என்னை கவனிப்பவர்கள்

காதல் கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்!

   மன்னிக்கவும் இது சினிமா விமர்சனம் இல்லை.  "திடம் கொண்டு போராடு" சீனு வைத்த காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்தியதைத்தான் குறிப்பிட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஆதலினால் காதல் செய்வீர் என்று பதிவுலகையே கலக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பதிவர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி காதலைப் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார்.

போட்டியில்  கலந்துகொண்ட ஒவ்வொருவரும் எழுதிய கடிதம் அப்பப்பா. உருகி உருகி காதல் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோட,  இள வயதில் காதலிக்கத் தவறியவர்கள் காதலிக்காமல போய்விட்டோமே என்ற ஏக்கத்தை நிச்சயம் அடைந்திருப்பார்கள், காதலித்தவர்கள் தான் காதலித்த காலத்திற்கு பயணம் செய்து வந்திருப்பார்கள், இன்னும் சிலரோ இனிமேலாவது காதலித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இதில் இப்போட்டியில் பரிசு பெற்றதாக அறிவிக்கப் பட்ட 9 கடிதங்களில் 6 கடிதங்களை எழுதியவர்கள் பெண்களே! அதுவும் முதல்  மூன்று பரிசுகளில் நுட்பமாகவும் அழகுடனும்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்பதை இம்முடிவுகள் பறை சாற்றுகின்றன.
(ஜீவன்  சுப்பு மூன்றாம் இடம் பிடித்து ஆண்களின் மானம் காத்தார். நானும் ஹிஷாலியும் ஆறுதல் பெற்றோம்.)
அத்தனை  கடிதங்களையும் படித்துவிட்டு அந்தக் கடிதங்களுக்கு விமர்சனம் எழுதி நான் ரசித்தபடி வரிசைப் படுத்தி பதிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கவிதையாகப் படிக்கப் படிக்க முடிவெடுக்க முடியாமல் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

எந்தக்  கடிதத்தை படித்தாலும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்றே தோன்றும். நடுவர்களின் பாடு உண்மையில் திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. திடம் கொண்டு போராடித்தான் கவிதைகளை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.


   சீனு மேலே உள்ளவாறு சொன்னபோதும் (என்னை கலாய்க்கிறாரோ என்றுகூட நினைத்தேன், ஐயம் கூட உண்டானது) நான் அவ்வளவாக ஆர்வம் கட்டவில்லை.

போட்டிக் கடிதங்களில் பெரும்பாலானவற்றை படித்து விட்டேன் ஒன்றிரண்டைத் தவிர.கலந்து கொள்ளவேண்டும் நினைத்தாலும் மற்ற கடிதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எழுத முடியுமா என்ற ஐயமும் ஏற்பட்டது. அதுவும் இந்தக் கடிதங்களில் இருந்து சற்றாவது மாறுபட்டிருந்தால் மட்டுமே நடுவர்களான  ஜீனியஸ் அப்பாதுரை, பல்துறை வித்தகி ரஞ்சனி நாராயணன், நகைச்சுவை திலகம்  பாலகணேஷ், பாசிடிவ்  ஸ்ரீராம் -இவர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும். ஜூலை 20 வரை டைம் இருக்கிறதே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
 ஒருவேளை போட்டியில் பங்குபெற்றால் அந்த கடிதத்தில் என்னென்ன இருக்கவேண்டும் என்னென்ன இருக்கக் கூடாது என்று நானே வரையறை வைத்துக் கொண்டேன்.
அதில் ராட்சசியே, பிசாசே, போன்ற வார்த்தைகள் இடம் பெறக்கூடாது என்று முடிவு செய்தேன். கடிதத்தில் எந்த இடத்திலும் காதல் என்ற வரத்தை இடம்பெறாமல் இருத்தல் நலம் என்று நினைத்தேன். மனப்பக்குவமும்,புத்திசாலித்தனமும்,வெளிப்படும் வண்ணம் அமையக் கூடாது. சொல்ல வேண்டிய விஷயங்களை இப்படிப் பிரித்துக் கொண்டேன்.
  1. .காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லவேண்டும்
  2. பழைய  நினைவுகளை சொல்லவேண்டும்.
  3. காதலியின்  அழகை கொஞ்சமாவது வர்ணிக்க வேண்டும் 
  4. .காதலிக்காக இயல்பை மாற்றிக்கொன்டதை சொல்லவேண்டும்
  5. காதலியை யாராது ஏதாவது சொன்னால் தாங்கிக்கொள்ள  முடியாதென்பதை சொல்லவேண்டும் 
  6. உனக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
  7. கொஞ்சம்  நகைச்சுவை இருக்கவேண்டும்.
  8. காதலியைத் தவிர வேறுஎந்தப் பெண்ணையும் பிடிக்காது என்பதையும் உணர்த்த வேண்டும்.
  9. நண்பர்களுடைய நடைமுறைக்கொவ்வாத காதலை சொல்லவேண்டும் 
  10. எதிர்கால கனவை சொல்லவேண்டும் 
  11. வித்தியாசமான வடிவத்தில் சொல்லவேண்டும். 
எப்படியோ  இவற்றை எல்லாம் இணைத்து கடிதம் உருவாக்கி விட்டாலும் திருப்தி ஏற்படாமல் பதிவை வெளியிடாமல் இருந்தேன். திடீரென்று சென்னை தமிழில் எழுதினால் என்ற எண்ணம் உதிக்க, எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் தூய தமிழில் அல்லவா எழுதுவர் என்ற லாஜிக் உதைக்க எப்படியோ செல்போனில் வாயால் பேசி பதிவு செய்வதுபோல் கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம்  எழுதி ஒப்பேற்றினேன்.
போட்டிக்கான கடைசி நாளில் bsnl சதி செய்ய அடுத்த நாள்தான் காலையில்தான் வெளியிட முடிந்தது. போட்டியில் சேர்க்கப் படுமோ படாதோ என்ற ஐயம் இருந்தது. சேர்த்துக் கொண்டதாக தகவல் அறிந்தேன்.
கருத்திட்ட அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன் அவர் எழுதிய காதல் கடிதத்தை நீக்கி விட்டாவது எனது கடிதத்தை சேர்க்கச் சொல்லி சீனுவிடம் கோரிக்கை விடுத்தபோதே பரிசு பெற்ற மகிழ்ச்சி அப்போதே கிடைத்து விட்டது.  அதுவே போதுமானதாக இருந்தது.
மனமார்ந்த நன்றிகள் மதுரை  தமிழன்
101 ஒட்டு போடுவேன் என்றுசொல்லி வரிவரியாக விமர்சித்த உஷா  அன்பரசுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
ஆறுதல் பரிசு பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை மதுரை தமிழனுக்கும் உஷா அன்பரசுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
படித்து ரசித்து கருத்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். 
  நகைச்சுவை என்று நினைத்து ஒதுக்கி விடாமல் பரிசீலித்து பரசளித்த நடுவர்கள்  நால்வருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

