என்னை கவனிப்பவர்கள்

புஷ்பா மாமியின் புலம்பல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புஷ்பா மாமியின் புலம்பல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூலை, 2015

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதானா?


புஷ்பா மாமியின் புலம்பல்களைக் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதல்லவா?
நான் கேட்ட புலம்பல்களை நீங்களும் கேட்டு புலம்புவீர்.

      நேற்று  புஷ்பாமாமியின்  கையில் ஹெல்மெட்டுடன் ( இன்னும் தலையில் போடவில்லை)  பார்த்தபின்தான் நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என்பது நினைவுக்கு வந்தது  மாமாவுடன் ஸ்கூட்டரில் வந்து  இறங்கினார். "வெத்தலை பாக்கு வாங்க மறந்துட்டேன். நீக போய்கொஞ்சம் வாங்கிண்டு வாங்கோ" என்று அனுப்பி விட்டு என் பக்கம் திரும்பினார்.
"முரளி!  நினைச்சா ஒரு சட்டம் போடறா உங்க கவர்ன் மென்ட்ல "
30 இந்தேதிக்குள்ள 2005 வருஷத்துக்குள்ள அச்சடிச்ச ரூபா நோட்டு எல்லாம்  ஜூலை ஒண்ணாந்தேதிக்குப் பிறகு  செல்லாதுன்னு பேப்பர்ல போட்டிருந்தான். ஜுன் 30க் குள்ள அதை பேங்குல மாத்திக்கனுமேன்னு என்கிட்ட் இருந்த பழைய ரூபா நோட்டை எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போனேன் . அங்கே போன டிசம்பர் வரை   டைம் எக்ஸ்டன்ட்  பண்ணி இருக்கானாம்  இது தெரிஞ்சா மெதுவா போயிருப்பேன் . ஒரு மாசம் முன்னாடியே சொல்லக் கூடாதா. கடைசி நேரம் வரை காத்திருக்கணுமாம். சரி போனதுதான் போனோம் ஒண்ணாந்தேதியில் இருந்து ஹெல்மட் கட்டாயமாச்சேன்னு  ஹெல்மட் வாங்கி வந்தேன்.
 ஏதோ நான்தான் கவர்மென்ட் என்பது போல தொடங்கினார் புஷ்பா மாமி
"உத்தரவு போட்டாலும் போட்டீங்க . ஹெல்மெட் கடையில ஒரே கூட்டமா இருக்கு. இதான் சாக்குன்னு பழைய ஹெல்மெட்டை எல்லாம் தூசு தட்டி நம்ம தலயில கட்டிடறான்.
"ஹெல்மட்டே தலையில கட்டறதுதானே மாமி!?
"ஹய்யோ ஜோக்காமுரளி! நோக்கு ஜோக்கடிக்கக் கூட தெரியுமா?"

மாமி தொடர்ந்தார் 
"ஒரு சட்டமோ விதியோ என்னத்துக்கு?  நாம் செய்யற செயலாலே மத்தவாளுக்கு ஆபத்தோ சங்கடமோ, கஷ்டமோ இருந்தா அதுக்காக ஆர்டர் போடலாம். நாம
ஹைவேஸ்ல போகும்போது ஹெல்மெட் போட்டுட்டுதான் போகணும்னு சொன்னா அதுல நியாயம் இருக்கு. ஏன்னா! கண்ணு மண்ணு தெரியாம வேகமாப் போறா! லோக்கல் ரோடுதான் குண்டும் குழியுமா இருக்கே

