என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்புயல் எச்சரிக்கை
   மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கி, கடந்த ஆண்டு மதுரையில் மையம் கொண்ட புயல் கிழக்கே நகர்ந்து புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ளதாக தமிழ் வலைப்பதிவர்  ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. இது சேதம் விளைவிக்கும் புயலல்ல.  தேசம் கடந்த போதும் தமிழ்ப் பதிவர்களிடையே நேசம் விளைவிக்கும் புயல். உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைக்கும் புயல். அக்டோபர் பத்தாம் தேதி கரையைக் கடக்க இருக்கிற புயல்.
அதனால் ஆங்காங்கே இருக்கிற வலைப்பதிவர்கள் எல்லாம் புதுக்கோட்டைக்கு வந்து சேரும்படி அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்


                      தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு 2015
        நாள்: 11.10.2015

      இடம்:ஆரோக்கியமாதா மக்கள் மன்றம் 

                               பீ வெல் மருத்துமனை எதிரில் 
          ஆலங்குடி சாலை, 
புதுக்கோட்டை 
  கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமயில் நான்காவது பிரம்மாண்ட வலைப்பதிவர் சந்திப்பு  ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் நாளும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு விழா நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை சென்னை பதிவர் சந்திப்பின்போது கூட இருந்து பார்த்த அனுபவம் உண்டு. பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவ்வப்போது பதிவர் சந்திப்புகள் நடைபெற்று வந்தாலும் 2012 இல் சென்னையில் நிகழ்ந்த வலைபதிவர் சந்திப்பு குறிப்பிடத் தக்கதாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் மூத்த பதிவர் புலவர் ராமானுசம் ஐயா அவர்கள்தான். வலைப்பதிவர்கள் சங்கம் தொடங்கப் படவேண்டும் அது முறையாக பதிவு செய்யப் பட்டு, பயனுள்ள வகையில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தை  முன்வைத்தார். பதிவர் திருவிழாக்கள் வெற்றிகரமாக நடந்தாலும் நோக்கம்  முழுமைபெறவில்லை  என நினைக்கிறேன். ஆனாலும் அவை மிக சிறப்பான தொடக்கம் என்பதில் ஐயமில்லை
   அடுத்தடுத்து  மூன்று சந்திப்புகள் நிறைவுற்ற போதிலும் கூடினோம் பேசினோம் கலைந்தோம் என்ற விதமாக அல்லாமல் மிகப் பயனுள்ள விதமாக அமைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு பிரம்மாண்டமான வலைப்பதிவர் திருவிழாவுக்கு புதுக்கோட்டை தயாராகிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நிகழ்ச்சியை  திட்டமிட்டு எப்படி நடத்த வேண்டும் என்பதில் அனுபவம் பெற்றவர் கவிஞர் முத்துநிலவன்  அவர்கள்.  தான் சிறப்பாக முன்மாதிரியாக செயல்படுவதோடு மற்றவரையும் ஊக்கப்படுத்தி அவர்களது முழுத் திறமையும் வெளிபடுத்துவதில் அவருக்கு இணை அவரே.
  நமது எழுத்துகளை படிப்பவர்கள், நாம் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களை தரும் பதிவர்கள் அசாத்திய  திறமையுள்ள பதிவர்கள் மூத்த - இளைய பதிவர்கள் இவர்களை சந்தித்து உரையாடியதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை  அளவிட முடியாது. ஏற்கனவே மூன்று முறை அந்த மகிழ்ச்சியை அனுபவித்தவன் என்ற முறையில் நான்காவதாக புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவையும் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன் .
  வலைப் பதிவு எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் வலைப் பதிவர்கள் சந்திப்பினால் என்ன பயன் என்று கூறுவோரும் உண்டு.பணப் பலன் தொடர்பான பயன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எத்தனை நண்பர்களை பெற்றிருக்கிறோம் அவர்களைஎல்லாம் சந்தித்து அளவளாவி ஆனந்தம் அடைவதற்கு கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வோம்  இணையத்தின் வழியாகவே மாயத் தொடர்பில் இருந்த நாம் நேரிடையாக சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொள்வதில் கிடைப்பதில் மகிச்சியை அளவிடத்தான் முடியுமா.