இத்தனைக்கும் மேலாக தனி மனிதனாக சிந்தித்து சிறப்பான நடுவர்களை அமர்த்தி பதிவுலகின் படைப்பாற்றலை ஊக்குவித்த சீனுவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும்  பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட முன்னுதாரணமாகத் திகழும்
என்பதில் ஐயமில்லை.

போட்டியில் வென்ற  

சுபத்ரா, கோவைமு.சரளா,ஜீவன் சுப்பு, கண்மணி, ஹிஷாலி, தமிழ்செல்வி, சசிகலா, ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************************************************************

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -

 

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள் 

***********************************************************************************************************


புதன், 25 ஜனவரி, 2012

தெய்வீகக் காதல்?


                அன்பே!
 
                விடியும் வரையில் விழித்திருந்தே நான்
                கவிதை ஒன்று உனக்கென வரைந்தேன்
                உன்முகம் கண்ட நாள் முதலாய்
                உணவும் எனக்கு இறங்க வில்லை
                இமையும் ஏனோ உறங்க வில்லை
                கயல்விழி கொண்டு எனைநீ பார்த்தால்
                கனவில் மிதப்பேன்; காற்றில் பறப்பேன்;
                காலையும் மாலையும் உனையே நினைப்பேன்.
                மற்றவை அனைத்தும் இனிமேல் மறப்பேன்!
                நீயே பிரம்மன் செதுக்கிய சிற்பம்
                தமனா த்ரிஷா  உன்முன் அற்பம்
                புதுநிலவின் கவர்ச்சியதை  முகமே வெல்லும் 
                பூந்தளிரின் மென்மையை உன் மேனியும் சொல்லும்
                செவ்வாழை பூப்போலே விளங்கும் விரல்கள்
                மாதுளையின் முத்தெனவே மின்னும் பற்கள்
                புது ரோஜா நிறமுந்தன் இதழில்
                பூவாசம் மணக்கும்உன் கார் குழலில்
                இளமானின் அழகு உந்தன் கண்ணில்
                ரகுமானின் இசை உந்தன் குரலில்
                அழகிய கன்னம் ஆரஞ்சு வண்ணம்
                பழகிடத் துடிக்குதடி எந்தன் எண்ணம்
                அள்ளிப் பருகிடவே ஆசை பெருகுதடி
                தள்ளி நிற்காதே மனம் தவித்து உருகுதடி
                உறங்கும் போதும் உந்தன் நினைவு
                விழிக்கும் போதும் உந்தன் கனவு
                இரும்பாய் இருந்தேன் காந்தமாய் கவர்ந்தாய்
                கரும்பாய் இன்று நெஞ்சில் இனித்தாய்
                திரும்பாமல் நீயும் சென்று  விடாதே
                உனக்கென காத்துக் கிடந்தேன் வீதியில்
                படிப்பைக் கூட விட்டேன் பாதியில்
                நீஎனைக் கேட்டால் எதையும் தருவேன்
                உயிரைக் கூட உடனே தருவேன்.
                உனக்கென ஏங்குது எந்தன் இதயம்
                உன் நெஞ்சில் வருமோ காதல் உதயம்
                இன்றே இதைநீ படித்து விடு
                சம்மதம் என்றே சொல்லி விடு


                                        இப்படிக்கு
                            உன்னை உயிருக்குயிராய் காதலிக்கும்
                                    ?????????????????????
                பின்குறிப்பு;
               விருப்பம் இன்றேல் கிழித்துவிடாதே
               குப்பை தொட்டியில் எறிந்துவிடாதே
               மீண்டும் இதைநீ மடித்து விடு
               உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு
**********************************************************************************************************************
இன்னைக்கு காதல் இப்படித்தான் இருக்குதுன்னு சொல்லிக்கிறாங்க! ..ஹிஹிஹிஹி