என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஏமாந்தது யார்? ஸ்டாலினா?பன்னீரா?

  நேற்று முழுக்க சட்டசபை கூச்சல் குழப்பங்கள்  முழக்கங்கள்   ஒவ்வொரு வீட்டிலும் எதிரொளித்துக்   கொண்டிருந்தது. குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கட்சிகளின்றி நடத்தி  எடப்பாடி வெற்றி பெற்று விட்டதாக  சபாநாயகர் அறிவித்து விட்டார்.  அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட   தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் ஆர்வத்தை உண்டாக்கி விட்டது.
         ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று இருப்பவர்களையும் ஈர்த்த பெருமை நமது அரசியல் வாதிகளையே சாரும். சிறுவர் இளைஞர்கள், பெரியவர்கள் இளம் பெண்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வயதினர்  தாத்தாக்கள் பாட்டிகள் அனைவருமே   செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நிமிடத்திற்கு ஒரு செய்தி நாளுக்கொரு அதிரடி. தொலைக் காட்சியை அணைக்க விடவில்ல. தெருவில் நடந்து சென்றால் எல்லா வீடுகளில் இருந்தும் செய்தி சேனல்களின் ஓசையே காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.சீரியல்களை விரும்பிப் பார்ப்பவர்கள் கூட செய்திகளின் விளம்பர இடைவேளைகளில்தான் சீரியல் பார்த்தனர்.
     ஜெயலலிதா மறைவு,சசிகலா பொதுச செயலாளராக தேர்வு, ஓ.பி.எஸ் சின்   திடீர் எழுச்சி , கூவத்தூர்   விடுதி சிறை,அணித்தாவல்கள், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, எடப்பாடி தேர்வு, நம்பிக்கை  வாக்கெடுப்பு என்று  தொடர் நாற்காலிச்   சண்டைகள்  பரபரப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை..தங்கள் சொந்தக் கவலைகலைக் கூட  இரண்டாம் பட்சமாகவே கருதி அரசியல் சூழலை உற்று நோக்கிக்  கொண்டிருந்தனர் மக்கள்.
         ஜெயலலிதா வின் மரணத்தில் தொடங்கிய மக்கள் முனுமுனுப்புகள்  சசிகலா  முதல்வராகும்  முயற்சிகள் எடுக்கத் தொடங்கியதும்அதிகரிக்கத் தொடங்கியது. ஜெயலலிதாவைப் போலவே தன்னை நினைத்துக் கொண்டு அவர்  நடந்து கொண்டது பலருக்கும் எரிச்சலை   ஏற்படுத்தியது. 
தூக்கத்தில் இருந்து விழித்த பன்னீரின் அறிக்கை அவர்  மீதுய் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவர்   மீதான குறைகள் மறக்கப் பட்டு ஆதரவு பெருகியது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பன்னீரின் நிலையை வலுவாக்கும் என்று நம்பினர்

    ஜெயலலிதாவின்மீது அபிமானம் கொண்டவர்கள் கூட  அவரும் குற்றவாளிதான் என்று அளிக்கப் பட்ட  தீர்ப்பு   என்பதை  மறந்து அது சசிகலாவுக்கு மட்டுமே வழங்கப் பட்ட தீர்ப்பாகவே கருதி  மகிழ்ந்தனர் . இதன் பின்னர் பன்னீர் பக்கம் அனைவரும் வந்து விடுவர் எதிர்பார்த்தனர் .
        சசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது.கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க அழைத்தார். கடைசி நேரத்தில் ஒருசிலராவது  மனம் மாறுவர் என்று எதிர் பார்க்கப் பட்டது.  நிச்சயம் பெரும்பான்மை நிருபிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றே கருதினர்.தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும்  அப்படித்தான் நினைத்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் கையில் ஆட்சி போய் விடக் கூடாது என்பதே பெரும்பாலோரின் எண்ணமாக இருந்தது. இதனை தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.

