என்னை கவனிப்பவர்கள்

திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 மே, 2014

வாயை மூடிப் பேசவும்

   எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிடிக்கு போக நினைத்ததுண்டு. அனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.   நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்க முடிவு செய்து வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஐ மேக்ஸில் 7 வது ஸ்க்ரீனில் முன்பதிவு செய்தேன். தாமதமாக செய்ததால் இரண்டாவது வரிசையில் அமர்ந்து பார்க்க வேண்டியதாயிற்று. அது ஒரு வித்தியாச அனுபவம்தான்

   முன்னதாக பார்க்கிங் கட்டணம் அதிகம் என்று கேள்விப் பட்டதால் பயணத்திற்கு பேருந்தையே தேர்ந்தெடுத்தேன். குருநானக் கல்லூரி நிறுத்தத்தில் இருந்து ஓரிரு நிமிட நடை தூரத்தில் பீனிக்ஸ் அமைந்திருந்தது

   ஆடம்பர மால்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் கூட்டம் சாரிசாரியாக  குருநானக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பீனிக்சை நோக்கி பீடு  நடை போட்டுக் கொண்டிருந்தது.  கட்டணம்பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல்  நீண்ட வரிசையில் நான்கு சக்கர வாகனங்கள் காத்திருந்தன. 

   சோதனைக்குப்  பிறகு உள்ளே நுழைந்துபின்  பார்க்க இருக்கும் படத்தின் பெயரைப் போலவே வாயை மூடி பேசாமல் சும்மா கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் அங்குலத்திலும் ஆடம்பரம் நிறைந்திருந்தது. வாங்கும் விலையிலோ, நம்ம பர்ஸ் தாங்கும் விலையிலோ பொருட்கள் இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாக கடைகளைக் கடந்து தேடிப் பிடித்து அரங்கிற்குள் நுழைய விளம்பரங்கள் தொடங்கி இருந்தது.

   இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்ததால் பாதி திரையை மட்டுமே  சரியாக பார்க்க முடிந்தது.  அழகான உருவங்கள் கூட பூதாகாரமாக தோன்றி பயமுறுத்தியது . சிறிய அரங்கமாக இருந்ததால் திரையின் அளவும் சற்று சிறியதாக இருந்தால் நலம் எனத் தோன்றியது. படம் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் இடைவேளைக்குப் பின் பெரும்பாலான சீட்டுகள் காலியாகி விட்டன.
 
   பனிமலை என்ற கிராமத்தில் திடீரென்று பேச்சை இழக்க வைக்கும் வினோத நோய் பரவுகிறது. மருந்து கண்டுபிடிக்கும் வரை நோய் பரவாமல் இருக்க யாரும் பேசக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள்.
பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப் படுகிறது.இதனால் உயிருக்கு  ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம். பாதிக்கப் பட்டவர்கள் குணமடைந்தாலும்  பேச இயலாமல் போகவும் கொஞ்சம் வாய்ப்பு உள்ளது என்ற வினோத கற்பனையில் கதைக்களம் கட்டப்பட்டிருக்கிறது.

   பேசினால் எந்தப் பிரச்சனையும் தீர்த்துவிட முடியும் என்று நம்பும் நாயகன் மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான் தமிழில் முதல் படமாம். கல்லூரிக் கன்னியர்களை ஈர்க்கும் அளவுக்கு வசீகரனாகத் தான் தெரிகிறார். உடைந்த பொருள்களை ஒட்டவைக்கும் க்ளூ வை விற்கும் விற்பனைப் பிரதிநிதிதான் துல்ஹர். Mr. Fix it.  என்ற க்ளூ வை தன் பேச்சுத் திறமையால் விற்றுவிடும் திறமைசாலி. தன் பேச்சால் உடைந்த மனங்களையும் ஓட்ட வைக்கிறார். அவரது பேச்சுத் திறமையை நிரூபிக்க இன்னும் அழுத்தமான காட்சிகளை வைத்து இருக்கலாம்.

   துள்ளல் நஸ்ரியாவை இந்தப் படத்தில் காணவில்லை. டாக்டரான நஸ்ரியா தந்தையின் இரண்டாம் மனைவியை ஏற்றுக் கொள்ளாமலும், நிச்சயிக்கப் பட்டவன் தன் மீது செலுத்தும் டாமினேஷேனை விரும்பாமலும்   மென்சோகத்தை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருவது நஸ்ரியா ரசிகர்களுக்கு ஏமாற்றமே. நாயகனின் அணுகுமுறையைக் கண்டு மனதைப் பறிகொடுப்பதை பல படங்களில் பார்த்தாகிவிட்டது. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு பெண்ணின் மனதை மாற்றி, காதலிக்கும் வேலையை இன்னும் எத்தனை படங்களில்தான் நம்ம ஹீரோக்கள் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. 

