என்னை கவனிப்பவர்கள்

anubvam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
anubvam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4

        

    நீங்கள் நினைத்தது சரிதான். நெதுசு தான் நியமிக்கப் பட்டார்.
ஆனால் டாக்டர் பாலுக்காக பரிந்துரைத்தவர்கள் சொன்ன காரணத்தை காமராசர் மறுத்தார்.
            ”நெ.து.சு  அஞ்சாமல் குலக்கல்விக்கு எதிராக ஆட்சேபணை சொன்னதும் குறிப்பு எழுதியதும் எனக்குத் தெரியும். ஆனால் அரசு வேறுவிதமாக முடிவெடுத்தாலும் அதை செய்ய வேண்டியது அலுவலரின் கடமை. அதைத்தான் அவர் செய்தார்”
     உகந்தவர் இவர் என்பது தனது கருத்தாக இருப்பினும் இவரை நியமியுங்கள் என்று சொல்ல வில்லை. ஊழியர் ஆணையத்தின் கருத்து கோரப்பட்டது. அவ்வாணையம்  நெதுசு வையே பரிந்துரைத்தது. அதன் படி நெதுசு பொதுக் கல்வி இயக்குநரானார்.பணியில் சேர்ந்ததும்  வாழ்த்துப் பெற காமராசரை சந்தித்தார் நெ.துசு.
   அவரிடம் காமராசர்,” மக்கள் முன்னேறனும் என்றால் படிப்பு தேவை. காலம் மாறிக் கொண்டிருக்கிறது 8ம் வகுப்பு வரை படித்தால் போதாது 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும். சாதி பார்க்காமல் வருவாய் பார்க்காமல் 10 வகுப்பு  வரை இலவசமாகப் படிக்க திட்டம் தீட்டுங்கள். அதற்கு எல்லா ஊருக்கும் தொடக்கப் பள்ளி இருக்கணும். 3 மைலுக்குள்ள நடுநிலைப் பள்ளி இருக்கணும்.. உயர் நிலைப்பள்ளி  5மைல் தூரத்துக்குள்ள இருக்கணும். இதை மனதில் கொண்டு பள்ளிகளைத் திறக்க  முயற்சி செய்யுங்கள்.பள்ளிக் கூடம் திறந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்களும் தேவை. ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் படிப்பும் நல்லா சொல்லிக் கொடுக்க முடியும்  இப்போ ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. இப்படி இருந்தா ஆசிரியர் வேலைக்கு யாரும் வரமாட்டார்கள். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியாகி விடும்.    பெரும்பாலானவங்களுக்கு பென்ஷனும் இல்ல.
         முதலில் எல்லா ஆசிரியர்களுக்கும் பென்ஷன் கிடைக்கறதுக்கு திட்டம் தீட்டி கொண்டு வாங்க . திட்டத்தை சரியான புள்ளி விவரங்களுடன் தீட்டுங்கள். இல்லையென்றால் தலைமைச் செயலகத்தில் உள்ளவர்கள் சிறு தவறு இருந்தாலும் பெரிதாக்கி விடுவார்கள்.” என்றார்.
   கல்வி நிலை முன்னேற்றத்திற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பு ராஜாஜி காலத்திலும் பென்ஷன் திட்டம் முயற்சி செய்யப்பட்டது ஆனால் நிறைவேற்ற இயலவில்லை.
     அக்காலத்தில் பள்ளிகள் பல வகையினதாக இருந்தன. அவை மாநகராட்சி/  நகராட்சி நடத்தும் பள்ளிகள் ஊராட்சி நடத்தும் பள்ளிகள் மாவட்டக் குழுக்கள் நடத்தும் பள்ளிகள் (போர்டு ஹை ஸ்கூல் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்), அரசு பள்ளிகள் என வெவ்வேறு நிர்வாகங்கள் மூலம் நடத்தப்பட்டன.
           இதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பென்ஷன் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டிருந்தது,
      காமராசர் சொல்லி விட்டார். பயன் பெறப்போகும் ஆசிரியர்களின் எண்ணிக்கை? எவ்வளவு நிர்ணயம் செய்யலாம்.? எவ்வளவு செலவாகும்? என்பதற்கான விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.     
