரியான முறை என்ன? அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதை சரியாக யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.  மாற்று முறை  சரியாக அமையாததால் மதிப்பெண் முறை கோலோச்சுகிறது. ஆனால் மாற்றங்களும் கற்றலை ஆர்வமிக்கதாக ஆக்க பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
    அரசு பள்ளிகளில் இன்று பயன்படுத்தடும்  1- 4 வகுப்புகளுக்கு செயல் வழிக்கற்றல் ABL,( Activity Based learning)  5 ம் வகுப்புக்கு SALM, 6- 8 வகுப்புகளுக்கு ALM( Active Learning Methodology) படைப்பாற்றல் கல்வி பயன்படுத்தப் படுகிறது.  CCE (Continuous and Comprehensive Evaluation)என்ற தொடர் மற்றும் முழுமை  மதிப்பீட்டு முறை பின்பற்றப் படுகிறது. உண்மையில் மிக அற்புதமான இந்த முறைகளை  பெற்றோரும் விரும்பவதில்லை. ஆசிரியர்களும் விரும்புவதில்லை.  அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இவை உதவாது என்று கருதப் படுவதே இதற்குக் காரணம் .
( இம்முறையில் மாணவர்கள் தங்கள் வருகையை தாங்களே குறித்துக் கொள்ளலாம் . அதற்கு சுய வருகைப் பதிவேடு என்று பெயர்.தினந்தோறும் வானிலை எப்படி இருக்கிறது என்பதை காலநிலை அட்டவணை மூலம் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பல ஆர்வமூட்டும் செயல்பாடுகள் உள்ளன இவற்றைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.)
   எந்தப் பாடமாயினும் கடினமான பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களும் முடிந்தவரை பல்வேறு சுவாரசியமான உத்திகளை கையாளவேண்டும்.(உதாரணம்: தனி ஊசல் என்ற பாடத்தை கற்பிக்க நான் பயன்படுத்திய உத்தி) 

   கல்வி என்பது குழந்தையின் அனைத்து ஆளுமைகளை வளர்ப்பதாக அமைய வேண்டும்.வகுப்பறையில் அடக்கி ஒடுக்கி வைத்து ஆசிரியர் சொல்வதை மட்டும் கேட்டு திருப்பி சொல்வது எழுதுவது கல்வி அல்ல.நல்ல பண்புகளை நல்ல குடிமக்களை உருவாக்குவதே சிறப்பான கல்வி.
  தெளிவாக  சிந்திக்க வைக்கின்ற ஆற்றலையும் சிக்கலான சூழ்நிலையில் திடமான முடிவு எடுக்கக் கூடிய பண்பையும் சமூக மேம்பாடு தனி மனித நடத்தையில் உள்ளது என்பதை உணரவைக்கக் கூடியதாகவும் கல்வி அமைய வேண்டும்.
     அறிவியலும் கணிதமும் கற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்; பிற பாடங்கள் பட்டம் பெற உதவுமே தவிர வாழ்க்கை வளம் பெற  உதவாது என்ற எண்ணத்தை மாற்றவேண்டிய பொறுப்பு அரசு, சமூகம் இரண்டுக்கும் உள்ளது.
வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல.
ஒரு நல்ல தலைப்பை எடுத்து விவாதித்த நீயா நானாவிற்கு நன்றி. 

******************************************************************************

இந்நிகழ்ச்சி பற்றிய  கவிஞர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் திரு முத்துநிலவன் அவர்களின் பதிவு

*****************************************************************************************
படிப்பு வராத மக்குப் பாப்பாவின் கவிதை படித்து விட்டீர்களா 



**************************************************************************************


புதன், 16 ஜூலை, 2014

பிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2


       முந்தைய பகுதி  -1

  கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை. சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதைக் குறை கூறி இப்படி  தலையங்கம் எழுதியதாம்.
"ஏற்கனவே மக்கள் வரிச் சுமையால் அவதிப் படுகிறார்கள்.அப்படி இருக்க மதிய உணவு போடுவதற்கு என்று மேலும் ஒரு வரி எவ்வளவு சிறியதாயினும் முதுகெலும்பை முறித்துவிடும். சமுதாயத்தின் பொருளியல் நிலையை வளர்த்தால் மற்றதெல்லாம் சரியாகி விடும் " என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது 

   ஆனால் மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. காமராஜர் சொன்னபடி விரிவாக பல்வேறு கூறுகளை ஆராய்ந்து திட்டம் தீட்டினார்  இயக்குநர் நெ.து.சு.
கல்வித் துறைக்கு தீட்டப்பட்ட பிற திட்டங்களை ஏற்றுக்கொண்ட  உயர் அலுவலர் குழு மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் தயக்கம் காட்டியது. அவர்களுக்கு உரிய விளக்கங்களை அளித்தார் இயக்குநர்.

    விளக்கத்தை கேட்ட திரு வர்கீஸ் என்ற அலுவலர் "உங்கள் திட்டம் சிறப்பானதுதான். மாநிலம் தழுவிய அளவில் இப்படி ஒரு திட்டம் இந்தியாவில் எங்கும் நடத்திய படிப்பினை இல்லை. அதிக செலவு பிடிக்கும் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை இந்திய அரசு கொடுக்கும் என்ற உறுதி இல்லை . நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பகல் உணவு திட்டத்தை மட்டும் ஒத்தி வைக்கலாமென்று இக் குழு பரிந்துரைக்கும் . அதற்கு இசையுங்கள் அடுத்த ஆண்டு யோசிப்போம் ' என்றார். 