   படத்தின் இயக்குனர் அவ்வப்போது செய்தி வாசிப்பவராக வந்து ஊடகங்கள், அரசியல்வாதிகள், மக்கள், நடிகர்கள் என அனைவரையும் நையாண்டி  செய்வது  சூப்பர். அவர் செய்தி வாசிக்கும்போது கீழே எழுத்துப் பிழைகளுடன் செய்தி ஓடியது . உண்மையாகவே எழுத்துப் பிழையா அல்லது இயக்குனரின் கைவரிசையா என்று தெரியவில்லை

    ரோஜா புகழ் மதுபாலா எழுத்தாற்றல் உள்ளவர். அவர் கணவர் அதை புரிந்து கொள்ளவில்லை.  மதுபாலாவோ  குறைவாக மதிப்பெண் பெறும் தன் மகனை புரிந்து கொள்ளவில்லை.படிப்பில் வீக்கான பையனைப் பற்றிய கவலைப்படும் மதுபாலாவிடம் அவனது  ஓவியத் திறமையை நாயகன் உணரவைப்பது ஆறுதல் 

  துல்ஹரின் நண்பராக வரும் அர்ஜுன் பப்ளிமாஸ் முகத்தை வைத்துக்  பேச நினைப்பது  ஒன்றும் தன்னையும் அறியாமல் பேசுவது ஒன்றுமாக  கலக்குகிறார்.

   பேசாமல் பேரைக் கெடுத்துக் கொள்வது , பேசிப் பேரைக் கெடுத்துக் கொள்வது இரண்டுக்கும் நிஜ அரசியலில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. பாண்டியராஜன் உண்மையில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் அமர்க்களப் படுத்துகிறார். சுகாதார அமைச்சராக  வரும் அவர் ஏதோதோ பேசி(உளறி) தானே மாட்டிக்கொள்வதும் அதிலிருந்து தப்பிக்க தனக்கும் குரல்போய்விட்டது என்று நடிப்பதும் சுவாரசியம். பாண்டியராஜன் தான் வரும் எல்லாக் காட்சிகளிலும் சிரிக்க வைப்பதற்கு அவரது தி.மு. வும் கை கொடுக்கிறது. கண் கொடுக்கிறது.
 
   மகன் காதல் கல்யாணம் செய்து கொண்டான் என்பதற்காக அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்வது பொருத்தமானதாகத் தெரியாவிட்டாலும் வினு சக்கரவர்த்தியின் நடிப்பு கச்சிதம். வினுசக்கரவர்த்தி  கடைசியில் மனம் மாறினாலும், பேரன் முகத்தைப் பார்த்து மாறுவது போல் அல்லாமல் கதாநாயகனின் பேச்சின் மூலம் மாறுவதுபோல் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    விஜய் டிவி ப்ராடக்டான ரோபோ சங்கருக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையக் கூடும். இப்படத்தில் குடிகார சங்கத்தின் தலைவராக வந்து சிரிக்க வைக்கிறார். நல்ல திறமை படைத்தவர் ரோபோ. மிமிக்ரியை மட்டும் நம்பாமல் இன்னும் கிரியேட்டிவாக செயல் பட்டால் பெரிய  ரவுண்டு வர  வாய்ப்பு உள்ளது, நியூக்ளியர் ஸ்டாராக வரும் ஜான் விஜய் தன் முக பாவங்களால் சிரிக்க வைக்கிறார். சில நேரங்களில் பேசாமல் இருந்தாலே தானாக பிரச்சனை சரியாகி விடும். இப்படித்தான் குடிகார சங்கத்திற்கும் நியூக்ளியர் ஸ்டார் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை தீர்வதாகக் காட்டுவது ரசிக்க வைக்கிறது.

    அனாதை இல்லத்தில் வளர்ந்த நாயகன் அதை விட்டு வெளியேறிய பின்னும் அதற்கு உதவுகிறான். "உன் உதவி எல்லாருக்கும் தேவைன்னு ஏன் நினச்சிக்கிட்டு இருக்க" என்று  கேட்கும் அனாதை இல்லத் தலைவியின் கேள்வி பளிச். அனாதை இல்லத்திற்கு வேடந்தாங்கல் என்று பெயர் வைத்தது சாலப் பொருத்தம்.

