என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 23 ஜனவரி, 2012

TTR செய்தது சரியா?


     
     சமீபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பொதிகை எக்ஸ்பிரஸ் க்காக இரவு  7.00  மணி அளவில் காத்துக்கொண்டிருந்தேன். ரயில் சிறிது நேரத்தில் வர இருப்பதையும் எந்தப் பெட்டி எங்கே  நிற்கும் என்பதையும் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு நாம் ஏற வேண்டிய பெட்டியை தேடாமல் ஏற உதவியாக இருந்தது.

       நான் எனது இருக்கையை தேடி அமர்ந்துகொண்டேன். எதிர் இருக்கையில் ஏற்கனவே குழந்தையுடன் ஒரு இளம்பெண்ணும் (இருபது  வயதுக்குள்தான் இருக்கும்). நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணும் அமர்ந்து கொண்டிருந்தனர்.    ரயில்வே போலீஸ் ஒருவர் அவர்களிடம்  இந்த ஸ்டேஷன் இல் இறங்கி விடுங்கள் அல்லது Unreserved Compartment க்கு சென்றுவிடும்படியும் கூறிக் கொண்டிருந்தார்.
      கவனித்ததில்  காரணம் தெரிந்தது. தக்கல் முறையில் முன்பதிவு செய்திருந்த  அவர்கள் அடையாள அட்டை எதுவும் கொண்டுவரவில்லை.
      எனக்கென்னம்மா? உங்க நல்லதுக்குத்தான் சொல்லறேன். TTR வந்தா நிச்சயம் ஒத்துக்கமாட்டார். ரொம்ப தூரம் போய்ட்டு நடுவழியில் இறக்கி விட்டுட்டா நீங்க ஊருக்கு  திரும்ப  போறது கஷ்டம். இங்கயே இறங்கி வீட்டுக்கு போய்டுங்க.இல்லன்ன  Unresevred  ல போங்க! கைகுழந்தை  வேற வச்சிருக்கீங்க. நான் சொல்றதை கேளுங்கம்மா?:"ன்று சொல்லிக்கொண்டிருந்தார்.
      அவர்களைப் பார்த்தால் விவரம் அறிந்தவர்களாக தெரியவில்லை. அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பது சங்கடமாக இருந்தது.
      அடையாள அட்டை எடுத்து வரவேண்டுமென்று எங்களுக்கு தெரியாது என்றனர். அவர்கள் சொல்வது உண்மை என்றே தோன்றியது. அதற்குள் TTR வந்துவிட்டார்.
      டிக்கெட்டைப் பார்த்துவிட்டு அடையாள அட்டை கேட்டார்.
 எங்ககிட்ட இல்லீங்க. எங்களுக்கு தெரியாதுங்க.டிக்கெட் வாங்கி குடுத்தவங்க எங்களுக்கு சொல்லலைங்க. 
      அதுக்கு நான் என்ன பண்ணறது? தக்கல்ல புக் பண்ணா I.D எடுத்துக்கிட்டுதான் வரணும். இல்லன்னா அபராதம் கட்டனும். அதுவும் முடியலன்னா Unresevred கம்பார்ட்டுமென்ட்டுக்கு போய்டுங்க!
      அதற்குள் இன்னொரு பெண் இந்த ஒரு தடவை மன்னிச்சுக்குங்க சார்!   மெட்ராஸ்ல இறங்கினதும் என் மருமகன்  அடையாள அட்டை எடுத்து வர போன் பண்ணி சொல்லறேன். அப்படி இல்லன்ன பணம்கொண்டு வரசொல்லி கட்டிடறேன். ரொம்ப நாள் கழிச்சி என் பொண்ணு அவ புருஷனோடு சேந்து வாழ போவுது. எங்க வீட்டில நடந்த பிரச்சனையினால எங்களுக்கு எதுவெல்லாம் கொண்டு வரணும்னு தெரியலீங்க என்று பரிதாபமாக சொல்லிக்கொண்டிருந்தார்.
  இந்த சூழ்நிலையில் குழந்தை வேறு அழ ஆரம்பித்துவிட்டது. எரிச்சலில் அந்த இளம்பெண் குழந்தையிடம் சனியனே! நேரம் காலம் தெரியாம நீவேற அழுவாத என்று திட்ட ஆரம்பித்து விட்டார்
      உங்க சொந்த பிரச்சனைக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.அடுத்து சங்கரன் கோயில் வருது. ஃபைன் கட்டுங்க இல்லன்ன அங்க இறங்கி UNRESERVED COMPARTMENT  ல ஏறிகோங்க. உங்களுக்கு பாவம் பார்த்தா என் வேலை போய்டும்.
 "எவ்வளோ பணம் கட்டனும்." என்று கேட்க
ஒருத்தர் 500 ரூபா கட்டனும். ரெண்டு பேருக்கு 1000  ரூபா கட்டனும்.என்றார் TTR  
  எங்க கிட்ட ஒரு 500 ரூபாதான் இருக்கு. ஒருத்தர் இங்க இருக்கோம்.இன்னொருத்தர்.வேற பெட்டிக்கு மாறிடறோம் என்று அந்தப் பெண் சொல்ல
இரண்டு பேர் பேரும் ஒரே டிக்கட்ல இருக்கு. போனா ரெண்டுபெரும்தான் போகணும்"
      அருகில் இருந்த பயணி ஒருவரிடம் "பாருங்க சார்! I.D  இல்லாம வந்து என் உயிரை எடுக்குறாங்க. என்ன சஸ்பென்ட் பண்ணிடுவாங்க. இது புரியாம இவங்க பேசிக்கிட்டிருக்காங்க!"
        அந்த பெண் நாங்க என்ன விதௌட் லயா ஏறி இருக்கோம். டிக்கெட்தான் வச்சிருக்கோம் இல்ல. பொம்பளங்கன்னு கொஞ்சம் கூட பாவம் பாக்காம பேசறீங்கசற்று வேகமாக சொல்ல,
      TTR  க்கு  கோபம் வந்துவிட்டது.
ஆமாம்மா!  I.D  இல்லன்ன விதௌட் தான். ரொம்ப திமிரா பேசற! என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
   பக்கத்தில் இருந்தவர் ஏம்மா! அவர்தான் சொல்றாரு இல்ல. I.D கட்டாயம் கொண்டு வரணும்னு பேப்பர்ல போட்டிருக்கான் . ஸ்டேஷன் லயும் சொல்லிட்டுதான இருக்கான். அவரு சொல்றபடி செய்மா அதுதான் உங்களுக்கு நல்லது என்று TTR க்கு SUPPORT ஆக பேசத் தொடங்கினார்.

