என்னை கவனிப்பவர்கள்

மதிய உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிய உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜூலை, 2014

பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்

 
(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.)

   "பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்" நினைத்துப் பார்க்க முடியாத வார்த்தைகளை ஏழைக் குழந்தைகளுக்காக அந்தப் பெருந்தகை சொன்னார். பசி இருக்கும்போது மனம் எப்படிப் படிப்பை நினைக்கும்? . மாணவன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும்போது எண்ணம் எப்படி வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை அறிய விரும்பும்? ஒரு வேளை உணவு அவனை பள்ளிக்கு வரவைக்கும் என்றால் அதை செய்தே ஆக வேண்டும் என்று பல எதிர்ப்புகளையும் மீறி முடிவெடுத்தார் கல்விக்கண் திறந்த காமராசர். இந்த திட்டம் எப்படி உருவானது?. இன்று எளிதாக பல இலவசங்களை அறிவிக்க முடிகிறது. ஆனால் அப்போதைய நிலை என்ன? வாருங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்

  1957 இல் அப்போதைய கல்வி நிலையை ஆராயவும் தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் உருவாக்கப் பட்டது தொடக்கக் கல்விக் குழு . தொடக்கக் கல்வியை  அரசுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது இக் குழு.   இதன் உறுப்பினர்களில் ஒருவரான அப்போதைய பொதுக் கல்வி இயக்குனர் நெ.து சுந்தர வடிவேலு அவர்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது தனியார் பள்ளி நடத்துபவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இனைந்து ஒரு  மாநாடு நடத்தினர் . அந்த மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் காமராசர் அழைக்கப் பட்டார். 

அவ்விழா மேடையில் அமர்ந்திருந்தபோது நெ.து.சுந்தரவடிவேலு விடம்  பேச்சுக் கொடுத்தார்  காமராசர்.
அப்போது மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  போடப்பட்டு வந்தது. அதை மனதில் கொண்டு கல்வி இயக்குனர்  நெ.து அவர்களிடம், "முன்பு நீங்கள் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய போது மதிய உணவு போட்டார்களே அதனால் பலன் இருந்ததா?" என்று கேட்டார்
"பள்ளிகளில் மதிய உணவுபோட்டதால் மாணவர் வருகை அதிகரித்தது ஐயா!" பதில் அளித்தார் நெ.து.சு 
"எப்படி சொல்கிறீர்கள்"
”திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு போடுகிறார்கள். சனிக்கிழமை அரை நாள் என்பதால் உணவு போடுவதில்லை அன்றைக்கு வருகை பாதிக்கும் குறைந்து விடும்"

"செலவு எவ்வளவு ஆனது?"

"சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றரை அணா செலவானது"

"இது சரியான கணக்குதானா. ஒன்றரை அணா என்பதற்கு அடிப்படை உண்டா? எப்படி சரிபார்த்தீர்கள்" என்றார் சிக்கனத்துக்குப் பெயர்போன காமராசர்."

இதை எதிர்பார்த்திருந்த நெ.து.சு.அவர்கள் "சென்ற சில ஆண்டுகளாக படி அரிசி பத்தணா விற்கிறது ஒரு படி அரிசி சமைத்தால் அந்த வயதுப் பிள்ளைகள் பத்து பேர் வயிராற உண்ணலாம் .ஒருவருக்கு செலவு 1 அணா. இதர பொருட்களுக்கு  அரையணா செலவாகும். இது சரிதானா என்பதை இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலாளியும் அபோது மாநகராட்சி உறுப்பினருமான ராமநாத ஐயரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டேன்" என்றார்.

அரசு பணம்தானே என்று நினைக்காமல் எவ்வளவு யோசித்து செயல் பட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்!

மேலும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார் கர்ம வீரர் "மாநகராட்சியில் எத்தனை பேருக்கு மதிய உணவு போட்டீர்கள்?. மாகாணம் முழுவதும் போட்டால் எத்தனை பேருக்கு தேவைப்படும் "
"சென்னையில் 15 சதவீதம் பேருக்குத்தான் போட முடிந்தது. இருபது விழுக்காடாக அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு சோறுபோட முடியும் என்று தெரிவித்தார்"

