என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

யாரோ பார்க்கிறார்கள்!


இதையும் படிக்க!
அஞ்சிலே ஒன்றை வைத்தான்! அஞ்சிலே ஒன்றை விட்டான்!  
 தமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்



********************************************************************************************************************
யாரோ பார்க்கிறார்கள்!

 (எங்கேயோ  எப்போதோ படித்தது)


       பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரியவர்  பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார், பேருந்து இன்னும் வரவில்லை. லேட்டாகப் போனால் முதலாளி திருப்பி அனுப்பி விடுவாரோ என்கிற கவலை அவர் முகத்தில் தெரிகிறது. கையைப் பிசைந்துகொண்டு கடிகாரத்தையும். சாலையையும் மாறி மாறி பார்த்த்துக்கொண்டிருக்கிறார். ஓர் வழியாக பேருந்து வந்து அதில் அவசரமாக ஏறுகிறார். உட்கார இடமும் கிடைத்துவிட்டது. இப்போது அவரது சிந்தனை தனது அவசர பணத் தேவையை எப்படி சமாளிப்பது என்பதில் இறங்கியது. முதலாளியைக் கேட்டால் கொடுப்பாரோ மாட்டாரோ தெரியவில்லை.
         கல்லூரியில்  படிக்கும் மகள் கேட்ட புத்தகங்கள் வாங்க வேண்டும். மனைவி சொன்ன மளிகைப் பொருட்கள்  வாங்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தனது இயலாமையை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார் .அவருக்கு அவர் மேலேயே கோபம் வந்தது.

       அப்போது ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக தன் பாக்கெட்டிலிருந்து சில்லறை எடுக்கிறார். சில்லறை எடுக்கும்போது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று கிழே விழுகிறது.  அதை அவர் கவனிக்கவில்லை. பெரியவரின் காலடியில் அது நகர்ந்து வந்துவிடுகிறது. பெரியவர் அதை எடுத்து கொடுக்க நினைக்கும்போது காசை தவற விட்டவர் முன்னால் சென்றுவிடுகிறார். இப்போது பெரியவர் மனதில் சிறிது சலனம் ஏற்படுகிறது. யாரும்தான்  பார்க்கவில்லையே! அந்தப் பணத்தை நாம் எடுத்துக்கொண்டால் என்ன? நாமாகத் திருடினால் தானே தப்பு. தானாகக் கிடைப்பதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அப்படியே ஏமாற்றுவதாக இருந்தாலும், எவ்வளோ பேர் எப்படி எல்லாமோ ஏமாற்றுகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். இது பெரிய தவறு ஒன்றுமில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு அதை எடுக்கலாம் என்று கீழே குனியும் முன் சுற்றுமுற்றும் பார்க்கிறார். அப்போதுதான் கவனித்தார். சிறிது தூரத்தில் வெள்ளை சட்டையும் கூலிங் க்ளாசும் அணிந்த  ஒருவர் இவரையே பார்த்துக்கொண்டிருந்தார். லேசாக புன்னகைக்கவும் செய்தார். பணம் விழுந்ததை அவரும் பார்த்திருப்பாரோ?
       பெரியவருக்கு சிறிது நடுக்கம் ஏற்ப்பட்டது. தான் பணத்தை எடுக்க முற்பட்டதை பார்த்துவிட்டாரோ?. சரி சிறிது நேரம் பார்க்கலாம். ஒருவேளை அவர் இறங்கிவிட்டால் அப்போது எடுத்துக்கொள்ளலாம் என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போல் தோன்றியது. முன்பின் பழக்கமில்லாத அந்த வெள்ளை சட்டைக்காரர் மேல் கோபமாக வந்தது.
      
       வெள்ளை சட்டைக்காரருக்கு பக்கத்தில் இருந்தவர் இறங்கினாரே தவிர அவர் இறங்கவில்லை. அவரது இடத்தில் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய போலீஸ் காரர் அமர்ந்தார். போலீஸ் காரர் உட்கார்ந்ததும் அவரது பக்கத்தில் இருந்த வெள்ளை சட்டைக்காரர் அவரிடம் என்பக்கமாகப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பணம் விழுந்ததைப் பற்றியும் தன்னைப் பற்றியும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ? பெரியவருக்கு பயம் வந்து விட்டது. அவருடைய பிரச்சனைகள் எல்லாம் மறந்து விட்டன. போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டால் அவமானமாகப் போய்விடுமே என்று நினைத்தவர், சுற்றுமுற்றும் பார்த்தார். பணத்தை தொலைத்தவர் அது தொலைத்தது தெரியாமலே தூரத்தில் நின்று கொண்டிருந்தார். நல்லவேளை அவர் இறங்கவில்லை என்று நினைத்த பெரியவர் சட்டென்று அந்தப் பணத்தை கையில் எடுத்து பணத்தை தவற விட்டவரை அழைத்து, இந்தப் பணம் உங்களடையதுதானா பாருங்கள் என்று அவரிடம் கொடுத்தார்.
       அவர் தன் சட்டைப்பயில் கைவிட்டுப் பார்த்து அது அங்கு இல்லாதது கண்டு ஆமாம் சார், என்னோடதுதான்! டிக்கெட் எடுக்கும்போது விழுந்துடிச்சி போல இருக்கு. ரொம்ப நன்றி சார் என்ற சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டார்.

      இப்போதுதான் பெரியவருக்கு திருப்தியாக இருந்தது. பெரியவர் வெள்ளை சட்டைக்காரரைப் பார்க்க அவர்  புன்னகையுடன் பாராட்டுவதுபோல் தோன்றியது.

      அடுத்த நிறுத்தம் வந்தது. அந்த வெள்ளை சட்டைக்காரர் மெதுவாக  எழுந்தார். போலீஸ்காரர் அவரிடம் பக்கத்தில் இருந்த ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்கிறார். அவர்  தடுமாறிக்கொண்டு இறங்குகிறார்.

      அட! என்ன இது! அந்த கூலிங் க்ளாஸ் அணிந்த வெள்ளை சட்டைக்காரர் கண் தெரியாதவரா? இவரைப் பார்த்துதான் இவ்வளவு  நேரம் பயந்தோமா?
       இந்த உண்மை தெரிந்திருந்தால் நான் பணத்தை எடுத்து விட்டிருப்பேனே? நல்ல காலம் என்னைக்  தவறு செய்யாமல் தடுத்த அவர் கண் தெரியாதவர் அல்ல. என்னைக் காத்த கடவுள்.
      இப்பொழுது அவர் மனதில் சொல்ல முடியாத திருப்தி நிலவியது.

      'யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல; நல்லது செய்யவும் அதுதானே தூண்டுகிறது. அந்த யாரோ சமுதாயமாகவும் இருக்கலாம் கடவுளாகவும் இருக்கலாம்.'

************************************************************************************************ 
 இதைபடிச்சாச்சா?
மேகம் எனக்கொரு கவிதை தரும்!

 

7 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு கதை பகிர்வுக்கு நன்றி

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  2. 'யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமா நல்லது செய்யவும் அதுதானே தூண்டுகிறது. அந்த யாரோ சமுதாயமாகவும் இருக்கலாம் கடவுளாகவும் இருக்கலாம்.'

    மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  3. 'யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல; நல்லது செய்யவும் அதுதானே தூண்டுகிறது. அந்த யாரோ சமுதாயமாகவும் இருக்கலாம் கடவுளாகவும் இருக்கலாம்.'

    Arumai arumai

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895