  ஸ்டாலினின் மெத்தனம் அவரது அரசியலில் பயிற்சி  தேவை என்பதையே எடுத்துக் காட்டியது. ஒரு சில அறிக்கைகளே போதும் என அவர் நினைத்து விட்டார் நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தோற்றுவிடுவார் என்று நம்பினார் ..  .கடைசி நேரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  எனக்  கோரியும் பலன் ஏதும் கிடைக்க வில்லை.
     ஒரு வேளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும எடப்பாடியே ஜெயித்திருப்பார்..என்று தோன்றுகிறது. ஏன் அவநம்பிக்கை கொண்டார்கள் என தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு பயப்படுபவர்களாக இருந்திருந்தால் தங்கள் எண்ணத்தை எப்படியும் வெளிப்படுத்தி இருக்க முடியும். கூவத்தூர் சிறை எல்லாம் ஒரு சாக்கே. வாக்களிப்பிலும் அதை வெளிப்படுத்த முடியும். அவர்களின் நோக்கம் தெளிவானது. பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதற்கு முழுக்க முழுக்க சசிகலாவை குற்றம் சாட்டுவதில் .அர்த்தமில்லை. அடைத்து வைத்ததில் வேண்டுமானால் அதிருப்தி இருக்கலாமே தவிர சசிகலாவை ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்தவித குற்ற உணர்வும் இல்லை. உண்மையில் சசிகலா இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.அவர்கள் புத்திசாலிகள். மக்கள்தான் ஏமாளிகள்.சில இலவசங்களும் ஒட்டுக்கு நோட்டும் போதுமானது என்ற எண்ணத்தை உருவாக்கியது மக்களே.  ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றிருந்தால்  சசிகலாவின் கட்டாயத்தால்  தான் வாக்களித்தோம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியும். 

  பன்னீர் இன்னும் சில எம்.எல்.ஏக்களாவது தங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்பினார். ஊடகங்கள்   அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் அவர் பக்கம் இருந்தது காரணம் சசிகலா குடும்பத்தினர் மீது உண்டான வெறுப்பே. இவ்வெறுப்பினை  அறியாதவர்களாக  எம்.எல்.ஏக்கள்  இருப்பார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. ஆனாலும் அவர்கள் நிலை பணம் பதவியை தக்கவைப்பதிலதான்     இருந்தது என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது . எம்.பிக்கள் ஒரு சிலர் வந்தார்களே தவிர எம்.எல் ஏக்கள் வரவில்லை  வந்தவர்களில் சிலர் நாம் பன்னீர் பக்கம் வந்தது தவறோ என்று தங்கள் நிலையை மாற்றிக் கொண்டாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை. ஒரு வேளை பன்னீரே அப்படி நினைக்காமல் இருந்தால் சரி

    பழம் நழவி பன்னீர் கையில் கிடைக்காது  எப்படியும் பன்னீர் சசிகலா சண்டையில்  தனக்கு தானாகவே ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்து ஏமாந்தார் .ஸ்டாலின்.   இதில் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை . அவர்களாகவே பிளவு பட்டு நிற்பார்கள் என்று வாளாவிருந்து விட்டார் . பன்னீருக்கு தங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தை  ஸ்டாலின் ஏற்படுத்தி இருந்தால் கூட இன்னு சில எம்.எல்.ஏக்கள் வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கக் கூடும். துரைமுருகன் அந்தக் காரியத்தை செய்தார்.ஆனால் ஸ்டாலின் அதனை தவற விட்டு விட்டார் என்றும் சொல்லலாம்..
     எதிர்க் கட்சியே இல்லாமல்  நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டது. 
சபாநாயகர் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டாலும்  திமுகவினர் சட்டபையில் நடந்து கொண்ட முறை அக் கட்சியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த  தவறி விட்டது.  ஒரு வேளை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாமல் போனாலும் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டாலும் இதே முடிவுதான் கிடைக்கப் போகிறது. 122 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலருக்கு மனசாட்சி உறுத்தி இருக்கலாம் அவர்கள் கூட நாம் வாக்களிக்கப் போவது சசிகலாவுக்கு இல்லையே எடப்பாடிக்குத்தானே  என்றே தங்கள் மனச்சாட்சிக்கு பதில் சொல்லி இருப்பார்கள்  

   மொத்தத்தில்  அதிகம்  ஏமாந்தது பன்னீரா ஸ்டாலினா என்று   பட்டிமன்றம் நடத்தினால்  இருவரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.************************************எச்சரிக்கை :  இந்த ஆண்டில்   எழுதும் முதல் பதிவு  அலுவல் மற்றும் அலுவலகப் பணிகள் காரணமாக வலைப் பதிவு எழுத இயலாமல் போனது. இனி மாதம் மூன்று பதிவுகளாவது எழுத உத்தேசம்.

22 கருத்துகள்:

 1. அடடா...உங்களையும் எழுத வைத்துவிட்டார்களே...அதற்காகவேணும் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..
  ஆழமான அலசல் பதிவு...எதார்த்த நடை

  பதிலளிநீக்கு
 2. எடப்பாடியார் உங்களை பேனாவை எடுக்கவைத்து விட்டார். நல்ல அலசல். தி.மு.க வின் நடவடிக்கை திட்டமிடப்பட்டது போல உள்ளது. ஊடகங்கள் தங்கள் ஆதாயத்துக்காக எல்லாவற்றையும் பரபரப்பாக்கிவிட்டனர். பன்னீர்தான் வெல்வார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது ஊடகங்களே! மொத்தத்தில் ஏமாந்தது மக்களே. இன்னுமோர் மெரீனா புரட்சி தேவை இப்போது!https://www.sigaram.co/

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கே. உ(ய)ரிய தனித்து வம் கொண்ட பதிவு. தங்களின் 'எச்சரிக்கை' கண்டு மிக'மகிழ்ச்சி'.