      எங்காத்துல இருக்கிற   ஸ்கூட்டருக்கு ஹெல்மட் தேவையா? அது போற வேகத்துக்கு.  அதுவும் எங்காத்து மாமாவண்டி ஓட்டும்போது  பின்னாடி ஒக்காந்து போனா போறும். நடந்து போறவா எல்லாம் ஓவர் டேக் பண்ணி  டாட்டா காட்டிட்டு  போயிண்டே இருப்பா? அவ்வளோ வேகம் .நானே ஓட்டறேன்னாலும் கேக்க மாட்டார்"
   "குடிக்காதன்னு ரூல்ஸ் கொண்டு வரலாம். குடிச்சா மத்தவங்களுக்கும் பாதிப்பு, இத்தனை கி.மீ வேகத்துக்கு மேல போகக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரலாம்.ஆக்சிடன்ட் நடக்க வாய்ப்பு இருக்கு.பொது இடத்தில சிகரட் புடிக்கக் கூடாதுங்கறது  ஓ.கே  ஏன்னா புகை மத்தவங்களுக்கும் பகையா  போகுது, கண்ட இடத்தில எச்சில துப்பக் கூடாதுன்னு கட்டாயப் படுத்தலாம். ஏன்னா  சுகாதாராம் பாதிக்க வாய்ப்பு இருக்கு. ஹெல்மெட் போடலன்னா அவங்களுக்கு மட்டும்தான் பாதிப்பு.: இல்லையா? இதுல பின்னாடி ஒக்காந்திருக்கறவா வேற ஹெல்மெட் போட்டுண்டு போகணுங்கறது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.
"மாமி! எனக்கு தெரிஞ்சி வண்டி ஒட்றவங்களை விட பின்னாடி ஒக்காந்து வரவங்களுக்குத்தான் ஹெல்மெட்  அவசியம் தேவை . ஏன்னா விபத்து நடக்கும்போது விழறதை தவிர்க்க முடியாட்டாலும் வண்டி ஓட்டறவருக்கு fracton of Seconds முன்னாடி தெரிஞ்சுரும் . அதனால தலயில முடிஞ்சவரை அடிபடாம பாத்துக்க தன்னையும் அறியாம முயறசி பண்ணுவாங்க. ஆனால் பின்னாடி இருக்கவங்களுக்கு விபத்தை உணர்வதற்குள்ள விழுந்து சில நேரங்களல்ல தலையில் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்புஇருக்கு. டூ வீலர் விபத்துகளை கவனிச்சு பாருங்க. பின்னாடி இருக்கவங்களுக்குத்தான் அதிக அளவில காயமோ உயி ரிழப்போ ஏற்படுது"
"போடா! நீயும் உன் புள்ளி விவரமும்.
    ஒவ்வொரு வீட்டிலையும் குறஞ்ச பட்சம் ரெண்டு ஹெல்மெட்டாவது வாங்கி வைக்கணும் போல இருக்கே. உன் கிட்ட டூ வீலரே இல்லன்னாகூட ஹெல்மட் வாங்கணும் . இல்லன்னா அவசரத்துக்கு ஹாஸ்பிடலுக்கு கடைக்குக்  கூட யாரோடையும் டபுள்ஸ் போக முடியாது. முன்னெல்லாம் மெயின் ரோட்லதான் ட்ராபிக் போலிஸ்காரன் இருப்பான். இப்பல்லாம்  நாலு சந்துகள்லையும் நின்னுக்கிட்டு வண்டியை மடக்கறாளே! இனி அவாளுக்கு கொண்டாட்டம்தான்"
தர்மம் தலை காக்குங்கறது இதுதானோ!
ஹெல்மட்டோட பேரைப் பாருங்க
"இன்னும் என்னென்ன ரூல் போடப் போறாளோ தெரியல 
மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டம் இடிச்சி விழுந்துதோ இல்லையோ. அதனால அடுக்குமாடி குடி இருப்பவங்க எல்லாம் வீட்டுக்குள்ள இருந்தாலும் ஹெல்மெட் போட்டுக்கணும்னு ஒரு சட்டம் கொண்டுவந்தாலும் ஆச்சர்யம் இல்ல.
 "ஜென்ட்ஸ் ஓகே லேடீசுக்கு எப்படிடா செட் ஆகும் .ஏற்கனவே அரை அடி தலைமுடிதான் இருக்கு . கொட்டிப் போயிடாதோ. அதுவும் நம்ம ஊரு வெயிலுக்கு வேர்த்து வேர்த்து முடி பிசுபிசுன்னு ஆகிடுமே ஆபீஸ் போற லேடீஸ் எல்லாருக்கும் கஷ்டம்தானே.தலைவலியோட சேத்து கழுத்துவலியும் வரும்னு சொல்றாளே!
" சும்மா மாமி , நல்ல குவாலிட்டி ஹெல்மெட் வாங்கினா அதெல்லாம் வராது "

 "ஆமாம்! ஐ.எஸ்.ஐ முத்திரை வாங்கினதா இருக்கணும் .தலைக்கு பொருத்தமானதா வாங்கனும்னு அடவைஸ் பண்றா .எப்படி தலைக்கு பொறுத்தமாயிருக்கும் ஒவ்வொருத்தர் மண்டையும்  ஒவ்வொரு விதமான்னா இருக்கு, 
 ஹெல்மெட் இல்லாம போனா லைசன்ஸ் ,ஆர்.சி புக் ன்னு எல்லா டாக்குமன்ட்சையும் பறிமுதல் செய்யணுமாம். நல்ல காலம்! ஜட்ஜுக்கு நல்ல மனசு வண்டியையே பறிமுதல் பண்ணனும்னு சொல்லாம விட்டாரே.

