என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 23 ஜூன், 2015

நீயா? நானா? மதுரை எபிசோடு-வைரமுத்து கவிதை

     

     முன்பெல்லாம்   நீயா நானா நிகழ்ச்சியை பார்க்காமல் தவற விட்டால் யூ ட்யூபில் பார்த்துக கொள்ளலாம். வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நீயா நானா யூ ட்யூபில் கிடைப்பதில்லை. ஹாட்ஸ்டார் மூலமாகத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் டவுன்லோட் செய்ய முடிவதில்லை.பழைய எபிசோடுகளும் யூ ட்யூபில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

        கடந்த  வார நீயா நானாவில் மதுரை நகரம் பற்றி மதுரை வாசிகள் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்க்கவில்லை. பார்த்தவரை  அந்நகரத்தின் மீதான ஈர்ப்பு, 'நான் மதுரைக்காரன்' என்ற  பெருமை ஒவ்வொருவருடைய பேச்சிலும் தெரிந்தது.
    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் வளர்த்த  பழைய நகரமான  மதுரை இன்னமும் அதன் பொலிவை இழக்காவிட்டாலும் பெருமளவுக்கு வளரவில்லை என்பது சிலரின் ஆதங்கமாக இருந்தது.. நகரம் என்று சொல்லிக்கொண்டாலும் மதுரை கிராமத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது என்பது அதன் பெருமை என்றாலும் அதுவே குறைபாடும் ஆகும் என ஒரு சிலர் தெரிவித்தனர்.
       திரைப்படத்துறையில் மதுரைக்காரர்களின் ஆதிக்கம் செலுத்தி பெருமை சேர்த்தாலும் அதே சினிமாதான்  .மதுரை என்றாலே வீச்சரிவாள் ரவுடிகள் என்ற ஒரு பிம்பத்தையும் மதுரையைப் பற்றி அறியாதவர்களுக்கு ஏறபடுத்தியது
   நான் முழுமையாக் பார்க்கதாதால் விரிவாக எழுத முடியவில்லை.
ஆனால் என்ன? கவிப் பேரரசு வைரமுத்து தனது  கவிதையில் மதுரையை அழகாக நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.அந்தக் கவிதையை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீகள் என்றாலும் இன்னொரு முறை படித்தாலும் நிச்சயம் அலுக்காது .

இதோ உங்களுக்காக வைரமுத்து படைத்த மதுரை . 

                                                               மதுரை 

                             பாண்டியன் குதிரைக் குளம்படியும்-தூள்
                                   பறக்கும் இளைஞர் சிலம்படியும்-மதி 
                            தோண்டிய புலவர் சொல்லடியும்-இனம் 
                                    தோகைமார்தம் மெல்லடியும் 

                              மயங்கி ஒலித்த மாமதுரை -இது 
                              மாலையில் மல்லிகைப் பூமதுரை 

                             நீண்டு கிடக்கும் வீதிகளும்-வான் 
                                   நிமிர்ந்து முட்டும் கோபுரமும் 
                             ஆண்ட  பரம்பரை சின்னங்களும்-தமிழ்
                                  அழுந்தப் பதித்த சுவடுகளும் 

                             காணக்  கிடைக்கும் பழமதுரை-தன்
                             கட்டுக் கோப்பால் இள மதுரை !

                             மல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்
                                 மலரும் கழுநீர் சுரபுன்னை 
                             குல்லை வகுளம் குருக்கத்தி-இவை 
                                 கொள்ளை அடித்த வையை நதி 

                              நாளும் ஓடிய நதி மதுரை-நீர் 
                              நாட்டியமாடிய பதிமதுரை

                             தென்னவன் நீதி பிழைத்ததனால்-அது 
                                  தெரிந்து மரணம் அழைத்ததனால் 
                              கண்ணகி திருகி எறிந்ததனால்-அவள் 
                                  கந்தக முலையில் எரிந்ததினால் 

