என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 4 நவம்பர், 2014

இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்

   

 தினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ   பயணம் செய்யும்போதுதான் தெரியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. சினிமா நடிகர் நடிகைகளில் கெக்கேபிக்கே பேட்டிகளும், அழுவாச்சி காவியங்களும் பார்த்து பார்த்து சலிப்படைந்த கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. ஏன் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.அதைப் பற்றி பதிவு கூட எழுதி இருந்தேன். பதிவர் சந்திப்பிற்கு மதுரை சென்றிருந்தபோது சாலையோர இட்லிக்கடைகளை பார்த்ததும் இந்தநிகழ்ச்சி  மீண்டும் நினைவுக்கு  வந்து விட்டது.
     இட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக   காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும்   சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏற்ற இறக்கத்துடன் சொன்னதைக் கேட்டதும் இட்லி தோசையை கண்டுபிடித்த நம் முன்னோரின் சுவை அறிவை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை . இட்லி தோசை பிடிக்கிறதோ இல்லையோ இந்தப் பதிவு  நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இட்லியும்  தோசையும் 
   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது.பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

 இட்லி தோசை சொன்ன தத்துவங்கள் ரசிக்கும்படி இருந்ததா?
28 கருத்துகள்:

 1. இட்லி தோசை சொல்லும் தத்துவம்-சன் டிவி நிகழ்ச்சி = டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று =
  இட்லி தோசையை வைத்து ஒரு பதிவு எழுத முடியுமா? அற்புதமாக எழுதியிருக்கிறார் நண்பர் திரு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று. எனது பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று.

  பதிலளிநீக்கு
 2. இட்லியையும் தோசையையும் வாழ்க்கையோடு இணைத்து சொன்ன தத்துவங்கள் சிந்திக்க வைத்தன. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. // மௌனத்தின் ரகசியம்... // அட...!

  வித்தியாசமான சிந்தனை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. செம... இட்லி தோசைக்குப் பின் இப்படியொரு வாழ்வியல் தத்துவங்கள் இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே!

  இட்லியும் தோசையும் ஏற்றபுகழ்! நம்கணினித்
  தட்டிலே இட்டீர் சமைத்து!

  அருமையான தகவற் பகிர்வு!
  நாங்கள் சாப்பிடும் உணவிலும் வாழ்வியலோடு
  இணைந்த இயல்புகள் அற்புதம்!
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 6. தத்துவம் தத்துவம் அண்ணே.

  பதிலளிநீக்கு
 7. நன்று நன்று எதையும் எப்படியும் செய்யலாம் .
  கருத்துகளை இணைத்துக் கோர்க்கலாம்.
  பதிவிற்கு நன்றி முரளி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. சுவையோ சுவை .. பதிவை சொன்னேன் சார்

  பதிலளிநீக்கு
 9. இந்தப் பதிவு சண்முகம் சொன்னதா, இல்லை அவர் குரலில் நீங்கள் சொல்வதா.?எழுதுபவனுக்கு எழுது பொருள் எல்லா இடத்திலும் சிக்கும்.

  பதிலளிநீக்கு
 10. சில நேரங்களில் மெளனம் தேவை படும். சில நேரங்களில் பேசவும் வேண்டும்.
  இட்லி, தோசையில் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டீட்கள்.
  நல்ல ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்.
  உறங்கநகரில்(மதுரை) முன்பு இரவு நடைபாதை ஓட்டல்களில் என்னப்பா இருக்கு? என்றால் இட்லி இருக்கிறது ஆறுவகை சட்னியுடன் என்பார்களாம்.

  ஆசிரியர் அல்லவா! இட்லி, தோசையை வைத்து தத்துவ ஆராய்ச்சி செய்து விட்டீர்கள்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் !

  அருமையாய்ச் சொன்ன தத்துவம் போல அழகான இட்லியும்
  தோசையும் அகத்தைக் குடையுதே !.:)) சுவையான பகிர்வு தந்த
  சகோதரருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

  பதிலளிநீக்கு
 12. ஆஹா இட்லி-மௌனம். தோசை - சப்தமும், பேச்சும்.....இதை வைத்து விளக்காமான வாழ்வியல் தத்துவங்கள்! சாப்பாட்டிற்குப் பின் கூட வாழ்வியல் தத்துவங்கள்..ம்ம்மாம்...உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு இந்த அறுசுவை சாப்பாட்டில் மட்டுமல்ல...வாழ்விலும் தான் என்று தத்துவங்கள் சொல்வது போல்....அருமை! நல்ல பகிர்வு. நல்ல சிந்தனை!

  பதிலளிநீக்கு
 13. தோசை நம்ம ஊர் சரக்கில்லை என்பார்கள் ..தோசை வார்க்கும்போதும்,திருப்பி போடும்போதும் 'சை 'என்று 'தோ' தடவை சத்தம் வருவதால் :)
  த ம 7

  பதிலளிநீக்கு
 14. நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்தது. எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோ முரளி?

  பதிலளிநீக்கு
 15. இட்லி தோசையுடன் வாழ்க்கையையும் இணைத்து பின்னப்பட்ட தத்துவங்கள் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. அடடா.... என்ன ஒரு சிந்தனை....!!!

  அருமையான ஒப்பீடு மூங்கில் காற்று.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  அண்ணா
  மனித வாழ்வியல் தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி
  த.ம-12

  பதிலளிநீக்கு
 18. இட்லி தோசையை தத்துவத்துடன் சேர்த்து நீங்கள் பரிமாறியிருக்கும் விதம் படித்து சுவைத்தேன் சார். சுவாரஸ்யமாக இருந்தது நன்றி

  பதிலளிநீக்கு
 19. இட்லி, தோசைக்குள் இத்தனை தத்துவங்களா?
  தங்கள் எழுத்துநடை தான், தங்கள் பதிவை மேலும் சுவைக்க வைக்கிறது.
  ஆமாம்! இட்லி, தோசை சுவையான பதிவு என்பேன்.

  பதிலளிநீக்கு
 20. இட்லி தோசை வைத்து இந்த அளவு தாங்கள் விவாதித்ததறிந்து மகிழ்ச்சி. வழக்கம்போல தங்களின் நடை மெருகூட்டுகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 21. எழுதுவதும் வாசிப்பதில் கூட உங்கள் சமூகம் சார்ந்த அக்கறை ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கின்றது. உங்களிடம் படிக்கும் மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 22. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம்.

  மிக மிக ரசனையான பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 23. இப்பதான் தோசை சாப்பிட்டேன்.... இங்கே இட்லி-தோசை இரண்டும்! :)

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 24. இட்லி தோசையை இனிச் சாப்பிடும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்.
  தங்களைத் தொடர்கிறேன் அய்யா!
  நன்றி
  த ம 15

  பதிலளிநீக்கு
 25. நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தொடைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? தோசையாயணம்

  பதிலளிநீக்கு
 26. நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? தோசையாயணம்

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895