      நெ.து.சு சம்மதிக்க வில்லை. விடாப்பிடியாக, "பள்ளிகளில் அதிகமான  பேர்கள் சேர வேண்டும் என்று தலைவர்கள் நினைக்கிறார்கள் . அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு மதிய உணவு இன்றியமையாதது 
"சேர்க்கைக் குறியீட்டை அப்படியே வைத்துக் கொண்டு வெற்றி பெற ஏழை பிள்ளைகளுக்கு சோறு போடுவது ஒன்றே வழி 
"மேலும் இலவச பாடநூல்,எழுதுபொருள் போன்றவை அதிக அளவில் உதவாது என்பதை கண்கூடாக கண்டிருக்கிறோம்.எனவே தயவு செய்து மதிய உணவு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று வாதாடினார் நெ.து.சு  

   குழுவினரோ தொடர்ந்து வெவ்வேறு காரணங்களை கூறி  மறுப்பு தெரிவித்தனர் . ஆனாலும் இயக்குநர் சளைக்கவில்லை கடைசி துருப்புச்சீட்டை வீசினார்  " இது முதலமைச்சரின் திட்டம் இதை நிறைவேற்ற வேண்டும் என்று முழுமனதாக நினைக்கிறார். தனியார் பள்ளி நிர்வாகிகள் மாநாட்டில் நாடறிய அறிவித்துள்ளார். அதற்காக புது வரி கூட போடலாம் என்றுகூட தெரிவித்தார் . முன்னதாக என்னிடமும் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு திட்டம் தீட்டச்சொன்னதும் அவரே"

மேலும் "நீங்கள் இது பற்றி ஒருமித்த கருத்து கொண்டிருப்பதால் திட்டத்தை கைவிட குழு கருதுகிறது, ஆனால் இயக்குநர் அடம் பிடிக்கிறார் என்று அறிக்கையில் எழுதி விடுங்கள் அது போதும் " என்றார் அழுத்தமாக 
இதற்கு பலன் கிடைத்தது .

"இது தொடர்பான முடிவை அமைச்சரவைக்கு விட்டு விடுவோம் அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதன் படி செய்வோம் . இதை இயக்குநர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் " என்றார் நிதிச் செயலாளர். 
திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை விட இதுமேல்  என்று இசைந்தார்  நெ.து.சு சில வாரங்களில் அமைச்சரவை கூடியது. கல்வித்துறை திட்டங்கள் பற்றி  ஆலோசனை தொடங்கியது 

   நிதிச் செயலர் தொடங்கினார், "கல்வித்துறை திட்டங்கள் சிறப்பாக தீட்டப்பட்டுள்ளன. தனித் தனியாக பார்க்கும்போது குறையேதும் இல்லை. புதிய திட்டமான பகலுணவு திட்டம் பற்றி மட்டும் நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்கவேண்டும் . இப்படி ஒரு திட்டத்தை எந்த மாநில அரசும் செய்ததில்லை. பல்லாயிரக் கணக்கான சிற்றூர்களில் சோறு போடுவதை கண்காணிக்க முடியுமா?. அதற்கு எவ்வளவு பெரிய அமைப்பு தேவை எவ்வளவு செலவாகும்? செலவுத் தொகை ஆண்டுக்காண்டு பெருகிக் கொண்டே போகுமே . பல சிக்கல்கள் கொண்ட இத் திட்டத்தை தொடங்குவதற்கு பதில் ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்துவதும் விரைவு படுத்துவதும் போதுமானது  என்ற கருத்தே நிலவுகிறது ." என்று முதலமைச்சரிடம் சொல்லிவிட்டு  திட்டத்தைப் பற்றி இயக்குநரை விளக்கச் சொன்னார்.

    நெ,து சு நிதானமாக திட்டத்தை விளக்கினார் . அதன் அவசியத்தை வலியுறுத்தினர் ".................... இத் திட்டம் இருந்தால்தான் சேர்க்கை குறியீட்டை எட்ட முடியும், இல்லாவிட்டால் பழையபடி தொடக்கப் படிப்பும் ஏழைகளுக்கு  எட்டாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது." என்று முடித்தார். அமைச்சரவைக் குழுவுக்கு தலைமை தாங்கிய காமராசரோ, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமோ வேறு அமைச்சர்களோ வாய் திறப்பதற்கு முன்பாக அங்கு இருந்த மூத்த செயலாளராகிய வருவாய்த் துறை செயலாளர் ஆர்.எம்.சுந்தரம் குறுக்கிட்டார் 

  "இது இன்று எனக்கு சம்பந்தம் இல்லாதது என்றாலும் ஒரு காலத்தில் இத்தகைய திட்டத்தோடு எனக்கு தொடர்பு இருந்து. நான் லேபர் கமிஷனராக இருந்தபோது  நலத்துறை பள்ளிகளில் இருந்த பகல் உணவு திட்டத்தை கண்காணித்திருகிறேன். அப்பள்ளிகளில் போட்ட பகல் உணவால்  கான்ட்ரக்டர்கள் பிழைத்தார்கள் , ஆசிரியர்கள் பிழைத்தார்கள். மாணவர்க்கு கிடைத்த பலன் கொஞ்சமே. ஓராயிரம் பள்ளிகளில் விரயம் ஆவதைப் பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாமென்று சொல்வது என் கடமை . இத் திட்டத்தை கைவிடுவதே நல்லது." என்று முடித்தார்.