"மாமி!எதுவும் முதல்ல சொல்லும்போது  கஷ்டமாத்தான் இருக்கும்  கொஞ்சம் குறைகள் இருக்கத்தான் செய்யும் . உயிர் முக்கியம் இல்லையா
நிறைய விப்த்துகள்ள ஹெல்மெட் போட்டிருந்தா உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்குன்னுதானே டாக்டர்ஸ் எல்லாம் சொல்றாங்க  .." என்று நான் சொல்லிக்கொண்டிருக்க வழக்கம்போல் தான் சொல்வதை  மட்டும் சொல்லி விட்டு வேல இருக்கு நான் கிளம்பறேன்' என்று புறப்பட்டார் புஷ்பா மாமி 

***************************************************************************

கொசுறு
 ஹெல்மட் பற்றி இவங்கல்லாம் என்ன சொல்றாங்க?

      1. கண்டாக்டர் 
         கண்ணுல தூசி விழாம பாத்துக்கலாம் .


     2. காதலர்கள் கருத்து
        யார் கண்ணுலயாவது பட்டுடுவோமோன்னு  பயம் இல்லமா சுத்தலாம்

     3.குடும்பத் தலைவரின் குரல் : 
        ஹெல்மட் வாங்கறது பெரிசு இல்லை அதை  பத்திரமா பாதுகாக்கறதுதான்          பெரிய விஷயம்.

    4.ஒரு பெரியவரின் கருத்து:
       தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் தலைக் கன த்தோடு அலையப்      போகிறார்கள்

    5. ஒரு அம்மாவின் கவலை
        பையனை 2. கி.மீ தூரத்தில் இருக்க ஸ்கூல்ல கொண்டுபோய் விடனும் அவன் சைசுக்கு ஹெல்மெட் கிடைக்குமா. விட்டுட்டு  வரும்போது  ஹெல்மெட்டை திரும்பி கொண்டுவரணும். ஈவினிங்   கூட்டீடு வர   போகும்போது ஞாபகமா எடுத்துட்டு போகனும்  

     6.ஹெல்மட் கடைக்காரர்களின்  கவலை 
        நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லிடாதீங்க 

     7. மணப்பெண்ணின் அப்பா:
       கல்யாண சீர் வரிசையில ஹெல்மெட்டும் சேத்துக்கனும் 

     8. திருவாளர் பொது ஜனம் 
         இதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அப்பறம் யாரும் இதை         கண்டுக்க மாட்டாங்க
     9. அரசியல் வாதி  
          அடுத்த இலவச  திட்டம் தயார்  அம்மா ஹெல்மெட் 
   10 .முகமூடிக் கொள்ளையர்கள் 
         ஹையா! எல்லோரும் எங்கள மாதிரியே இருந்தா எங்களுக்கு ரொம்ப வசதியாப் போச்சு  
         

கொசுறுக்கு கொசுறு  
பிரபல பதிவர் மதுரை தமிழன்  விசுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வேலூர் வந்தபோது   சொன்ன (ரகசிய) தகவல் .
நான் வீட்டுக்குள் இருக்கும்போது ஹெல்மட் போட்டுக்கொண்டுதான் இருப்பேன். பூரிக்கட்டை தாக்குதலில் இருந்து தப்பிக்க . 
  கணவன்மார்களின் நன்மை கருதி இந்தியாவில் வீட்டுக்குள்ளேயும் ஹெல்மெட் கட்டாயம் அணிய  சட்டம் போடவேண்டும் என மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பல பதிவர்கள் ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

***********************************************************

    புஷ்பா  மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா?
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்  
    புஷ்பா மாமியின் ஆவேசம்!
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு? 
    அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்  
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்  
    புஷ்பா மாமியின் எச்சரிக்கை 

புதன், 23 அக்டோபர், 2013

புஷ்பாமாமியின் புலம்பல்கள்!ஜாக்கிரதைடா!ஜாக்கிரதை!

