என்னை கவனிப்பவர்கள்

விஜய் டிவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் டிவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 அக்டோபர், 2012

ஜெயா டிவியின் புதுமை +விஜய் டிவி வித்தியாசம்


    சரஸ்வதி பூஜை ஆய்த பூஜையை முன்னிட்டு இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தொடர்ந்து முழுமையாக பார்க்கக் கூடிய அளவுக்கு நிகழ்ச்சிகள் வெகு   சுவாரசியமாக அமையவில்லை என்ற போதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ஜெயா டிவியின் பட்டிமன்றம்.வழக்கமாக ஞான சம்பந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.ஆனால் இம்முறை வித்தியாசமாக இலங்கை ஜெயராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றது. பட்டிமன்றத் தலைப்பு "கொடுப்பதில் இன்பமா? பெறுவதில் இன்பமா?"இதுவரை இவரை பார்த்ததில்லை.இவரது பேச்சைக் கேட்டதில்லை.நல்ல கம்பீரமான குரலில் அழகு தமிழில் அவரது பேச்சு ஈர்த்தது. நிறைந்த தமிழறிவு உடையவர் என்பது அவரது பேச்சில் தெரிய வருகிறது.ஈழத் தமிழின் சாயலின்றி தமிழகத் தமழில் பேசியது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

  முதலில் கொடுப்பதில் இன்பம் என்று பேசியபோது  ராமலிங்கம் அவர்கள் சொன்ன கம்பராமாயண பாடல் விளக்கம் அருமையாக இருந்தது.

  எல்லோரும் இறைவனுக்கு பலவற்றை கொடுக்க விரும்புகிறோம்.ஆனால் அவரிடம் இல்லாத எதை கொடுக்க முடியும் என்று சிந்திக்கிறார். இறைவனிடம் இல்லாதது என்ன இருக்கிறது.அப்படி இல்லாதது நம்மிடம் எப்படி இருக்க முடியும்.? இல்லாத ஒன்றைக் கொடுப்பதுதானே இன்பம் என்று சிந்தித்து தன்னிடம் இறைவனிடம் இல்லாத ஒன்று தன்னிடம் நிறைய இருப்பதை அறிந்து கொண்டார். அதுதான் அறியாமை அதை ஒன்றைத்தான் இறைவனுக்கு தர முடியும் என்று சொல்வதாக அமைந்த பாடலை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. கம்பரின் சாமர்த்தியம் கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.(அந்தப் பாடலை நினைவில் வைத்திருக்க முடியில்லை)

இன்னொன்று அடுத்த நாள் பட்டிமன்றத்தில் த.பாண்டியன் பட்டிமன்ற நடுவராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

                        ***************************************
  விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பெரிதாக எதுவும் கவரவில்லை என்ற போதும் சில நாட்களாக சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி பற்றிய விளம்பரம் உண்மையாகவே நன்றாக இருந்தது.
    கெளதம்,அஜித்,சுகன்யா,பிரகதி, யாழினி ஆகிய இறுதிப் போட்டியாளர்கள் எப்படி ஆவலுடன் ஃபைனலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுவாரசியத்துடன் சொல்வது சூப்பர். குறிப்பாக அஜித் டிவியில லைவா காட்டறாங்கலாமே? நேரா பாக்கறதுக்கு கூட்டம் வருமா என்று அம்மாவிடம் கேட்பதும்,பிரகதி நான் ஜெயிக்கணும்,தோத்தாலும் தப்பில்ல இல்ல! என்று சொல்வதும் ஒரு குறும்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.விஜய் டிவியின் விளம்பர யுக்தியைப் பாராட்டலாம்.

 விஜய் டிவி பார்வையாளர்களைக் கவர இன்னொரு யுக்தியையும் கடை பிடிக்கிறது.நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பிப்பதுதான் அது.

