என்னை கவனிப்பவர்கள்

கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜூலை, 2013

நான் சொல்றதுதான் சட்டம் -சொன்னது யார்?



   ஞாயிற்றுக் கிழமையன்று எதையோ  தேடியபோது பழைய தமிழ் பாட புத்தகம் ஒன்று கிடைத்தது. கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன் கவியரசு கண்ணதாசனின் காலக் கணிதம்  என்ற கவிதை கண்ணில் பட்டது. 
 இதைபலமுறை படித்திருக்கிறேன், இப்போதும் எனக்கு அது மறக்காமல் இருந்தது
   கண்ணதாசனை திரைப்படப் பாடல் ஆசிரியராக மட்டும் அறிந்திருந்த நான் இந்தக் கவிதையை படித்து கண்ணதாசன் பால் ஈர்க்கப் பட்டேன்.

   கவிஞனுக்கே உரிய  அகங்காரம்,சொல்வதை ஆணித்தரமாக சொல்லும் உறுதி, பிறர் சொல்லும் கருத்துக்களைப் பற்றி கவலைப் படாத கர்வம், போகிறபோக்கில் மனதில் பட்டதை சொல்லும் தைரியம் அப்பப்பா! இந்தக் கவிதையில் அனைத்தும் உண்டு.இதில்  சொல்வது போல கவிதை,சினிமா,கலை அரசியல் பத்திரிகை என அனைத்திலும் நுழைந்து பார்த்து பல் துறையிலும் பரிமளித்தார். அவரால் விமர்சிக்கப் பட்டவர்கள் கூட அவரை வெறுக்க முடியாமல் போயினர். அவை அத்தனையும் அவருக்குக் கிடைத்த மரியாதையாக கொள்ள முடியாது என்றாலும் அது கவிதை அவருக்கு தந்த பரிசு. அவர் நிலையற்ற மனம் கொண்டவராக இருந்த போதிலும் அவரது பாடல்களும் கவிதைகளும் நிலையான இடத்தை பிடித்தது. படைப்பாளியின்  தனிப்பட்ட குணங்கள் , அவரது படைப்புகள் ரசிக்கப் படுவதற்கு தடையாக  இருக்க வாய்ப்பு உண்டு, ஆனால் அதற்கு விலக்காகத் திகழ்ந்தவர் கண்ணதாசன்.
இதோ கவிதை! உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

காலக் கணிதம்

                   கவிஞன் யானோர் காலக் கணிதம்
                   கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
                   புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
                   பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!
                   இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
                   இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
                   ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
                   அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
                   செல்வர்தம் கையில் சிறைப்பட மாட்டேன்;
                   பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
                   பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
                   ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!
                   உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
                   இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!
                   வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
                   வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
                   பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
                   சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
                   புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
                   இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!
                   வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
                   இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
                   கல்லாய் மரமாய் காடுமே டாக
                   மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
                   மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
                   மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
                   எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
                   என்ப தறிந்து ஏகுமென் சாலை!
                   தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
                   தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
                   கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
                   உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
                   நானே தொடக்கம்; நானே முடிவு;
                   நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!


**********************************************************************************************

 இதைப் படித்து விட்டீர்களா?

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?

புதன், 10 ஏப்ரல், 2013

ஆறடி நிலமும் சொந்தமில்லை!

இந்தப்படம் பதிவில் குறிப்பிட்ட இடம் அல்ல
   அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்.காரணம் முன்னால் சவ ஊர்வலம் ஒன்று  போய்க்கொண்டிருந்தது.தாரை தப்பட்டைகளும் வெடி முழக்கங்களும் அந்தப் பகுதியை அதிர வைத்துக் கொண்டிருந்தது.இந்த அமர்க்களமும் விசிலும் ஆட்டமும் இருந்ததால் கொஞ்சம் வசதியானவர் இறந்திருக்கக் கூடும். எப்போதோ ஒருகாலத்தில், இறந்து போனவர் ஒருவேளை அதிர்வான ஓசையைக் கேட்டு எழுந்துவிட மாட்டாரா என்ற நம்பிக்கையில் இப்படி ஒலி எழுப்பிப் பார்த்திருப்பார்கள்.அதுவே சடங்காக மாறி இருக்கலாம்.

  மெதுவாக சென்றுகொண்டிருந்த ஊர்வலம் நின்றுவிட்டது. மயானத்தை நெருங்கிவிட்டார்கள் போலும்.ஆனாலும் கூட்டம் கலையவில்லை.நெரிசலும் அதிகமாகியது விசாரித்தபோது மயானத்தில் உள்ளே ஏற்கனவே இறந்து போன ஒருவரின் இறுதி சடங்குகள் நிறைவடையாததால்  இவர்கள் காத்திருக்கிறார்களாம் இரு சடங்குகள் ஒரே சமயத்தில் நடக்க போதுமான இடம் அந்த மயானத்தில் இல்லை.