    அஞ்சு நிமிஷத்தில வரேன் அதுக்குள்ள ஒரு முடிவு எடுங்க என்று  TTR கிளம்ப அவருக்கு ஆதரவாக பேசியவர் இன்னும் ஒரு சிலர் அவர் பின்னாலேயே சென்றனர்.
    பின்னர்தான் தெரிந்தது அவர்கள்  R.A.C  பயணிகள்.அந்தப் பெண்கள் இறங்கி விட்டால் தனக்கு பர்த் தரும்படி கேட்கவே அவர்கள் TTR பின்னால் சென்றனர் என்பது. சுய நலம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
    
    செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை நான் அவர்களிடம் TTR  வரட்டும் இன்னொரு தடவை கேட்டுப் பாக்கலாம். அப்படி ஒத்துக்கலன்னா Fine கட்டறதுக்கு வேணும்னா நான் ஹெல்ப் பண்றேன். என்றேன்.

      பின்னர் TTR வந்ததும் நான் கேட்டேன். இவங்களுக்கு வேற எதுவும் வழி எதுவும் இல்லையா? மினிமம்  FINE வாங்கி கிட்டு உதவி பண்ணுங்க இவங்கள பாத்தா இன்னொருத்தர் டிக்கட்ல ட்ராவல் பண்ற மாதிரி இல்ல. நீங்க நினைச்சா ஹெல்ப் பண்ணலாம்.
      என்ன சார்.படிச்ச நீங்களே இப்படி பேசலாமா? சீனியர் டிக்கட் செக்கர் வந்தால் நான் லஞ்சம் வாங்கிகிட்டு இவங்க ட்ராவல் பண்ண  நான் உதவி செஞ்சன்னு என்மேல ஆக்ஷன் எடுப்பாங்க! இந்த மாதிரி பரிதாபப் பட்டவங்க எவ்வளோ பேர் மாட்டிக்கிட்டுருக்காங்க தெரியுமா? இவங்களுக்காக நான் ரிஸ்க் எடுக்க முடியுமா?
     அவர்களைப் பார்த்து சரிம்மா நீங்க மாட்டிகிட்டா என்ன மாட்டி விட்டுடாதீங்க. நீங்களா தொலச்சதா சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு புலம்பிக்கொண்டே போனார்.
இறங்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. TTR  க்கு பணம் குடுக்கா முனைந்தபோது கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்று அந்தப் பெண் இறங்கும்போது சொன்னார் .  
     கிராமத்து ஏழைப் பெண்கள் அடையாள சான்றுக்காக எதை எடுத்து செல்ல  முடியும். அவர்கள் வைத்திருக்கும் ஒரே I.D ரேஷன் கார்டுதான். அதை அவர்கள் பயணம் செல்லும்போதெல்லாம் எடுத்துசெல்ல முடியுமா? அதிலும் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்குமே தவிர குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரேனும் பயணம் செய்தால் என்ன செய்வது.?
    பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கடைபிடிப்பது சரியானதுதான். என்றாலும் இதனால் அதிகமாக பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே. முறைகேடுகளை செய்பவர்கள் போலி ஆதாரங்களை காட்டி தப்பித்து விடுகிறார்கள்.
    அந்த டிக்கட் பரிசோதகர் பரிதாபப்பட்டு விதிகளை    விட்டுக்கொடுத்தது சரியா? அல்லது ரயில்வே விதிகளின் படி பயணம் செய்ய அனுமதிக்காமலிருப்பது சரியா? 

***********************************************************

 குறிப்பு: டிக்கெட் பரிசோதகரை TTR என்று அழைக்கிறோம். அதன் விரிவாக்கம் என்ன?
விசாரித்துப் பார்த்ததில் TTR என்பது தவறு TTE என்பதே சரி! TRAVELLING TICKET EXAMINER  என்பதே அதன் விரிவாக்கம் என்று தெரிந்து கொண்டேன்.  
TTR என்பதற்கும் THROUGH TURNOUT  RENEWAL என்றும் ரயில்வேயில் விளக்கம் காணப்படுகிறது ===========================================================.
இதையும் படியுங்க!
குழப்பியல் 

1 கருத்து:

  1. 'இதனால் அதிகமாக பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே. முறைகேடுகளை செய்பவர்கள் போலி ஆதாரங்களை காட்டி தப்பித்து விடுகிறார்கள்.'
    உண்மைதான் ! நல்ல பதிவு

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895