   இடைவெளிக்குப் பிறகு அரை மணி நேரத்திற்கும் மேல் வசனம் ஏதுமின்றி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது புதுமையல்ல என்றாலும்   அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதில்  இயக்குனரின் சாமர்த்தியம் தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும் பேச்சு தொடர்பாகவே அமைத்தற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

   குத்துப் பாட்டு இல்லை. முகம் சுளிக்கவைக்கும்  காட்சிகள் இல்லை. குடிகாரர்கள்  இருந்தாலும் குடிக்கும் காட்சி இல்லை. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்ததில் திருப்தியே. 

**********************************************************************************



ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்

    
    இரண்டு  நாட்களுக்கு முன்னர் எதிர்பாரா விதமாக ராஜா ராணி படம் பார்க்க நேரிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன். ஒரு தியேட்டரில் 6 மணிக் காட்சி ஹவுஸ் புல் ஆக, சற்று தூரத்தில் உள்ள திரை அரங்கில் டிக்கட் எளிதாக கிடைத்தது.
இவ்வளவு நாள் கழித்து விமர்சனம் எழுதலாமா வேண்டாமா யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளோ பேர் எழுதுகிறார்கள் நாம் எழுதினால் சகித்துக் கொள்ள மாட்டார்களா என்ன?
    விஜய்  டிவியில் படத்தை பற்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் படம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குனர் அட்லியை பார்த்தேன். அம்மா உணவகத்தில் அருகில் அமர்ந்து இட்லி சாப்பிடும் சாதாரண இளைஞனைப் போல் காணப்பட்ட அட்லியா இந்த படத்தை இயக்கினார் என்று சற்று ஆச்சர்யம் ஏற்படுத்தத்தான் செய்தது. சத்யராஜ் ஆர்யா, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களை கையாளக் கூடிய திறமை அவருக்கு இருக்கும் என்று நம்பிய ஏ.ஆர் முருகதாசை அட்லி ஏமாற்றவில்லை.
   காதலில் வெற்றிபெற முடியாமல் போன ஆர்யா- நயன்தாரா வேண்டா வெறுப்புடன் திருமணம் செய்து கொண்டு,  கடைசியில் மனம் மாறி புது வாழ்க்கை தொடங்குவதே படத்தின் கதை.  இளமை சற்று மிஸ் ஆனதாகத் தோன்றினாலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்து விடுகிறார்  நயன்.. பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த வேலையயை சிறப்பாகவே செய்திருக்கிறார் நயன் தாராவின் நட்பான அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ். நயன்தாராவின் இன்னோசண்ட் காதலன் பாத்திரத்திற்கு  ஜெய் எப்போதும் போல் பொருத்தம்.. 
சர்ச்சில் நயன் தாரா ஆர்யா திருமண நிகழ்ச்சியுடன்படம் துவங்குகிறது. தொடக்கம் அந்த ஏழு நாட்கள் படத்தை நினைவு படுத்துகிறது. போகப் போக சிறிது மாற்றத்துடன் மௌன ராகம் கதையாக மாறி விடுகிறது.
    விருப்பமில்லாத் திருமணம் என்றாலும் திருமணம் முடிந்த பின் உண்மையை இருவரும் பகிர்ந்து கொள்ளாமல் ஒருவரை  ஒருவர் வெறுப்பேற்றிக் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. அடுத்த முடிவு எடுக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பதாக அமைத்திருக்கலாம். தொடக்கத்தில் பல இடங்களில் நயன்தாராவின் விருப்பமின்மை தான் முதன்மைப் படுத்தப் படுகிறது.
 அப்பாவி இளைஞன் ஜெய்யை  என்னமாய்க் கலாய்க்கிறது நயன்தாராஅண்ட் கோ. ஒவ்வொன்றுக்கும் ஜெய் பயந்து நடுங்குவது சுவாரசியம். இளைய கன்னிகைகள் தோழியரை மச்சி மச்சி, மச்சி என்று அழைப்பது புதிதாக இருக்கிறது. நடைமுறையில் இருக்கிறதா அட்லி?
    புத்தாண்டு அன்று பீர் பாட்டிலுடன் நயன்தாராவை பார்த்திருந்த ஜெய் பின்னர் "ஏங்க!ரொம்ப பீர் குடிக்காதீங்க தொப்பை விழுந்திடும்."என்று சொல்லி விட்டு ஓடும்போது நயன்தாரா கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனில் காதல் எட்டிப் பார்ப்பது கவிதை.

