என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 1 மே, 2015

பயன்படா மரங்கள் உண்டா?

 
     சமீபகாலமாக  சீமைக் கருவேல மரங்களை( வேலி காத்தான்)  முற்றிலுமாக அழித்திட வேண்டும் . அதனால் பயன் ஏதும் இல்லை  என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது மற்ற தாவரங்கள் வளர்வதற்கு தடையாக இருக்கிறது. கால்நடைகளுக்கு இதனால் பயன் இல்லை என்றெல்லாம்  வாதம் செய்யப்படுகிறது. இதற்கு மாற்றுக் கருத்தை பிரபல பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள் பதிவிட்டிருந்தார்.  அதைப் படிக்க 
    
  
அதேபோல  பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராமசாமி (தற்போது முக நூலில்  அசத்திக் கொண்டிருக்கிறார் ) ருவேலம் உண்மையில் கருங்காலியா...? பிரச்சாரங்களும் உண்மைகளும்....! என்ற பதிவில் விரிவான தகவல்களுடன்  மாற்றுக் கருத்தை 2012 லேயே பதிவு செய்திருக்கிறார் . சுவையான தகவலகளும் அனல் பறக்கும் வவ்வாலின் விவாதங்களும் காணப்படுகின்றன. விரும்புவோர்  மேற்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம் 
     உலகில் பயன்படா மரங்கள், தாவரங்கள் என்று எதுவும் இல்லை. அது மனிதனுக்கு வேண்டுமானால் பயன்படாமல் இருக்கலாம் என்பது என் கருத்து 
  உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமே மனிதனுக்கு பயன்படவேண்டும் என்று மனிதன் நினைக்கிறான். உலகம் மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்ற சுயநலம் கொண்டவனாக மனிதன் விளங்குகிறான். அவனுக்குப் பயன்படாது என்று நினைத்தால்   எதையும் அகற்றிவிடத் தயங்குவதில்லை  இந்த மனிதத் தன்மை  காரணமாகவே இயற்கை அழிந்து வருகிறது 
( மன்னிக்கவும்  மனிதனுக்கு மனிதன் காட்டும் இரக்கத்தை மட்டுமே மனிதத் தன்மை என்று குறிப்பிட்டுக்கொள்கிறான். மனிதனிடம் இருந்து தப்பிக்க முடியாத தாவரங்களோ , உயிரினமோ பொருட்களோ சிந்திக்கும் ஆற்றல் உடையதாக இருந்தால் என்ன நினைக்கும்?  பிறவற்றை அழிப்பதே மனிதகுணம் அதுவே மனிதனின் தன்மை என்றல்லவா நினைக்கும்? ) 

   அது போகட்டும் உண்மையில் நான் சொல்ல நினைத்தது மரங்களைப் பற்றிய ஒரு கவிதை பற்றி. ஒரு முறை எனது மகனின் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை வளர்க்க மாணவர்களுக்கிடையே ஒரு கவிதைப் போட்டி நடத்தினார்கள். என் மகனுக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது ஆச்சர்யம் . இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால் இதே கவிதையைத்தான் 10ம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளியில் நடந்த போட்டியில் எழுதி பரிசு பெற்றேன். ஆனா எங்க அப்பா அதை எழுதிக் கொடுக்கலை நானாத்தான் எழுதினேன் . ஹிஹிஹி  நம்புவீங்கதானே? 