                             நீதிக்  கஞ்சிய தொன்மதுரை -இன்று 
                             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை 

                             தமிழைக் குடித்த கடலோடு-நான் 
                                 தழுவேன் என்றே சபதமிட்டு
                             அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர் 
                                 ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 

                             மானம் எழுதிய மாமதுரை-இது 
                             மரபுகள் மாறா வேல் மதுரை 

                             மதுரை  தாமரைப் பூவென்றும் -அதன் 
                                 மலர்ந்த இதழே தெருவென்றும் 
                            இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை 
                                 எம்குடி மக்கள் திரளென்றும்-பரி

                             பாடல் பாடிய பால் மதுரை-வட
                             மதுரா புரியினும் மேல்மதுரை

                            மீசை  வளர்த்த பாண்டியரும்-பின் 
                                களப்பிறர் பல்லவர் சோழர்களும்-மண் 
                           ஆசை வளர்த்த அந்நியரும்-அந்த 
                               அந்நியரில் சில கண்ணியரும்

                            ஆட்சிபுரிந்த தென்மதுரை-மீ 
                            னாட்சியினால்  இது பெண்மதுரை 

                             மண்ணைத் திருட வந்தவரை- தம்
                               வயிற்றுப் பசிக்கு வந்தவரை-செம்
                            பொன்னைத் திருட வந்தவரை-ஊர் 
                               பொசுக்கிப் போக வந்தவரை-தன்

                             சேயாய்  மாற்றிய தாய்மதுரை-அவர்
                              தாயாய் வணங்கிய தூயமதுரை 

                            அரபுநாட்டுச் சுண்ணாம்பில்-கரும்பு 
                               அரைத்துப் பிழிந்த சாறூற்றி
                            மரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு 
                                மண்டபம் திருமலை கட்டியதால் 

                            கண்கள்  மயங்கும் கலைமதுரை-இது 
                             கவிதைத் தமிழின் தலை மதுரை 

                            வையைக் கரையின் சோலைகளும்-அங்கு 
                                 வரிக்குயில் பாடிய பாடல்களும் 
                            மெய்யைச் சொல்லிய புலவர்களும்-தம் 
                                 மேனி கருத்த மறவர்களும் 

                            மிச்சமிருக்கும்  தொன்மதுரை-தமிழ் 
                                 மெச்சி முடிக்கும் தென் மதுரை 

                           போட்டி வளர்க்கும் மன்றங்களும்-எழும் 
                                பூசைமணிகளின் ஓசைகளும்-இசை 
                           நீட்டி முழங்கும் பேச்சொலியும்-நெஞ்சை 
                                நிறுத்திப் போகும் வளையொலியும்

                            தொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண் 
                              தூங்காதிருக்கும் தொழில்மதுரை 

                            ஆலைகள் தொழில்கள் புதுக்காமல்-வெறும் 
                                  அரசியல் திரைப்படம் பெருக்கியதில் 
                             வேலைகள்  இல்லாத் திருக்கூட்டம் -தினம் 
                                   வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 

                              பட்டாக்  கத்திகள் சூழ்மதுரை-இன்று 
                              பட்டப் பகலில் பாழ்மதுரை 

                              நெஞ்சு வறண்டு போனதனால் -வையை 
                                  நேர்கோடாக ஆனதனால் 
                              பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப் 
                                  பட்டாப் போட்டுக் கொண்டதனால் 

                             முகத்தை இழந்த முதுமதுரை-பழைய 
                                    மூச்சில் வாழும் பதிமதுரை



அவர் கருத்து சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் 


**************************

கொசுறு:மதுரை என்றதுமே எனக்கு நினைவுக்கு வந்தது கடந்த  ஆண்டில் நடந்த அற்புதமான பதிவர் சந்திப்புதான். திரை உலகம் மட்டுமல்ல வலை உலகிலும் மதுரைப் பதிவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 



35 கருத்துகள்:

  1. வைரமுத்துவின் வைர வரிகள் தான் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது தவிர இதில் உண்மை எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை
    நானும் அறியக் காத்திருகின்றேன் சகோதரா ! நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு. விஜய் டிவி நிகழ்சிகளை யூ டியுபில் பார்க்க முடிவதில்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இப்போது ஆளாளுக்கு ஆப்ஸ் களை அறிமுகம் செய்வதிலேயே குறியாய் இருக்கின்றனர். முதல் முறையாய் இக்கவிதையை படிக்கிறேன். அருமை.

