என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சச்சினுக்கு ஒரு கடிதம்.


அன்புள்ள சச்சின்,
       உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும்  ஒருவன். விளயாட்டுத் துறையில் சிறப்பாக செயல் பட்டவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்று மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ள நிலையில் உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் படலாம் என்ற பத்திரிகைச் செய்திகள் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அரசியல் தலைவர்கள். விளையாட்டு வீரர்கள், உள்ளிட்ட பல்வேறு துறையினரும் உங்களுக்கு பாரத  ரத்னா வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரே போன்றவர்கள் கூட உங்களுக்கு பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும் அன்று வலியுறுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கதுதான்.

       நீங்கள் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப் படுகிறீர்கள். ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன்,"நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக நான்காம் இடத்தில் விளையாடுகிறார். என்று கூறியிருப்பது சாதாரண விஷயமல்ல. (I have seen GOD , he bats at no.4 for India in Tests. - Matthew Hayden)  இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களின் ஆதரவையும் பெற்றிருப்பது. ஆச்சர்யம்தான்.

       இந்திய இளைஞர்களும் சிறுவர்களும் உங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள். உங்களை விளம்பரத்தில் பார்த்தால் கூட பரவசம் அடைகிறார்கள். மைதானத்தில் நீங்கள் செஞ்சுரி  அடித்தால் நாங்கள் செஞ்சுரி அடித்ததாகவே நினைக்கிறோம். நீங்கள் செஞ்சுரியை தவற விட்டால் நாங்கள்  வருத்தம் அடைகிறோம். உங்களது நூறாவது செஞ்சுரியை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் எண்ணிலடங்கா கிரிக்கெட் சாதனைகளின் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் அதிக செஞ்சுரி,ஒருநாள் போட்டிகளில் அதிக செஞ்சுரி, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிகமான ஒருநாள்  மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். அதிக MAN OF THE MATCH விருது பெற்றவர் உள்ளிட்ட உங்கள் சாதனைகளை பட்டியலிட இந்தக் கடிதம் போதாது.

       கிரிக்கெட் உலகம் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பெயர் போனது. ஆனால்  நீங்கள் எந்த சர்ச்சையிலும் சிக்கியதில்லை. மைதானத்திலும் வெளியிலும் நீங்கள் நேர்மையானவராகவும் நாணயமாகவும் ஒழுக்கத்துடனும்  நடந்து கொண்டிருகிறீர்கள். உங்களைப் பற்றி விமர்சித்தவர்கள் மீதும்  நீங்கள் கோபம் கொண்டதில்லை. உங்களுடைய ஆட்டம்தான் அவர்களுக்கு பதிலாக அமைந்தது.  
     நீங்கள் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்திருக்கிறீர்கள். இருநூறு குழந்தைகளுக்கு கல்விக்கான செலவை அப்னாலயா என்ற அமைப்பின் மூலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 140 அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான நிதியினைப் பெற உதவி இருக்கிறீர்கள்.

       குறை என்று உங்கள் மீது சொல்வதற்கு அதிக அளவில் ஏதுமில்லை என்றபோதும்., வெளி நாட்டில் உங்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட காரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக உங்களுக்கு  இந்திய அரசு அளித்த சலுகை சர்ச்சைக்குரியதாக இருந்தது. சமீபத்தில் நீங்கள் விளம்பரத்தில் நடித்து  சம்பாதித்த பணத்திற்கு போராடி வரிச்  சலுகை பெற்றது உங்கள் ரசிகர்களான எங்களுக்கு உறுத்தலாகத்தான் இருந்தது. அந்த வரியை செலுத்த முடியாத நிலையிலா நீங்கள்  இருந்தீர்கள்?

       சமீப காலங்களில் உங்கள் ஆட்டத்திறன் குறைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நூறாவது சதத்தை  அடிப்பதற்கு நீங்கள் படும் பாட்டை நாங்கள் அறிவோம். நீங்கள் ஒய்வு பெற வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே நினைக்கிறோம். இளைஞர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டியதும் அவசியமாகிறது.

       ஆனாலும்  நம் இளைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்துவது இல்லை என்பது வேதனைக்குரியது. தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரிலும் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் நன்றாகவே விளையாடி இருக்கிறீர்கள்.

       உங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும். நீங்கள் கைம்மாறு செய்ய வேண்டும்.  ஆஸ்திரேலியா டூருக்கு உங்கள் மகன் அர்ஜுனையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அங்கு பயிற்சியின் போது  அவர் உங்களுக்கு பந்து வீசினார். அவருக்கு நல்ல பின்புலமாக நீங்கள் அமைந்திருக்கிரீர்கள்.  ஆனால்  No.10 T  சட்டை அணிந்து நாமும் ஒரு டெண்டுல்கராக வரவேண்டும் என்று கனவு காணும் ஏழை விளயாட்டு வீரர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. 
       இந்திய கிராமங்களில் பல்வேறு விளையாட்டுகளில்  திறமையானவர்கள் எவ்வளவோ பேர்  மறைந்து கிடக்கிறார்கள்.  அவர்களைக் கண்டறிந்து பட்டை தீட்டி ஒலிம்பிக் பந்தயங்களில் பதக்கங்களை வெல்லும் அளவுக்கு ஏதேனும் நீங்கள் செய்ய வேண்டும். இது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.
       உங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது. ஆனால்   பாரத ரத்னா பெறுவதற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதகக் கூறப்படும்  இந்திய ராணுவத்தில்  பணியாற்றியவரும் ஹாக்கி விளயாட்டு வீரருமான   தியான் சந்த் அவர்களுக்கு (தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும்) வழங்கப்பட நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

       தியான் சந்த் அவர்கள் மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். அவருடைய சாதனைகளும் சாதாரணமானவை அல்ல. அவற்றை விளக்க இந்தக் கடிதம் போதாது. அவை உங்களுக்கு தெரியாததல்ல. உங்கள் சாதனைகளை  நாங்கள் கண்ணால் கண்டிருக்கிறோம். தியான் சந்தின் சாதனைகளை நாங்கள் பார்த்ததில்லை. இன்றைய இளைஞர்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு பாரத ரத்னா ஒரு வாய்ப்பாக இருக்கும்.  நீங்கள் பாரத ரத்னா பெறுவதற்கு தகுதி உடையவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்து பின்னர் இவ்விருதைப் பெற வயதும் காலமும் உள்ளது.  விளையாட்டு  வீரர்களில் முதலில் பாரத ரத்னா விருது தியான் சந்த்  அவர்கள் பெற உங்கள் மனமார்ந்த ஆதரவை  அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
        நன்றியுடன்
                            இப்படிக்கு
             உங்கள் உண்மையான ரசிகர்களில் ஒருவன் 
*******************************************************************
இதையும் படியுங்க!
நானும் போனேன்! புத்தகக் கண்காட்சி 2012
நானும் நானும்
தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

3 கருத்துகள்:

  1. நன்றாக இருந்தது. என் தனிப்பட்ட சிந்தனையில் சச்சின், தியான் சந்து, சிவாஜி கணேசன், மார்லன் பிராண்டோ போன்ற அசாத்தியமான மனிதர்களுக்கெல்லாம் விருதுகளோ பட்டங்களோ ஒரு வித்யாசத்தைக்கூட ஏற்படுத்தப்போவதில்லை. அவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள், அதை ஒரு விருதைக்கொண்டு தான் மக்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் எண்ணுவதில்லை. மக்கள் மனதில் வாழ்பவர் என்றும் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார்.

    எனினும், சச்சின் மீதுள்ள தூய்மையான அன்பு நன்கு விளங்குகிறது. சந்தோசம்!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895