நிறையக் கவிதை படிப்பவரா நீங்கள்? இந்தக் கவிதை எழுதியது யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
திண்ணையை இடித்து தெருவாக்கு
உட்கார் நண்பா நலந்தானா?-நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?
புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி
புலம்ப வேண்டாம்-நெல்கூட
புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது
பூமியின் பசியைப் போக்க வில்லை?
கடலின் நான் ஒரு துளிஎன்று
நீகரைந்து போவதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு
வந்தது யாருக்கும் தெரியாது- நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது
சந்ததிகூட மறந்துவிடும் -உன்
சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?
உணவு ஆடை வீடென்று -உன்
உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
மனைவி மக்கள் வீடென்று -உன்
மனதின் எல்லையை சுருக்காதே
திண்ணைதானா உன்தேசம்-உன்
தெருவொன் றேவா உன் உலகம்
திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்
தெருவை மேலும் விரிவாக்கு
எத்தனை உயரம் இமய மலை -அதில்
இன்னொரு சிகரம் உனது தலை
எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?
பூமிப் பந்து என்ன விலை -உன்
புகழைத் தந்து வாங்கும் விலை;
நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்
*******************************************************
இக் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை அறிய கீழே கிளிக் செய்யுங்கள். அவரது இன்னொரு கவிதையையும் படியுங்கள்
விடை
*********************************************************