      இந்நிலையில்  அக்காலத்தில் ஓய்வு பெறும் வயது வரம்பு 55 . அவர்கள் ஒய்விற்குப்பின் எவ்வளவு ஆண்டுகள் ஒய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும் என்றும் கணக்கீடு செய்யப்பட்டது. ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் இருந்த விவரப்படி சராசரி வயது 63 என்று கண்டறியப்பட்டது. ஒய்வூதியம் அரைப்பகுதி தந்தால் எவ்வளவு? கால்பகுதி தந்தால் எவ்வளவு செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு ரகசியமாக அறிக்கை தயார் செய்யப்பட்ட்து.
          நிதிக் குழுவின் ஆய்வுக்கு  திட்ட  அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது . கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியன், நிதிச்செயலர் வர்கீஸ் அவர்களையும் திட்டத்துக்கான செலவுகளை சரிபார்க்கச் சொன்னார் காமராசர். சிறப்பாக தயாரிக்கப் பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில்தான் உள்ளது என்று அவர்கள் கூறினர். திட்டத்தின் கூறுகள்  காமராசர் முன்னிலையில் அனைவருக்கும் விளக்கப்பட்டது
         அவ்வேளையில் திடீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது,  அலுவலர் ஒருவர் எழுந்தார். மற்றவர்கள் அவரை உட்காரும்படி கூறினர். காமராசர் ”அவர் தன் கருத்தை சொல்லட்டும்” என்று அனுமதித்தார்
“ஆசிரியர்கள் மட்டுமா கஷ்டப்படுகிறார்கள்? கடைநிலை ஊழியர் உள்ளிட்ட பலரும் நலிவடைந்த நிலையில்தான் உள்ளனர். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ”என்றுகேட்க
            இது என்ன அவர்களுக்கான பரிவா? அல்லது திட்டத்துக்கான முட்டுக்கட்டையா என அறியாமல் அனைவரும் திகைத்தனர்.
காமராசர் பொறுமையாக,”நீங்கள் சொல்வது சரிதான், மற்றவர்களும் கேட்கத்தான் செய்வர். நானும் அறிவேன். அவர்களுக்கும் படிப்படியாகக் கொடுப்போம்.” என்றார். திட்டமிட்ட  அலுவலர்கள்கூட கவனிக்கத் தவறியதை காமராசர் கவனித்திருக்கிறார் அதற்குரிய பதில் அவர் மனதில் ஏற்கனவே இருந்ததையும் அறிந்து வியந்தனர்.
   பல கட்ட ஆய்வுக்குப் பின் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது
        01.04.1955 அன்று ஒய்வுதியம் நடைமுறைக்கு வந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் கேட்காத நினைத்துக்கூட பார்க்காத வாழ்நாளில் மறக்க இயலாத அந்த அறிவுப்பு கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
             தன் மனதில் நினைப்பதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடைமுறைப் படுத்தாமல் அதனை தான் அறியாதது போல் காட்டி மற்றவர்க்கும் விளங்கவைக்கும் மாண்பு வேறு யாருக்கும் இல்லை.
அடுத்தடுத்த  திட்டங்கள் காமராசர் மனதில் ஊறிக் கொண்டிருந்தது .
           சென்னை வண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரி உள்ளது. அக் கல்லூரி முதல்வர் காமராசரிடம் எங்கள் கல்லூரிக்கு தாங்கள் வந்து ஒருவரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கென்ன கட்டாயம் வருகிறேன் நோட்டிஸ் அடித்து எடுத்து வாருங்கள் என்றார் காமராசர் .
நோட்டீசுடன் பள்ளி நிர்வாகிகள் வந்தனர். முன்னதாக அந்த அழைப்பிதழைக் கண்ட காமராசரின் செயலாளர் துணுக்குற்றார்.
        ”என்ன இது யாருடைய படத்தை யார் திறந்து வைப்பது? உங்களுக்கு இங்கிதமே இல்லையா? இதற்கு ஐயா ஒப்புக் கொண்டாரா?” என்று உரத்த குரலில் வினவினார். 
         அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்?