    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி
      வைரமுத்துவின் குரலிலேயே இந்தக் கவிதையின் ஆடியோ உண்டு தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றில் தெளிவில்லை

      Read more: http://www.tnmurali.com/2015/06/blog-post_48.html#ixzz3du8TGXpG

      நீக்கு
  3. மதுரமான என் மதுரை
    மனதோடுக் கலந்த மதுரை :)

    // பட்டாக் கத்திகள் சூழ்மதுரை-இன்று
    பட்டப் பகலில் பாழ்மதுரை // இது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை, மதுரை நகரில் இப்படி இல்லையா அல்லது எனக்குத் தெரியவில்லையா என்று அறியேன்.
    பல விசயங்கள் தென் கிராமங்களில் இருக்கும், அவற்றை மதுரை என்று பொதுவாகச் சொல்கிறார்களோ என்பது என் எண்ணம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. மதுரை பற்றி நான் அதிகம் அறியேன் ஆனாலும் மீனாட்சி தரிசனம் பிடிக்கும்! இலங்கை என்று சொன்னால் தங்கும் விடுதியில் என்ன மரியாதை கிடைக்கும் என்பதையும் நன்கு அறிவேன்!

    பதிலளிநீக்கு
  5. நீயா நானா நிகழ்ச்சிகள் எப்போதாவது பார்ப்பதுண்டு. இது பார்க்கவில்லை. கவிதை நல்லாயிருக்கு. தூங்கா நகரம் என்று மதுரையைச் சொல்வார்கள். அது இப்போது எல்லா நகரங்களுக்கும் பொருந்தி வருகிறது!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அண்ணா
    வைர முத்துவின்வைர வரிகள் நன்று சரியான தகவலை அறிய நானும் ஆவலாக உள்ளேன்... உலகம் தழுவிய கவிதைப்போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் வந்து பாருங்கள் பதிவை....த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை. இதற்கு முன் படித்ததில்லை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. youtube ல் நானும் பிடித்த பல நீயாநானா நிகழ்ச்சிகலை டவுன்லோட் பண்ணி பார்த்திருக்கேன்.
    ஹாட்ஸ்டார்க்கு மாற்றிய பிறகு நீயாநானா பார்க்கல சார்.

    வைரமுத்து கவிதை அருமை.
    தம 6

    பதிலளிநீக்கு
  9. மதுரைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. பதிவின்மூலம் மதுரையை எங்களுடன் ப்ணைத்துவிட்டீர்கள். மதுரை கோயில் புகைப்படத்தின் கோணம் (fish eye view) மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை...

    ஓரிரு மணி நேரங்களில் ஒரு நிகழ்ச்சியில் மதுரையைப் பற்றி பேசி விட முடியாது... தலைப்பு செய்தி போல் அங்கங்கே சில தகவல்கள் மட்டுமே சொல்லப்பட்டன அந்நிகழ்ச்சியில்...