   உடனே காமராசர். "இயக்குநர் இதை குறித்துக் கொள்ளட்டும் விரிவான ஆணை பிறப்பிக்கையில் மறந்து விடாமல் இதையும் ஆணையில் சேருங்கள் . கான்ட்ரேக்ட் முறையில் நடத்தக் கூடாது. வேறு வழியை யோசித்து சொல்லுங்கள் "
என்று சொன்னதும் மீண்டும் சுந்தரம் சொன்னார் பாருங்கள்! அதைவிட ஆசிரியர்களை இழிவு படுத்த முடியாது  என்பது சந்தேகமே 

"மாணாக்கர்கள் சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்களே சாப்பிட்டு விடுவார்கள் . மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்" என்றார். 

முதலமைச்சர், கருணை மனதுடைய காமராசர்  இயக்குநரைப் பார்த்து சொன்னார் " உங்கள் திட்டத்தில் ஞாபகமாக ஒரு விதி சேர்த்துவிடுங்கள் . ஆசிரியர்களும் பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.அந்தக் கூடுதல் செலவு நியாயமானது ஏற்றுக் கொள்வோம்."

ஒப்பிட்டுப் பாருங்கள் கற்றுத் தேர்ந்த சுந்தரம் ஐ.சி.எஸ் இன் குறுகிய மனமும் படிக்காத மேதை காமராசரின் பரந்த மனதையும். 

இறுதியாக கொள்கை அளவில் பகல் உணவு திட்டம்  ஏற்கப் பட்டது.

    திட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக இயக்குநர் அவர்கள்  
தூத்துக்குடியில் ஒரு ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்  ".... தமிழ் நாட்டு கிராமப் பழக்கம் என்ன? பயிரிட்டு அறுவடை செய்து பின்னர் முதல் அளவை சாமிக்கும், இரண்டாம் அளவை ஊர்க் காவலர்க்கும் மூன்றாவது அளவை உறவினர்களுக்கும் ஒதுக்குவது வழக்கம். இதில் சிறு மாறுதல் செய்யுங்கள் மூன்றாவது அளவையை பள்ளி அன்னதானத்துக்கு என்று  மாற்றுங்கள் ஏழை மாணவர்கள்  பசியாற உண்டு உங்களை வாழ்த்துவார்கள்.." என்று கூற அது  ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு பொது மக்கள் மத்தியிலும் செய்தி பரவியது. கோவில்பட்டிக்கு அருகில் நாகலாபுரம் என்ற ஊர் மக்கள்  மதிய உணவுதிட்டத்தை செயல்படுத்த முனைந்தனர். இச் செய்தி காமராஜரின் காதுக்கு எட்டியது . இயக்குநரின் அருமையான பேச்சைப் பாராட்டியதோடு மேலும் பல ஊர்களுக்கு சென்று திட்டத்தை தொடங்கும்படி  முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று  பணித்தார்.

     இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் கல்வி அமைச்சர் சி சுப்பிரமணியம் அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆர்வம் இல்லை. அதே சமயத்தில் எதிர்க்கவும் இல்லை . அவர் நெ.து.சு அவர்களிடம் "உங்கள் நிலை தர்ம சங்கடமானது . முதலமைச்சர் சொன்னதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்.  நீங்கள் சொல்வதற்காக பல ஊர்களில் ஊர்க்காரர்களைக் கொண்டு தொடங்குவார்கள். அப்புறம் மூடிவிடுவார்கள். உங்களுக்கு பழி வந்து சேரும் . இருந்தாலும் தொடங்குங்கள் ஆனால் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்." என்று அறிவுரை கூறினார் .
கல்வி அமைச்சரின் வார்த்தைகள் கலக்கமூட்டின என்றாலும் முயற்சிகளைத் தொடர்ந்தார் . 

     கோவில் பட்டிப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் காமராசர் . அப்போது பலர் இயக்குநர் அவர்களின் வார்த்தைகளைக்  கேட்டு மதிய உணவு போடுவதற்கான ஆயத்தங்களை செய்து வைத்திருப்பதாகவும் இயக்குநர் வந்து தொடங்குவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முதல் அமைச்சரே இருக்கிறார் அவரே தொடங்கி வைக்கலாம். ஆனால் இயக்குநருக்காகக் காத்திருக்கிறோம் என்று சொன்னதும் சிறிதும் கோபப் படவில்லை காமராசர். சென்னைக்கு வந்ததும். " நெ. து. சுவை அழைத்து நிறைய ஊர்களில் பள்ளிகளில் மதிய உணவு போட ஏற்பாடு  செய்து விட்டு உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். உடனே சென்று தொடங்கி  வையுங்கள். அதைப் பார்த்து இன்னும் பல ஊர்களுக்கும் இத்திட்டம் பரவும் என்றார் அமைதியாக .

      எவ்வளவு பெரிய திட்டம் இதற்கு முன்னோடியான அவர் திறந்து வைக்காமல் தன்னை அனுப்ப நினைக்கும் காமராசரின் பெருந்தன்மையைக் கண்டு நெஞ்சாம் நெகிழ்ந்தார் நெ.து சு.