    முதல் முறையாக பதிவர் சந்திப்பின்போது எத்தனை ஆச்சர்யங்கள். அதிரடியாக எழுதும் எழுத்துக்கள் கொண்ட சிலரை  நேரில் பார்க்குபோது அமைதியின் வடிவமாக பார்த்தேன். எழுத்தில் அமைதியைக் கடைபிடிக்கும் சிலர் நேரில் கலகலப்பாக இருந்ததும், வலைப்பதிவுகளை காரசாராமாக  விவாதத்தில் மோதிக் கொண்டவர்கள் கை கோர்த்துக் கொண்டு பேசிகொண்டிருந்ததும் கண்கொள்ளக் காட்சியாக அல்லவா அமைந்தது   வெளி நாட்டில் இருந்து கூட இப்பதிவர் சந்திப்பிற்காக இந்தியா வந்தவர்களும் உண்டு.
   மாற்றுக் கருத்து உடையவர்களும்   நேரில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு உரையாடுவதற்கு  வலைப்பதிவர் சந்திப்பு துணை புரிகிறது
    பல்வேறு துறைகளில் ஆற்றல் உள்ளவர்களை அந்தந்த துறை சார்ந்து தமிழில்  எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பதை சந்திப்பின் முக்கிய  குறிக்கோளாகக் கொள்ளலாம். இணையத்தில்  தமிழின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் தகவல்களை  தமிழில் தேடிப் பெற முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். பொழுதுபோக்கு மட்டுமல்லாது அறிவியல் கலை,பண்பாடு, வரலாறு வாழ்வியல் , அரசியல்,ஆய்வுகள்  என்று எல்லா தளங்களிலும் இப்போதுள்ளதை விட பல மடங்கு அதிக அளவில் உள்ளடக்கம் காணக் கிடைக்க வேண்டும். இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை எந்த அளவுக்கு அதிகரிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு அடித்தளமாக வலைபதிவர் சந்திப்பை பயன் படுத்திக் கொள்ளவேண்டும் எனபது தமிழை நேசிக்கும் பலரது விருப்பம் என்றால் மிகையாகாது
விழாவிற்காக நாம் செய்ய வேண்டியது என்ன?
வலைப்பதிவர் கையேடு:
இந்த வலைப்பதிவர் திருவிழாவின் முக்கிய அம்சம்  வலைப் பதிவர் கையேடு ஒன்று வெளிவர இருக்கிறது   தமிழில் பல்லாயிரக் கணக்கில்   வலைதளங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவை அனைத்தும் தொடர்ந்து இயங்குவதில்லை. சில நமக்கு அறிமுகமானவை அவற்றில் பல நாம் அறியாதவை. முடிந்தவரை அவற்றை தொகுத்து அதன் விவரங்களை கையேடாக வெளியிட்டு. அனைவரும் அறியச்செய்யும் வகையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது பாராட்டத் தக்கது.
   இதில் தமிழில் வலைப் பதிவு எழுதுபவர்களின்  பெயர் வலைத்தளம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற இருக்கிறது. இந்தக் கையேட்டை வலைப்பதிவர் அல்லாத ஒருவர் காணும் பட்சத்திலும் அவரையும் இணையத்தில் எழுதத் தூண்டும் வகையில் கையேடு அமைய இருக்கிறது. இந்தக் கையேடு சிறப்பாய் அமையும் பொருட்டு வலைப்பூ விவரங்களை உடனடியாக பதிவு செய்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். தங்கள் பெயரை   மட்மல்லாது  தங்கள் நண்பர்களின் வலைப்பூ விவரங்களையும் அனுப்ப செய்யும்படியும் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் சார்பாக நீங்களே இதுவரை பதிவு செய்யப்படாத வலைபதிவுகளை பதிவு செய்யும்படி  கேட்டுக் கொள்கிறோம். தற்போது அதிகம் எழுதாத பழைய வலைபதிவுப் பிரபலங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதோடு அவர்களுடைய வலைத்தள விவரங்கள் பெற்றுத் தந்தால் கையேடு மிக சிறப்பாக அமையும். கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் வலைப்பூ விவரங்களை தந்து உதவுதல் நலம். வருகையை பதிவு செய்யவும் வலைப் பதிவு விவரங்களை பதிவு செய்யவும் கீழுள்ள இணைப்பின் வழி செல்லவும் 
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

விழாவிற்கு அழைப்பு 

  இங்கு தனிப்பட்ட அழைப்பு யாருக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்  எனினும் நாமனைவரும் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்துக் கொள்வோம். என்னை அழைக்கவில்லை என் நண்பரை அழைக்கவில்லை என்று தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம்.  இந்த வலைப் பதிவர் சந்திப்பை நமது சொந்த விழாவாகவே கொண்டாட  வேண்டும்.
   விழாவுக்கென்று தனி வலைப்பூ உருவாக்கப் பட்டுள்ளது. அதில் பதிவர் சந்திப்பு பற்றிய அவ்வப்போதைய செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முடிந்தால் இந்த வலைப்பூ ஐ.டி யை பயன்படுத்தி முடிந்தவரை அந்தந்த வலைப் பக்கங்களுக்கு சென்று அவர்களது சமீபத்திய பதிவில் பின்னூட்டத்தில் அழைப்பு விடுத்து  விவரங்களும் கேட்டு கருத்திட்டால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினரை கேட்டுக் கொள்கிறேன். முடிந்தவரை நாம் செல்லும் வலைப்பதிவுகளுக்குசென்று  அழைப்பு விடுப்போம்.
   