   இரண்டு  மூன்று கிரவுண்டுகள் அளவே அந்த மயானம் அமைந்துள்ளது இறந்தவர்களை புதைப்பதற்கான .இடுகாடும் அதுவே எரிப்பதற்கான சுடுகாடும் அதுவே! அந்த வழியாக செல்பவர்களுக்கு அங்கு ஒரு  மயானம் இருப்பதை எளிதில் அறிய முடியாது. இதுபோன்ற இறுதி ஊர்வலங்கள் நடக்கும்போதுதான் அங்கு மயானம் இருப்பது தெரியும். சென்னையின் பல புறநகர்ப் பகுதிகளில் நிலை இப்படி இருப்பதை காணமுடிகிறது.

    புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் விலை மதிப்பு மிக்கவை. அதனால் அரசு நிலங்கள் ஏரிகள்,சுடுகாடுகள், குளங்கள் ஆக்ரமிப்பு செய்யப் படுகின்றன.உள்ளாட்சி அமைப்புகளும் இதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த ஆக்கிரமிப்புகளும் அவர்களின் ஆதரவுடன்தான் நடை பெறுகின்றன. இதனால் மயானங்களின் பரப்பளவு சுருங்கிவிட்டது. 

"வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது"
”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே  சொந்தமடா”  

     இவை நிலையாமை தத்துவத்தை நிலைக்கும் வண்ணம் சொன்ன  கண்ணதாசனின்  புகழ்பெற்ற பாடல் வரிகள். ஆனால் . வந்தவரெல்லாம்  சென்றுவிட்டாலும்   அவர்களை புதைக்க போதுமான இடம் பல மயானங்களில் இல்லை.

    உண்மையில் பார்க்கப் போனால்  இது போன்ற மயானங்களில் ஆறடி நிலம் கூட இறந்தவர்க்கு சொந்தமில்லை.  சிறிது  காலத்திற்குள் வேறு ஒருவரும் அந்த இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். மயானம் குறைந்தது இந்தஅளவுக்கு இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லையெனில் கட்டாயம் வசதிகளை ஏற்படுத்தவும் பராமரிக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இறந்த பின்னர் நல் முறையில் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ தக்க வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை.இது பற்றி கோரிக்கை விடுக்க பொதுநல சங்கங்களும் அவ்வளவாக முன்வருவதில்லை.

    முன்பெல்லாம் சுடுகாடு பக்கம் செல்லக் கூட பயப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. மக்களும் நிலம் வாங்கும் வெறியில் எந்த இடமாக இருந்தாலும் வாங்கி கட்டடம் கட்டி விடுகிறார்கள். குடியிருக்கவும் செய்கிறார்கள். உடல் எரிக்கப்படும் நேரத்தில் மட்டும் ஜன்னலை மூடி வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள். 
  
    கிராமங்களில் ஒருவர் இறந்து விட்டால் அதன் பாதிப்பு அந்த கிராமம் முழுதும் எதிரொலிக்கும்.இறந்தவரின் உடல் எடுக்கப் படும்வரை அது தொடரும். ஆனால்  நகர்ப்புரங்களில் பக்கத்து வீட்டில் யாரேனும் இறந்தால் கூட தினசரி நடவடிக்கைகளில் எந்த (இயற்கையாக வயது  முதிர்வின் காரனமாக ஏற்படும் மரணம் மட்டும்) பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

  நகர்ப்புறங்களில் குடி இருப்புகளுக்கு மத்தியில் இத்தகைய மயானங்களில் உடல் எரிக்கப் படும்போது ஆரம்பத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டும் பின்னர் அதைப் பற்றிய எந்த உணர்வு  இன்றி வாழ மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள்.

 "என்ன! அவர்கள் உயிரின்றி எரிந்துகொண்டும் புதைந்து கொண்டும் இருகிறார்கள் நாம் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்!" என்ற சிந்தனையுடன் இருக்கிறார்களோ?

******************************************************************************** 

இன்று  தெலுங்கு வருடப் பிறப்பு உகாதிதின வாழ்த்துக்கள்
இதைப் படித்திருக்கிறீர்களா? 
http://tnmurali.blogspot.com/2012/03/blog-post_23.html
தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?  
(கடந்த ஆண்டு நான் எதிர் பார்க்காத அளவுக்கு அதிகம் பேரால் படிக்கப்பட்ட  பதிவுகளில்  ஒன்று) 


ஞாயிறு, 15 ஜூலை, 2012

காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.

  
    இன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது  ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.

        கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி  கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது  படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு  அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு   காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்.  இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
 
        மாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.

        தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர்.  படிக்காத மேதை அவரை  இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
              **********************************
         இன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப்  சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.
    கவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது  கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.  அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்'  என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.

அந்தப் பாடல் வரிகள் 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு  யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!

      என்ன அருமையான பாடல்! தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே!
     காமராசரின்  தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
          
  பின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்!.
       ************************************************ 


இதைப்  படித்து விட்டீர்களா?