"ஐயா, இத் திட்டத்தை தங்கள் தொடங்கி வைப்பதே முறையானது .தக்க ஏற்பாடுகளை செய்து விட்டு தங்களை அழைக்க நினைத்தேன். தாங்கள் முந்திக் கொண்டு என்னை அனுப்புகிறீர்கள்.தயவு செய்து நீங்கள் வந்து மதிய உணவு மையங்களை திறந்து வைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். பலமுறை வற்புறுத்திய பின்னே காமராஜர் இசைந்தார். 

   முதலில் பாரதி படித்த எட்டயபுரம் மன்னர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் காமராஜரைக் கொண்டு பகலுணவு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது , ஆனால் எதிர்பாரா விதமாக முதலமைச்சர் சென்னையில் இருக்கவேண்டி இருந்ததால் இயக்குநரையே அனுப்பினார். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஊர்ப் பள்ளிகளில் பகலுணவு தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன .அடுத்த நாள் வருவதாக காமராசர் தெரிவித்தார்.

முதல் மையம் தொடங்கப் பட்டது. அடுத்த நாள் முதல் நிகழ்ச்சியாக ஒரு பாலத்தை திறந்து வைத்து விட்டு  அக் கூட்டத்தில் பேசினார் முதலமைச்சர் காமராஜர். அங்கு பாலம் பற்றியோ போக்கு வரத்து பற்றியோ அதிகம் பேசவில்லை .அவரது எண்ணம் முழுவதும் ஏழைக் குழந்தைகளில் கல்வி மீதே இருந்து .

"....... யாருக்காக விடுதலை பெற்றோம் கடையரும் கடைத்தேறவே விடுதலை. அது எப்படி சாத்தியமாகும் கல்வி இல்லாமல் .... பிள்ளைகள் வயிறு காய்ந்து கிடந்தால் படிப்பு எப்படி வரும் . பள்ளிக்கு வருகிற ஏழை பிழைகளுக்கு சோறு போட்டால் , நாம் தவறவிட்ட படிப்பு, வரும் தலைமுறைகளுக்காவது கிடைக்கும்....   எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை எனக்கு வேறு இருப்பதாக நான் கருதவில்லை, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஊர் ஊராக வந்து பகல் உணவு திட்டத்துக்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன்"  என்று உணர்ச்சி பொங்கக் கூற  கூட்டம் தன்னை மறந்து எழுப்பிய கைதட்டல் ஒலி அடங்க  வெகு நேரம் பிடித்தது.

     இவ்வண்ணம்  மூவாயிரம் ஊர்களில் பகலுணவு திட்டம் தொடங்கியது.தனது எண்ணம் ஈடேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். "பொது மக்களால் எது செய்ய முடியும் என்று தெரிந்து அதை அவர்களிடம் சொல்லத் தெரிந்தவர்" என்று நெ.து.சுவை மனமார பாராட்டினார் காமராசர். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர் .

    வேலூர் நகராட்சிப் பள்ளிகளில் பகலுணவு திட்டம் செயல் படுத்த வேண்டுகோள் விடுக்கப் பட்டது .  நோட்டீசில் நெ.து.சு.வின் பகல் உணவு திட்டத்திற்கு உதவுங்கள் என்று அச்சடிக்கப் பட்டிருந்தது,
அது முதல்வரின் கவனத்திற்கு வந்தது . அந்த நோட்டீசை பார்த்தார் காமராஜர் . நெ.து.சு திட்டம் என்று அடிக் கோடிடப் பட்டிருந்தது. 

முதலமைச்சர் கோபம் கொள்ளவில்லை மாறாக, "பகல்  உணவு திட்டம் நடக்கிறது.அரசு அதற்கு பொறுப்பேற்கவில்லை. செலவு செய்யவில்லை. தடுக்கவும் இல்லை.இயக்குநருக்குக் கட்டுப்பட்டு நடத்துகிறார்கள். அப்புறம் அவர் பெயரில் நடந்தால் எப்படிக் கசந்து கொள்ளலாம்" என்று நிதி அமைச்சர் காதில் விழும்படி கூறினார். 
காமராஜரின் உயர்ந்த உள்ளத்தை என்னென்பது. இப்படியும் ஒருவர் இருக்கமுடியுமா?

   இன்னும் பல்வேறு நடைமுறைகளுக்குப் பின் 01.11.1957 முதல் பகல் உணவுத் திட்டம் அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாகிவிட்டது .

இன்னும் இத்திட்டம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 57 ஆண்டுகளுக்குப் பின் நிலை எப்படி இருக்கிறது? இன்று மதிய உணவு சத்துணவாக மாற்றம் பெற்றுள்ளது, தினந்தோறும் முட்டை வழங்கப் படுகிறது, நகர்ப் புறங்களில் சத்துணவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும். இன்றும் இதை நம்பி வரும் ஏழைக் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பல்லாயிரம் பேரை பள்ளிக்கு வரவழைத்த பெருமை காமராஜர் தொடங்கிய பகலுணவு திட்டத்தையே சாரும்.

அதை உறுதியாக செயல்படுத்திய டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் .


நன்றி:  நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்"

*******************************************************************

பின்குறிப்பு: இது சுவாரசியம் இல்லாத பதிவாக இருக்கக் கூடும் . ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.


முதல் பகுதி 

பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன் 1



செவ்வாய், 15 ஜூலை, 2014

பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்

 
(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.)