இதோ அந்தக் கவிதை
      பயன்படா மரங்கள் 

              பூமிக்கு  அழகு சேர்க்கும் 
              அணிகலன் மரமேயாகும் 
              சாமிக்கும்   இடம் கொடுக்கும்  
               இயற்கையின் கொடையே ஆகும் 

              மண்ணுக்கு மழையைத் தருமே
              உலகுக்கு நிழலைத் தருமே
              கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
              உண்பதற்கு உணவு தருமே

              மலைகளுக்கு ஆடையாகும் 
              குயில்களுக்கு மேடையாகும்
              பறவைக்குக்  கூடு ஆகும்
              ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
              
              விருந்தினர்  உணவுஉண்ண
              விரும்பியே இலைகள்கொடுக்கும்
              மருந்துகள்  பலவும் தந்து 
              மன்னுயிர் வாழச் செய்யும் 

              எரித்திட விறகைக் கொடுக்கும் 
              அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
              உண்ணவே கனிகள்  கொடுக்கும்
              உயிர்வளி காற்றில் சேர்க்கும்

              வெம்மையை தடுத்துக் காக்கும் 
              அசுத்தங்கள் எடுத்துக் கொள்ளும் 
              பலப்பல பொருட்கள் செய்ய 
              பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

              பயன்பெறும் மனிதர் மரத்தை 
              ஒருநாளும் நினைப்பதில்லை 
              சுயநல மனிதர் அவர்க்கு 
              இயற்கையின்  மன்னிப் பில்லை

              மக்கட்  பண்பில்லா மனிதர் 
              மரம்போலே ஆவாரென்று
              வான்புகழ் வள்ளுவன் ஏனோ
              வாய் தவறி சொன்னான் அன்று 

              பயன்படா மரங்கள் என்றும் 
              மண்ணிலே முளைத்ததில்லை 
              மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
              மரங்களுக்கு இணையே இல்லை.

              மரங்களின்  மகிமை அறியா
              மனிதரில்  சிலபேர் தன்னை 
              பயன்படா மரங்கள் என்பேன் 
              மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


இதுக்கா பரிசுன்னு கேக்கப் படாது . 

***********************************************************************
மேதின வாழ்த்துகள் 

 படிக்கலாம் 
இன்றாவது நினைத்துப் பார் 

25 கருத்துகள்:

 1. பார்த்தீனியம், லண்டானா கேமரா போன்ற செடிகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவும், விலங்குகளுக்கு ஊறுவிளைவிப்பதாகவும் சூழலியலாளர்களால் சொல்லப்படுகின்றன.

  சீமைக் கருவேலம் மற்ற தாவரங்களை தன் நிலப்பரப்பில் வளர விடுவதில்லை என்பதோடு, நிலத்தடி நீரையும் வெகுவாக உறிஞ்சிவிடும் என்று படித்திருக்கிறேன்.

  அறுசீர் விருத்தத்திற்கு நெருக்கத்தில் அமைந்த தங்களின் கவிதை அழகு..!

  தமிழ்மணத்தின் என் கணக்கில் ஏதோ சிக்கல் வாக்களிக்க இயலவில்லை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மரங்களின் மகிமை அறியா
  மனிதரில் சிலபேர் தன்னை
  பயன்படா மரங்கள் என்பேன்
  மறுப்பேதும் உண்டோ?

  மறுப்பேதும் இல்லை ஐயா
  நன்றி தம +1

  பதிலளிநீக்கு
 3. #இதுக்கா பரிசுன்னு கேக்கப் படாது . #
  சின்ன பிள்ளேதானே எழுதி இருக்குன்னு பரிசு கொடுத்துட்டாங்க :)

  பதிலளிநீக்கு
 4. There are poisonous plants in the world murali.

  You need to cehck out, the plant,namely, Veratrum californicum

  http://en.wikipedia.org/wiki/Veratrum_californicum

  and an article ..Cyclopamine: The Curious Case of Cycloptic Sheep,,http://naturespoisons.com/2014/05/06/cyclopamine-the-curious-case-of-cycloptic-sheep/

  பதிலளிநீக்கு
 5. நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சுவது மட்டுமல்ல, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுவது இந்த மரத்தின் பழக்கம் என்று படித்திருக்கிறேன். இதை அழிப்பதால் மனிதனும், மனிதனுக்கு உதவும் மற்ற பயனுள்ள மரங்கள் பல வாழும் வழி வரும் என்றால் அதற்கே என் வோட்டு. விறகுக்கு மட்டுமே பயன்படும் இந்த மரத்தால் ஆபத்தே அதிகம்.