தொடரும்

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி  5

ஞாயிறு, 12 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 3


பகுதி 3     

       நெது.சு. காமாரஜரைக் காணத் தயங்கியதற்கு காரணமும் இருந்தது. காமராசருக்கு முன் இராஜாஜி முதல் அமைச்சராக இருந்தார். தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை அதிக அளவில் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பது இராஜாஜியின் நோக்கமாக இருந்தது. மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதற்குக் காரணம் ”முழுநேரமும் பள்ளிக்கு வருவதால் வீட்டு வேலைக்கு பிள்ளைகள் உதவமாட்டார்கள் என்று பெற்றோர் நினைப்பதுதான். அதனால்தான் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்புவதில்லை என்று ராஜாஜி கருதினார். அதற்காக பள்ளிகளில் அரைநாள் பள்ளியில் படிப்பு, அரைநாள் பெற்றோருடன் வேலை என்று வைத்தால் இச்சிக்கல் தீரும் என்று நம்பினார். ஒரு பாதி மாணவர்கள் காலையிலும் இன்னொரு பாதி மாலையிலும் வரவேண்டும். வரைவுத் திட்டத்தை கொண்டுவாருங்கள் என்று ஆணையிட்டு விட்டார்.
  அப்பணியை நெ.து.சுவிடம் ஒப்படைத்தார் இயக்குநர். நெ.துசு, இத்திட்டம் சரியல்ல குலக்கல்வி பயில மறைமுகமாக ஊக்குவிப்பது போலாகும் எனவும் இதனால் மாணவர் வருகை அதிகரிக்காது எனவும் குறிப்பு அனுப்பினார்.
  இராஜாஜி நெ.து.சுவை அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கும் போல் தெரிகிறது அதனால் நான் வேறு தனி அலுவலரை நியமித்துக் கொள்ளட்டுமா?. அவர் திட்டத்தைப் பற்றி ஊர் ஊராகச் சென்று பேசி திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவார் என்று கூறினார்.
   தான் சொல்லும் பணியை ஒரு அலுவலர் செய்யத் தயங்கினால் கடுமையாக கடிந்து கொள்வதோடு உடனே அவரை மாற்றி விட்டு சொல்வதைக் கேட்கும் ஒருவரை நியமிப்பது அரசியலில் சகஜம். இராஜாஜி அவரையே அழைத்து கண்டிப்போ கடிசொல்லோ கூறாமல் அவரிடமே கருத்து கேட்டார்.

  “வேண்டாம். அரசு திட்டத்தில் உறுதியாக இருப்பின் அதனை நானே செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார். திட்டம் ரகசியமாக தயாரிக்கப்பட்டு அவசரம் அவசரமாக சுற்றறிக்கை வெளியிடப் பட்டது. பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. காங்கிரசில் இருந்தாலும் காமராசரும் குலக் கல்வியை ஊக்குவிக்கும் இத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். ”இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று முழங்கினார் காமராசர்.
    ஆனால் நெ.து.சு வை கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டும்படி கேட்டுக் கொண்டார். இராஜாஜி. இதனுடைய சாதகமான அம்சங்களை மட்டும் பேசி சமாளித்தார் நெ.து.சு. இவற்றை காமராஜர் அறிந்திருந்தார்
   எதிர்ப்பு அதிகரித்து பதவி விலக வேண்டிய சூழ்நிலை ராஜாஜிக்கு உருவானது. காமராசர் முதலமைச்சர் ஆனதும் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார். நிம்மதிப் பெருமுச்சு விட்டார் நெ.து.சு.
   தன்னை எதிர்த்து யாரை வேட்பாளராக நிறுத்தினாரோ அவருக்கே அமைச்சர் பதவி அளித்து அழகுபார்த்தார் காமராசர். ஆம்! சி.சுப்ரமணியம் கல்வி அமைச்சரானார். 