   "பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்" நினைத்துப் பார்க்க முடியாத வார்த்தைகளை ஏழைக் குழந்தைகளுக்காக அந்தப் பெருந்தகை சொன்னார். பசி இருக்கும்போது மனம் எப்படிப் படிப்பை நினைக்கும்? . மாணவன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும்போது எண்ணம் எப்படி வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை அறிய விரும்பும்? ஒரு வேளை உணவு அவனை பள்ளிக்கு வரவைக்கும் என்றால் அதை செய்தே ஆக வேண்டும் என்று பல எதிர்ப்புகளையும் மீறி முடிவெடுத்தார் கல்விக்கண் திறந்த காமராசர். இந்த திட்டம் எப்படி உருவானது?. இன்று எளிதாக பல இலவசங்களை அறிவிக்க முடிகிறது. ஆனால் அப்போதைய நிலை என்ன? வாருங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்

  1957 இல் அப்போதைய கல்வி நிலையை ஆராயவும் தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் உருவாக்கப் பட்டது தொடக்கக் கல்விக் குழு . தொடக்கக் கல்வியை  அரசுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது இக் குழு.   இதன் உறுப்பினர்களில் ஒருவரான அப்போதைய பொதுக் கல்வி இயக்குனர் நெ.து சுந்தர வடிவேலு அவர்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது தனியார் பள்ளி நடத்துபவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இனைந்து ஒரு  மாநாடு நடத்தினர் . அந்த மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் காமராசர் அழைக்கப் பட்டார். 

அவ்விழா மேடையில் அமர்ந்திருந்தபோது நெ.து.சுந்தரவடிவேலு விடம்  பேச்சுக் கொடுத்தார்  காமராசர்.
அப்போது மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  போடப்பட்டு வந்தது. அதை மனதில் கொண்டு கல்வி இயக்குனர்  நெ.து அவர்களிடம், "முன்பு நீங்கள் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய போது மதிய உணவு போட்டார்களே அதனால் பலன் இருந்ததா?" என்று கேட்டார்
"பள்ளிகளில் மதிய உணவுபோட்டதால் மாணவர் வருகை அதிகரித்தது ஐயா!" பதில் அளித்தார் நெ.து.சு 
"எப்படி சொல்கிறீர்கள்"
”திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு போடுகிறார்கள். சனிக்கிழமை அரை நாள் என்பதால் உணவு போடுவதில்லை அன்றைக்கு வருகை பாதிக்கும் குறைந்து விடும்"

"செலவு எவ்வளவு ஆனது?"

"சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றரை அணா செலவானது"

"இது சரியான கணக்குதானா. ஒன்றரை அணா என்பதற்கு அடிப்படை உண்டா? எப்படி சரிபார்த்தீர்கள்" என்றார் சிக்கனத்துக்குப் பெயர்போன காமராசர்."

இதை எதிர்பார்த்திருந்த நெ.து.சு.அவர்கள் "சென்ற சில ஆண்டுகளாக படி அரிசி பத்தணா விற்கிறது ஒரு படி அரிசி சமைத்தால் அந்த வயதுப் பிள்ளைகள் பத்து பேர் வயிராற உண்ணலாம் .ஒருவருக்கு செலவு 1 அணா. இதர பொருட்களுக்கு  அரையணா செலவாகும். இது சரிதானா என்பதை இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலாளியும் அபோது மாநகராட்சி உறுப்பினருமான ராமநாத ஐயரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டேன்" என்றார்.

அரசு பணம்தானே என்று நினைக்காமல் எவ்வளவு யோசித்து செயல் பட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்!

மேலும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார் கர்ம வீரர் "மாநகராட்சியில் எத்தனை பேருக்கு மதிய உணவு போட்டீர்கள்?. மாகாணம் முழுவதும் போட்டால் எத்தனை பேருக்கு தேவைப்படும் "
"சென்னையில் 15 சதவீதம் பேருக்குத்தான் போட முடிந்தது. இருபது விழுக்காடாக அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு சோறுபோட முடியும் என்று தெரிவித்தார்"

உடனே காமராஜர் " நகரத்தில் 30 விழுக்காடு என்றால் கிராமத்தில் இதைவிட அதிகமாக இருக்குமல்லவா? மூன்றில் ஒரு பங்கு இருந்தால்தான் நிறைவாக இருக்கும், அப்படி எனில் எத்தனை நாளைக்கு போட வேண்டி இருக்கும்" 
  அவரது சிந்தனை எப்படியாவது இத்திட்டத்தை செயல் படுத்திவிட வேண்டும் என்ற நிலையில் பயணித்தது. அதற்காக உடனே மனதில் நினைத்ததை ஆணையாக்கி விடவில்லை . அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர்தான் செயல்படவேண்டும் எண்ணம் உடையவராக இருந்தார் .அதனால் தன் ஐயங்களை தெளிவு படுத்தும் வண்ணம் நெ.து.சு அவர்களை கேள்வி மேல் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்

