என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 ஜனவரி, 2012

படிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய சம்பவம்


       இதோ இந்த படத்தில் உள்ள பெண்ணின் பெயர் ஷ்ரவாணி. வயது 17. இவரைப் பற்றி வெளியான செய்திதான். நெஞ்சை அதிர வைத்தது. "கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்று அவ்வை சொன்னது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் அதை செய்து காட்டிவிட்டார் இந்தப் பெண். ஆம். ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கான பணம் சேர்ப்பதற்காக கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
      ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நரசிம்மன்னா என்பவரின் மகள்தான் ஷ்ரவாணி. இதய நோயாளியான நரசிம்மன்னா தன் இளைய மகளான ஷ்ரவாணியை +2 விற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. ஷ்ராவாணி ஆசிரியையாக விரும்பினார். +2 வில்  அவர் எடுத்த மதிப்பெண்கள் 752 / 1000. ஏழ்மை காரணமாக தந்தையால் தன்னை தொடர்ந்து படிக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஷ்ரவாணி எப்படியாவது தனது கனவான ஆசிரியர் பயிற்சியில்  சேர பிச்சை எடுக்கவும்   துணிந்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவராம் ஷ்ராவாணி. அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்ததாம்.
       அதே மாவட்டத்தை சேர்ந்த ஜங்கலப்பா என்பவரின் உதவியுடன் ஆலப்புழாவிற்கு வந்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவிற்கு  கட்டிடத் தொழிலாளியாக இவரது தந்தை வந்திருக்கிறார், அவருடன் ஷ்ரவாணியும் உடன் வந்திருக்கிறார்.

    ஒன்பது நாட்களாக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஷ்ரவாணி ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் சம்பாதித்ததாகவும் தற்போது 2834 ரூபாய் பிச்சையின் மூலம் சேர்த்திருப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு மொத்தம் 24000 ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
       ஓரிரு முறை மட்டுமே தன்னை சந்தித்த ஜங்கலப்பா தனக்கு எந்தவித கமிஷனும் பெற்றுக்கொள்ளாமல் உதவியதாகவும், தங்குமிடத்திற்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் மட்டும் தந்ததாகவும் தெரிவித்தார்.
         ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஷ்ரவாணியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி மீட்டு மகிலாமன்றம் அமைப்பிடம் ஒப்படைத்தது. பின்னர் அவர் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
         பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ஷ்ரவாணி  படிப்பதற்கு நிதி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். எப்படியோ நல்லபடியாக ஊர் சேர்ந்து அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
       இதில் நெஞ்சை உறுத்துகிற விஷயம் என்னவென்றால் சுதந்திரம்  பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏழைகள் கல்வி பெற எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.? ஒருவேளை அந்தப் பெண் சமூக விரோத கும்பலிடம் சிக்கி இருந்தால் என்னாவது? எத்தனையோ திட்டங்கள் இருக்கிறதாகச் சொல்கிறார்கள்? ஆனால் இந்தப் பெண்ணுக்கு அவை என்ன உதவி செய்தது? இதற்கு காரணம் அரசியவாதிகளா? சமூகமா? ஒட்டுக்கேட்க ஓடிவரும் அரசியல் வாதிகள் எங்கே போனார்கள்? தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பயனில்லாத வெட்டிப் போராட்டங்களை நடத்துவதற்குத்தானே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது?.
       ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பணம் சேர்த்து படிப்பை தொடரலாம் என்று அவனால் முடிந்த அவனுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறானே? ஆனால் நாம் என்ன செய்தோம்? சுற்றி இருப்பவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை வாய் மூடி மௌனிகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டியவர்களே.
     அம்மா ஷ்ராவாணி! மனசாட்சி உள்ளவர்கள் சார்பாகக் கண்ணீருடன் கேட்கிறேன். எங்களை மன்னிப்பாயா?
************************************************************
இதையும் படியுங்க!

6 கருத்துகள்:

 1. நல்ல பதிவு வாழ்த்துக்கள்........... உண்மைதான் இதுபோன்றவற்றுக்கு நாங்களும் எதோ விதத்தில் ஒரு காரணமாகிறோம்.

  பதிலளிநீக்கு
 2. "ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பணம் சேர்த்து படிப்பை தொடரலாம் என்று அவனால் முடிந்த அவனுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறானே? ஆனால் நாம் என்ன செய்தோம்?"
  நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 3. மனதை கனக்க வைத்த பதிவு. நானும் வெக்கி தலை குனிகிறேன்.!!

  பதிலளிநீக்கு
 4. இந்தியா முன்னேருகிறது தன்னிறைவு பெற்று விட்டோம் என்று நித்தமும் தம்பட்டம் அடிக்கும் அரசியல்வாதிகள் இதை கவனிப்பார்களா??...

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895