    பதிலளிநீக்கு
  11. ///மதுரைப் பதிவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ///

    என்ன கலக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற விபரத்தை தெளிவாக சொல்லவும்

    பதிலளிநீக்கு

  12. நானும் மதுரைக்காரன் என்பதால்
    பதிவு கூடுதலாக ருசித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோ,
    எனக்கு மதுரை என்றால் தாமரை மலர் போன்ற தோற்றம் உடையது என்பது தான் நினைவில் வருகிறது.
    பதிவு அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர்
    ஆழி கலப்பது தவிர்ப்பதனால்

    மானம் எழுதிய மாமதுரை-இது
    மரபுகள் மாறா வேல் மதுரை/ செய்தி இதுவரை அறியாதது. மதுரை மாற வழியில்லை. மாறவும் விட மாட்டார்கள். பழங்கதைகள் பேசியே திருப்தி அடையும் மக்கள் நிறைந்த ஊர். இக்கருத்தை மதுரை மக்கள் தீவிரமாக எதிர்ப்பார்கள் என்றும் தெரியும்


    பதிலளிநீக்கு
  15. எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு. இன்னமும் காலமாற்றத்தில் மாறாத நகரம் என்று இந்த ஊரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. நீயா நானா நிகழ்சியை நான் பார்ப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  17. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காரர்கள் மதுரைக்காரர்களை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்டது தவறு. அவர்களோடு மதுரையில் வாழ்ந்த பிறரையும் கலந்துகொள்ள வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,

    நான் மதுரைக்காரனன்று. ஆனால் மதுரையில் சில்லாண்டுகள் வதிந்தவன்.

    என் பார்வையில் மதுரையில் குறைகள் நிறைய; நிறைவகள் குறைய.

    அக்குறைகளுல் சிலவற்றை உரையாடல்களின் கலந்துகொண்ட மதுரைக்காரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

    அவை. மதுரையின் தொழில்வளம் பெருகாக்காரணம் மதுரையைப்பற்றிப் பிறர் கொண்ட ஒரு பிம்பம். சாதிப்பிளவுகளும் அதன் கொடூரங்களும். கோடிக்கணக்கான செலவில் அரசமைத்த ஐ டி பார்க் இன்று எவருமே சீண்டாததால், குடும்ப அட்டைகள் அச்சடிக்க மட்டுமே பயன்படுமிடமாக இருக்கிறது.

    மற்றபடி நிகழ்ச்சியைமுழவதும் நானும் பார்க்கவில்லை.

    பிற ஊர் மக்களிடம் அங்குள்ள சிறுவயதினர்மட்டுமே ஊர்ப்பெருமை கொள்வார்கள். மற்றவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால், மதுரையில் அனைவருமே ஊர்ப்பெருமை கொள்கிறார்கள். மதுரைக்கு வருமுன் நான் அறிந்தது; கேட்டது. அஃதுண்மையா என்று வந்து பார்த்தால், அனைத்தும் வறட்டுப்பெருமை.

    மதுரை மீனாட்சி கோயில் கோபுரங்களும் கோயிலும் வரலாறும் (சங்கப்பாடலகள்) மட்டுமே மதுரையின் பெருமைகள். அதற்காக ஒரு கடலை விற்பவனும் காகிதம் பொறுக்குபவனும் பெருமைப்பட்டால் எப்படி? ஆனால் அதைத்தான் செய்கிறார்கள் அங்கே. இவர்களா வரலாற்றை படைத்தார்கள்.

    வெட்டிவீரம். விவேகத்தைப்பிந்தள்ளி உடல் வலிமையையும் வாய்ச்சவடாலையும் போற்றுவது. எப்படியோ ஊடுருவிப்போய் விட்டது.

    கீழ் சாதி-மேலசாதி என்பது பட்டவர்த்தனமாகக் காட்டப்படுகிறது. நான் வீடு வாடகை பிடிக்கப்போனது ஓரளவு படித்தோர் நிறைந்த பகுதி. ஆனால் வாடகை விடுமுன் சொன்னது: நான் யாருக்கும் விடு கொடுப்பேன்: தலித்து, முசுலீம், மற்றும் என் ஜாதிக்காரன் (அவர் ஜாதிக்காரனை வீட்டைக் காலிபண்ணு என்றால் அருவாளைக்காட்டுவானாம்!) கொடுக்கமாட்டேன்.