நெ.து.சு "ஐயா! ஆண்டுக்கு 210 நாட்களுக்கு போட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து இலட்சம் பேர்களுக்கு உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி செலவாகும் " என்று அப்போதே கணக்கிட்டு சொன்னார் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் அந்த செலவு இரண்டு மூன்று மடங்காக உயர்ந்து விடும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
இதை மனதில் இருத்திக் கொண்ட காமராசர் மாநாட்டில் பேசினார். தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆக்கப்பட மாட்டாது என்ற உறுதி அளித்துவிட்டு தொண்டு மனப்பான்மையுடன் கல்வியை வளர்க்க கேட்டுக் கொண்டு தொடர்ந்தார்
  "நமது உடனடி வேலை ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப் பள்ளி தொடங்குதலே ஆகும். ஆனால் பள்ளி இருக்கிற ஊர்களில் கூட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு போவது இல்லை. ஏழைப் பையன்களுக்கும் பெண்களும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தாலும் போதுமென்று ஆடு மாடு மேய்க்கப் போய் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள் அப்படிப் பட்டவர்களை பள்ளிக்கூடங்களுக்கு வரும்படி செய்வது முக்கியம்
"அதற்கு ஏற்ற வழி மாநகராட்சிப் பள்ளிகளில் போடுவது போல மதியம் பள்ளிகளிலேயே உணவு போடுவதே. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இப்போது இயக்குனருடன் கணக்கு போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் ஒரு கோடி இன்னும் சில ஆண்டுகளில் செலவு  பல மடங்காகிவிடும். பரவாயில்லை. நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல . தேவைப்பட்டால் அதற்காக தனிவரிகூடப் போடலாம் . இருக்கிற வரியிலோ புது வரியிலோ படிப்பவர்களுக்கு இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்வோம்.இதற்கு எல்லோரும் ஒத்துழைக்கும்படி விடுகிறேன்." என்ற காமராசர் இயக்குனர் பக்கம் திரும்பி இதற்கான திட்டம் ஒன்றை உடனடியாக தீட்டிக்கொண்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டார்.

 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதை குறை கூறி  தலையங்கம் எழுதியதாம்.

அப்படி என்ன எழுதியது"
 (  தொடரும்)
அடுத்த பகுதிக்கு இங்கே க்ளிக் செய்யவும் 

பின்குறிப்பு: மதிய உணவு வரலாற்றை ஒரே பதிவில் முடித்து விட நினைத்தேன், நேரமின்மை காரணமாக நாளை தொடர்கிறேன்.

இதில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் முன்னாள் பொதுக் கல்வி இயக்குனராகப் பணிபுரிந்த டாக்டர் நெ.து சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்" என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.இந்த நூலைப் படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்பட்டது. பள்ளியில் இவரது கட்டுரையை பாடமாக படித்த நினவு இருக்கிறது என்றாலும் இந்த நூலைப் படிக்கும்போது அவர்  மீது தனி மரியாதை உண்டானது. கல்வித் துறைக்கும் மாணவர்க்கும் ஆசிரியர்களுக்கும் சுயநலமின்றி எப்பேர்ப்பட்ட காரியங்கள் எல்லாம் சாதித்திருக்கிறார் என்பதை அறியும்போது வியப்பு ஏற்பட்டது. இவரைப் பற்றி ஒரு தனி கட்டுரை எழுத வேண்டும் எனது விருப்பம். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.





*********************************************************************

தொடர்புடைய பதிவு 




வியாழன், 9 மே, 2013

+2 தேர்வு முடிவுகள் 2013 -பரபரப்பான நாள்

பெற்றோர்களே!,
   இன்னும் சிறிது நேரத்தில் +2 தேர்வு முடிவுகள்  வெளியாக உள்ளது. முடிவுகளை கீழ்க்கண்ட இணைய தளங்களில் காணலாம். உங்கள் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களின் +2 படிக்கும்  பிள்ளைகளின்  தேர்வு முடிவுகளை பார்க்க நீங்களும் உதவலாம் 

இதோ முடிவுகள் வெளியாக உள்ள இணைய தளங்களின் இணைப்புகள் 
கிளிக் செய்யுங்கள் முடிவுகளைப் பாருங்கள் 
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
   மாணவர்கள் என்ன மதிப்பெண் கிடைக்குமோ என்று பரபரப்புடன் இணையத்தின் முன் காத்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களோ நம் மகன்/மகள் மற்றவர்களை அதிக மதிப்பெண் பெற வேண்டுமே என்று டென்ஷனுடன் இருப்பார்கள். +2 எழுதிய மாணவர்களின் பரபரப்புடனும்  அமைதியின்றியும் காணப்படுவார்கள்.   +2 மதிப்பெண் குறைந்து விட்டால் வாழ்க்கையே தொலைந்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி குழந்தைகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். அதுவும் நடுத்தர குடும்பப்  பெற்றோர்கள்கிண்டி அண்ணா பலகலைக் கழகத்தில் படித்தால்தான் ஜென்ம சாபல்யம் அடையமுடியும் என்பதுபோலவும் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆக முடியும்  என்பது போல   தோற்றத்தை  உருவாக்கி மார்க் குறைஞ்சுபோச்சுன்னா அவ்வளவுதான் என்று குழந்தைகளையும் மிரட்டுவார்கள்.
   ஆனால் +2 மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ஒருவேளை  பிள்ளைகள் குறைவாக மதிப்பெண் பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ திட்டவோ அடிக்கவோ செய்யாதீர்கள்.
   நேற்று முக நூலில் பார்த்தேன். மதிப்பெண் வருவதற்கு முன்பே குறைவாகத்தான் இருக்கும் என்று ஒருமாணவன் தற்கொலை செய்து கொண்டானாம்.
இவையெல்லாம் தவிர்க்கப் படவேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை தருபவை அல்ல. அதையும் தண்டி வாழ்வில் சாதிக்க ஆயிரம் வழி உண்டு.
மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்

**************************************************************************************************

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

விஜய் டிவி 7C எப்படி?


