300 வது பதிவு
இன்று( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்த நாளை எதற்கு கொண்டாட வேண்டும்? கை கழுவுவது அவ்வளவு முக்கியமா?
உலகில் 2 மில்லியன் குழந்தைகள் டயரியா போன்ற வயிற்றுப் போக்கு மற்றும் நுரையீரல் தொற்றுக்களால் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. முறையாக சோப்பை பயன்படுத்தி கைகள் கழுவுவதன் மூலம் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். இதன் முக்கியத்துவம் உணரப் பட்டதால் PPPHW (PUBLIC-PRIVATE PARTNERSHIP FOR HAND WASHING என்ற அமைப்பு 2008 முதல் ஒரு இயக்கமாக மாறி கைகழுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றே உலக கைகழுவும் தினம் கொண்டாடுதல்.
இந்த அமைப்பில், உலக வங்கி, யூனிசெப்,(United Nations International Children Emergency fund) மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று கை கழுவும் தினம் கொண்டாட முடிவு செய்யப் பட்டது
முக்கியமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தை உணர்த்துவதை இவை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய நாளில் பள்ளிகளில் மதிய உணவு உண்பதற்கு மாணவர்கள் மாணவர்கள் ஆசிரியர் முன்னிலையில் சோப்பு போட்டு கைகழுவும் திருநாளாக கொண்டாடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் கைகளை எவ்வாறு முறையாக சோப்பை பயன்படுத்தி கைகழுவ பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன. சுகாதாரமற்ற சூழலில் வாழும் அடித்தட்டு மக்கள் இதனை உணர்ந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் நோய்க்கு ஆட்படாமல் தடுக்கவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த நல்ல பழக்கத்தை உருவாக்குதன் மூலம் எதிகால சமுதாயத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பப் படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவை எடுத்து உண்பதற்கு கைகளே பயன்படுத்தப் படுகின்றன. சரியாகக் கழுவப் படாத கைகள் கிருமிகளின் தாயகமாக விளங்குகிறது. வயிற்றுப் போக்கு டைபாயிட் காலரா போன்ற தொற்றுக்களுக்கு ஆதாரமாக விளங்குவது மனித மலம். ஒரு கிராம் மனித மலத்தில் சுமார் 1கோடி வைரஸ்களும்,10 லட்சம் பாக்ட்டீரியாக்களும் வாசம் செய்து கொண்டிருக்குமாம். இவை பல்வேறு விதங்களில் மலத்திலிருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவினாலும் எப்படியோ கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உண்ணும்போதோ விரல்களை வாயில் வைக்கும் போதோ ஜாலியாக உடலுக்குள் நுழைந்து தன வேலையை காட்டத் தொடங்குகிறது. அசுத்தமான தண்ணீர் வழியாகவும், ஈக்கள் மூலமாகவும் இந்த நுண்ணுயிரிகள் பரவும் என்றாலும். என்றாலும் குறிப்பிடத் தக்க அளவு கைகளுடன்தான் இந்தக் கிருமிகள் கைகோர்த்துக் கொள்கின்றன
எப்போதெல்லாம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்?
- மலம் கழித்த பின்பு
- சாப்பிடுவதற்கு முன்
- சமைப்பதற்கு முன்
- உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன்
- உணவு பரிமாறுவதற்கு முன்
- குழந்தைகள் மலம் கழித்த பின்அதை சுத்தம் செய்த பின்
- வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும்
- கழிப்பறைகளை சுத்தம் செய்தபின்
- மருத்துவமனை சென்று வந்த பின்
- அசுத்தமான இடங்களில் கை வைத்த பின்
எப்படிக் கழுவ வேண்டும் ?
வெறும் நீரால் நீண்ட நேரம் கை கழுவினாலும் கையில் உள்ள நுண்கிருமிகள் கையை விட்டு செல்வதில்லை. விடாப் பிடியாக கண்ணுக்குத்தெரியாமல் ஒட்டிக கொண்டிருப்பவற்றை அகற்ற சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கைகளை கழுவ வேண்டும் நகங்கள் அழுக்கை சேமிக்கும் கிடங்காதலால் அதை அவ்வபோது வெட்டிவிட வேண்டும்.நகங்கள் இருந்தால் சோப்பு போடும் போது அங்கேயே கிருமிகளும் அழுக்கும் தங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு
- கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பு அல்லது சோப்பு கரைசலை தடவ வேண்டும்
- உள்ளங்கைகளை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்
- விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்க வேண்டும்
- வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையிலும், இடது கை விரல் நுனிகளை வலது உள்ளங்கையிலும் வைத்து தேய்க்கவேண்டும்
- கைகளில் சோப்பு நுரை குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும் .
- பின்னர் கைகளை சோப்பு நுரை போகும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்
- குழந்தைகள் என்றால் முழங்கை வரையிலும் , பெரியவர்கள் என்றால் மணிக்கட்டு வரையிலும் நன்கு கழுவ வேண்டும்
- விலை உயர்ந்த சோப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண சோப்பே போதுமானது.
இதோ இந்தப் படத்தில் உள்ளது போல் சோப்பு போட்டு கைகளை கழுவுவது சரியான முறையாகும்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல .பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக கை கழுவும் பழக்கத்தைகற்றுத் தர வேண்டும். அவர்களிடம் சொல்வதை விட நாம் தேவைப்படும் சமயங்களில் கை கழுவும் பழக்கம் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கும் தானாகவே வந்து விடும்.
****************************************************************************************
300 பதிவுகளை சகித்துக் கொண்டு ஊக்கமும் ஆதரவும் தந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி
****************************************************************************************

.jpg)