    தலித்துகள் வாழும்பகுதிகள் தனியாகத்தெரியும்படியே மதுரையில் இருக்கும். தெரிந்தால் பரவாயில்லை. அதை எப்படி மாற்றுவது? அரசாங்கமே அல்லவா அதையும் செய்துவிடுகிறது: அமிர்தம் சினிமாவைத்தாண்டிச்சென்றால், ஒரு காலனியின் பெயரே ஹரிஜன் காலனி. இம்மானுவேல் சேகரன் குருபூஜை நாளிலும் தேவர் குருபூஜை நாளிலும் மதுரை, இராமநாதபுரம் மாவட்டக்கிராமங்கள் மட்டுமல்ல, மதுரை நகரிலும் பதட்டமே. எங்கெங்கெல்லாம் தேவேந்திரகுலவேளாளர்கள் எனப்படும் இம்மானுவேல் சாதிக்காரகள் இருக்கிறார்களோ அங்கெங்கெல்லாம் போலீசு குவிக்கப்படும். தேவர்கள் இடம் என்று தனியாக இல்லை. அவர்கள் சிதறிக்கிடப்பதால் சாத்தியமில்லை. ஆனால் தேவர் சிலையிருக்கும் கோரிப்பாளையம் முழவதும் போலீசால நிரப்பப்பட்டு பாதை அடைக்கப்படும்.

    பலவிடங்களில் இன்னும் ஜாதிவாரியாகத்தான் தெருக்கள். முசுலீம்கள் சேர்ந்துவாழவேண்டிய கட்டாயம். மதுரையில் அப்படித்தான் வாழ்கிறார்கள்.

    இந்துத்வாக்காரகளின் பிரச்சாரம் அதிகமாக இருந்தாலும் மத நல்லிணக்கம் இருக்கிறது. அது பாராட்டப்படவேண்டிய விசயம். மதுரையில் கிருத்துவர்கள், முசுலீம்கள், இந்துக்கள் - மூவரும் மக்கட்தொகையில் கணிசம். ஆனால், ஒருவரையொருவர் கண்டுகொளவதில்லையாதலால், மத நல்லிணக்கம் தொடர்கிறது. மதுரையில்தான் சென்னைக்கடுத்தபடி, இராமகிருஸ்ணமடம் இருக்கிறது. அது மத நல்லிணக்கத்துக்காக ஆண்டுதோறும் விழா நடாத்துக்கிறது. அவர்களைப்போன்றோரும் மற்ற நல்ல மக்களும் இல்லாவிட்டால் மதுரைமக்கள் மதச்சண்டைகளிலேயே உயிரை விடுவார்கள்

    தமிழ்மொழிப்பேச்சு இங்கு தனித்தன்மையோடு. ஏற்றம் இறக்கம் சொற்பிழை, உச்சரிப்பு பிழை (எவருக்குமே ழகரம் உச்சரிக்க வராது). பாமரமக்கள் மட்டுமல்ல; பேராசிரியரும் மேடையில் அப்படித்தான் பேசுவார். அதைப்பெருமையாக நினைக்கிறார்கள்.

    ஆனால், ஒரு நல்லவிசயம். அண்ணா, அக்காள் தம்பி, ஆத்தா (அம்மாவுக்குப்பதில்) என்ற சொற்களை எல்லாரும் அந்நியர்களுக்கும் பயனபடுத்துவார்கள். இதை விஜய் டி வி நிகழ்ச்சியில் ஒருவர் சுட்டிக்காட்டினார். அவருக்கு நன்றி. தூக்கும் பெண்ணுக்கு வயது 35 தான் இருக்கும். அவரை எல்லாரும் அக்கா, அக்கா என்றுதான் கூப்பிடுவார்கள் என் அலுவலகத்தில். காஸ் ஏஜன்சிக்குப்போனால், அங்கு அனைவரும் பெண்கள். மூத்தவளை மற்றபெண்கள் அக்காள் என்று கூப்பிடுவது வியப்பு. ஆபிசையும் வீடு போலப்பார்க்கும் குணம் இங்கு உண்டு.

