அரவாணிகள் பற்றிய இவ்விரண்டு கவிதைகளில். ஒன்று பிரபல கவிஞர் எழுதியது. ஒன்று நான் எழுதியது. எதை யார் எழுதியது என்பதைக் கண்டு பிடியுங்கள். கவிஞர் பெயரையும் சொல்லுங்கள். நீங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.
நாங்கள் யார்?
எங்களுக்கே ஐயமுண்டு!
நாங்கள்
பாலினம் அறியாத
படைப்புப் பழுதுகள்!
வேராய் மாற முடியாத
வெற்று விழுதுகள்!
ஆணாய்ப் பிறந்தாலும்
பெண்மை உணர்வுகளால்
பேதப் பட்டுப்போனவர்கள்!
பெற்ற அன்னையும்
வெறுத்ததொதுக்கும்
பெரும்பாவம் செய்தவர்கள்!
அலிகள் என்று
உங்களால் கேலி செய்யப்படும்
கேள்விக் குறிகள்!
கடுங்குரலும் கடுமுடியும்
காட்டிக் கொடுக்க
கழிப்பறைக்குள் கூட
அனுமதிக்கப்படாத
அருவெறுப்பு பிண்டங்கள்
எங்களுக்கும் ஆசைதான்!
கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
அன்னையின் மடியில்
அழுதபடி தலை சாய்க்க,
தங்கையின் பூப்பெய்தலில்
பூரிப்படைய,
அண்ணனின் திருமணத்திற்கு
அலங்காரமாய்ச் செல்ல!
என்ன செய்ய?
தெருவோரம் நின்றால்கூட
துரத்தப்படும்
தெருநங்கைகளான
திருநங்கைகள் ஆகிவிட்டோமே!
கடவுளாய் இருந்தால்
கை கூப்பி தொழுகிறீர்கள்!
மனிதராய்ப் பிறந்தால்
கைகொட்டி சிரிக்கிறீர்கள்!
ஆனாலும்
நீங்களெல்லாம் பெருந்தன்மை
கொண்டவர்கள்தான்!
ஒரிலக்க எண்களில்
மிகப்பெரியதை எங்களுக்கே
சொந்தமாக்கி இருக்கிறீர்களே!
****************************************************************************************
காகிதப் பூக்கள்
காலமழைத் தூரலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்
விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதை வளர்க்கும் பிணம் நாங்கள்
சாவின் சிரிப்புகள்
மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதி வைக்க
முடவன் எழுதியதை
முழுக் குருடர் படித்ததுண்டோ
சந்திப் பிழை போன்ற
சந்தததிப் பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டை
கடவுள் திருத்தட்டும்
தலை மீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே
பூத்த உயிர் கல்லறைகள் நாங்கள்
தாய்ப் பெண்ணோ முல்லைப்பூ
தனி மலடி தாழம்பூ
வாய்ப் பந்தல் போடுகின்ற
காகிதப் பூக்கள் நாங்கள்
******************************************************************************************
கவிதைத் தேர்தலில் ஒட்டு போட்டு விட்டீர்களா?
டெப்பாசிட்டாவது கிடைக்குமா?
*****************************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?
புத்தக்கக் காட்சியில் பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.