என்னை கவனிப்பவர்கள்

படித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 நவம்பர், 2013

ஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்?

குழந்தைகளின்  மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
இரண்டு மாறான உதாரணங்கள்  பார்ப்போம்.

  முதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரிந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர்களும் இருக்கலாம். பாசம் பொங்கும் கண்களுடன் அன்னை  மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூபமாக காட்சி அளிக்கும் இந்த ஓவியத்தை பார்த்தால் பாராட்டத் தோன்றாமல் இருக்குமா? ஆனால் பேரைக் கேட்டால் பாராட்ட மனம் வராது.

     சிறு  வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் விரும்பினான். ஆனால் அவன் அப்பாவோ  அவனது திறமையை அறிந்தவராக இல்லை. அவனை பொறியியல் படிக்க வற்புறுத்தினார். சிறிய தவறுகளுக்குக் கூட அவனை கடுமையாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தெருவில் நிறுத்தி பெல்ட்டால் மகனை அடிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. தந்தையின் மீது தீராத வெறுப்பு கொண்டான் அந்த சிறுவன். தந்தை இறந்த பின் அவன் தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்தான். ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட முயன்றார் அவரது தாய். ஆனால் அதிலும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.இரண்டாவது முறை முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது. (அந்தக் காலத்திலுமா நுழைவுத் தேர்வு) அவனுக்கு ஓவியம் வராது ஆனால் ஓவியத்தை விட Architecture வேண்டுமானால் படிக்கலாம் என்றனர். பிடிக்காத பள்ளிக்கே மீண்டும் செல்ல வேண்டி இருந்தது. இப்படி விருப்பப் பட்டது எதுவும் நடக்காமல் மன சிதைவுக்கு ஆளானான் அந்த சிறுவன். மேலுள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன்தான் பின்னாளில் இலட்சகணக்கான பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடால்ப் ஹிட்லர். 


தந்தையின் கொடுமை,பள்ளியின் கண்டிப்பு,ஓவியத் தேர்வில் தோல்வி போன்றவை ஹிட்லரை இரக்கமற்ற மனிதனாக மாற்றிஇருக்கக் கூடும்.  ஹிட்லர்கள் தானாக உருவாவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் . ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவனது வாழ்க்கையே திசை மாறி இருக்கலாம். ஏன் வரலாறே ஒருவேளை மாறி இருக்கலாம்.

  இதற்குநேர்  மாறாக இன்னொரு உதாரணம் பார்க்கலாம். சர்ச்சுக்கு வந்த அந்த சிறுவனின் வயது எட்டு அல்லது  ஒன்பது  வயது இருக்கலாம் ஒருநாள் பாதிரியார் அவனை ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்து வருமாறு கூறுகிறார். கோப்பையை கொண்டு வரும்போது கவனக் குறைவினால் கை தவறி கீழே போட்டு விடுகிறான். அது உடைந்து சிதறி விடுகிறது.பையனுக்கோ பயம் வந்து விட்டது பாதிரியார் தன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டப் போகிறாரோ?அல்லது அடிப்பாரோ என்று நடுங்குகிறான். கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட பாதிரியார் திரும்பிப் பார்க்கிறார். அடடா குட்டிப் பையா! கண்ணாடி கோப்பையை கை தவற விட்டு விட்டாயா? உடைந்து விட்டதே? கவனமாக இருக்கவேண்டாமா? காலில் குத்தி விட்டால் ஆபத்தாயிற்றே" என்று சொல்லிக் கொண்டே கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்த ஆரம்பித்து விட்டார்.

பையனால் இதை நம்ப முடியவில்லை. 'ஃபாதர் ஏன் தன்னை திட்டவில்லை? என்பது அவன் மனத்தில் எழுந்த கேள்வி .நெடு நேரம் அவனுக்கு அது உறுத்தியது. யோசிக்க யோசிக்க அவனுக்கு தெளிவு கிடைத்தது. அவன் தவறு செய்தான்.ஆனால் ஃபாதர் அவனை மன்னித்து விட்டார். தவறு எல்லோரும் செய்வார்கள். பெரியவர்கள் அதை மன்னித்து விடுவார்கள். இதுதான் அவனுக்கு தோன்றிய விடை. இதுதான் பிற்காலத்தில் அந்த சிறுவன் உலகம் வணங்கும் மனிதராக உருவாக காரணமாக அமைந்தது. அவர் பிற்காலத்தில் யாருடைய தவறையும் பொருட்படுத்தியதில்லை. அவரை கொல்ல ஒருவன் முயற்சி செய்தான். ஆனால் அதில் இருந்து நூலிழையில் தப்பி விட்டார். கொலை செய்ய முயன்றவனை கைது செய்து விட்டனர்.ஆனால் அவரோ  தான் மன்னித்ததோடு அவனை மன்னித்து விடுமாறு அரசாங்கத்தையும் கேட்டுக கொண்டார். அதுமட்டுமல்ல சிறைச் சாலைக்கு சென்று அவனை நேரில் சந்தித்து அவன் நன்மைக்காக பிரார்த்தனையும் செய்தார். அவர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் அவர்தான் இரண்டாம் போப் ஜான் பால். 


*********************************************************************************
குறிப்பு: குழந்தைகள் தினத்தன்று வெளியிட நினைத்தேன். உடல் நலமின்மையால் இன்றுதான் முடிந்தது
*********************************************************************************
படித்து விட்டீர்களா?
யார் ஏழை?