    இந்த வாரத்தில் கல்வி தொடர்பான இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்டன. ஒன்று ஆசிரியர் தினம் (05.09.2012). இன்னொன்று உலக  எழுத்தறிவு தினம்(08.09.2012) . இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால் மாணவர் ஆசிரியர் தொடர்பான ஒரு தொலைக்காட்சித்  தொடரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  சமூக மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணரவேண்டும்.இந்த நல்ல  விஷயங்களை  விஜய் தொலைக் காட்சியின் ஏழாம் வகுப்பு 'சி' பிரிவு தொடர் எடுத்துரைக்கிறது என்று நினக்கிறேன் 
    7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய  தொடர் இது ஒன்றாகத்தான்  இருக்கும் என்று நினைக்கிறேன்.

   முதல் பகுதியிலிருந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்தவற்றை வைத்து இதன் கதையை உணர முடிகிறது.இதில் நடிக்கும் நடிகர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது.

  கனவுகளுடனும் குறிக்கோளுடனும்  ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று  தெரியவில்லை)  அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை  7C  வகுப்பு ஆசிரியராக  இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது. 7-Cமாணவர்கள் யாருக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் நற்குணங்கள் இல்லாதவர்களாகவும்,ஆசிரியர் உட்பட அனைவரயும் கிண்டல் கேலி செய்பவர்களாகவும்,படிப்பதில் துளி கூட விருப்பம் இல்லாதவர்களாகவும், இருப்பது கண்டு திகைக்கிறார்.

        வேறு ஆசிரியர் எவரும்  அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுத்து விட்டதால்தான் தனக்கு அந்த வேலை கிடைத்தது என்பதையும் அறிந்து கொள்கிறார் பள்ளியில் உள்ள மற்றவர்கள் ஸ்டாலின் மீது பரிதாபப் படுகிறார்கள் அல்லது நகைக்கிறார்கள்.

    ஆனால் ஸ்டாலின் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகவும் மோசமாகக் கருதப்படும் ஏழு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார். கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

  தலைமை ஆசிரியர் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார்.  மற்ற ஆசிரியர்கள் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள்.பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருக்கிறது கதை.

  வாட்டர் டேங்க்,பட்டாசு போன்ற பட்டப் பெயர்களுடன் மாணவர்கள் உலா வருவதும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும்  ஒரு அரசு பள்ளியின் வகுப்பை நினைவு படுத்துகிறது. மாணவர்கள் மிக அற்புதமாக நடிக்கிறார்கள்.

  ஆசிரியர் ஸ்டாலினாக நடிப்பவர் எளிமையான ஒரு கிராமத்து ஆசிரியரை நினைவு  படுத்துகிறார். யதார்த்தமான நடிப்பு.

ஒரு காட்சி: ஆய்வுக்காக அப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வர இருக்கிறார். அவர் மாணவர்கள் கற்றதை அறிய கேள்விகள் கேட்பார்.மாணவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் பள்ளிக்கு கெட்ட பெயர் எண்பதுடன் , ஸ்டாலினின் வேலைக்கு  ஆபத்து வந்து விடும். வேறு யாரும் வகுப்பு எடுக்க மறுக்கும் சூழ் நிலையில் அவரே அனைத்துப் பாடங்களயும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போது அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் எல்லா பாடமும் நான் எடுத்துடுவேன். ஆனா இங்க்லீஷ் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அதை நீங்க எடுத்தா நல்லா  இருக்கும் என்று சொல்லும்போது நாமும் சேர்ந்து அவரது துயரத்தில் பங்கு கொள்ளலாம் போல இருக்கும். 

    ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து பாடம் சொல்லித் தருபவராகவும்,அவர்களுதிய மனதில்மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர்களுக்கு தன் நன்னடத்தை பேச்சு மூலம் முன்மாதிரியாக திகழ்பவரும்தான்  ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகக் கருதுகிறேன். ஏழ்மை, மற்றும் மோசமான குடும்பப்  பின்னணியில் இருந்து  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆங்கிலப் பள்ளிகள் போல பெற்றோர்களைக் கூப்பிட்டு உன் பிள்ளை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.(படிக்கவைக்க வேண்டிய அவர்கள் உன் பையன் ஏன் சரியா படிக்க மாட்டேங்கறான் என்று பெற்றோர்களிடமே கேட்பார்கள்.) சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் இதை ஸ்டாலின் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

  தலைமை ஆசிரியர், பியூன் பிற ஆசிரியர்கள்  நடிப்பும் அருமை. டைமிங் காமடி கலாட்டாக்களுக்கும்   குறைவில்லை. 

   உங்களுக்கு எந்த ஆசிரியரை பிடிக்கும் என்று மாணவர்களிடம் கேட்கும்போது எனக்கு  ஸ்டாலின் சாரைத்தான் பிடிக்கும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.ஏன் என்று காரணம் கேட்கும்போது அவன் பக்கத்து மாணவனைக்  கேட்க அவன் தெரியல என்று சொல்லும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தானாக ஒரு மரியாதை அவர்  மீது வந்து  விடுகிறது.

  ஸ்டாலின் சார் முதல் முதல்ல கிளாசுக்கு வந்தப்ப கருப்ப பேன்ட் கட்டம் போட்ட சட்ட போட்டிருந்தார் என்று மாணவிகள் பேசிக்கொள்வது படு யதார்த்தம்.