 இந்த விழாவில் முக்கிய வலைப் பதிவர் கையேடு புதிய முயற்சியாக முன் வைக்கப் பட்டுள்ளதால் . இதை சாதாரணமானதாக நினையாமல் அனைத்து பதிவர்களும் கீழ்க் கண்ட இணைப்பில் சென்று படிவத்தில்  பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் 
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

பிரம்மாண்டமான போட்டி 
இன்னொரு மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்த்துடன் இணைந்து  சிறந்த கருத்தாக்கம் கொண்ட தமிழ்  வலைப் பதிவுகளை வளர்க்கும் பொருட்டு மாபெரும் போட்டிகள் ஒன்றை அறிவித்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் போட்டியில் திறமையுள்ள உங்கள்  நண்பர்களை பங்குபெற, வலைப்பதிவை தொடங்கிக் கொடுத்து பங்கேற்க செய்யலாம். இந்தப் போட்டி தொடர்பான அறிவிப்பை உங்கள் முகநூல் ட்விட்டர், வாட்சப்பில் பகிர்ந்து போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதை நம் கடமையாகக் கொள்வோம்.பெண்களை அதிக அளவில் பங்கேற்க ஊக்கப் படுத்துவோம்.
போட்டி தொடர்பான விவரங்களை அறிய  இங்கு க்ளிக் செய்யவும்

நிதி
  விழா நடத்துவதற்கு  கடின உழைப்போடு நிதியும் தேவைப்படும் எனபது நாம் அறிந்ததே. தற்போது வரை நிதி வரவு போதுமான அளவுக்கு இல்லை என தெரிய வருகிறது. வலைப் பதிவர்கள் அவரவர் விருப்பப் பட்ட தொகையை விழாக் குழுவினருக்கு வழங்கினால் நிதிச்சுமையை குறைக்க முடியும்
நன்கொடை அளித்தவர்கள் மற்றும் நன்கொடை அளிப்பதற்கான விவரங்களை அறிய  க்ளிக் செய்யவும் .
நன்கொடை விவரங்கள்
 நன்கொடை விவரங்கள் மற்றும்  விழா செலவு விவரங்கள்  விழா முடிந்ததும் முறையாக அறிவிக்கப்படும்
விழாவிற்குவருவோர் மற்றும்  வர இயலாத சூழலில் உள்ளோர் யாராக இருப்பினும் கீழ்க்கண்ட  இணைப்புக்கு சென்று பதிவு செய்யுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இந்த வலைப்பதிவர் திருவிழா சற்று தொய்வடைந்துள்ளதாக கருதப்படும் வலைப்பூக்களை, மீண்டும் எழுச்சி பெற செய்வதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை
வலைப்பதிவர்கள் அனைவரும் பங்கேற்போம் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நம் பங்கை முன்வைப்போம். 

                                         அணையப் போகும் விளக்காக
                                      அருந்தமிழ் நிலையும் ஆகிடுமோ?
                             கணையை செலுத்தா  வில்லாக
                                       கன்னித் தமிழும் இருப்பதுவோ?
                            அணையைத் தாண்டா வெள்ளமென
                                       அடியில் கிடந்து பயன்என்ன?
                             இணையத் தமிழால் வலைப்பதிவர் 
                                         இக்குறை போக்க இணைந்திடுவோம்

                             மென்பொருள் வன்பொருள் யாவிலுமே
                                        தமிழின் கால்கள் பதியட்டும்
                             நன்பொருள் இலக்கியம் கட்டுரைகள்
                                       இணையம் முழுதும் பரவட்டும்
                             கண்பொருள் பார்த்துக் கற்றவையும்
                                      கணினித் தமிழால் வளரட்டும்
                             இன்பொருள் என்று தமிழ்மொழியை
                                        இவ்வுலகம் அறிந்து கொள்ளட்டும்

****************************************************************************
விழா தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி

bloggersmeet2015@gmail.com      
இவ்விழா சிறக்க உழைத்துக் கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், வாழ்த்தும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 