   அப்படித்தான் ஆரம்பித்தது தோனி படம்.இந்தப் படம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி, இணையத்தில் அலசப்பட்டு விட்டாலும் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.புதுவிதமான கதைக் களங்களை தைரியமாக எடுப்பதற்காக பிரகாஷ் ராஜை பாராட்டலாம்.படம் முழுவதும் அவரே தன் பிரமாதமான நடிப்பால் ஆக்ரமித்துக் கொள்கிறார்.மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக பிரமாதப் படுத்துகிறார். இவரை முழுமையாக ஒரு இயக்குனரும் பயன் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

  நடுத்தரக் குடும்பங்களில் படிப்புதான் முக்கியம்.அதுதான் உண்மையான சொத்து. நமக்கு அதைத் தவிர வேறு வழியில்ல என்று பிறந்த போதிலிருந்து குழந்தைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள்.அது முழுமையாக சரி என்று சொல்ல முடியாவிட்டாலும்,அதிக பட்ச மதிப்பெண்கள் குறைந்த பட்ச எதிர்காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கும் என்று நம்புகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு தேவைப் படுவது மினிமம் கேரண்டி.

  இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மாணவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை படிக்க வைக்க வேண்டும் என்பது. பெரும்பாலான மாணவர்கள் படிப்பைவிட விளையாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அது இயல்பும் கூட. ஆனால் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் அனைவரும் அதில் திறமை உடைவர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. விளையாட்டைப் பொருத்தவரை அதில் மிகச் சிறந்தவர்களால்தான் பாதுகாப்பான வாழ்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

   விளையாட்டுத் துறையில் புகழ் பெற அதிக கஷ்டப் படவேண்டும். ஆனால் படிப்பில் ஓரளவுக்கு சராசரியாக இருந்தாலும் எப்படியோ பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே படிப்பிற்கு முக்கியத்துவம் தரக் காரணமாக அமைகிறது. 

   கல்விச் செல்வம்தான் மிக உயர்ந்தது கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை  என்ற மனப்பான்மை சற்றுக் குறைந்தாலும் நல்லதுதான். பல்வேறு விஷயங்களை சிந்திக்க வைத்த படம் தோனி என்பதில் ஐயமில்லை.

                              ***********************
சன் டிவியின் பட்டிமன்றம் சாலமன் பாப்பையா, தலைமையில் பாரதி பாஸ்கர், ராஜா போன்றவர்களின் வாதத்தில் வழக்கம்போல் கிச்சு கிச்சு மூட்டுவதாக அமைந்தது.சிறப்பாகக் கூற ஒன்றுமில்லை.

****************

இதையும் படியுங்கள் 


ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

விஜய் டிவி 7C எப்படி?


    இந்த வாரத்தில் கல்வி தொடர்பான இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்டன. ஒன்று ஆசிரியர் தினம் (05.09.2012). இன்னொன்று உலக  எழுத்தறிவு தினம்(08.09.2012) . இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால் மாணவர் ஆசிரியர் தொடர்பான ஒரு தொலைக்காட்சித்  தொடரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  சமூக மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணரவேண்டும்.இந்த நல்ல  விஷயங்களை  விஜய் தொலைக் காட்சியின் ஏழாம் வகுப்பு 'சி' பிரிவு தொடர் எடுத்துரைக்கிறது என்று நினக்கிறேன் 
    7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய  தொடர் இது ஒன்றாகத்தான்  இருக்கும் என்று நினைக்கிறேன்.

   முதல் பகுதியிலிருந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்தவற்றை வைத்து இதன் கதையை உணர முடிகிறது.இதில் நடிக்கும் நடிகர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது.

  கனவுகளுடனும் குறிக்கோளுடனும்  ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று  தெரியவில்லை)  அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை  7C  வகுப்பு ஆசிரியராக  இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது. 7-Cமாணவர்கள் யாருக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் நற்குணங்கள் இல்லாதவர்களாகவும்,ஆசிரியர் உட்பட அனைவரயும் கிண்டல் கேலி செய்பவர்களாகவும்,படிப்பதில் துளி கூட விருப்பம் இல்லாதவர்களாகவும், இருப்பது கண்டு திகைக்கிறார்.

        வேறு ஆசிரியர் எவரும்  அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுத்து விட்டதால்தான் தனக்கு அந்த வேலை கிடைத்தது என்பதையும் அறிந்து கொள்கிறார் பள்ளியில் உள்ள மற்றவர்கள் ஸ்டாலின் மீது பரிதாபப் படுகிறார்கள் அல்லது நகைக்கிறார்கள்.

    ஆனால் ஸ்டாலின் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகவும் மோசமாகக் கருதப்படும் ஏழு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார். கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

  தலைமை ஆசிரியர் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார்.  மற்ற ஆசிரியர்கள் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள்.பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருக்கிறது கதை.