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கே. உ(ய)ரிய தனித்து வம் கொண்ட பதிவு. தங்களின் 'எச்சரிக்கை' கண்டு மிக'மகிழ்ச்சி'.

  பதிலளிநீக்கு
 5. "மொத்தத்தில் அதிகம் ஏமாந்தது பன்னீரா? ஸ்டாலினா? என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவருரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்." என்பதை வரவேற்கிறேன்.
  மக்கள் கருத்தறியாத MLA முடிவுகள் சரியாகுமோ?

  பதிலளிநீக்கு
 6. எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை துரோகம் செய்யவரவில்லை. அவர்கள் எம்.எல்.ஏக்களாக ஆனதற்கு சசிகலாதான் காரணம் சசிகலா வாய்ப்புக்கள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் வேட்பாளர்காக ஆக முடிந்தது மக்கள் அந்த எம்.எல்.ஏக்கள் நல்லவரா கெட்டவரா என்று நினைத்து ஒட்டுப் போடவில்லை அவர்கள் ஜெயலலிதாவிற்காக மட்டுமே ஒட்டு போட்டார்கள் அதனால் மக்களுக்கு இந்த எம்.எல்.ஏக்களை தட்டிக் கேட்க அதிகாரம் இல்லை. எம்.எல்.ஏக்கள் நன்றி உணர்வோடு தங்களுக்கு வாய்ப்பு அளித்த சசிகலாவிற்கு நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.

  சசிகலாவை எதிர்த்து வெளியே வந்தவர்களுக்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்று பார்த்தால் இந்த போட்டியில் தோல்வியுற்ற பன்னிரையும் அவரை சார்ந்தவர்களையும் மக்கள் ஊக்கப்படுத்தாமல் இப்போது அவர்களை பார்த்து கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டாலிண் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்று மிகவும் வேகமாக செயல்படும் திறன் இல்லை அதுமட்டுமல்லாமல் அவருக்கு சரியான ஆலோசனை சொல்லவும் அருகில் முக்கிய ஆட்களும் இல்லை

  பதிலளிநீக்கு
 7. ஹலோ மாதம் 3 பதிவுகள் அல்ல நீங்கள் மனம் வைத்தால் இன்னும் அதிகமாக பதிவிடமுடியும்... முயற்சி செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 8. வாருங்கள் மீண்டும்...எழுதுங்கள் மீண்டும். மிக்க மகிழ்ச்சி!

  தேர்தலில் மட்டுமல்ல மக்கள் ஏமாந்தது, மீண்டும் மக்கள் தான் ஏமாந்துள்ளார்கள். நீங்கள் சொல்லியபடி எம் எல் ஏக்கள் சசிகலாவைத்தான் ஆதரிப்பார்கள் ஏனென்றால் ஆதாயம், அந்த ஆதயத்தினால் விளைந்த பதவியைக் காப்பாற்றலும், செய்நன்றியும். ஸ்டாலினுக்கு அவர் தந்தையைப் போன்று அரசியல் சாணக்கியம் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் தந்தையுடன் கூடவே இருந்தும்..ஒரு வேளை அதனால்தான் கலைஞர் அவரை தனக்கு அடுத்தே இத்தனை வருடங்கள் வைத்திருந்திருக்கிறார் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று குரல்கள் எழுந்த போது கூட தந்தை தன் பிள்ளைக்கு விட்டுக் கொடுக்காததன் காரணம்..

  தமிழ்நாட்டின் தலைவிதி என்று ஆகிப் போயிருக்கிறது.கடைசியில் மக்கள் தலையில் மிளகாய் நன்றாய் அரைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரத்தைக் குறைப்பதற்கு நல்ல தலைமையும் இல்லை....

  கீதா  பதிலளிநீக்கு
 9. அரசியல் பற்றி அவ்வளவாகப் பேசாத என்னைப் போன்றவர்களையும் அதைக் கூர்ந்து நோக்கிப் பேச வைத்துவிட்டிருக்கிறது ..நீங்கள் சொல்லியிருப்பது போல்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை போல உள்ள பெண்கள் அரசியல் பற்றி பேசாமல் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்ததினால்தான் இப்படி ஒரு நிலவரம் இனிமேல் அது மாறிவிட வாய்ப்புக்கள் இருக்கும்

   நீக்கு
 10. நல்ல அலசல். மக்கள் கருத்தை எம் எல் ஏக்களும், எம் பிக்களும் மதிக்காமல் போவது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் இதுமாதிரி விஷயத்தில் பெரும்பான்மை மக்களின் எண்ணம் அறிந்தும் அவர்களின் போக்கு வெறுக்கத்தக்கது, கண்டனத்துக்குரியது.