***********************************************************************************
மன்னிப்பு 
கடந்த ஒரு மாத காலமாகவே வீடு மாற்றம்,எதிர்பார்த்த எதிர்பாராத இணைய இணைப்பு சிக்கல்கள்,அலுவலகப் பணிகள் காரணமாக விழா பற்றி எழுத இயலவில்லை.விழாக் குழுவினரும் பதிவர்களும் தாமதமாக எழுதியதற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் 

15 கருத்துகள்:

 1. இணையத் தமிழால் வலைப்பதிவர்
  இக்குறை போக்க இணைந்திடுவோம்///
  அழகான கவிதையுடன் விழாப்பற்றி பகிர்ந்திருக்கிங்க. நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 2. நமக்கு நாமே அனைத்தும். உண்மையே. புதுக்கோட்டையில் மையம் கொண்ட புயலில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 3. லேட்டா எழுதினாலும் லேட்டஸ்ட் தகவல்களுடன் மிகச்சிறப்பாகவே எழுதி இருக்கிறீர்கள்! இந்த முறை கலந்து கொள்ள முடியாத நிலையிலும் பதிவு செய்தேன். முயற்சிகள் பலன் அளிக்கவில்லை! புதுக்கோட்டை விஜயம் தள்ளிப் போகிறது. பார்ப்போம்!

  பதிலளிநீக்கு
 4. விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. புயல் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அருமையாக அழைத்துள்ளீர்கள்!
  அனைவரும் இணைந்து விழாவை சிறப்பிப்போம்.

  பதிலளிநீக்கு
 7. விழாவைப் பற்றி தங்களுக்கே உரிய வசீகர நடையில் அருமையாக எழுதியிருகிறீர்கள் அண்ணா! அதிலும் அந்த விருத்தம் அட்டகாசம். புதுகை விழாகுழுவினரின் சார்பாக என் நன்றிகள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 8. உண்மைதான் ஐயா
  இது நமது விழா
  நம்மை நாமே அழைத்துக் கொள்வோம்
  நாமாகவே கலந்தும் கொள்வோம்
  விழாவினை வெற்றி விழாவாக்குவோம்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 9. வலைபதிவர் திருவிழாவின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் சார் விழா சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. சரியான செறிவான பதிவு முரளி அய்யா. 'இணையத்தின் வழியாகவே மாயத் தொடர்பில் இருந்த நாம் நேரிடையாக சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொள்வதில் கிடைப்பதில் மகிச்சியை அளவிடத்தான் முடியுமா?" உண்மைதான். நான், சென்னையில் 2013ஆம் ஆண்டு நடந்த விழாவில் புதுக்கோட்டையிலிருந்து தனியாக வந்து கலந்துகொண்டு மகிழ்ந்தேன். (பதிவர் அறிமுகம், நண்பர்கள் மதுமதி சரவணன் குறும்பட நிகழ்ச்சிகளுடன் பிரியாணியும் சூப்பர்!) கடந்த 2014இல் மதுரைக்கு ஒரு படையாக 25பேர் புதுக்கோட்டையிலிருந்து வந்தோம். இப்ப புதுக்கோட்டையில் அந்த அனுபவங்களை வாங்கி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

  'இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை எந்த அளவுக்கு அதிகரிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு அடித்தளமாக வலைபதிவர் சந்திப்பை பயன் படுத்திக் கொள்ளவேண்டும்" என்பது சத்தியமான வார்த்தைகள்.. இயலும் வரை அந்தத் திசையில் நடைபோடுவோம்.. உங்களின் வாழ்த்துகளோடு பயணிப்போம். நம்பிக்கை இருக்கிறது...நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் அல்லவா? நன்றி முரளிஅய்ா (இயக்குநரைப் பார்க்க நீங்களும் வந்திருந்தது இது நம்ம விழா என்பதை நீங்கள் புரிந்திருப்பதைக் காட்டுகிறது...மற்றவர்களும் இவ்வாறே உதவவும் ஊக்குவிக்கவும் வேண்டும் என்று புதுக்கோட்டை விழாக்குழு எதிர்பார்க்கிறது.

  பதிலளிநீக்கு
 11. ஆம்! புதுக்கோடைப் புயலில் சந்திப்போம்...புயல் நம்மை எல்லாம் ஒருங்கிணைக்க...

  பதிலளிநீக்கு
 12. குட்டனும் புயல்னு சொன்னார்;நீங்களும் சொல்லிட்டீங்க!அடிக்கட்டும் இனிய புயல்
  http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_18.html

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895