'விஸ்வநாதா! நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ. ஜாக்கிரதையா நடந்துக்கோ பேப்பர்ல வர்ற நியூஸ் எல்லாம் பாத்தா பயமா இருக்கு. போன் பண்ணு. ....."
புஷ்பா  மாமியின் குரல் வீட்டுக்குள் இருப்போரையும் வெளியே எட்டிப் பார்க்க வைத்தது.
மாமி தன உறவினர் யாரையோ ஏற்றிவிட எங்கள் பகுதியின் மெயின் ரோடில் ஆட்டோவிற்காக காத்திருந்தது தெரிந்தது. ஒரு ஆட்டோ வந்தது. மீட்டர் போடுவியா என்று கேட்டார்.
அவன் "முடியாது"  என்றான்
விடாப்பிடியாக"ஆட்டோல கட்டாயம் மீட்டர் போடனும்னு கவர்ன்மென்ட் சொல்லுதே! நீ ஏன் மீட்டர் போட மாட்டேன்னு சொல்ற"
"எங்களுக்கு கட்டுப்படியாகாது.அதுக்கப்புறம் ரெண்டு முறை பெட்ரோல் விலை ஏறிடிச்சு. அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?"
'அதெல்லாம் எனக்கு தெரியாதுமீட்டர் போடறதா இருந்தா வா!இல்லன்னா போய்க்கிட்டே இரு." என்றார் மாமி
அவன் போய் விட்டான்.
கூட இருந்த இளைஞன் விஸ்வநாதன் "சித்தி பரவாயில்ல நான் போய்க்கறேன். நீங்க போங்க!" என்றான்
மாமி விடவில்லை காத்திருந்து மீட்டர் போடும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்தார்.
"முரளி, இப்போ ஆட்டோல ஏத்தி விட்டேனே அவன் என் அண்ணன் பையன் விஸ்வநாதன். புதுசா ஹையர் செகண்டரி ஸ்கூல்ல வாத்தியாரா சேரப் போறான். அதனாலதான் அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்தேன்."

"அப்படியா மாமி! ரொம்ப சந்தோஷம்" என்று எப்போதும் போல் ஒரிரு வார்த்தைகளில் ரியாக்ஷன் கொடுத்தேன். மாமி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார்.
:"இந்த காலத்தில வாத்தியார் வேல செய்யறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. .பேப்பர்ல படிச்சிருப்ப யே போன வரம் தூத்துக்குடியில இரு இன்ஜினியரிங் காலேஜ் ப்ரின்சிபாலை  மூணு ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து கொலை பண்ணிட்டாளாமே! காலம் எப்படி இருக்கு பாத்தியா! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பையன் டீச்சரை கொலை பண்ணான். இப்போ கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம பிரின்சிபாலை கொன்னுட்டான்களே. எப்படி வந்தது இந்த கொலை வெறி " அதுக்குதான் விஸ்வநாதன் கிட்ட சொல்ல்கிட்டிருந்தேன்." நீ பாடம் சொல்லிக் கொடுக்கப் போறது +2 பசங்க. அதுவும் கோ-எஜுகேஷன் .பசங்களை யாரையும் கண்டிக்காதே. அடிச்சி கிடிச்சு வச்சுடாதே.அதுவும் குறிப்பா பொம்பளை பசங்க கிட்ட எப்பவுமே டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு படிக்காட்டி போறாங்க அதுக்காக கண்டிக்காதே. திட்டாதே ன்னு"
" ஆமாம் மாமி. அடிக்கிறது மட்டும் இல்ல மன ரீதியா  பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் தப்புதான்."

"திட்டினாலோ அடிச்சாலோ தற்கொலை செஞ்சுக்கற பசங்க ஒரு  பக்கம் இருக்கு. ஆனா  கொலை செய்யற அளவுக்குப் எப்படி போனாங்கன்னு தெரியல. காலேஜை விட்டு சஸ்பென்ட் செஞ்சதை அவமானமா நினைச்ச இந்த பசங்க இப்போ கொலைகாரங்க பட்டத்தோடதானே காலமெல்லாம் இருக்கணும்?"

"காலேஜ் பஸ்சில கேர்ள்சை கிண்டல் பண்ணதால இவங்களை சஸ்பென்ட் பண்ணிட்டாரு.பேரன்ட்சயும் கூப்பிட்டு அவமானப் படுத்தி இருக்காரு."
"அதுக்காக கொலபண்றது  சரியா?.திட்டமிட்டே பண்ணி இருக்காளே! இதுக்கு கடுமையான தண்டனை கொடுத்துத் தான் ஆகணும் முன்னெல்லாம் பிள்ளைங்களை ஸ்கூல்ல சேக்கும்போது கண்ணு ரெண்டு மட்டும் விட்டுடுங்க. மத்தபடி நீங்க அடிச்சி உதைச்சாவது பையனை படிக்க வையுங்கன்னு வாத்தியார்கிட்ட பெத்தவங்க சொல்லிட்டு போவாங்க. இப்ப அந்த மாதிரி எதிர்பாக்க முடியாதுதான். இருந்தாலும் கத்துக் கொடுக்கிற குருவை  கொலை பண்ற அளவுக்கு போய்ட்டாளே! இதுதான் கவலையா இருக்கு. பையன் இஞ்சினியரா ஆவான்னு கனவு கண்டுகிட்டு இருந்த பெத்தவங்களை நினைச்சி பாத்திருந்தா இந்த தப்ப செஞ்சிருப்பான்களா? அந்த பிரின்சிபாலும் கண்டிப்புங்கற பேர்ல பசங்களை ரொம்ப மோசமா நடத்துவாரான்றதை நானும் பத்திரிகையில படிச்சேன். படிக்கிற பசங்களை தன்னோட பிள்ளைங்க மாதிரி நடத்தனும்னு அவருக்கு ஏன் தெரியாம போச்சு? "