    இன்றைய சிந்தனை உடையோருக்கும் இளவயதினருக்கும் மதுரை வாழத்தகுதியான ஊரன்று. மதுரைக்காரகளாயிருந்தாலும், மதுரையைவிட்டுச் சென்றபின் திரும்ப அவர்கள் ஆசைப்படுவதில்லை.

    நான் மதுரைக்காரனாக இல்லாவிட்டாலும் மதுரையிலும் அருகிலும் உள்ள சில கோயில்களுக்காக அடிக்கடி சென்றுவருகிறேன். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. சாமியும் இல்லைதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் விரிவான கருத்துக்கு நன்றி

      நீக்கு
  18. நான் சென்னை வாசி. மதுரை என்றவுடன் (1) மதுரை கோவிலும் மற்றும் (2) வீச்சரிவாளும் ரத்தமும் தான் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையை இப்போது தான் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நீயா- நானா நிகழ்ச்சியை பார்ப்பது தவிர்த்து விட்டேன்! சிலசமயம் ஒரேடியாக அலுப்பு ஏற்படுத்துகின்றது. பதினோறு மணி வரை நீள்வதால் விடியலில் எழ முடிவதில்லை! மதுரை பற்றிய வைரமுத்துவின் வரிகள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு

  20. நீயா? நானா?
    மதுரை எபிசோடு நிகழ்ச்சியில்
    மதுரை பற்றி எழுதிய
    பாவலர் வைரமுத்து அவர்களின்
    எண்ணங்கள் எதுவும் இருக்காதே!

    தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?
    https://mhcd7.wordpress.com/

    பதிலளிநீக்கு
  21. கவிதையை இப்போது தான் முதல் முறை வாசிக்கிறேன் நன்றி சகோ.

    நீயா நானா...யூட்டியூப் மாற்றப்பட்ட பின்னால் குறைத்து விட்டேன்....

    பதிலளிநீக்கு
  22. இப்போது மதுரையில் மிஞ்சி இருப்பது புரோட்டா ,இட்லி கடைகள் தான் ,கந்து வட்டி,கூலிக் கொலைக் கூட்டத்திற்கும் பஞ்சமே இல்லை !எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை ,பழம் பெருமையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது மதுரை !பெயர்தான் வைகை ஆறு ,வருடத்தில் ஒருமாதம் கூட தண்ணீரைப் பார்க்கமுடியாது !

    பதிலளிநீக்கு
  23. ஆமா அண்ணா,எனக்கும் அந்த பதிவர் சந்திப்புதான் நினைவுக்கு வந்தது. பதிவாலும், பின்னூடங்களாலும் மதுரையை பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். இந்த பதிவின் பின்னூட்டத்தில் நிறைய மதுரைக்காரர்களை எதிர்பார்த்தேன். எல்லாரும் நண்பர்கள் என்பதால். இப்போதும் மதுரையிலேயே வசிக்கும் பகவான் பாஸ் கருத்து கவனிக்கப்படவேண்டியது இல்லையா அண்ணா!

    பதிலளிநீக்கு
  24. மதுரையை பற்றிய கவிதையை இன்றே படித்தேன்.
    நீயா நானா நிகழ்ச்சியை நானும் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  25. இதற்கு முன்னர் அடித்த பின்னூட்டம் பணால் ...
    லாப்பில் எதோ கோளாறு ..
    தம +
    பதிவும் பின்னூட்டங்களும் அருமை அய்யா

    பதிலளிநீக்கு
  26. பிடித்த ஊர் மிகவுமே...எங்களுக்கு....என்றாலும் பகவானின் கருத்தும் ஏற்றுக் கொள்ளப் படக்கூடியய்து!

    கவிதை அருமை!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895