    அடுத்து வரும் பகுதிகளின் முன் பார்வைக் காட்சி ஒன்றில்  மாணவர்கள்  ஆசிரியர்தான் சேர்த்து ஒரு க்ரூப் போட்டோ எடுக்கின்றனர்.வழக்கமா இப்படியே எடுக்கிறாயே கொஞ்சம் வித்தியாசமா எடுப்பா  என்று போட்டோ எடுப்பவரிடம் சொல்ல. எப்படி சார்? என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக்  என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ! என்று கூச்சலிட்டுக் கொண்டே ஆசிரியரை நெருங்க அப்படியே புகைப்படம் எடுக்கப் பட, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை.

   இப்படியும்  ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம்  ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

      தமிழ் வழிப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலை அழகான  தொடராக எடுத்த தைரியத்திற்காக விஜய் டிவி யைபாராட்டலாம். தொடரில் குறைகள் இருந்தாலும் அவற்றை தாராளமாக மறந்து  விடலாம்.
                   *********************************** 
இதைப் படித்துவிட்டீர்களா? 
                   *****************************************

ஞாயிறு, 15 ஜூலை, 2012

காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.

  
    இன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது  ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.

        கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி  கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது  படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு  அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு   காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்.  இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
 
        மாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.

        தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர்.  படிக்காத மேதை அவரை  இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
              **********************************
         இன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப்  சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.
    கவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது  கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.  அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்'  என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.

அந்தப் பாடல் வரிகள் 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு  யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!

      என்ன அருமையான பாடல்! தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே!
     காமராசரின்  தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
          
  பின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்!.
       ************************************************ 


இதைப்  படித்து விட்டீர்களா?

திங்கள், 30 ஜனவரி, 2012

படிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய சம்பவம்


       இதோ இந்த படத்தில் உள்ள பெண்ணின் பெயர் ஷ்ரவாணி. வயது 17. இவரைப் பற்றி வெளியான செய்திதான். நெஞ்சை அதிர வைத்தது. "கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்று அவ்வை சொன்னது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் அதை செய்து காட்டிவிட்டார் இந்தப் பெண். ஆம். ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கான பணம் சேர்ப்பதற்காக கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
      ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நரசிம்மன்னா என்பவரின் மகள்தான் ஷ்ரவாணி. இதய நோயாளியான நரசிம்மன்னா தன் இளைய மகளான ஷ்ரவாணியை +2 விற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. ஷ்ராவாணி ஆசிரியையாக விரும்பினார். +2 வில்  அவர் எடுத்த மதிப்பெண்கள் 752 / 1000. ஏழ்மை காரணமாக தந்தையால் தன்னை தொடர்ந்து படிக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஷ்ரவாணி எப்படியாவது தனது கனவான ஆசிரியர் பயிற்சியில்  சேர பிச்சை எடுக்கவும்   துணிந்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவராம் ஷ்ராவாணி. அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்ததாம்.
       அதே மாவட்டத்தை சேர்ந்த ஜங்கலப்பா என்பவரின் உதவியுடன் ஆலப்புழாவிற்கு வந்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவிற்கு  கட்டிடத் தொழிலாளியாக இவரது தந்தை வந்திருக்கிறார், அவருடன் ஷ்ரவாணியும் உடன் வந்திருக்கிறார்.

    ஒன்பது நாட்களாக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஷ்ரவாணி ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் சம்பாதித்ததாகவும் தற்போது 2834 ரூபாய் பிச்சையின் மூலம் சேர்த்திருப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு மொத்தம் 24000 ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
       ஓரிரு முறை மட்டுமே தன்னை சந்தித்த ஜங்கலப்பா தனக்கு எந்தவித கமிஷனும் பெற்றுக்கொள்ளாமல் உதவியதாகவும், தங்குமிடத்திற்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் மட்டும் தந்ததாகவும் தெரிவித்தார்.
         ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஷ்ரவாணியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி மீட்டு மகிலாமன்றம் அமைப்பிடம் ஒப்படைத்தது. பின்னர் அவர் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
         பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ஷ்ரவாணி  படிப்பதற்கு நிதி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். எப்படியோ நல்லபடியாக ஊர் சேர்ந்து அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
       இதில் நெஞ்சை உறுத்துகிற விஷயம் என்னவென்றால் சுதந்திரம்  பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏழைகள் கல்வி பெற எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.? ஒருவேளை அந்தப் பெண் சமூக விரோத கும்பலிடம் சிக்கி இருந்தால் என்னாவது? எத்தனையோ திட்டங்கள் இருக்கிறதாகச் சொல்கிறார்கள்? ஆனால் இந்தப் பெண்ணுக்கு அவை என்ன உதவி செய்தது? இதற்கு காரணம் அரசியவாதிகளா? சமூகமா? ஒட்டுக்கேட்க ஓடிவரும் அரசியல் வாதிகள் எங்கே போனார்கள்? தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பயனில்லாத வெட்டிப் போராட்டங்களை நடத்துவதற்குத்தானே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது?.
       ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பணம் சேர்த்து படிப்பை தொடரலாம் என்று அவனால் முடிந்த அவனுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறானே? ஆனால் நாம் என்ன செய்தோம்? சுற்றி இருப்பவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை வாய் மூடி மௌனிகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டியவர்களே.
     அம்மா ஷ்ராவாணி! மனசாட்சி உள்ளவர்கள் சார்பாகக் கண்ணீருடன் கேட்கிறேன். எங்களை மன்னிப்பாயா?
************************************************************
இதையும் படியுங்க!