  பதிலளிநீக்கு
 11. ஏமாந்ததும்
  ஏமாறுவதும் என்றும் மக்கள்தான்
  அருமையான அலசல்
  தொடர்ந்து எழுதுங்கள் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 12. நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் மிகச் சிறப்பாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.

  ஏமாறுவது மக்களுக்குப் பழக்கமாகிவிட்ட ஒன்று. அவர்கள் புதிதாக ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை.

  முழுக்க முழுக்கத் அம்மாவின் கட்டுப்பாட்டியில் ஓர் அடிமை போலவே இயங்கியவர் பன்னீர். புதிய தலைமையால் பட்ட அவமானங்கள் அவரின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. குனிந்த தலை நிமிர்ந்தது. மக்களிடம் மனம் திறந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது அவருக்கே தெரியாது. அதனால், பன்னீர் பெரிதாக எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பெரிதும் ஏமாந்தார் என்று சொல்லவும் வாய்ப்பில்லை.

  ஸ்டாலினைப் பொருத்தவரை, இனி அவரே கட்சியின் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது. மக்களைச் சந்தித்துக் குறை கேட்டதன் மூலம் தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர்; மிகப் பலம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர்; ஆளும் கட்சியாரையும் மதித்து நடந்ததால் அவர்களால் மட்டுமல்லாமல் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

  அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது ஏறத்தாழ நிச்சயம் என்ற நிலையில், அவசரப்பட்டுவிட்டார் ஸ்டாலின். அவையில் அவர் கட்சியினர் போட்ட அநாகரிக ஆட்டத்தால்[சபை நாயகர் அவர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில் அமைதியாகத் தொடர் முழக்கம் செய்தல்; வெளியேற மறுத்தல்; பின்னர் சட்டப்படி கவர்னரிடமோ குடியரசுத் தலைவரிடமோ, நீதிமன்றத்திடமோ முறையிடுதல் என்று போராடியிருக்கலாம். ஸ்டாலின் தாக்கப்பட்டதாகச் சொல்வது ஆய்வுக்குரியது] ஸ்டாலின் மீதிருந்த மதிப்பு பெருமளவில் சரியும் நிலை உருவாகியுள்ளது.

  ஆகவே, பன்னீரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஏமாந்தவர் ஸ்டாலினே என்பது என் கருத்து.

  இந்தப் பின்னூட்டத்தால் தங்களின் பதிவுக்குப் பங்கம் ஏதும் விளையும் என்றால் இதை அன்புகொண்டு நீக்கிவிடுங்கள் முரளி.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ‘முழுக்க முழுக்கத்...’ -‘த்’ஐ நீக்கி வாசியுங்கள்.

   நீக்கு
  2. ஐயா! தெளிவாக தங்கள் கருத்தை கூறி இருக்கிறீர்கள். நீக்குவதற்கு அவசியம் ஏதுமில்லை.

   நீக்கு
 13. தோற்றது ஜனநாயகம் ,ஜெயித்தது பணநாயகம் :)

  பதிலளிநீக்கு
 14. அருமையாக இருந்தது படிப்பதற்கு. ஆனால் ஸ்டாலின் எதற்காக பன்னீருக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்று எழுதியுள்ளதுதான் நெருடலாக இருந்தது. அதனால் அவருக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதிமுக உறுப்பினர்களுக்கு தேர்தலில் ஜெயித்த ஆறே மாதத்தில் தங்கள் பதவியை இழக்க விருப்பம் இல்லை. அதுதான் உண்மை. இனி எத்தனை முறை வாக்கெடுப்பு நடந்தாலும் யார் பக்கம் சாய்ந்தால் தங்கள் பதவி நிலைக்கும் என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்கு அளிப்பது என்பதில் உறுதியாயிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 15. 'சசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது" ஆமாம் நான் கூட ஏமாந்துதான் போனேன்.
  சரியாக எழுதியிருக்கிறீர்கள்... இந்தத் தெளிவு நம் மக்களுக்கு வந்து விட்டால் எத்தனை முறை வாக்கெடுப்பு நடந்தாலும் மக்கள் வெற்றியே பெறுவார்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் (சும்மா வாக்குறுதி குடுத்திட்டு அப்பறம் நம்ம தலைவர்கள் மாதிரி அபீட் ஆயிடக் கூடாது சொல்லிட்டேன்)

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895