என்னை கவனிப்பவர்கள்

BSNL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BSNL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 டிசம்பர், 2012

BSNL அனுப்பிய கடிதம்.



  பத்து நாளா பதிவுலகம் பக்கம் தல காட்ட முடியாம இருந்ததற்கு காரணம் நான் எழுதிய விலகி விடு சச்சின் என்று  பதிவுதான். சச்சின விலகச் சொல்றதுக்கு நீ யாருன்னு கோபப் பட்ட BSNL இணைய இணைப்பு கிடைக்காம பண்ணிடுச்சு. அந்தப் பதிவில் இருந்த எழுத்துப் பிழைகளைக் கூட திருத்த முடியல. 
  அது  போகட்டும். வாடிக்கையாளர்களுக்கு BSNL இப்படி ஒரு கடிதம் அனுப்பினா எப்படி இருக்கும்?

அன்புள்ள வாடிக்கையாளருக்கு, 
   பத்து நாட்களாக இணைய இணைப்பு இல்லை என்று புகார் செய்து புலம்பிக் கொண்டிருகிறீர்கள். பெரும்பாலான நேரம் மின்சாரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே சும்மா இருக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இது பெரிய விஷயமாகத் தெரியாது.
   இணைப்பு இருந்தால் மட்டும் என்ன செய்திருக்கப் போகிறீர்கள்.  முக நூலில் பயந்து பயந்து லைக் போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அல்லது மொக்கைப் பதிவுகள் ஒன்றிரண்டு போட்டிருப்பீர்கள். நீங்கள் பதிவிட வில்லை என்று யாராவது அழுதார்களா என்ன? நீங்கள் கருத்திடவில்லை என்று  யாராவது கவலைப் பட்டார்களா என்ன?
   உங்களைப் போன்றவர்களின் தொல்லை தாங்க முடியாமல்தான் 'வேலை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது' என்ற கம்ப்யூட்டர் வாய்ஸ் மூலம் சொல்ல வைக்கிறோம்.ஆனாலும் அதைப் பொருட் படுத்தாமல் கஸ்டமர் கேர் எக்சிகியூட்டிவுக்கு கால் இணைப்பு கிடைக்கும் என்று நம்பி ரிசீவரைக் காதில்  வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். கிடைக்காது என்று தெரிந்தும் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள். லைன் கிடைத்து சரிசெய்துவிடுவோம் என்று சொல்வதை  நம்ப மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வாரம் ஆகிவிட்டது; எப்போதுதான் சரி செய்வீர்கள் என்று கோபப் படுகிறீர்கள். அதற்காகத்தான் புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகிவிட்டால் நாங்கள்  பழைய புகாரை மறந்து விட்டு புதிய புகாராக எடுத்துக் கொண்டு முதலில் இருந்து தொடங்குவோம். அதைப் புரிந்து கொள்ளாமல் சேவை குறைபாடு என்று சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.போன மாதம்தானே பழுதானது என்று மீண்டும் ஏன் என்று கேட்கிறீர்கள்.அது போன மாதம் இது இந்த மாதம் என்பதைப் புரிந்து கொள்ளாமல்.
   உண்மையில் சொல்லப் போனால் உங்களுக்கும் நாட்டுக்கும் நன்மைதான் செய்திருக்கிறோம்.பத்து நாட்கள் கணினியைப் பயன் படுத்தாமல் இருந்தால் எவ்வளவு மின்சாரம் மிச்சமாகி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.நீங்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
   அது மட்டுமல்லாமல் இண்டெர் நெட்டிற்கு நீங்கள் அடிமை ஆகி விட்டீர்களா என்பதை தெரிந்து கொள்ள இதுவே தக்க சமயம் என்பதை யோசிக்கத் தவறுகிறீர்கள். இணையம் பயன்படுத்த முடியாத இந்த பத்து நாட்களில் எரிச்சலும் டென்ஷனும் கோபமும் ஏற்பட்டிருந்தால் நீங்கள் இண்டெர் நெட்டிற்கு அடிமை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அப்படி நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வப்போதுஇணைய  இணைப்பை பழுதாக்கி உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள  வாய்ப்பளிக்கிறோம். ஆனால் எங்கள் நல்லெண்ணத்தை உங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்வதில்லை.
       இத்தனைக்கும் மேலாக கணினி முன் உட்கார்ந்து காலத்தைக் கழிக்காமல் உங்கள் வீட்டு வேலைகளை கவனித்து மனைவியிடம் நல்ல பெயர் வாங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம்.      அதை எல்லாம் விட்டு விட்டு BSNL ரொம்ப மோசம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். லேன்ட் லைன் வேலை செய்தது என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் அதோடு  மகிழ்ச்சி அடையாமல்    இல்லாததையே பெரிதாக்குகிறீர்கள். உங்களுக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கற்றுத் தரும் BSNL க்கு உங்களுக்கு நன்றி கூற மனமில்லாது போனாலும் தூற்றாமலாவது இருங்கள்.