  பதிலளிநீக்கு
 6. இந்த மரங்களின் விறகை தான் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் வாங்கி பயன்படுத்துகின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 7. கவிதையில் கூட பொதுவான பயன்களைப் பற்றிதான் சொல்லப்பட்டிருக்கின்றன. சீமைக் கருவேலத்தில் சின்ன நன்மை இருக்கிறது. அது அடுப்பு கரியகப் பயன்படுவதுதான். மற்றபடி அது முழுக்க முழுக்க தீங்கான ஒன்றுதான்.

  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவு மரங்களின் நன்மை சொல்லும் கவிதை பற்றியதே. கவிதை சிறியதாக இருந்தால் கூடுதலாக எனது கவிதையில் உள்ள வரிகளுக்கு துணையாக தமிழ் இளங்கோ அவர்களின் மாற்றுக் கருத்துப் பதிவை சுட்டிக் காட்டி உள்ளேன். முழுக்க முழுக்க தீங்கு என்பது சற்று மிகைப் படுத்தப் பட்டதாக தோன்றுகிறது.நன்மை தீமை அனைத்திலும் உண்டு
   பன்னிக்குட்டி ராமசாமி அவர்களின் பதிவை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   நீக்கு
 8. உங்கள் வலைத்தளம் வந்திட்ட போது இன்ப அதிர்ச்சி. கட்டுரைக்குள் மேற்கோளாக எனது பதிவு. நன்றி. எனது பதிவில் உள்ள மாற்று சிந்தனை பற்றிய கருத்துக்களை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.


  // பயன்படா மரங்கள் என்றும்
  மண்ணிலே முளைத்ததில்லை
  மடிந்தபின்னும் மனிதருக்குதவும்
  மரங்களுக்கு இணையே இல்லை //

  என்ற உங்களது வரிகள் சொல்லும் உண்மையை, யாரும் மறுக்க இயலாது.

  த.ம. 5

  பதிலளிநீக்கு
 9. வரிகள் அருமை...

  இது பரம்பரை 'தொடர்' கவிதைக்கு வாழ்த்துக்கள்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 10. மனிதர்களுடன் ஒப்புநோக்கும்போது மரங்கள் உயர்ந்த இடத்தை பெறுகின்றன என்பதே நிதர்சனம். நாம் நடக்கும் இடத்தில் புல் கூட முளைப்பதில்லை. இதுஒன்று போதுமே நம்மைப் புரிந்துகொள்ள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நாம் நடக்கும் இடத்தில் புல் கூட முளைப்பதில்லை.//

   ஒற்றை வரியில், ஆழமான கருத்து. முனைவர் அய்யா அவர்கள் சொன்னதை எண்ணிப் பார்க்கிறேன்.

   நீக்கு
 11. ஆஹா! பரிசு பெறத் தகுதியான கவிதையே. அந்தச் சிறுவயதிலேயே நன்றாகவே எழுதயுள்ளீர்கள். இரண்டு முறையும் பரிசு பெற்ற கவிதை அல்லாவா ம்..ம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !
  சிங்கத்தையும் சிறுநரியையும், பாம்பையும் பருந்தையும் படைத்தான் நல்லாரையும் பொல்லாரையும் படைத்தவன் இதையும் ஏதோ காரணத்திற்காக படைத்திருப்பான் போலும். உயிரினங்களை பிடித்து விழுங்கும் மரங்களும் உண்டு என்று எங்கோ வாசித்த ஞாபகம் உண்டு. பதிவுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 12. நான் வேலை செய்த பள்ளியின் தலைமையாசிரியர் யூகலிப்டஸ் மரங்கள் பற்றி ரொம்பவும் கடுமையாக விமரிசனம் செய்வார். அதன் இலைகள் மக்குவதற்குக் கூட வெகு காலம் ஆகும்; நிழல் தராது. வெள்ளையர்கள் வந்து வேண்டுமென்றே இந்தியாவில் இந்த மரங்களை நட்டிருக்கிறார்கள் - இந்திய மண்வளம் கெட வேண்டுமென்று என்பார். இது எத்தனை தூரம் உண்மையோ?
  ஒன்றுக்குமே பயன்படாத மரம் இருக்க முடியாது என்ற கருத்துதான் எனக்கும்.