   திருமணம் செய்துகொள்ள ரிஜிஸ்தர் ஆபீசுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல்போனதற்கு அழுத்தமான காரணம் இல்லை .அட்லி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
   ஆர்யா நஸ்ரியா காதலில் இந்த அளவுக்கு ஆழமும் அழுத்தம் இல்லை என்ற போதிலும் நஸ்ரியாவின் இளமைத் துள்ளல் ஈர்க்கத்தான் செய்கிறது. (பதிவர் கோவை ஆவி நஸ்ரியாவின் ரசிகராக இருப்பதன் ரகசியம் புரிந்தது)

    நண்பர்களுடன்  தண்ணி அடிக்கும் காட்சிகளும், தந்தை மகன் சேர்ந்து தண்ணி அடிக்கும் காட்சிகளும் தமிழ் படங்களில் பழைய TREND ஆகி விட்டதால்  புதுமையாக யோசித்து  அப்பாவுக்கு மகள் பீர் வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்துவதுபோல் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர். அடுத்த படத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி தானும் தண்ணி அடித்துக்கொண்டு தாய்க்கும் வாங்கிக் கொடுக்கும் புதுமையை படைப்பாரோ?அப்பா மகள் உறவு அவ்வளவு பிரெண்ட்லியாக இருக்கிறதாம்! ஆஹா! என்னே கற்பனை! 

   ஜெய் உயிருடன் இருப்பதாகக் காட்டிய இயக்குனர் நஸ்ரியாவை மட்டும் பிழைக்க விடாமல் செய்து விட்டாரே!

    சந்தானத்தின் காமெடி படத்திற்கு பலம்தான் என்றாலும் எப்போதும் இரட்டைஅர்த்த வசனங்களையே அதிகமாகப் பேசுகிறார். சந்தானம் என்றால்  நண்பர்களுடன் தண்ணி அடிக்கும் காட்சி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது விதி போலும்.விதம் விதமாக பெற்றோரை இழிவாகப் பேசுவது போல் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல.  குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தரவயதினர் முதியவர்கள்,பெண்கள் விரும்பும் நகைச்சுவை நடிகராக வடிவேலு இருந்தார். சந்தானம் இளைஞர்களை மட்டுமே கவர்பவராக இறக்கிறார். ஆர்யாவிடம், "குடித்து விட்டு காதலியின் வீட்டு முன்னால் போய் பிரச்சனை செய்" என்று ஐடியா கொடுத்து  இளைஞர்களை கெடுப்பதில் தன் பங்கை சரிவர செய்திருக்கிறார் சந்தானம். 

    தியேட்டரில் படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் இளவட்டங்கள் என்பதால் அவர் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
   ஒளிப்பதிவு,காட்சி அமைப்புகள், ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. குறிப்பாக கண்ணாடியின் முன்னால் நிற்கும் ஆர்யா நயன்தாரா இருவரும் அவர்கள் மனம் செய்ய  நினைப்பதை கண்ணாடி பிம்பங்களாக காட்டி இருப்பது வித்தியாசம்.  பாடல்கள் மனதை கவரவில்லை. இசையில் ஜி.வி பிரகாஷ் ஏமாற்றமே அளிக்கிறார். 
படத்தை நயன்தாராவின் நடிப்பே படத்தை தூக்கி நிறுத்துகிறது.
எப்படி இருந்தால் என்ன ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

முதல்  படம் வெற்றிப் படம் என்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் ஏதும் இருக்காது அட்லிக்கு. 
  கதை இப்படி அமைத்திருந்தால்
ஆர்யா-நயன்தாரா  இருவருக்குமே  திருமணத்தில் சம்மதம் இல்லை என்றாலும்.அனைவரும்(ஆடியன்ஸ் உட்பட) நம்பும்படி மகிழ்ச்சியோடு வாழ்வதாக  நடிக்கிறார்கள். ஏதோ ஓரிடத்தில் அவர்கள் நடிப்பு அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது. மற்றவர்களுக்கு சந்தேகம் எழ பின்னர் உண்மை தெரிகிறது   மெல்ல மெல்ல மனம் மாறுகிறார்கள்.

*******************************************************************************************