  வாட்டர் டேங்க்,பட்டாசு போன்ற பட்டப் பெயர்களுடன் மாணவர்கள் உலா வருவதும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும்  ஒரு அரசு பள்ளியின் வகுப்பை நினைவு படுத்துகிறது. மாணவர்கள் மிக அற்புதமாக நடிக்கிறார்கள்.

  ஆசிரியர் ஸ்டாலினாக நடிப்பவர் எளிமையான ஒரு கிராமத்து ஆசிரியரை நினைவு  படுத்துகிறார். யதார்த்தமான நடிப்பு.

ஒரு காட்சி: ஆய்வுக்காக அப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வர இருக்கிறார். அவர் மாணவர்கள் கற்றதை அறிய கேள்விகள் கேட்பார்.மாணவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் பள்ளிக்கு கெட்ட பெயர் எண்பதுடன் , ஸ்டாலினின் வேலைக்கு  ஆபத்து வந்து விடும். வேறு யாரும் வகுப்பு எடுக்க மறுக்கும் சூழ் நிலையில் அவரே அனைத்துப் பாடங்களயும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போது அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் எல்லா பாடமும் நான் எடுத்துடுவேன். ஆனா இங்க்லீஷ் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அதை நீங்க எடுத்தா நல்லா  இருக்கும் என்று சொல்லும்போது நாமும் சேர்ந்து அவரது துயரத்தில் பங்கு கொள்ளலாம் போல இருக்கும். 

    ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து பாடம் சொல்லித் தருபவராகவும்,அவர்களுதிய மனதில்மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர்களுக்கு தன் நன்னடத்தை பேச்சு மூலம் முன்மாதிரியாக திகழ்பவரும்தான்  ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகக் கருதுகிறேன். ஏழ்மை, மற்றும் மோசமான குடும்பப்  பின்னணியில் இருந்து  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆங்கிலப் பள்ளிகள் போல பெற்றோர்களைக் கூப்பிட்டு உன் பிள்ளை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.(படிக்கவைக்க வேண்டிய அவர்கள் உன் பையன் ஏன் சரியா படிக்க மாட்டேங்கறான் என்று பெற்றோர்களிடமே கேட்பார்கள்.) சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் இதை ஸ்டாலின் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

  தலைமை ஆசிரியர், பியூன் பிற ஆசிரியர்கள்  நடிப்பும் அருமை. டைமிங் காமடி கலாட்டாக்களுக்கும்   குறைவில்லை. 

   உங்களுக்கு எந்த ஆசிரியரை பிடிக்கும் என்று மாணவர்களிடம் கேட்கும்போது எனக்கு  ஸ்டாலின் சாரைத்தான் பிடிக்கும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.ஏன் என்று காரணம் கேட்கும்போது அவன் பக்கத்து மாணவனைக்  கேட்க அவன் தெரியல என்று சொல்லும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தானாக ஒரு மரியாதை அவர்  மீது வந்து  விடுகிறது.

  ஸ்டாலின் சார் முதல் முதல்ல கிளாசுக்கு வந்தப்ப கருப்ப பேன்ட் கட்டம் போட்ட சட்ட போட்டிருந்தார் என்று மாணவிகள் பேசிக்கொள்வது படு யதார்த்தம்.

    அடுத்து வரும் பகுதிகளின் முன் பார்வைக் காட்சி ஒன்றில்  மாணவர்கள்  ஆசிரியர்தான் சேர்த்து ஒரு க்ரூப் போட்டோ எடுக்கின்றனர்.வழக்கமா இப்படியே எடுக்கிறாயே கொஞ்சம் வித்தியாசமா எடுப்பா  என்று போட்டோ எடுப்பவரிடம் சொல்ல. எப்படி சார்? என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக்  என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ! என்று கூச்சலிட்டுக் கொண்டே ஆசிரியரை நெருங்க அப்படியே புகைப்படம் எடுக்கப் பட, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை.

   இப்படியும்  ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம்  ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

      தமிழ் வழிப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலை அழகான  தொடராக எடுத்த தைரியத்திற்காக விஜய் டிவி யைபாராட்டலாம். தொடரில் குறைகள் இருந்தாலும் அவற்றை தாராளமாக மறந்து  விடலாம்.
                   *********************************** 
இதைப் படித்துவிட்டீர்களா? 
                   *****************************************