  பதிலளிநீக்கு
 13. பயன் தராத மரங்கள் என்று எதுவும் இல்லை! உண்மையே! சிறப்பான கவிதை! பரிசு பெறுவதில் குற்றம் ஏதும் இல்லை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. உலகில் பயன்படா மரங்கள், தாவரங்கள் என்று எதுவும் இல்லை. அது மனிதனுக்கு வேண்டுமானால் பயன்படாமல் இருக்கலாம் என்பது என் கருத்து
  கருவேல மரத்தை பொறுத்த வரை, உங்களின் முதல் வரி சரியானது, ஆனால் இரண்டாவது தவறு. தென் தமிழக ஏழை மக்களின் நண்பன். நீங்களே பதிவிலும் குறிப்பிட்டு உள்ளீர்கள். திரு காமராஜர் முதல்வராக இருந்த சமயம், இந்த கருவேல மரம் நீர் வசதி அற்ற கிராமங்களிலும் பயன்பாடற்ற நிலங்களிலும் பரவலாக பயிர் செய்தார் என படித்துள்ளேன். உண்மைதானே.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் மகனிடம் இந்தக் கவிதையைச் சேமித்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் அவரதுமகனுக்கு உதவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. கவிதை அருமை நண்பரே வாழ்த்துகள்
  தமிழ் மணம் 12

  பதிலளிநீக்கு
 17. என்னுடைய தளம் வந்து தகவல் தெரிவித்த சகோதரருக்கு நன்றி. நீங்கள் இணைப்பு தந்த டெரர் கும்மி (கணேஷ் & பன்னிகுட்டி ராம்சாமி) பதிவினையும் படித்தேன். என்னைக் காட்டிலும் அவர்கள் சீமைக் கருவை பற்றி நிறைய தகவல்கள் தந்து இருக்கிறார்கள். அந்த பதிவினை எல்லோரும் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

 18. அழகான கவிதை - அதில்
  பயன்படா மரங்கள் என்ற
  ஆய்வு நன்று - நம்ம
  மரங்களுக்கு (மரங்களின் தேவை உணராதோருக்கு) எப்ப தான்
  ஏறுமிந்த ஆய்வுச் செய்தி!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  முரளி அண்ணா
  நயமிக்க கருத்துடன் நயமிக்க கவிதை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 11

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. அடடே ஆமாம் சரிதான்
  என்று ஒரே வார்த்தையில் சொன்னால் அடங்கு (ஜால்ரா) சத்தம் அதிகம்) என சிலர் சிரிப்பர்.
  இந்த பதிவின் தொடர்ச்சியாக
  பிளாஸ்டிக் எனும் பேயை எவ்வாறு
  (உபயோகமாய்)
  (முழுமையாய்)
  பயன்படுத்துவது
  என்ற கேள்வியை விதைப்போம்.

  பதிலளிநீக்கு
 21. பயன்படா மரங்கள் - மனிதர்கள்

  கருவேல மரம் பற்றிய பலவற்றை படிக்கும்போது முன்பு யூகலிப்டஸ் மரம் பற்றி சொன்னவையும் நினைவுக்கு வந்தது. நெய்வேலியில் இந்த யூகலிப்டஸ் மரக் கன்றுகளை மைன்ஸ் மண் மேடுப் பகுதிகளில் நிறையவே நட்டு வைத்தார்கள் - அவை அதிகமான தண்ணீரை உறிஞ்சும் என்பதாலோ என்பது தெரியாது.....

  சிறப்பான கவிதை.


  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895