                                       இப்படிக்கு 
                       வாடிக்கையாளர்களின் நலனை மட்டும் நாடும்  
                                          BSNL  
    

***************************************************************************************************************

 
விலகி விடு சச்சின்


 

வெள்ளி, 2 நவம்பர், 2012

பயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்

சுவற்றில் மோதிய மாமரம்
   நண்பர்களே நினைவு இருக்கிறதா! என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்று வரை வலைப் பக்கம் வரவிடாமல் சதி செய்து கொண்டிருக்கிறது  பி.எஸ்.என்.எல். ஞாயிற்றுக் கிழமை அன்று காலை பிராட் பேண்ட் இணைப்பு எங்கள் பகுதியில் கிடைக்கவில்லை.ஆனால்  Land Line  வேலை செய்கிறது.பின்னர் அனைவருக்கும் சரியாகி விட்டது.எனக்கு மட்டும் வரவில்லை.வேறு ஏதாவது சிக்கல் இருக்கக் கூடும் அடுத்த நாள் சரியாகி விடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. BSNL இல்  புகார் பதிவு செய்தேன். 24 மணி நேரத்திற்குள் சரி செய்வதாகச் சொன்னார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை அடுத்த நாளும் இதையே சொன்னார்கள். நீலம் புயல் தாக்கி ஓய்ந்து விட்டது.மீண்டும் நேற்று மீண்டும் BSNL க்கு நினைவு படுத்த உங்கள் புகார் ஒப்பன்லதான் இருக்கு இன்னும் க்ளோஸ் பண்ணல என்றார்கள் அலட்சியமாக

   ஒருவேளை மோடம் பழுதாகி இருக்குமோ என்று வேறு இணைப்பில் பொருத்திப் பார்த்தபோது மோடத்தில் பழுது இல்லை என்பது தெரிய வந்தது. இன்றாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம். வேறு வழி ஏதாவது யோசிக்கவேண்டும்.

நீலம் புயல்
பல ஆண்டுகளுக்குப் பின் சென்னை பக்கம் கரையைக் கடந்த புயலாக நீலம் விளங்குகிறது. சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கப் போகிறது என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வளவு வீரியமான புயல் என்று சொல்ல முடியாவிட்டாலும் நமது மோசமான உள்கட்டமைப்பு காரணமாக சில பாதிப்புகளை உண்டாக்கியது.ஆங்காங்கு மரங்கள் விழுந்ததால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு நாள் முழுக்க மின்சாரம் தடை பட்டிருந்தது.(ஏற்கனவே பல இடங்களில் அப்படித்தானே இருக்கிறது.)புதன் இரவு பலமாக காற்று அடிக்க எங்கள் வீட்டு மரங்கள் பயங்கரமாக ஆடின. வாழைமரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டது. மாடியின் சுவரை தொட்டுக்கொண்டிருக்கும் மாமரங்கள் காற்றில் வேகமாக மோதி டமால் டமால் என்று  சத்தத்தை உண்டாக்கியது. சுவர் இடிந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. போன வருடம் இதே நிலை ஏற்பட்டபோது மரத்தையே வெட்டவேண்டும் என்று வீட்டம்மா ஆணையிட கிளையை மட்டும் வெட்டி விடலாம் என்று உறுதி அளித்தேன். ஆனால் ஓராண்டு ஆகியும் அரசியல்வாதியின் வாக்குறுதி போல நிறைவேற்றப் படாததால் நீலம் புயலின் தாக்குதலைவிட அதிகமான தாக்குதலுக்கு ஆளானேன்.

ஹலோ எஃப்.எம்
மற்ற பண்பலை வரிசைகள் பாடல்களுக்கிடையில் புயல் செய்திகளைத் தெரிவிக்க ஹலோ முழுக்க முழுக்க புயல் செய்திகளை வெளியிட்டு அசத்தியது.மக்கள்
 ஆர்வத்துடன் போன செய்து தங்கள் பகுதி நிலவரங்களை தெரிவித்தனர்.சென்னையில் மின்சாரம், மரம் விழுதல்,இதர நிகழ்வுகளுக்கு எந்தெந்த எண்களுக்கு போன் செய்யவேண்டும் என்று அறிவித்துக்கொண்டே இருந்தனர்.பாடல்களை ஒளிபரப்பாமல் ஆங்காங்கே போக்கு வரத்து எங்கு தடை பட்டிருக்கிறது எந் வழியில் சென்றால் நல்லது, எங்கு மரம் விழுந்து கிடக்கிறது, மின்கம்பிகள் எங்கு அறுந்து கிடக்கின்றன, வீடுகளில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளி கல்லூரி விடுமுறை,தேர்வுகள் தள்ளிவைப்பு என்று தகவல்களை உறுதிப் படுத்தி சொன்ன விதம் அருமை. இவை வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
ஒரு விதத்தில் மின்தடை ஏற்பட்டதற்கு நன்றி சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் அறுவை நிகழ்ச்சிகளையோ உபயோகமற்ற செய்திகளையோ பார்த்துக் கொண்டிருப்போம். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை  அற்புதமாக செய்து அசத்தியது ஹலோ எஃப்.எம். ஐ தாராளமாகப் பாராட்டலாம் 
****************
கொசுறு  
  இப்புயலுக்கு நீலம்  என்று பெயர் வைத்தது பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம்.அடுத்தததாக வரப் போகிற புயலின் பெயர் "மகாசன்".
இந்தப் பெயரை வைத்துள்ளது இலங்கை. 

   புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருந்தாலும் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004 முதல்தான் தொடங்கியது.
 உலக வானிலை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளவற்றிற்கு மட்டும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கும் வாய்ப்பு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது.
***********************************