உடனே காமராஜர் " நகரத்தில் 30 விழுக்காடு என்றால் கிராமத்தில் இதைவிட அதிகமாக இருக்குமல்லவா? மூன்றில் ஒரு பங்கு இருந்தால்தான் நிறைவாக இருக்கும், அப்படி எனில் எத்தனை நாளைக்கு போட வேண்டி இருக்கும்" 
  அவரது சிந்தனை எப்படியாவது இத்திட்டத்தை செயல் படுத்திவிட வேண்டும் என்ற நிலையில் பயணித்தது. அதற்காக உடனே மனதில் நினைத்ததை ஆணையாக்கி விடவில்லை . அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர்தான் செயல்படவேண்டும் எண்ணம் உடையவராக இருந்தார் .அதனால் தன் ஐயங்களை தெளிவு படுத்தும் வண்ணம் நெ.து.சு அவர்களை கேள்வி மேல் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்

நெ.து.சு "ஐயா! ஆண்டுக்கு 210 நாட்களுக்கு போட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து இலட்சம் பேர்களுக்கு உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி செலவாகும் " என்று அப்போதே கணக்கிட்டு சொன்னார் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் அந்த செலவு இரண்டு மூன்று மடங்காக உயர்ந்து விடும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
இதை மனதில் இருத்திக் கொண்ட காமராசர் மாநாட்டில் பேசினார். தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆக்கப்பட மாட்டாது என்ற உறுதி அளித்துவிட்டு தொண்டு மனப்பான்மையுடன் கல்வியை வளர்க்க கேட்டுக் கொண்டு தொடர்ந்தார்
  "நமது உடனடி வேலை ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப் பள்ளி தொடங்குதலே ஆகும். ஆனால் பள்ளி இருக்கிற ஊர்களில் கூட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு போவது இல்லை. ஏழைப் பையன்களுக்கும் பெண்களும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தாலும் போதுமென்று ஆடு மாடு மேய்க்கப் போய் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள் அப்படிப் பட்டவர்களை பள்ளிக்கூடங்களுக்கு வரும்படி செய்வது முக்கியம்
"அதற்கு ஏற்ற வழி மாநகராட்சிப் பள்ளிகளில் போடுவது போல மதியம் பள்ளிகளிலேயே உணவு போடுவதே. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இப்போது இயக்குனருடன் கணக்கு போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் ஒரு கோடி இன்னும் சில ஆண்டுகளில் செலவு  பல மடங்காகிவிடும். பரவாயில்லை. நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல . தேவைப்பட்டால் அதற்காக தனிவரிகூடப் போடலாம் . இருக்கிற வரியிலோ புது வரியிலோ படிப்பவர்களுக்கு இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்வோம்.இதற்கு எல்லோரும் ஒத்துழைக்கும்படி விடுகிறேன்." என்ற காமராசர் இயக்குனர் பக்கம் திரும்பி இதற்கான திட்டம் ஒன்றை உடனடியாக தீட்டிக்கொண்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டார்.

 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதை குறை கூறி  தலையங்கம் எழுதியதாம்.

அப்படி என்ன எழுதியது"
 (  தொடரும்)
அடுத்த பகுதிக்கு இங்கே க்ளிக் செய்யவும் 

பின்குறிப்பு: மதிய உணவு வரலாற்றை ஒரே பதிவில் முடித்து விட நினைத்தேன், நேரமின்மை காரணமாக நாளை தொடர்கிறேன்.

இதில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் முன்னாள் பொதுக் கல்வி இயக்குனராகப் பணிபுரிந்த டாக்டர் நெ.து சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்" என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.இந்த நூலைப் படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்பட்டது. பள்ளியில் இவரது கட்டுரையை பாடமாக படித்த நினவு இருக்கிறது என்றாலும் இந்த நூலைப் படிக்கும்போது அவர்  மீது தனி மரியாதை உண்டானது. கல்வித் துறைக்கும் மாணவர்க்கும் ஆசிரியர்களுக்கும் சுயநலமின்றி எப்பேர்ப்பட்ட காரியங்கள் எல்லாம் சாதித்திருக்கிறார் என்பதை அறியும்போது வியப்பு ஏற்பட்டது. இவரைப் பற்றி ஒரு தனி கட்டுரை எழுத வேண்டும் எனது விருப்பம். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.





*********************************************************************

தொடர்புடைய பதிவு 




ஞாயிறு, 15 ஜூலை, 2012

காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.

  
    இன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது  ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.

        கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி  கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது  படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு  அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு   காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்.  இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
 
        மாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.

        தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர்.  படிக்காத மேதை அவரை  இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
              **********************************
         இன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப்  சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.
    கவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது  கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.  அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்'  என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.

அந்தப் பாடல் வரிகள் 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு  யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!

      என்ன அருமையான பாடல்! தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே!
     காமராசரின்  தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
          
  பின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்!.
       ************************************************ 


இதைப்  படித்து விட்டீர்களா?