   இப்படிப் பலவாறாக சிந்தித்துக்கொண்டு காமராசரை சந்தித்தார் நெ.துசு. "குலக் கல்விமுறைக்கு நீ எப்படி ஒப்புக் கொண்டாய்?. ஏன் பிரச்சாரம் செய்தாய்" என்று கேட்கப் போகிறார் என்று நினைத்தார். ஆனால் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை காமராசர்
   அவர் கேட்டது பள்ளி தொடங்குவதற்கான விதிமுறைகள் பற்றி.. வட சென்னையில் விருதுநகர் நாடார் உறவின் முறையினர் தொடக்கப்பள்ளி நடத்தி வந்தனர். உயர்நிலைப் பள்ளி தொடங்குவதற்காக அனுமதி கோரி காமராஜரை தனிப்பட்ட முறையில் அணுகியுள்ளனர்.
    உயர்நிலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தால் 11 ம் வகுப்பு வரை நேரடியாக அனுமதி அளிக்கப் படும். இல்லையெனில் 6,7,8 வகுப்புகளுக்கு மட்டும்
( அப்போதெல்லாம் 6, 7. 8 வகுப்புகள் ஃபர்ஸ்ட் ஃபார்ம், செகண்ட் ஃபார்ம், , தேர்ட் ஃபார்ம் …… என்று அழைக்கப்பட்டது)
”இந்தப் பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப் போகிறீர்கள்?” கேட்டார் காமராசர்.
விதிகளின்படி கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக மூன்று படிவங்கள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் தாங்கள் விரும்பினால் அவர்கள் கோரியுள்ள படி 4 படிவங்களுக்கும் அனுமதி வழங்குவதாக இயக்குநர் தெரிவிக்கச் சொன்னார் என்றார் நெ.து.சு.
“அவர்கள் எனக்கு வேண்டியவர்கள்தான். ஆனால் விதிகள் பொதுவானவை. அவர்கள் கட்டுப்பட்டால்தான் மற்றவர்களை கட்டுப்படுத்த முடியும். சரி மூன்று படிவங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும். இயக்குநருக்கு சொல்லி விடுங்கள்” என்று அனுப்பி விட்டார்
   தகவலைக் கேட்ட இயக்குநர், ” விதிமுறைகளை எல்லாம் ஏன் ஒப்பித்தாய். கேட்டபடி அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே! என்று நெ.து.சுவைக் கோபித்துக் கொண்டார்

எதிர்பாராவிதமாக மறுநாளே அப்பள்ளியின் செயலாளர் மூன்று படிவங்கள்(6,7,8) வகுப்புகள் மட்டும் கொடுங்கள் என்று கடிதம் கொடுத்தார். அவ்வாறே அனுமதி வழங்கப் பட்டது.

காமராசர்தான் பள்ளிச் செயலாளரிடம் இதுபோல கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தொலைபேசியில் ஒரு வார்த்தை சொன்னாலே அனுமதி வழங்கத் தயாராக இருந்த போதும் உண்மையை நிலையை அறிந்து விதிகளுக்கு மதிப்பளித்த பெருந்தலைவரின் மாண்பை என்னென்பது!

பி.ஏ.கே பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் தொடக்கப் பள்ளியுடன் இணைந்து இன்றும் வட சென்னையில் சிறப்பாக இயங்கி வருகிறது இப்பள்ளி.

இந்த நேரத்தில் இயக்குநர் பதவி காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டது, துணை இயக்குநர்கள் எம்.டி.பால் மற்றும் நெ.து.சு இருவரின் பெயரும் பரிசீலனையில் இருந்தது.

பெரியார் உள்ளிட்ட பலர் நெ.து.சு வரவேண்டும் என்று விழைந்தனர். டாக்டர் எம்.டி.பால் அவர்களுக்கும் பலமான பரிந்துரை இருந்தது.

அவர்கள் காமராஜரிடம் சொன்னது இதுதான் ” நெ.து.சு ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்ற முயன்றார். அத்திட்டத்தை கூட்டங்களில் ஆதரித்துப் பேசினார். ஆனால் பால் எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை எனவே அவரை இயக்குநராக நியமிப்பது நல்லது”
”சரி யோசிப்போம்” என்றார் காமராசர்

காமராசரின் முடிவு என்ன?
யார் வென்றார்கள்?