"இதெல்லாம் இப்ப இருக்கறவங்களுக்கு ஒரு பாடம் மாமி".  

"நிறைய காலேஜுல சில  அநியாயம் நடக்கத்தான் செய்யுது.ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் வாங்கறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அபராதம் போடறது. பசங்களை மெரட்டறதுன்னு. எல்லாரும் எப்போதும் ஒரே மன நிலையில இருக்கமாட்டாங்க. ஆசிரியர்களின் (ஏன் பெற்றோரோர்களின்) வார்த்தைகளோ செயல்களோ  .தற்கொலை செய்து கொள்ளவோ செஞ்சுக்கவோ , தவறான செயல்கள் செய்யவோ தூண்டறதா  இருக்கக் கூடாது. குழந்தைகளையும் புரிஞ்சிக்க முடியல. பெரியவங்களையும் புரிஞ்சிக்க முடியல..."
"சரியா சொன்னீங்க. ஸ்கூலை பொறுத்தவரை டீச்சர் கையில பிரம்பு பிரம்பு வச்சுக்கறது குற்றம். மாணவர்களை அடிச்சா அவர்களே கம்பளையின்ட் பண்றதுக்கு போன் நம்பர் கூட கொடுத்திருக்காங்க. இதையும் மீறி  ஏதாவது  நடந்து கிட்டுதான் இருக்கு."

" என்னமோ போ! பேப்பரை படிக்கறதுக்கே பயமா இருக்கு. அரசியல் விளையாட்டு, படிப்பு, சமூகம்னு ஏதுவா இருந்தாலும் முக்காவாசி மோசமான நியூசாத்தான் இருக்கு. இந்தக் கொலை செய்தி வந்த பேப்பர்ல அதே பக்கத்தில இதே மாதிரி ஏராளமான மோசமான செய்திதான் அந்த பேப்பரை கொடுத்தனுப்பறேன் பார்......."

மாமியின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது  எனக்கு வந்த அலைபேசி அழைப்பு அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது. புஷ்பா மாமி அவருக்கு பட்டதை சொல்லி விட்டுப் போய் விட்டார்.

 இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்
பின்னர் அவர் கொடுத்தனுப்பிய 11.10.2013 தினமலர் 11ம் பக்கத்தை பார்த்தேன்.
அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சில செய்திகளின் தலைப்புகள் 


  1. இன்ஜினியரிங் கல்லூரி முத்ஜல்வர்வெட்டிக் கொலை; மாணவர்கள் வெறித்தனம்
  2. நகராட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு. வருகை பதிவேடு கிழிப்பு 
  3. பெண் பலாத்காரம் மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு
  4. கொலையில் முடிந்த தகாத உறவு 10 ம் வகுப்பு மாணவன் சிக்கினான் 
  5. மகளை கற்பழித்த காமுகனுக்கு 14 ஆண்டு ஜெயில் 
  6. ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி.
  7.  கந்து வட்டிக்காரர் கொலை மிரட்டல் 
  8. இரு ரயில் இன்ஜின்கள் மோதிய விபத்து தடம் புரண்ட இஞ்சினால் தண்டவாளமும் சேதம் 
  9. காதல்  விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை 
  10.  
     இந்த சூழ்நிலையில வாராவாரம் பாசிடிவ் செய்திகளை தேடி வெளியிட்டு வரும் எங்கள் ப்ளாக்  ஸ்ரீராமுக்கு அவார்டுக்கு பரிந்துரைக்கிறேன்.
    **********************************************************************************
    பள்ளி   மாணவன் ஆசிரியையை கொன்றபோது எழுதியது
    தம்பி!  ஏனிந்தக் கொலைவெறி  
    *************************************************************
    புஷ்பா  மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா?
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்  
    புஷ்பா மாமியின் ஆவேசம்!
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு? 
    அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்  
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்  
    புஷ்பா மாமியின் எச்சரிக்கை  
    ***********************************************************************************
    படித்து  விட்டீர்களா?
    ஒரு தந்தையின் கடிதம்