-----------------------------------------------------------------------------

சனி, 11 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2


காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2


  நாம் சில இடங்களுக்கு அடிக்கடி  செல்வோம் ஆனால் அந்த இடத்தின் சிறப்பு தெரியாது. அங்கே சில குறிப்புகள் அவற்றை உணர்த்தும். தடம் பதித்தவர்களின் தடயங்கள் இருக்கும். அவற்றை கவனியாமல் சர்வசாதரணமாகக் கடந்து போயிருப்போம். சென்னையில் ஒவ்வொரு பழைய கட்டடத்திலும் ஏதோ ஒரு வரலாறு ஒளிந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் ஒரு சென்னை பள்ளியைக் காணலாம்  (கார்ப்பபேரஷன் பள்ளிகள்  சென்னைப் பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் பள்ளி என்று கூறுவது தாழ்வாகக் கருதப்படுவதால் இந்த மாற்றம்.) இதில் ஒரு  கல்வி அலுவலகம் உள்ளது. உண்மையில் அது ஒரு பழைய உருது பெண்கள்  தொடக்கப் பள்ளி. இப்போது அந்தப் பள்ளியில் மாணவர்கள் இல்லை. இன்னொரு  தொடக்கப் பள்ளியும் இங்கே இருக்கிறது.
         அந்தக் கட்டிடத்தில் பள்ளி திறக்கப்பட்டபோது  பதிக்கப்பட்ட கல்வெட்டைத்தான் கீழே படத்தில் பார்க்கிறீர்கள்.


    
நான் முதன் முதலில் அங்கு சென்ற போது கவனித்தது   அந்தக் கல்வெட்டைத்தான். 1949 இன் இறுதியில் திறக்கப் பட்டிருந்த அந்த பள்ளியில் கல்வெட்டில் இருந்த இரண்டு பெயர்கள் என்னைக் கவர்ந்தன. அதில் ஒருவருக்கு அப்போது  தெரிந்திருக்காது தனக்கு ஒரு பெருந்தலைவரின் கடமையை- கனவை நிறைவேற்றும் வாய்ப்பு இன்னும் சில ஆண்டுகளில் கிடைக்கப் போகிறது என்று. (இன்னொருவர் பற்றிய தகவல் பதிவின் இறுதியில்)
       இங்கு ஆசிரியர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களிடம் நான் கேட்பதுண்டு. இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களில் யாரைப் பற்றியாவது  நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று.  குறிப்பாக வட்டமிடப் பட்டுள்ளவரின் பெயரைக் காட்டி, படியுங்கள் என்பேன். எந்தவித சலனமும் இன்றி N.D.SUNDARAVADIVELU என்று படிப்பார்கள். ”இவரைப் பற்றி ஏதாவது தெரியுமா”
“அப்போ இருந்த  இ.ஓ  ன்னு.  போல இருக்கு சார். “ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.
          பல ஆண்டுகள் கார்ப்பரேஷன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்குக் கூட கர்மவீரர் காமராஜரின்  மாபெரும் திட்டத்திற்கு  உறுதுணையாக நின்ற அலுவலரைப் பற்றித் தெரியவில்லை.   தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் இவரது கட்டுரைகள் தமிழ்ப்பாடத்தில்கூட இடம் பெற்றிருந்தன.
       இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் நெ.து.சு என்று அன்புடன் அழைக்கப் படும் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்தான் காமராசரின் கனவை நனவாக்க பாடுபட்ட அலுவலர் என்று
  கல்வித் துறையில் எத்தனையோ அதிகாரிகள் பணியாற்றி இருந்தாலும் இவரைப் போல தடம் பதித்தவர்கள் அரிது.     அதிகாரிகள் மனம் வைத்தால் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடியும். இக்காலத்தைப் போல் அல்லாமல் பெரும்பாலான உயர் அதிகாரிகள் சிலர் முழுக்க முழுக்க  அரசின் கைப்பாவையாக செயல்படாமல் குற்றங்குறைகளை துணிச்சலாக எடுத்துக் கூறுபவர்களாகவும் இருந்தனர்.  அரசின் விருப்பப்படி செயல் பட்டாலும் தங்களின் கருத்தையும் பார்வையையும் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை.  
        ஆனால் ”அரசனுக்கு கத்கரிக்காய் பிடிக்கும்போது, ’அது எவ்வளவு அழகு.என்ன சுவை! காய்களில் கத்தரிதான் ராஜா! ஆஹா! அதன் காம்பும் கிரீடம் போல அல்லவா இருக்கிறது என்றும் அரசனுக்கு கத்தரிக்காய் பிடிக்காத போது ”சீ!சீ! இது என்ன கத்தரிக்காய் இப்படி இருக்கிறது.  கோமாளிக்கு கொம்பு முளைத்தது போலவே இருக்கிறதே அதன் காம்பு. காரல் சுவை சகிக்க வில்லை’ என்று சொல்லும் அதிகாரிகள் அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.
      நெ.து.சு  முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்களில் பலர் சாதிப்பற்று உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் நெ.து சு சாதி மறுப்பாளராக இருந்தார். இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.  இசைவேளாளர் மரபைச் சேர்ந்த நன்கு படித்த காந்தம்மாள் என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்புக் கிடையில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தை தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார்.
            பி.டி.ஓ வாக பணியில் சேர்ந்த நெ.துசு. அப்பணியை விட சம்பளம் குறைவான கல்வித் துறைப் பணியையே விரும்பினார்.  தற்போதைய ஆந்திர மாவட்டத்தின் ஒரு பகுதியில் மாவட்டக் கல்வி அலுவலராகக் கல்விப் பணியைத் தொடங்கி (அப்போது அதுவும் சென்னை மாகாணம்)  பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி சென்னை  மாநகராட்சியில் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அக்காலக் கட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளியின் கல்வெட்டுதான்  படத்தில் நீங்கள் பார்த்தது, காமராஜரைப் பற்றி எழுதுவதை விட்டு இவரைப் பற்றி ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கலாம்.
      மதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு  முன்பே சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது . அதை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் நெ.து.சுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பதவியில் இல்லாத போதுகூட இதை காமராஜர் கவனித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
         விரைவில் கல்வித் துறை துணை இயக்குநர் பதவி அவரை அடைந்தது. அரசியல் சூழ்நிலைகள் காங்கிரசுக்குள் இரண்டு பிரிவு ஏற்படுத்தியது.  ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.காமராசர் முதல்  அமைச்சரானார்.
   கொஞ்ச நாட்களில் காமராசர் கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலுவை தொலைபேசியில் அழைத்து நெ.து.சுவை  தன்னை சந்திக்கும்படி கூறினார். தானே வருவதாகக் கூறியும் நீங்கள் வேண்டாம் துணை இயக்குநரையே அனுப்புங்கள் என்றார். இயக்குநர் நெ..துசுவிடம் தகவலைத் தெரிவித்து உங்கள் மேல் முதல்வருக்கு கோபம் இருக்கலாம் என்று எச்சரித்து அனுப்பினார்.  இயக்குநரைத் தவிர்த்து முதல்வர் தன்னை ஏன் அழைத்ததன் காரணம் தெரியாமல் தவித்தார். தர்மசங்கடமாகவும்  உணர்ந்தார். அவரது தயக்கத்திற்கு  ஒரு முக்கியக் காரணம் இருந்தது

அது என்ன நாளை பார்க்கலாம்?


---------------------------------------------------------------------------------------------

கொசுறு: கல்வெட்டில் நீங்கள் பார்த்த இன்னொரு முக்கியப் பிரமுகர் ’சர் முகம்மது உஸ்மான்’ சென்னை தி.நகரில் உள்ள புகழ்பெற்ற  உஸ்மான் ரோடு பெயரில் உள்ள உஸ்மான் இவர்தான். சென்னை மாநகராட்சி தலைவராக விளங்கினார். அப்போது மேயர் பதவி இல்லை
------------------------------------------------------------------------------------------------------------

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1